வெள்ளி, 29 ஏப்ரல், 2022

முதற் கவிதை அனுபவம் - நவீன விருட்சம் நிகழ்வு

 முதற் கவிதை அனுபவம் -  நவீன விருட்சம் நிகழ்வு 

--------------------------------------------------------------------------------------

முதற் கவிதை அனுபவம் - யூடியூபில் 

My Poems in Tamil and English 


தொடர் சாவு - சிறுகதை

 தொடர் சாவு - சிறுகதை 

-----------------------------------------------

தொலைக்காட்சித்  தொடரில் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். முக்கிய கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன்  அம்மா  ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது.   சுந்தரி மடியில் மகளுக்குப்  புட்டிப்பாலை கொடுத்துக்கொண்டு. மாமியார் காய்கறி நறுக்கிக் கொண்டு.


 இடையில் வந்த விளம்பர இடைவேளையில் 'அந்த அய்யாவை  அநியாயமாக்  கொன்றிருக்க வேண்டாம்' என்றாள் சுந்தரி .

'அந்த நடிகர் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். அதுதான் கொன்னுட்டாங்க. '

 'அதுக்காக இப்படியா, வேறு யாரையாவது மாத்தி போட்டு இருக்கலாம். சில ஹிந்தி தொடரில் எல்லாம் அப்படித்தான் பண்றாங்க. அந்தக்  குடும்பத்துக்கு ஆணிவேராக இருந்தவர் . இனிமே அந்தக்  குடும்பம் என்ன ஆகப்போகிறதோ ' என்று கண் கலங்கினாள் சுந்தரி.  


தொடர்  மறுபடி  ஆரம்பமாகி விட வீட்டில் நிசப்தம் ..மறுபடி குழந்தையை தட்டிக் கொடுத்த படி , கண்களைத் துடைத்தபடி சுந்தரியின் கண்கள் டிவி பெட்டியை விட்டு அகலவில்லை. 


சாவு வீட்டைப் பற்றிய   சகல விஷயங்களும் அந்த தொடரில்  விலாவாரியாகக்  காண்பித்துக் கொண்டிருந்தார்கள் .  இவர்களுக்கும் அழுகை தாங்க முடியவில்லை .கண்களை துடைத்துக் கொண்ட சேகரின் அம்மாவுக்கு  அவள் கணவர்  இறந்து போனது ஞாபகத்திற்கு வந்தது  . சேகருக்கும் அதேதான். 'அப்பாவுக்கும் இதே மாதிரி தானே எல்லா சடங்குகளும் நடந்தன' என்று வருத்தத்துடன் சொன்னான். 


அடுத்த இடைவேளையில்  வந்த விளம்பரம் சாக்லேட் சாப்பிடச் சொன்னது. குளிர்பானம் குடிக்கச்  சொன்னது. பட்டுப்புடவையைக்  குறிப்பிட்ட கடையில் வாங்கச் சொன்னது.   'நேரங்கெட்ட நேரத்தில் என்ன மாதிரி விளம்பரம் போடுறாங்க'. அலுத்துக் கொண்டாள் சுந்தரி.  கடைசிப்  பகுதி . பிணம் எரிகிறது.சுடுகாட்டுச்  சாம்பல் .இங்கே வீடே  சுடுகாடு ஆனது போல் ஒரு நிசப்தம்.  அனைவரின் கண்களும்  கலங்கியிருந்தன.


எரியும் நெருப்போடு 'தொடரும்' போட்டதும் டிவியை ஆஃப் செய்ய எழ  முயன்ற சுந்தரியின் மடியில் புட்டிப்பாலை தள்ளி விட முயன்று முயன்று தோற்றுப் போய் மூச்சுத்திணறி விறைத்திருந்தாள்  அவள் குழந்தை.

-----------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


வியாழன், 28 ஏப்ரல், 2022

அவசரக் கொடைக்கானல் - சிறுகதை

 அவசரக்  கொடைக்கானல் - சிறுகதை 

------------------------------------------------------------------

' போதும் கும்பிட்டது ,  சீக்கிரம் வாங்க ' .குறிஞ்சி ஆண்டவர் கோவில் வாசலில் இருந்து கேசவனின் கத்தலுக்குத்  திரும்பிக் கொண்டிருந்தது அந்தக்  குடும்பம் .மனைவி விசாலம், மகன் குமார், முதிய பெற்றோர் .அன்று அதிகாலை மதுரையிலிருந்து பஸ்சில் கொடைக்கானலுக்குக்  கிளம்பியதிலிருந்து கேசவனுக்கு அவசரம்தான். சீக்கிரம்  முடித்துவிடவேண்டும்.


 கோடை விடுமுறைக்கு எங்காவது வெளியில் போக வேண்டும் என்று ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் .  விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத்  தான் காதைக்  கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த விடுமுறையில் எங்காவது வெளியில் செல்ல ஆசை இருக்கும் தானே .


 கேசவனுக்கு பிஎப் லோன் வர வேண்டுமே என்ற கவலை. வந்து விட்டது .அன்று வீட்டுக்குள் நுழையும்போதே 'நாளை கொடைக்கானல் கிளம்புகிறோம்'. இந்தச்  செய்திக்கு மலர்ந்த முகங்கள். துணிமணிகளை எடுத்து வைத்து அன்று இரவு அரைத்  தூக்கம் தூங்கி அதிகாலை எழுந்து கிளம்பியபோது என்ன ஒரு குதூகலம் ஆனால் அது நீடித்ததா.


 கோக்கர்ஸ் வாக்கில் வேகமாக நடக்க சொன்னது. சூசைட் பாயிண்ட் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு திரும்பியது. போட்டிங்கின் போது 'சீக்கிரம் திரும்ப வேண்டும்' என்று முணுமுணுத்தபடி இருந்த  கேசவன். அவன் பெற்றோரால்  அவனின் அவசரத்தை தாங்க முடியவில்லை. ஒரு முறை காமன் பாத்ரூம் ஒதுங்கிய போது வெளியில் இருந்து' சீக்கிரம் சீக்கிரம்' என்ற கத்தல் .


 மத்தியான சாப்பாடு கூட அவர்கள் 'அவக் , அவக் ' என்று சாப்பிட வேண்டியதாய் இருந்தது.  'வீட்டுல போய் நிதானமாய் சாப்பிட்டுக்கலாம், பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் சட்டு புட்டுன்னு பார்த்துட்டு பஸ் ஏறணும்' . அந்த குளிரிலும் வேர்த்தது  விசாலத்திற்கு. 'ஏன்தான் இப்படி அவசரப் படுத்தறாரோ ,   இதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்து இருக்கலாம்'.


 குமார் சொல்லிவிட்டான் .குழந்தை, மனதில் இருப்பதை ஒளிக்கத்  தெரியவில்லை அவனுக்கு. 'எல்லாம் ஒரே நாள்ல பார்க்கணும்னா வேகமாகத் தான் இருக்கும்' என்று புத்திமதி.  இதற்கு நடுவில் எல்லா இடங்களிலும் போட்டோ எடுக்கச் சொல்லி வற்புறுத்தல் வேற. ' திரும்பிப் பார்க்கறப்போ சந்தோசமா இருக்கும் ' என்று விளக்கம் . ஆனால் காட்சிகளைத் திரும்பிப் பார்க்க விடாமல் அவசரம். எல்லோரும் 'ஈ ' என்று இளித்துக்கொண்டு புகைப்படங்கள். 


 திரும்பி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின் தான் கேசவன் ஓய்ந்தான்.  பஸ்ஸில் திரும்பும்போது தூரத்தில் தெரிந்த மலைத்தொடர் , பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, எல்லாமே அவர்கள் அருகில் சென்று பார்த்ததை    விட இப்போது மிகவும் அழகாகத்  தெரிந்தன 

------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


புதன், 27 ஏப்ரல், 2022

அமெரிக்க மாப்பிள்ளை - சிறுகதை

 அமெரிக்க மாப்பிள்ளை - சிறுகதை 

----------------------------------------------------------------------

'ஒரு மாதம் உன்னைப் பார்க்காம ரெம்பக் கஷ்டமா இருந்துச்சு நளினி ' . கண்கள் கலங்க குரல் கம்ம பேசும் குமாரைப் பார்க்க பாவமாய் இருந்தது நளினிக்கு. இவனிடம் எப்படிச் சொல்வது. போன மாதம் பெண் பார்க்க வந்த நியூயார்க் மாப்பிள்ளை வசந்த். அவன் விவரித்த நியூயார்க் வாழ்க்கை இவளைக் கனவுலகில் பறக்க வைத்தது. 

சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும்  நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .

போன மாதம் உறவினர் திருமணம்  என்றுதான் விடுப்பு எடுத்துப் போய் இருந்தாள் சேலத்திற்கு.  அதே திருமணத்திற்கு வந்திருந்த வசந்த் அவளைத் தற்செயலாகப் பார்த்து விட்டு அவளின் அழகையும் சிரிப்பையும்  பார்த்தே மனம் மயங்கி அவன் பெற்றோர் மூலம்  சொல்லி அனுப்ப, அந்த தூரத்து உறவினர் மூலம் அவள் அப்பாவுக்கு வந்த சேதி. 

அடுத்த வாரம் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.  . அவனது அமெரிக்கப் பேச்சு, ஆண்மைத் தோற்றம்,. உருவத்திற்கேற்ப அணிந்திருந்த உடையின் மிடுக்கு   , செல்வத்தின் செழிப்பு. முடியாது என்று சொல்ல அவளால் முடியவில்லை. ஒரு நிமிடம் கண்களுக்குள் குமார் வந்து போனான்தான் . சினிமா போனது, கடற்கரை போனது , வாழ்க்கைப் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டது. எல்லாம் வந்து போயின.  குமாரின் குடும்பம் பற்றி அவளுக்குத் தெரியும். ஏழைக் குடும்பம். விதவை அக்கா. அம்மா நோயாளி. அப்பாவும் இல்லை. இவன் நல்லவன்தான். வேலையில் அலுவலகத்தில் நல்ல பெயர். முன்னேறக் கூடியவன்தான்.  ஆனால், ஒரு கனவு வாழ்க்கையை  நனவாக்கப் போகும் வசந்த்.  

இப்போது அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் கொடுக்க வந்திருக்கும் நளினிக்கு, குமாரிடம் என்ன சொல்வது என்ற  யோசனை. 'ஒண்ணுமில்லை குமார், உடம்புக்கு முடியலை . அதுதான் வேலை பார்க்க வேணாம்னு   அப்பா சொல்லிட்டாரு. அதான், ரிசைன் பண்ணலாம்னு ' . 

'அது  சரி.நான் சேலம் வந்து உங்க அப்பாவைப் பார்க்கலாமா '.

'அய்யய்யோ, அதெல்லாம் வேணாம் ' என்று அவசரமாய் மறுத்தாள்  நளினி. 

'என்னாலே இனிமே முடியாது நளினி, இந்த ஒரு மாசம் , நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். நீ இல்லாம , என்னாலே வாழ முடியாது , எங்க வீட்டிலே சொல்லிட்டேன், 'சரின்னுட்டாங்க. '

'விஷயம் பெரிதாகிறது. 'கட் ' செய்ய வேண்டிய நேரம் வந்தாகி விட்டது' என்று நினைத்த நளினி யோசித்தாள் .'குமார், எனக்கு கல்யாணம் நிச்சயமாய் விட்டது , என்று 'பட் ' டென்று உடைத்து விடலாமா , அல்லது ' எங்க அப்பா வேற இடத்திலே பார்க்கிறார் ' என்று மெதுவாக ஆரம்பிக்கலாமா ' என்று யோசனையில் இருந்தவளை அவள் தோழி மாலதி அழைத்தாள் .

' நளினி, மேனேஜர் கூப்பிடுறார் '.

'அப்புறம் பார்க்கலாம் ' என்று விடுபட்ட அம்பாக விரைந்த நளினியின் வேக நடையில் தெரிந்த அலட்சியம் குமாரை உறுத்தியது . 

'என்ன ஆயிற்று இவளுக்கு, போன மாதம் கூட கடற்கரையில் கல்யாண மண்டபம் பற்றி எல்லாம் பேசினோமே ' குழம்பிய குமாரிடம் வந்த மாலதி .

'குமார் , ஒரு நிமிஷம்' . திரும்பினான். 

'நளினிக்கு நியூயார்க் மாப்பிள்ளை அமைஞ்சிருக்கு, அவ வாழ்க்கையைக் கெடுத்துறாதீங்க. அவளுக்கும் பிடிச்சிருக்கு . '

தலையில் சம்மட்டியால் அறைந்தது போல் இருந்தது குமாருக்கு. 

' அப்ப பேசினது, பழகினது , எல்லாமே ' அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அழுகையும் , கோபமும் கலந்து வந்தன . அடக்கிக் கொண்டான். அழுதோ, கோபப்பட்டோ என்ன பயன். தனது சீட்டுக்கு சென்று அமர்ந்தான். 

மேனேஜர் ரூமை விட்டு வெளியே வந்த நளினி இவனை நோக்கி வந்தாள் . 

' நான் ராஜினாமா பண்ணிட்டேன் குமார்' 

' சரி, நியூயார்க் மாப்பிள்ளையோடு சந்தோசமா இரு ' 

நிமிர்ந்து பார்த்த குமாரை நேராகப் பார்க்க முடியாமல் குற்ற உணர்வோடு தலை குனிந்தாள் நளினி . ' நான் செய்வது  தவறா' . ஒரு நிமிடம் தான் , 'சரக்' கென்று திரும்பி மாலதியோடு சேர்ந்து வெளிச் சென்றாள். 

மதியம், பியூன் மாணிக்கம் பரபரப்போடு வந்தான். ரோட்டில் கார் மோதி, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில்  நளினி இருக்கும் சேதி. ஓடினான் குமார். சேலத்திற்கு தகவல் பறந்தது. 

மாலை ஆஸ்பத்திரியில் , அவள் அப்பா, அம்மா, வசந்த் , ஓரமாகக் குமாரும், அலுவலக நண்பர்களும் . 

முகத்தில் ஏகப் பட்ட பிளாஸ்திரிகளோடு நளினி. அவளது பழைய முகம் இனி திரும்பாது. தெரிந்த வசந்தின் முகத்தில் அதிர்ச்சி . ' 'கவலைப் படாதீங்க மாமா, பிளாஸ்டிக் சர்ஜெரி செஞ்சா எல்லாம் சரியாயிடும் , நான் ஊர் திரும்ப வேண்டும்' என்று அவன் நளினியின் அப்பாவிடம் சொல்லி விட்டு விரைந்த வேகம், குமாருக்குப் புரிந்தது. அரைகுறை மயக்கத்தில் இருந்த நளினியின் வாய் முணுமுணுத்தது ' நியூயார்க்  , நியூயார்க் '.

-----------------------------------------நாகேந்திர பாரதி 

My Poems in Tamil and English 


தேர்தல் சினிமா - சிறுகதை

 தேர்தல் சினிமா - சிறுகதை 

------------------------------------------------

' தலைவர் கொடுத்துவிட்டு வரச் சொன்னார் ; வாங்கிட்டு மரியாதையா நம்ம கட்சியில சேர்ந்துடு ; எம்பி சீட் கிடைக்கும் பிரச்சாரத்துக்கு வந்துடு '  என்று தன் முன் நீட்டப்பட்ட சூட்கேசுக்குள் அடுக்கி வைக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளை பார்த்தபடி பிரமித்து நின்றான் ஆனந்த். 


 அவனது மூன்றாவது படத்தின் நூறாவது நாள் விழா நேற்று நடந்தது. வந்து வாழ்த்தியவர் இதை கொடுத்தனுப்பி உள்ள தலைவர்தான். மறு நாளே இப்படி ஒரு மிரட்டல். நேற்று நூறாவது நாள் விழாவில் இவன் பேச எழுந்த போது அரங்கத்தில் எழுந்த கைதட்டல் ஒலி, இவனது பேச்சுக்கு இடையே எழுந்த உற்சாக 'வாழ்க' சப்தங்கள், ஒரே நாளில் ஆனந்தை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டன .


 நினைத்துக் கொண்டான் . 'போன வருடம் இதே நேரம் திருவல்லிக்கேணி ரூமுக்குள் சிகரெட் புகை வாசம். இன்று ஏசி ரூமுக்குள் மெல்லிய பெர்ஃப்யூம் வாசம்.' சூட்கேசை மூடி வாங்கிக்கொண்டு மாலை வந்து தலைவரைப்  பார்ப்பதாகச்  சொன்னான். அடுத்து உதவியாளருடன் ஆலோசனை .10 வருட நண்பன் அவன் .சகலமும் தெரிந்தவன். இவனுக்கு இருக்கின்ற மூன்று மனைவிகள்  உட்பட. மூன்று படங்கள், 100 நாள் படங்கள், 3 மனைவிகளையும்  ஐந்து பினாமிகளையும்  உருவாக்கிவிட்டன .  'எந்த மனைவியின் பெயரை எம்.பி  விண்ணப்பத்தில் சொல்வது .எவ்வளவு சொத்து மதிப்பு காண்பிப்பது. தலைவரிடம் எந்த அளவுக்கு நெருக்கம் வைத்துக்கொள்வது.' ஆலோசனை முடியும் போது மாலை ஆகிவிட்டது.


 உதவியாளரிடம் இருந்து போன் அழைப்பு. 8 மணிக்கு பனகல் பார்க்  கூட்டத்திற்கு வந்து சேரும்படி .போகும்போது போஸ்டர்களில் தலைவரும்  இவனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அதற்குள்  எவ்வளவு வேகமாக ஏற்பாடுகள். இவனது பாதுகாப்புக் குழுவோடு  மேடையில் ஏறும் போது, அமர்ந்திருந்த தலைவர் தவிர மற்ற பல தலைகள் உடம்போடு சேர்ந்து எழுந்தன. 


 கைகளைக்  குவித்து  தலைவருக்கு வணக்கம் தெரிவித்து கூட்டத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கிக்  கும்பிட்டு  விட்டு தலைவருக்குப்  பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.  தலைவரின் உள்ளுக்குள் ஓடிய  'இவனையெல்லாம் சேர்க்க வேண்டி உள்ளது ; என்ன செய்வது ;ஓட்டு சேர்க்க வேண்டியுள்ளது'  என்ற எண்ணத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது ஆனந்தால் . 


அடுத்து,  இவன் பேசிய பேச்சுக்குக்   கிடைத்த கைதட்டல்கள் .  ' சூட்கேஸ் நஷ்டம் இல்லை.   காரியத்தைக்  கச்சிதமாக முடித்து விட்டோம் , மாற்றுக்   கட்சி முந்திக் கொள்வதற்குள் ' தலைவரின் எண்ண ஓட்டம். கடைசியாகப்  பேசிய தலைவர், தம்பி ஆனந்தின் நடிப்புத்திறமையை புகழ்ந்து 'தம்பியின் அரசியல் பிரவேசம் நாட்டுக்கு நன்மை பயக்கும்' என்று கூறிய போது எழுந்த கைதட்டல்கள்  ஆனந்தையே  கொஞ்சம் பயப்பட வைத்தன .  அவனது  வெற்றிப்  படங்கள் அவனது  நடிப்புத் திறமை , சண்டையிடும் திறமை ' போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பேசினார் தலைவர். 


வீட்டுப்  பிரச்னைகளையும் நாட்டுப்  பிரச்சனைகளையும் மறந்து கைகட்டிக்  கொண்டிருந்தது மக்கள் கூட்டம் .'அடுத்த படம் வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் இல்லையென்றால் 'அம்பேல் ''  என்று நினைத்துக்கொண்டான் ஆனந்த்.  'எம்பி பதவியை வைத்துக்கொண்டு எப்படியாவது ஓட்டிவிடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டான்.  விழா வெற்றிகரமாக முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஆனந்துக்குக்  காத்திருந்தது  ஒரு செய்தி .   


 அவனது உதவியாளனுக்கே தெரியாத , அவனது நான்காவது காதலி  , முக்கிய பினாமி ,  மாற்றுக் கட்சியில் நாளை சேரப்  போவதாக  அவனது ரகசிய நம்பருக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தி .

----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


செவ்வாய், 26 ஏப்ரல், 2022

வித்தைப் பயணம் - கவிதை

 வித்தைப் பயணம் - கவிதை 

———————--------------------------—-

போக வேண்டிய

தூரமும் அதிகம் தான்


போகக் கிடைத்த

பாதையும் கடினம் தான்


ஆராய்ந்து பழக வேண்டியோரும்

அன்போடு பழக வேண்டியோரும்


இரண்டு பக்கமும்

இழுக்கும் போது


விழுந்து விடாத வாழ்க்கையும்

வித்தைப் பயணம்தான்


————நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


என்ன தவம் செய்து விட்டேன் - கவிதை

 என்ன தவம் செய்து விட்டேன் - கவிதை 

—————————----------------------------------———-

வேளா வேளைக்குச்

சாப்பாடு , காபீ , டிபன்

கொடுத்து விடுவாள்


கவிதை , கதை எழுதிக்

காலம் தள்ளுவதைக்

கண்டு கொள்ள மாட்டாள்


பென்ஷன் பணத்தில் பாதி

சொந்தத்துக்கு அனுப்புவதில்

முகம் சுளிக்க மாட்டாள்


மீதிப் பணத்தை வைத்து

வீட்டுச் செலவுகளைக்

கவனித்துக் கொள்வாள்


நானும் ஒரு குழந்தையோ

அவளுக்கு என்று

நினைக்க வைத்து விடுவாள்


உடம்புக்கு முடியாமல்

சில நாட்கள் அவள்

படுத்தபோது தான் தெரிந்தது


வீட்டு வேலைகள் எத்தனை

செய்து கொண்டு

இருந்தாள் என்பது

————நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


திங்கள், 25 ஏப்ரல், 2022

பசுமை - கவிதை

 பசுமை - கவிதை 

————------------------

கனவுகளாய் இருந்தே

கலைந்து போனவை


கண்ணீரில் கரைந்து

காய்ந்து போனவை


காலத்தின் கோலத்தில்

கலந்து போனவை


எல்லாமே பசுமையாய்

இதயத்தின் ஆழத்தில்


இப்போதும் இருப்பதால்

இனிமை ஆனவை

——————நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


தாய்க் குருவித் தவிப்பு - கவிதை

 தாய்க் குருவித்  தவிப்பு - கவிதை 

----------------------------------------------------------

இலைக்கூட்ட  இருட்டுக்குள்

 ஊடுருவும் ஒளிக்கீற்று 

 தலையாட்டிக்  கீச்சிட்டு 

 தாய்க்குருவி நெளிப்பு  விடும்


 இறக்கைக்குள் குஞ்சுகளை 

 இரவெல்லாம் வருடியதால்  

பறக்கின்ற முயற்சிக்கு  

முறுக்குகின்ற பயிற்சியது 


குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில் 

 பசி வழியப்  பார்த்துவிட்டு 

கூட்டத்து குருவிகளைக் 

 கூப்பிட்டுச்  சிறகடிக்கும் 


இலைமோதிப் பறக்கின்ற 

ஏராளச்  சிறகுகளின் 

சளசளப்பில்  சலித்தபடி 

 தலையாட்டும் மரக்கூட்டம் 


 பக்கத்து வயல் வெளியில்

 பரவிக் கிடக்கின்ற 

தானியத்தைக்  குறிவைத்துத் 

 தானாக வழி போகும்


 வேட்டைக் காரர்களின் 

தோட்டாக்குத் தலை தப்பி

 காட்டுக் கழுகுகளின் 

இறக்கைக்கு அடிதப்பி 


  வயக்காட்டு நெல் மணியை

  வாய்க்குள் அதக்கிட்டு 

பயக்காட்டு  வானத்தில் 

 பார்த்துப்  பறந்து வரும் 


குஞ்சுகளின் வாய்க்குள்ளே 

முத்தமிட்டு ஊட்டுகையில் 

 நெஞ்சுக்குள் நினைப்பு  வரும் 

'நாளைக்குப் பொழைப்போமா '

------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English  


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

அப்பா டாட்டா - சிறுகதை

 அப்பா டாட்டா - சிறுகதை 

---------------------------------------------

இரண்டு கைகளிலும் பெட்டிகளோடு ,வேகமாக, பயணிகளை விலக்கிச் செல்லும் மகன் மருமகள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் பங்குக்கு ஒரு பேக்கைத்  தூக்கிக்  கொண்டு அவர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தார்  முத்தையா. சேகரின் அப்பா. போன மாதம் 'எனக்கு டெல்லிக்கு புரோமோஷன் ஆர்டர் வந்துள்ளது' என்று சேகர்  சொன்ன போது நளினி போல அவரால் சந்தோஷப்பட முடியவில்லை. 'இனி நான்  தனி' என்ற எண்ணம்தான் உடன் வந்தது .


 மனைவி இறந்த பின் மறுமணம் செய்யாமல் மகனைக்  கவனித்து படிக்க வைத்து அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்து நல்ல மருமகளும் சேர்ந்து இப்போது ஆபீஸராக டில்லி  செல்லப் போகிறான். அவன் அழைத்தாலும்  மறுத்து விட வேண்டும் என்று நினைத்தவருக்கு 'இரண்டு மூன்று மாதங்கள் கழித்து வந்து அழைத்துச் செல்கிறேன்' என்று அவன் சொன்னது 'சுருக்'கென்று இருந்தாலும் 'புதுமணத்தம்பதிகள்' என்று வாழ்த்தத்  தான் செய்தார்.


 அவருக்குச்  சில நண்பர்கள் உண்டு.  மாலை நேரம் பூங்காவில் வாக்கிங்  செய்துவிட்டு பெஞ்சில் அமர்ந்து அவர்களின் மகன்களின் அமெரிக்க வாழ்க்கையைப்  பொறுமையாகக்  கேட்பார்.  இதனாலேயே அவர்கள் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.  அவர் நினைப்பதை அவர்களிடம் சொல்வதில்லை. 'என்னதான் அமெரிக்காவில் வசதியாக இருந்து பணம் அனுப்பினாலும்  சேர்ந்து இருக்கும் என் மகன் போல் ,கூட இருக்கும் சுகம் வருமா 'என்று நினைத்துக் கொள்வார். இப்போது இவனும் தில்லிக்கு. 


 ரயில் ரிசர்வேஷன், குறிப்பிட்ட சாமான்களை லாரியில்  அனுப்புவது போன்ற காரியங்களைச்  செய்வதில் அவருக்குப்  பொழுது போனது. இதோ, சென்ட்ரலில் , ஜன  சமுத்திரத்திற்குள். அவர்களோடு ஓட்டமும் நடையுமாக, மூச்சு வாங்கியது. ஆச்சு. வயது எண்பது   ஆகிவிட்டது.  இன்னும் எத்தனை நாட்களோ. 


கம்பார்ட்மெண்டில் பெட்டிகளை சீட்டின் அடியில் தள்ளி செட் செய்த பிறகு கீழே இறங்கி ஜன்னலோரம் நின்று கொண்டார். வழியனுப்ப வந்திருந்த பெற்றோரிடம் நளினி அழுதுகொண்டு இருந்தாள் . சேகர் கடைக்கு ஓடி  புத்தகம், வாட்டர் பாட்டில் போன்றவை வாங்கிக் கொண்டிருந்தான்.  விசில் ஊதும் சப்தம். 


அப்பாவிடம் அவசரமாய்ப்  பேசினான். ‘.உடம்ப பாத்துக்கங்க,  மெசேஜ் அனுப்புங்க, அப்பா டாட்டா'. வண்டி கிளம்பியதும் நெஞ்சு லேசாக வலிப்பது போல் இருந்தது அவருக்கு . 'எனக்கு பால் ஊற்ற வருவாயா 'மனதுக்குள் கேள்வி கண்களில் கசிந்தது. 

-----------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


ஒத்தைப் பனை மரம் - கவிதை

 ஒத்தைப் பனை மரம் - கவிதை 

----------------------------------------------------

அந்த ஒத்தைப் பனை மரம் 

காத்துக் கிடக்கிறது 


அவன் பட்டம் விட்டுப் 

பார்த்தது  அங்குதான் 


பீடி குடித்துப் 

பெருமைப்பட்டதும் அங்கேதான் 


படித்து முடித்த 

பாடமும் அங்கேதான் 


நண்பர் சேர்ந்த

 நாட்டாமை அங்கேதான் 


முதல் கவிதையில் 

மூழ்கியதும் அங்கேதான் 


காதலில் தோற்று 

கண்ணீரும் அங்கேதான் 


புகை வண்டி பார்த்து 

கை காட்டியதும் அங்கேதான் 


புண்பட்டுக்  கிளம்பிப் 

புறப்பட்டதும் அங்கேதான் 


ராணுவத்தில் சேர்ந்து 

அடிபட்டு விழுந்ததும் 


கண்ணில் தெரிந்த 

காட்சியும் அதேதான். 


அந்த ஒத்தைப் பனைமரம் - இன்னமும் 

காத்துக் கிடக்கிறது 

-----------------------------------------நாகேந்திர பாரதி  

 My Poems in Tamil and English 


சனி, 23 ஏப்ரல், 2022

கடற்கரைக் காதல் - கவிதை

 கடற்கரைக்  காதல் - கவிதை 

----------------------------------------------------


மணலைக் குவித்துக் கலைத்தோமே 

அப்போது சொல்லவில்லை 

மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமே  

அப்போது சொல்லவில்லை 


தூரக் கடலை ரசித்தோமே  

அப்போது சொல்லவில்லை 

துணிகள் நனைய  நடந்தோமே 

அப்போது சொல்லவில்லை 


ஓரப்  படகில் ஒளிந்தோமே 

அப்போது சொல்லவில்லை 

உன்னை என்னை மறந்தோமே 

அப்போது சொல்லவில்லை 


காலம் கடந்து சொல்கின்றாய்  

காதல் மறக்கச் சொல்கின்றாய் 

கன்னிப்  பெண்ணே வாழ்த்துக்கள் 

காதல் வாழும் நெஞ்சுக்குள் 

-------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


கல்லறைக் கடிதம் - கவிதை

 கல்லறைக் கடிதம் - கவிதை 

----------------------------------------------------

உயிரோடு உலவும் உடல்களுக்கு 

கல்லறைக்குள் இருந்து ஒரு கடிதம் 


இங்கு எறும்பு கடிக்கும் போது 

வலிக்கவில்லை 

மண் வந்து மூக்கில் முட்டும்போது 

திணறல் இல்லை 


காட்சிகள் கண்களை 

சிரமப்  படுத்தவில்லை 


மேலிருக்கும் சப்தங்கள் 

கீழே இறங்குவதில்லை 


கீழிறங்கும் தண்ணீரால் 

தும்மல் வருவதில்லை 


எங்கும் இருட்டு 

எப்போதும் நிசப்தம் 


மண்ணுக்குப் மக்கிப் போய்க் 

கலக்கும் போது  


தன்னை இழக்கும் சுகம் 

கிடைக்கிறது 


இறந்து போனதின்  இன்பம் 

இப்போது புரிகிறது


உங்களுக்கும் புரியும் 

ஒரு நாள் 

--------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


வெள்ளி, 22 ஏப்ரல், 2022

தூங்கும் காடு - கவிதை

 தூங்கும் காடு - கவிதை 

-------------------------------------------------

தூங்கும் காட்டைத் தொந்தரவு செய்யாதீர் 

துடித்துக் களைத்துப் படுத்துக் கிடக்கிறது 


இடியும் மழையும் வெடித்த வேகம் 

இரவும் பகலும் துடித்த சோகம் 

அருவித்  தண்ணீர் மலையைத் தேய்த்து 

அடியில் விழுந்து ஆறாய் ஆனது 


போட்டுப் புரட்டி எடுத்துப்  போனது 

புல்லும் புதரும்   மடித்துச் சாய்ந்தன

 செடியும் பூவும் கசங்கி ஓய்ந்தன 

சேறும்  மண்ணும் சிதறிக்  குழம்பின 


மரத்தின் கிளைகள் மடிந்து தொங்கின 

வேரை  அறுக்கும் நீரில் மூழ்கின 

ஆடும் மயிலும் ஓடிப் போயின 

அணிலும் குரங்கும் வாடிப் போயின 

 

சிங்கம் புலியும் குகைக்குள் சேர்ந்தன  

சீறும்  பாம்பும் புற்றில் ஊர்ந்தன  

காற்றும் மழையும் அடித்து ஓய்ந்தன 

காடும் கொஞ்சம் கண்ணைச்  சாய்த்தது 


தூங்கும் காட்டைத் தொந்தரவு செய்யாதீர் 

துடித்துக்  களைத்துப் படுத்துக் கிடக்கிறது 

------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


புளிய மரம் - கவிதை

 புளிய மரம் - கவிதை 

-----------------------------------------

புளிய மரத்தில் இருப்பது 

பேயா, பெரிய தாத்தாவா 


மரத்தைக் கடக்கும் போதெல்லாம் 

மறப்பதில்லை கும்பிடுவதை 


செருப்பைக் கழற்றி விட்டு 

கண்மூடி ஒரு கடவுள் 


எத்தனை  தலைமுறை தாண்டி 

இந்தப் பழக்க தோஷம் 


எப்போதாவது ஒரு 

தேங்காய்ச் சிதறலும் உண்டு 


பொங்கல் வைக்க வரும் 

குடும்பக் கூட்ட மகிழ்ச்சி 


கண்கள் சேர்ந்து கலந்த 

கல்யாணப் பேச்சும் நடக்கும் 


புளிய மரம் என்பது 

ஒரு மரம் அல்ல அவர்களுக்கு 


அந்தக் குடும்பத்தின் 

முன்னோர்கள் குடியிருப்பு 


வயதாகிப் போனவர்களின் 

வாரிசா கிளை தழைகள் 

---------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


வியாழன், 21 ஏப்ரல், 2022

தாத்தா - கவிதை

 தாத்தா - கவிதை 

--------------------------------

தனியாகக் கனமாகக் 

கிடக்கின்ற இருட்டாகத் 

தாத்தா மனசு 


வந்திருந்த சொந்தமெல்லாம் 

வாக்கரிசி போட்டுட்டுக் 

கிளம்பியாச்சு 


வாக்கப்பட்டு வந்தவளின் 

சுடுகாட்டு அஸ்திகளும் 

கரைஞ்சு போச்சு 


காத்துப் போல வீடெல்லாம் 

சுத்திவந்த மகராசி 

காத்தாய் ஆச்சு 


நேத்துப் போல நெனைப்பிருக்கு 

நெஞ்சினிலே சாஞ்சவளின் 

 வாச மூச்சு 


புள்ளகுட்டி பெத்துப் போட்டு 

பேரன்பேத்தி விளையாடி

 முடிஞ்சு போச்சு 


சோறு பொங்கிப்  போட்டதுவும் 

சோகமெல்லாம் கேட்டதுவும் 

கனவா தாயி 


நாளு  தள்ளிப் போகாம 

நானும்  வரேன் சீக்கிரமா 

 கூப்பிடு நீயி 

-------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


'செல்'லத் தொல்லை - கவிதை

 'செல்'லத்  தொல்லை - கவிதை 

-----------------------------------------------------

காலை எழுந்தவுடன் செல்லு  - பின்பு 

காதில் ஒட்டிக்கொண்ட செல்லு 

மாலை முழுதுமந்த செல்லு - என்று 

வழக்கப் படுத்திக்கொண்ட செல்லு 


கைதி ஆக்கிப்புட்ட செல்லு - சின்ன 

கம்பியூட்டர் ஆகிப்போன செல்லு 

செய்தி அனுப்புறதும் செல்லு - சில 

படங்கள் அனுப்புறதும் செல்லு 


போட்டோ புடிக்கிறதும் செல்லு  - ரேடியோ 

போட்டுக் கேட்கிறதும் செல்லு 

ஓட்டுக் கேட்கிறதும் செல்லு - லவ்வை 

ஒடைச்சுச் சொல்லுறதும் செல்லு 


நாட்டுப் புறமும் அந்த செல்லு - எல்லா 

நகருப் புறமும் அந்தச் செல்லு 

கேட்டுத் தெரிஞ்சுக்கவும் செல்லு - ரெம்பக்  

கெட்டுப் போறதுக்கும் செல்லு 


மாசம் முழுக்க மஜா செல்லு - மாசக் 

கடைசி காச்சுமந்தப் பில்லு 

காசைக் கரைச்சுப்புடும் செல்லு - அதைக் 

கவனிச்சு நடந்துக்கிடச் சொல்லு 

--------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


புதன், 20 ஏப்ரல், 2022

தெரு விழாக்கள் - கவிதை

 தெரு விழாக்கள் - கவிதை 

------------------------------------------------

மொளப்பாரி ஒயிலாட்டம் 

குலவைக்கு மழை காட்டும் 

வயக்காட்டுச் சடச்சி 


மூணுகல்லின் மேல் வைத்த 

வாசக்கறி வாசனையை 

வாங்குகின்ற முனுசாமி 


தங்கச்சி திருமணத்தில் 

தாமதமாய் வந்ததனால் 

ஆறோடும்  அழகர் 


பிடித்து வைத்த  களிமண்ணில் 

அமுக்கிவைத்த கண்களுடன் 

காத்திருக்கும் பிள்ளையார் 


ஊர்கூடிப்  பொங்கலிட்டு 

அண்ணாந்து கைகூப்பும் 

சூடான சூரியன் 


வேல்குத்தி வீறிட்டு 

விரதத்தில் ஓடிவரும் 

பக்தனுடன் வேலன் 


மக்களோடு கலந்திட்ட 

அம்மன்சாமி  அடைந்திட்ட 

கூட்டத்தைப்  பார்த்திட்டு 


கோயிலுக்குள் குடியிருக்கும் 

சாமியெல்லாம் கூடிப் பேசி 

ஊர்வலமாய் வெளியேறும் 

------------------------------------நாகேந்திர  பாரதி

My Poems in Tamil and English 


செவ்வாய், 19 ஏப்ரல், 2022

சட்டை குட்டை - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு

 சட்டை குட்டை - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு

---------------------------------------------------------------------------------

சட்டை குட்டை- யூடியூபில் 

My Poems in Tamil and English


வேண்டாத விரதம் - கவிதை

 வேண்டாத விரதம் - கவிதை 

------------------------------------------------

 உண்ணா நோன்பிருக்கும்

 உற்சாக முயற்சிக்கு

 என்னா  சோதனைகள்

ஏராள   வேதனைகள்


 கல்லில் சுடும் தோசை

'சுர்'ரென்று  காதுக்குள் 

'சுள்'ளான  துகையிலினைப் 

  பார்க்கையிலே பசி எடுக்கும் 


மத்தியானம் சாம்பாராம் 

 மணக்கின்ற காய்கறியாம் 

நித்தமுமே  உண்டதுதான் 

நீரூறும்  வாய் அன்று 


 சாயந்திர வேளையிலே

 சட்டி னியும் வடையாரும் 

 காய்ந்துபோன வயிற்றுக்குள்

'கபகப'ன்னு  பசி எடுக்கும் 


 ராத்திரிக்குக்  காத்திருக்க

 மெதுவாக 'முள்'ளோடும் 

 ஆத்தாடி முடிஞ்சிருச்சு 

கொண்டாடி சாதத்தை 


 சேத்திருந்த பசி  எல்லாம்

 செலவழிக்கும் வேகத்தில்

பாத்திருந்த பண்டம்  எல்லாம்

'பகபக'ன்னு  உள்ளிறங்கும்


 காலையிலே வயிற்றுக்குள் 

'கடமுடா' சப்தங்கள்

 வேலையினைக்  காட்டியது

வேண்டாத விரதமது 

 -------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


திங்கள், 18 ஏப்ரல், 2022

தமிழ் இனி வாழும் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

 தமிழ் இனி வாழும் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு 

------------------------------------------------------------------------------------------

தமிழ் இனி வாழும்- யூடியூபில் 

My Poems in Tamil and English   


போதுமடி கடல் தாயே - கவிதை

 போதுமடி கடல் தாயே - கவிதை 

----------------------------------------------------------

போதுமடி கடல் தாயே நிப்பாட்டு 

போனமுறைக்  காயமின்னும் ஆறவில்லை 

மோதிவந்து கோபத்தில் முட்டாதே 

முன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு 


பூமிக்குப் பிறந்தவளே  பொறுமை காட்டு 

புறப்பட்டுக் கரை தாண்டி வாராதே 

மீனுக்குப் பசியென்றால் 'பாசி' கொடு 

எங்களையே பசிக்கிரையாய்  எண்ணாதே 


 பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப்போய் 

பெருஞ்சோறு போட்டாயே பத்தாதா 

பின்னுமென்ன ஆசையடி பேரழிவே 

பிள்ளைகளைத் தின்னுகின்ற பேயா நீ 


தாலாட்டாய் உன்னலையைக் கேட்டிருந்தோம் 

ஒப்பாரி ஆனதடி  இப்போது 

படகோட்டி மீன் பிடித்து வாழ்ந்திருந்தோம் 

பயம் காட்டி நிறுத்திவிட்டாய் சரியாடி  


உத்தரவு இடுகின்றோம் உள் வாங்கு 

உன்மத்தம்  போதுமடி பின் வாங்கு 

கத்து கடல் சத்தத்தைக் குறைத்துக் கொள்  

கண்மூடி தூங்கிப்  போ வாழ  விடு 

-----------------------------------நாகேந்திர பாரதி  

My Poems in Tamil and English 


ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சனி, 16 ஏப்ரல், 2022

ஈரம் - சிறுகதை

ஈரம்  -சிறுகதை 
-------------------------------------
'  வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க' என்று அட்டகாசச்  சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத்  தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச்  சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் திருமணம் .வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்கள். 'கழுத்தில் தங்கச் செயின் ஒன்று கூட இல்லாமல் நான் வரமுடியாது' என்று சொல்லிவிட்டாள்  மனைவி விசாலம்   . 'தான் மட்டுமாவது போகவேண்டும் சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது' என்று வந்துள்ளார் மாதவன்.  

ராமலிங்கமும் தூரத்துச்  சொந்தம் தான் .'பட்டுவேட்டி, சட்டை அங்கவஸ்திரம் கைநிறைய மோதிரங்கள்' உடன் வம்பளந்து கொண்டிருந்தவர் இவரைப் பார்த்தவுடன் இவருடன் சேர்ந்து கொண்டார். ' ஏதாவது கல்யாணம் காட்சியில்தான் பார்க்க முடியுது, வீட்டுப்  பக்கம் வரக் கூடாதா'  .கேள்விக்குப்  பதிலாக ஒரு வெற்றுப்  புன்னகை தான் மாதவனிடம் இருந்து 

 குடும்பத்தின் வறுமை, இயலாமை, பையன் ஒழுங்காகப் படிக்காமல், இப்போது தெரிந்தவர் கடையில் வேலை.  குறைச்ச சம்பளம்தான் . ஆனால் பாசக்காரன் . அப்பாவுக்கு லேசான காய்ச்சல் என்றாலே துடித்துப் போய் உடனே ஆஸ்பத்திரி கூட்டிப் போய் விடுவான் . 

இப்போது கூட கல்யாணத்திற்குச் செய்ய , கடன் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான் . இப்படி   வாழ்க்கை நடத்தும் இவரது குடும்ப நிலைமை ராமலிங்கத்துக்குத்  தெரியாதா என்ன,  அவருக்குக்  கொடுக்க மனம் இருக்காது.  ஆனால் பேச்சு மட்டும் அன்பு நிரம்பி வழியும்.

' உங்ககிட்ட சொல்லலையே மாதவன், பையனுக்குப்  பொண்ணு பாக்கறோம் ,  உங்க  பக்கத்துல யாராவது தெரிஞ்சவங்க நல்ல இடமா இருந்தா சொல்லுங்க ஆனால் வசதியாகவும் இருக்கணும் 'என்று  இவரது  நாலு முழ வேட்டியை நக்கலாக பார்த்தபடியே அவர் கேட்ட தோரணையில் தெரிந்தது திமிர்.  மாதவன் விடுவிடுவென்று படியேறினார் .' என்ன ஓய் கல்யாண விருந்து சாப்பாட்டுக்கு அவசரமா .  ரொம்ப நாளைக்கப்புறம், நல்ல சாப்பாடோ '  என்று கேட்டபடி மூச்சு வாங்க பின்தொடர்ந்தார் ராமலிங்கம்.

 இதை விசாலத்திடம்  சொல்லக்கூடாது .அவ்வளவுதான் மறு நிமிடமே அவர்கள் வீட்டுக்குச்  சண்டைக்குப் போய் விடுவாள் . சில வருடங்களுக்கு முன்பு , மாதவனும் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது,  'பொட்டிக்  கடை வைக்க நம்ம  கிட்ட கடன் வாங்கிட்டு போனது, திருப்பித்தர மறந்தாச்சு. நாங்களும் பெருந்தன்மையா விட்டாச்சு.  இப்ப வியாபாரம் பெருகி கையில் நாலு காசு வந்ததும் இந்தப்  பேச்சு வர்றதா ' என்று வாங்கு வாங்கு என்று  வாங்கிவிடுவாள் . 

அவள் அப்படிக்  கேட்பது போல் ஒரு நிமிடம் கற்பனை செய்துகொண்டு திருப்தியோடு சாப்பிட்டு விட்டு  திரும்பும் போது, ஹாலில்  ஓரமாய்ச்  சேரில் தலையை பிடித்தபடி சாய்ந்திருந்த ராமலிங்கத்திடம் நெருங்கி 'என்ன பண்றது ராமு' என்றவரிடம்  ' பிரஷர் ஏறிடுச்சு,  மயக்கம் வரது,  பையன் வேலை வேலைன்னுட்டு டாக்டரிட்ட கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறான். பக்கத்திலேதான் ஆஸ்பத்திரி . கொஞ்சம்  கூட்டிட்டுப்  போக முடியுமா'  என்ற அவரோடு சேர்ந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் .

வரும்போது மொய் எழுதும்  இடத்தில் இவர் 'நூத்தி ஒண்ணு ' என்று எழுதியதைப்  பார்த்தவர் , அந்த மயக்கத்திலும் எகத்தாளமாக 'என்ன ஓய் வெறும் நூத்தி ஒண்ணு  தானா, நான் ஆயிரத்தி ஒண்ணு எழுதியிருக்கேன் '  என்று கிண்டலாகக் கேட்டபடி தன்  மேல் களைப்பாய் சாய்ந்தவரை  ஆட்டோவில் ஏற்றி  துணைக்கு மாதவனும் ஏறிக்கொண்டார். 

அப்போதுதான் மாதவனை அழைத்துச் செல்ல இன்னொரு ஆட்டோவில் வந்து இறங்கிய அவர் மகன் ‘ அப்பா , நீங்க அந்த ஆட்டோவில் வீட்டுக்குப் போங்க , உங்களுக்கு அலைச்சல் ஆகாது , நான் அங்கிளை ஆஸ்பத்திரி கூட்டிக்கிட்டு போறேன் ‘ என்றபடி தன்னுடன் வரும் மாதவனின் மகன் தோளில் சாய்ந்த ராமலிங்கத்தின் கண்களில் கசியும் ஈரத்தில் தெரிவது என்ன ?

--------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English   


காதலும் கொரோனாவும் - கவிதை

 காதலும் கொரோனாவும் - கவிதை 

——————————----------------------—-

வேலைகள் செய்வதில்

விருப்பம் இருக்காது

செய்யும் வேலையும்

சிறப்பாய் இருக்காது


படுத்தே இருக்கப்

பிடிக்கும் மிகவும்

எழுந்து நடந்தால்

ஏதோ நடக்கும்


சும்மா இருத்தல்

சுகமென்று சொன்னார்

சும்மா இருத்தல்

சோகமென்று தெரியாதோர்


என்னமோ செய்யும்

எதுவும் புரியாது

எப்போது மாறும்

என்பதே நம்பிக்கை


எத்தனை நாட்கள்

எத்தனை மாதங்கள்

காதலும் கொரோனாவும்

கடந்து போனாலும்

—————-நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


புதன், 13 ஏப்ரல், 2022

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள் 

-----------------------------------


குடை

————


போராடிக் களைத்து வந்து

ஓரத்தில் ஓய்வெடுக்கும்

மழைக் குடை ஒன்று


மேகத்தைப் பிடித்து வந்து

மின்னல் கோடு ஒன்றைத்

தரையினிலே வரைகிறது


————-


அமாவாசை விருந்து

—————————-

அடிக்கும் காற்று மழை மின்னலில்

அமாவாசைக் காக்கைச் சோற்றுச் சுவற்றில்

மின்னும் பூனைக் கண்

——————


தூறல்

————-

பிசுபிசுத்தும் போகலாம்

பெருமழையும் ஆகலாம்

காதலைப் போல

——————

ஈரம்

———-

காய்ந்து போவதல்ல ஈரம்

கசிந்து கொண்டே

இருந்தால் தான்

ஈரம்

————-நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


செவ்வாய், 12 ஏப்ரல், 2022

காலக் கோலங்கள் - மின்புத்தக அறிமுகம்

 காலக் கோலங்கள் - மின்புத்தக அறிமுகம் 

---------------------------------------------------------------------------

காலக் கோலங்கள் - யூடியூபில் 

My Poems in Tamil and English 


கராத்தே கண்மணி -சிறுகதை

 கராத்தே கண்மணி -சிறுகதை 

----------------------------------------------------

கைகளின் 'பன்ச்'களும் கால்களின் 'கிக்'குகளுமாக  விறுவிறுப்பாய் நடந்து  கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில்  அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது வலது கை பன்ச் சை  தனது  இடது கையின்  விரைத்த விரல்களை நிமிர்த்துத்  தடுத்தாள்  கண்மணி.  அப்படியே இடது கை  உள்ளங்கையால் அவனது முட்டு வாயில் ஒரு வேக  அழுத்து . தொடர்ந்து வலது கையின் வலுவான பன்ச் அவனது நெஞ்சில் இறங்க  சரிந்து விழுந்த எதிராளிக்குத்  தேவைப்பட்டது உடனடி  முதலுதவி.


 இறுதிச்சுற்றில் அவளோடு போட்டியிட எழுந்தான்  கதிரவன். 'சபாஷ் சரியான போட்டி' என்ற  கைதட்டல்கள் .கோஜிராய்  கராத்தே பள்ளியில் பிரதம பயிற்சியாளர்கள் கதிரவனும் கண்மணியும் .  நான்கு பயிற்சிக்  கூடங்களுக்கு இடையே நடக்கும்  போட்டி. சென்னையின்  பெருமைக்குரிய போட்டிகளில் ஒன்று அது. 


கதிரவனும் கண்மணியும் கராத்தே முறைப்படி வணக்கம் செலுத்திக்கொண்டு பொசிஷன் எடுத்த  சிறிது  நேரத்தில் கதிரவனின் கை ஓங்குவது தெரிந்தது. கதிரவனின் முரட்டுத்தனமான தொடுப்பு ஆட்டத்திற்கு  தடுப்பு ஆட்டம் மட்டுமே ஆட முடிந்தது கண்மணியால்.  அவன் பெரும்பாலும் கோகுட்ஜு முறையில்  நின்றபடி குதித்து குதித்து செலுத்திய கால்களில் வேக வீச்சைத்  தடுத்து, தனது நான்கு விரல் பன்ச் சை  அவனது  ஓர நெஞ்செலும்பு நோக்கி  அவள்  செலுத்திய வேகம் எல்லாம் அவனது திருப்பிவிடும் 'பிளாக்'கில் தவிடுபொடியாகின .


 அவளின் முகத்தில் தெரிந்த சோர்வைக்   கவனித்தான் கதிரவன்.  சேர்ந்து சீறி  வந்த  அவளது கைகளின் முஷ்டிகளை  விலக்கி, விரிந்த அவள் கைகளில் நுழைந்து , முழங்கால் தூக்கி வயிற்றில் வாகாக வந்த குத்தை வேண்டும் என்றே தவறவிட்டான்  கதிரவன் . இப்போது சிறிது நேரத்தில் கண்மணியின் கராத்தே வீச்சு ஓங்க  ஆரம்பித்தது.


 பின்னோக்கி நகர்ந்து, தொடர்ந்து வேகமாய் முன்வந்து வீசிய அவள் கால்களின் தாக்குதலை தடுப்பதிலேயே   கதிரவனின் கவனம் இப்போது . முழங்கைத் தாக்குதல், இடுப்பில் உதை , முட்டு வாய் அடி . தலையோர இடி என்று இறங்கிய அவளின் வேக  ஆட்டத்தில் ,  ஒரு கட்டத்தில் மிக நெருக்கத்தில் வந்த  அவள் பார்வையில் நெருப்பு தெறித்தது. 


 அந்தப் பார்வையின் கூர்மையில்  ஒரு கணம் தடுமாறினான் கதிரவன்.  அவ்வளவுதான் அந்த நொடி போதுமே கண்மணிக்கு.  தொடர்ந்து வயிற்றிலும் நெஞ்சிலும் பாய்ந்த 'பன்ச்' களில்  நிலை தடுமாறி அவள்  சுழன்று வீசிய பின்னங்கால் அடி அவன் தாடையில் முட்ட விழுந்தான். முடிந்தது போட்டி. 


பக்கத்தில் வந்து 'சாரி' என்று சொன்னவள், 'ஒரு கட்டத்தில் என் வயிற்றை நோக்கி  வாகாக வந்த அந்த 'கிக்'கை ஏன் முழுவதும் இறக்கலை கதிர் ' என்று மெதுவாகக்  கேட்டு விட்டு நகர்ந்தாள் கண்மணி. 


 அன்று மாலை கடற்கரையில் அமர்ந்து இருந்த கண்மணியிடம்  'அது என்ன அப்படி ஒரு நெருப்பின் உக்கிரம் தெறித்தது உன் கண்ணில்  அப்போது' என்றான்  கதிரவன். 'எனக்கே தெரியல கதிர்,  நீ விட்டுக்கொடுத்து விளையாடும் அளவு  நான் ஒன்றும் வேகம் இல்லாதவள் அல்ல என்று காட்ட வேண்டியது மட்டுமே அப்போது என் நோக்கமாக இருந்தது. '


' அது சரி ஆனால் நாளை நான் என் அம்மாவோடு உன்னைப்  பெண் பார்க்க வரும்போது இந்த நெருப்புக்  கண்களைக்  காட்டாதே. எங்கம்மா, என்னை மாதிரி , பயந்து போயிடுவாங்க  இப்போது காட்டுகிறாயே  இந்த நேசக் கண்கள் ,  இதையே காட்டு ' என்றபடி ,  அவள் மேல் சாய  முயன்றவனை,  கைகளின் உள்பக்க கராத்தே தடுப்பு முறையால் தடுத்தபடி ' சீ போடா, இது கடற்கரை' என்றாள் .

----------------------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


திங்கள், 11 ஏப்ரல், 2022

தேவ தச்சன் கவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 தேவ தச்சன்  கவிதை  மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு 

------------------------------------------------------------------------------------------------------

'எனக்குள் சுடர்கிறது ஒரு பொற்கணம் , கோல்டன்  மொமெண்ட் ' என்று முத்தாய்ப்பு வைக்கும் இந்தப்  'பொற் கணம்' குறியீட்டுக்  கவிதையில் தேவ தச்சன் அவர்கள்  திரும்பிப் பார்க்கும் பழைய கணங்கள் எல்லாம் நாம் பார்த்த கணங்கள். குடும்பமும் , சமுதாயமும் நம் மேல் ஏற்றி வைத்த  கனங்கள் . வெயிட்ஸ். கனங்கள் .

'என்னை இனிமேல் அம்மா ஏமாற்ற முடியாது, நான் சிறுவன் அல்ல' என்று குறிப்பிடும் போது  அது அம்மாவையா  குறிக்கிறது .அம்மாவைக் குறியீடாக வைத்துக் கொண்டு ,   நமது  பிள்ளைப் பிராயத்தில் நமக்கு பூச்சாண்டி காட்டிய எத்தனை பேரை  ஞாபகப் படுத்துகிறது  .

'தத்துவங்களும் அரசியலும் ஏமாற்ற முடியாது' என்னும் போது , சூடான  ரத்தம் சுற்றித் திரிந்த காலத்தில் நமக்கு போதிக்கப்பட்ட  பொய்கள் ஞாபகம் வருகிறது அல்லவா.

 'மதமும் கலையும் ஏமாற்ற முடியாது' என்று கேட்கும் போது 'சம்பாதித்த காலத்தில் சாமியார்களிடமும்,  வேஷதாரிகளிடமும்  விட்ட பணம் எல்லாம் ஞாபகம் வருகிறது அல்லவா.

'மாத்திரைகளும் மரியாதைகளும் ஏமாற்ற முடியாது' என்னும் போது , போலிப் புன்னகைகளும் , புரட்டு மருத்துவர்களும்  ஞாபகம் வருகிறது தானே.

 'நான், முதியவன் அல்ல, மூப்பைக் கடந்தவன் அல்ல , சின்னஞ் சிறு குழந்தையைப் போல' என்ற வரிகளிலே , அவர் வயதைச் சொல்லவில்லை, நம் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறார். எந்த வயதாய் இருந்தாலும் , எதிர்ப்படும்  அந்தக்  கேடுகளை  எல்லாம் எடுத்தெறிந்து நடந்தால், நம் எல்லாக் கணங்களுமே , பொற் கணங்கள் தான் என்பதை ஒரு படிமக் காட்சியாகக் காட்டி முடிக்கிறார் கடைசி வரியில் .

 'இப்போது நான் அணிந்திருக்கும் பழைய ஆடைகளுக்குள் ஏமாறுவதற்கு யாரும் இல்லை ' என்ற கடைசி வரியில் இந்த ஆடை பழையது தான்,  நான் சிறுவன்தான், இளைஞன்தான், நடுத்தர வயதினன் தான், முதியவன்தான், ஆனால், என்னை ஏமாற்றும் தந்திரங்களைப்  புரிந்தவன், அதைப் பொசுக்கியவன், பொற்கணம் கண்டவன்  ' என்று நம் எல்லோருக்கும் படிப்பினை புகட்டும் இந்தப்   பொற்கண மாளிகையைக் கட்டிய , காட்டிய தச்சன், தேவதச்சன் அவர்கள் வாழ்க. நன்றி . வணக்கம்.  

-----------------------

அந்தக் கவிதை - 'பொற்கணம்'-  தேவதச்சன்

---------------------------------------------------------------------------


என்னை இனிமேல் அம்மா

ஏமாற்ற முடியாது. ஏனென்றால்

நான் சிறுவன் அல்ல

என்னை இனிமேல் தத்துவங்களும்

அரசியலும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால்

நான் இளைஞன் அல்ல

என்னை இனிமேல் மதமும் கலையும்

ஏமாற்ற முடியாது. ஏனென்றால்

நான் நடுத்தர வயதினன் அல்ல.

என்னை இனிமேல் மாத்திரைகளும் மரியாதைகளும்

ஏமாற்ற முடியாது. ஏனென்றால்

நான் முதியவனல்ல. நான் இப்போது மூப்பைக் கடந்தவன், சின்னஞ்

சிறு குழந்தையைப் போல.

யாராவது என்னை லேசாக விரலால் தொட்டால்

போதும்.

எனக்குள்

சுடர்கிறது ஒரு பொற்கணம்

இப்போது நான் அணிந்திருக்கும்

பழைய ஆடைகளுக்குள்

ஏமாறுவதற்கு யாரும் இல்லை .

-------------------------------------------தேவ  தச்சன் 


--------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


பிரமிள் கவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

பிரமிள்  கவிதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு 


-------------------------------------------------------------------------------------------------------------------------

(முன் குறிப்பு - இந்தக் கவிதை வேறொரு எழுத்தாளரைப் பற்றி பிரமிள் அவர்கள்  எழுதியது என்று பின்னால் தான்  தெரிய வந்தது )


படிமக் கவிஞர் ,ஆன்மீகக் கவிஞர் என்று பாராட்டப்பட்ட பிரமிள் அவர்கள் ஒரு கிண்டல் கவிஞர் என்பதும் இந்த  'வியாதி அறிக்கை ' கவிதையில் வெளிப்படுகிறது .


 தனது ஈரல் கோளாறையே கிண்டல் செய்து எழுதியுள்ள இந்த   'வியாதி அறிக்கை' கவிதை,  அவருடைய வியாதி அறிக்கை மட்டும் அல்ல, மற்றும் பல பிரபல படைப்பாளிகளின் வியாதி அறிக்கையும் கூட. பல தத்துவங்களின் வியாதி அறிக்கையும் கூட.


 டாஸ்டாயவஸ்கியின் நுரையீரல் கோளாறும் , பிரான்ஸ் காப்காவின் காச நோயும் , புதுமைப்பித்தன் காச நோயும் ,பாரதியார் யானையால் தள்ளப்பட்ட அதிர்ச்சியும் இவரது ஈரல் நோயோடு தொடர்பு படுத்தப் பட்டு அவற்றோடு பார்க்கும் போது , அவர்களைப்  போல் பிரபல படைப்பாளியான தனக்கு,  இது  ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல் எழுதி உள்ளார்.

குடியை நிறுத்தச் சொன்ன டாக்டரின் வாசகமாக  'தண்ணீ மட்டும் போடாதே, வெந்நீரில் குளிக்கலாம் ' என்று ஒரு கிண்டல் .

 தண்ணீ போடாமல் எழுதும் எழுத்தில் வறட்சி வந்து விடுகிறது என்று . ' எழுத்தில் நான் தண்ணீ போட முடியாமல் , நடமாடும் பாலையின் வெக்கை உண்டு, அது தான் இது  ' என்று தன்னை ஒரு நடமாடும் பாலையாக படிமப்படுத்தும் அழகு,

 'விமர்சகரைக் கேளும் , மனுஷன் என்னமா குடிக்கிறான் ' என்று ஒரு தைரியமான தன்னிலை விளக்கம்.

 'லிவர் போனால் என்ன , குடல் ஒழுங்காக வேலை செய்கிறது எனக்கு, நேரத்திற்கு சாப்பாடு கிடைக்கிறது  'என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொள்ளும் விதத்தில்   ' பாரதத்துக் கவிகளுக்கு வாழையடி வாழையென வந்த பரம்பரை நோய்  பசி, ஏனோ அது என்னை எட்டிப் பார்த்ததில்லை '  என்ற கிண்டல் .

கடைசியில் கம்யூனிசத்தை வம்புக்கு இழுத்து ' கம்யூனிசக் குட்டையிலே உழன்றது ஒரு காலம் , அது ஒரு ஸ்பெஷல் ரெப்புட்டேஷன்  , புரட்டிப் பாரும் ' என்று என்று ஒரு தத்துவத்தையும் அவரது நோக்கிலே  ஒரு வியாதி அறிக்கையாக சுட்டிக் காட்டும் கிண்டல் .

 ‘புரட்டிப் பாரும்’ என்று முடியும் இந்தக் கவிதையைப், புரட்டிப் படிக்கையில் , ஒரு கவிஞனுக்கு வரும் நோயுமே , கவிதையின் கருத்தாக , கிண்டலாக மாறிவிடுவதை, ரசிக்க முடிகிறது.

ஆனால்  அவரது கடைசிக் காலம், நோயால் கழிந்ததை, புற்று நோயாலும் பக்க வாதத்தாலும் பாதிக்கப்பட்டு இறந்ததை,  ரசிக்க முடியவில்லை .  நன்றி. வணக்கம்.

அந்தக் கவிதை - வியாதி அறிக்கை - பிரமிள்

----------------------------------------------------------------------------


எனக்கொன்றும் இல்லை,

வெறும்

லிவர் ட்ரபிள் தான்;

டாஸ்டாயவ்ஸ்கிக்கு?


'தண்ணி மட்டும்

போடாதே

வெந்நீரில் குளிக்கலாம்'

என்றார் டாக்டர்.

எனவே என்

எழுத்தில் நான்

தண்ணி போட

முடியாமல்

நடமாடும் பாலையின்

வெக்கை உண்டு

வரட்சி  என்கிறீர்;

அதுதான் இது.

வெள்ளெலும்பு தெரிய

விரைத்துக் கிடக்கும்

பழம்பெரும்

பிணங்களும் உண்டே ;

விமர்சரைக் கேளும்.

(மனுஷ்யன்,

என்னமாய்

குடிக்கிறான்?)

வேறொன்றும் இல்லை:

எனக்கு லிவர் ட்ரபிள்;

பிரான்ஸ் காப்காவுக்கு?

க்ஷயமா?

புதுமைப்பித்தனுக்கும்!

பித்தனுக்கு முந்தி

பாரதிக்கு என்ன?


பாரதத்து கவிகளுக்கு

வாழையடி வாழையென

வந்த பரம்பரை நோய்

பசி!

ஏனோ அது என்னை

எட்டியும் பார்த்ததில்லை.

எங்களுக்குத் தெரியும்.

எழுத்துத் தொழில் அழகு.

எனவே நாங்கள்

எப்பவும் கொஞ்சம்

மெட்டீரியலிஸ்டுகள்.

அந்த இழுப்பில் போய்

கம்யூனிஸக் குட்டையிலே

அடியற்று விழுந்து

கிடந்து

உழன்றது ஒரு காலம்.

இருந்தும் அது ஒரு

ஸ்பெஷல் ரெப்புடேஷன்.

புரட்டிப் பாரும்

------------------------------------- பிரமிள் 


-------------------------------நாகேந்திர பார்தி


My Poems in Tamil and English 


ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பாசமும் நேசமும் - மின்புத்தக அறிமுகம்

 பாசமும் நேசமும் -  மின்புத்தக அறிமுகம் 

------------------------------------------------------------------------------

பாசமும் நேசமும் - யூடியூபில் 

My Poems in Tamil and English 


மதிப்புரைக் கட்டுரைகள் - மின்புத்தக அறிமுகம்

 மதிப்புரைக் கட்டுரைகள் - மின்புத்தக அறிமுகம் 

------------------------------------------------------------------------------------

மதிப்புரைக் கட்டுரைகள் - யூடியூபில் 

My Poems in Tamil and English 


சனி, 9 ஏப்ரல், 2022

வெயில் - கவிதை

 வெயில் - கவிதை 

————-------------------------

பக்கத்தில் சேர்ந்து நடந்தவள் 

தென்றலா , தூறலா 


கொளுத்தும் வெயிலின் வெக்கை 

குறைந்த  மாயம் என்ன


விட்டுப் பிரிந்ததும் வேர்வையாய்

ஒட்டிக் கொள்வது எப்படி


வெயிலுக்கும்  கூட அவள் மேல்

விருப்பமா என்ன


விட்டு விடக்  கூடாது

இப்படியே இதை


இனி மேல் சந்திப்பு

இரவில் மட்டும்  தான்


————நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English


வெள்ளி, 8 ஏப்ரல், 2022

குண்டுவெடிப்பு - சிறுகதை

 குண்டுவெடிப்பு - சிறுகதை 

------------------------------------------------

'என்னடா இது அதிசயமா இருக்கு. இன்னிக்குக்  காலையில நீயே போய் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டே'  .அம்மாவின் ஆச்சரியத்துக்கு அவசரமாக பதில் சொன்னான். 'எப்பவுமே நீயும் தங்கச்சியும் தானே மார்க்கெட் போறீங்க. இன்னைக்கு நானும் ட்ரை பண்ணிப்  பார்க்கலாமேன்னு  தான். நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு மார்க்கெட் போகவேண்டாம் '.அண்ணனின் கரிசனமான விளக்கத்தில் வியந்து போனாள்  தங்கை.


  'சரிம்மா நான் வர லேட்டாகும்' என்றபடி கிளம்பினான் . 'காபி குடிச்சிட்டுப்  போடா' என்றது அவன் காதில் விழவில்லை. கவனம் வேறு எங்கேயோ. 'அவனுங்க ரெண்டு எடத்துல குண்டு வைத்தா  நாம அஞ்சு  இடத்தில் குண்டு வைக்கணும் . அவங்களால தான்  பயப் படுத்த முடியுமா, நம்மாலும்  முடியும்னு காண்பிக்கணும் '., தலைவரின் மூளைச்சலவை உரை .


எதைப்பற்றியும் கவலைப்படாத இளமை வேகத்தை தூபம் போட்டு வளர்த்த கூட்டம். அவர்களின் ரகசியக்  கூட்ட  இடத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தான். எல்லா ஏற்பாடுகளும் கனகச்சிதமாக முடிச்சாச்சு. ரிமோட் கண்ட்ரோல் பட்டனை அழுத்த வேண்டியதுதான். காய்கறி மார்க்கெட், ரத்த,சதை  மார்க்கெட் ஆகும் .போலீஸ் திணறும். அரசு பயப்படும். அதைவிட அந்த எதிர்க்  கூட்டம் பயப் படும். பயப்படணும். 


 பிறகு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும். ரகசிய பேரம் நடக்கும். அமைதி திரும்புவதற்கு உத்தரவாதம் இல்லை . ஆனால் இரண்டு பக்கமும் சமம் என்று நிரூபிக்கப்படும். அந்தக்  கூட்டத்தில் இருந்த ஐந்து பேர் கைகளிலும் ஐந்து இடங்களின்  ரிமோட் கண்ட்ரோல். 


இவன் கையில் இருந்தது, காலையில் சென்று வந்த காய்கறி மார்க்கெட்டைக் குறி வைத்து.  தலைவனின் வருகைக்குக்   காத்திருந்தார்கள். வேகமாக வந்த அந்த இளம் தலைவனின்   விளக்க உரையை கேட்டு உணர்ச்சியின் உச்சத்திற்குச்  சென்ற அந்த இளம் கூட்டம் பட்டன்களை அழுத்திய  நேரம். 


' எல்லாம் வாங்கினான். கருவேப்பிலை மட்டும் வாங்க மறந்துட்டான். ஒண்ணும்  தெரியாத விளையாட்டுப்  பிள்ளை'  என்றபடி அந்த மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்கள் அவன் தாயும் தங்கையும்.


--------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English


வியாழன், 7 ஏப்ரல், 2022

செருப்பு - கவிதை

 செருப்பு  - கவிதை 1

—————------------------ 

காட்டிலும் மேட்டிலும்

தூக்கித் திரிந்தும்


கல்லிலும் முள்ளிலும்

காத்துக் கடந்தும்


தேய்ந்தும் பிய்ந்தும்

உழைத்துக் களைத்தும்


வீட்டுக்கு உள்ளே

இடமொன்று இல்லாமல்


வெளியே கிடப்பது

செருப்பு மட்டுமா

----------

செருப்பு  - கவிதை 2

—————

இறக்கை முளைத்துப்

பறந்து போன

பாதப்  பறவையின்

கீச் கீச் சப்தம்


பரணில் கிடந்த

பழைய செருப்பைக்

குழந்தைச் செருப்பை

அமுக்கும் போது


—————-நாகேந்திர பாரதி 

My Poems in Tamil and English 


புதன், 6 ஏப்ரல், 2022

வழி - கவிதை

 வழி - கவிதை 

———------------------

கை மடக்கிக்

கால் மடக்கி

மிதக்கின்ற பயணத்தில்


வலி எடுக்கத்

தலை திரும்பும்


வழி வாசல்

வாழ்க்கை

————நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


செவ்வாய், 5 ஏப்ரல், 2022

மழைக் காலம் - கவிதை

 மழைக் காலம் - கவிதை 

--------------------------------------

சகட்டு மேனிக்குச்  சாத்தும் மழை 

சன்னல் ஓரம் மின்னல் இடி 

குளிரில் நடுங்கும் உடலின் உள்ளே 

கூடும் பழைய மழையின்  கோலம் 


வரப்பு மேட்டில் வழுக்கிய சேறு 

வயலில்  ஊன்றி வளர்ந்த நாத்து 

கண்மாய் நிரம்பி கரையை மீறியது 

கோரைப் புல்லும் காணாமல் போனது 


ஈரக் காத்தில் நடுங்கிய கோழி

 தவிட்டுப் பானைக்குள் தஞ்சம் புகுந்தது 

கிட்டிப் புள்ளால்   கீறிய குழிக்குள் 

கத்திக் கப்பல் சென்று சிக்கியது 


மழைக்கு விட்ட பள்ளி விடுமுறையில் 

சட்டையில் அடித்த சகதிப்  புள்ளிகள் 

புத்தகப் பையும் மழையில் நனைந்தது 

சேர்ந்தே  நனைந்த சைக்கிள் சவாரி 


வெளியில் கொட்டும் மழையின் சாரல் 

வருடிச்  செல்லும் பழைய நினைவை 

கையில் நடுங்கும் காப்பிக் கோப்பை 

காலம் கரைந்ததைக்   காட்டிச் செல்லும் 

-----------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


சனி, 2 ஏப்ரல், 2022

பாவ மன்னிப்பு - கவிதை

 பாவ மன்னிப்பு - கவிதை 

------------------------------------------------

தெப்பக் குளமிருந்து 

தீர்த்தம்  குடத்தில் வரும் 

அப்பன் அம்மனுக்கு 

அபிஷேகம் நடந்தேறும் 


நெய்யின்  புகைக்குள்ளே 

தீபம் நடனமிடும் 

பாடும்  ஓதுவார்கள் 

பண்ணில் தமிழ் இருக்கும் 


எங்கும் நிறைந்திருக்கும் 

இறைவன் மனம் இருக்கும் 

குங்குமம் திருநீறும் 

கூடச் சேர்ந்து வரும் 


கும்பிட்டு நிற்கையில்

 குழந்தை மனமும் வரும் 

நம்பிக் கை  கூப்புகையில் 

நம்பிக்கை சேர்ந்து வரும் 


பிரகார மென்னிருட்டில்  

பிறந்த உணர்வு வரும் 

பரிகாரம் செய்து விட்ட 

பரவசம் நெஞ்சில்  வரும் 

------------------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 
வெள்ளி, 1 ஏப்ரல், 2022

இனி மேல் என்ன - கவிதை

 இனி  மேல் என்ன - கவிதை 

---------------------------------------------------

சைக்கிள் செயின் 

கையில் சுழலும் 


கையைக் காலை 

எடுப்பதே வேலை 


கிடைக்கும் காசில் 

சாராயம் , மத்தது 


இளமை வலிமை 

கழியும் கோலம் 


எப்போதாவது 

இரவு நேரம் 


வானம் பார்த்தால் 

மேகத்துக்குள்ளே 


பொக்கை  வாய் அம்மா 

மூக்குத்தி மனைவி 


சாதிச்  சண்டையில் 

கருகிய முகங்கள் 


அழுது பார்த்தாலும் 

ஆவது என்ன 


இருந்தாலும் செத்தாலும் 

இனி மேல் என்ன 


சைக்கிள் செயின் 

கையில் சுழலும் 

------------------------------------நாகேந்திர  பாரதி

 My Poems in Tamil and English 


மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

 மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு ------------------------------------------------------------------------------------...