திங்கள், 22 டிசம்பர், 2025

கட்டறுத்தல் - சிறுகதை

 கட்டறுத்தல் - சிறுகதை

-------------

(கதை புதிது குழுவில் ) 


இன்று நேற்று நடப்பதா இது. எத்தனை யுகங்களாய்த் தொடர்ந்து வருவது இது. மற்றவர் போட்ட கட்டுக்கள் சில, தானே போட்டுக்கொண்ட கட்டுக்களும் சில. இதிகாச நாயகிகளில் இருந்து இன்றைய நாயகிகள் வரை கட்டறுக்கும் வேலையே காலை முதல் மாலை வரை பெண்ணினத்திற்கு .


சந்திராவின் நிலையும் அப்படித்தான். ஆனால் இது அவள் போட்ட முடிச்சு. தன் கூந்தலை எடுத்து தானே சுற்றிக் கொண்டதுதான் முடிச்சாக இறுகிக் கிடக்கிறது. காதலன்தான் கணவன்.


அன்று அவள் கண்டவன் வேறு. இன்று அவள் காண்பவன் வேறு. அவளின் ஆடை அலங்காரத்தை ரசித்துப் பாராட்டி கவிதைகள் எழுதியவன் அன்று. இன்று 'இத்தனை அலங்காரம் தேவையா , அழகிப் போட்டிக்கா போகிறாய் ' என்று அலுவலகம் கிளம்பும் போது சொற்களால் குத்திக் கிழித்து நெஞ்செல்லாம் ரணம் இன்று .


இரவில் வர நேரம் ஆனால் ' எவனுடன் எங்கே போய் விட்டு இவ்வளவு தாமதமாய் வருகிறாய் ' . கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுகள் இறுகுகின்றன அவளுக்கு. கட்டவிழ்க்க ஆசையும் அவ்வப்போது வருகிறது.


இரவில் மட்டும் அவளை அணைத்து தன் ஆசையைத் தணித்து விட்டு, திரும்பப் படுத்து குறட்டை விடும் அவனிடம் ஒரு நாள் சொல்லி விட்டாள். ' எனக்கு விருப்பம் இல்லை, என்னைத் தொட வேண்டாம். ' அதற்கு அவனின் பதில் ' ஏன் வேறு ருசி கண்டு விட்டாயா ' . வெறுப்பில் விவாதம் முற்றி, அன்று இரவே வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோர் வீட்டில் தஞ்சம் . யாரை ஒதுக்கி விட்டு வெளியேறி அவனிடம் தஞ்சம் புகுந்தாளோ, அவனை ஒதுக்கி விட்டு தந்தை தாயிடம் தஞ்சம்.


வேலை தொடர்கிறது. அங்கே வேதனையும் தொடர்கிறது. அவன் அலுவலகம் வந்து பேசும் வார்த்தைகளில் விஷம். கேட்கும் பலருக்கு விஷமச் சிரிப்பு. ஆறுதலாய் ஒருத்தி மட்டும் அந்த அலுவலகத்தில் அவள் தோழி குமாரி. அவள் ஆலோசனைப் படி அட்வொகேட் அலுவலகம். விவாக ரத்து வழக்கு. ஒரு நாள் கிடைத்தது அதுவும். கட்டுகள் விடுபட்ட அந்த மாலைப் பொழுது. அவளும் குமாரியும் சேர்த்து அருந்திய காப்பி அன்று இனித்தது கூடுதலாய்.


தனித்த வாழ்க்கை போதும் அவளுக்கு . இன்று அதே அலுவலகத்தின் உயர் அதிகாரி அவள்.


அலுவலகத்திற்கு ஒருநாள் வந்தான் அவன் தாடியோடு .

' என்னை மன்னித்து விடு சந்திரா '

'போடா வெளியே '

முன்னிருந்த கூந்தலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முறைப்புடன் சொன்னாள்.கூந்தல் காற்றில் விளையாடியது .


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை  ----------- (கவிதை  வனம் குழுவில் )  துளிர்த்த விதையும் செடியாய் மாறி மரமும் ஆகிக் கனியைக் கொடுக்கும் கனியைப் கொடுத்துக் கள...