ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------
இந்த ஊபர் , ஓலா மூலமா டாக்சி , ஆட்டோ வெல்லாம் நம்ம வீட்டு வாசலுக்கே வர ஆரம்பிச்சப்பறம் நம்ம ரெம்பவே அலட்டிக்க ஆரம்பிச்சுட்டோங்க. ஆட்டோ வர ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டானாலும்  உடனே கேன்சல் பண்ணிட்டு அடுத்த ஆட்டோவுக்கு புக் பண்றது. பழைய ஆட்டோ டிரைவர் போன் பண்ணி திட்டுவாரு. பாதி தூரம் வந்திட்டாராம்.

பிளேனா என்ன ஆகாயத்திலே பறந்து வந்து இறங்க. ரோட்டிலே டிராபிக்   எல்லாம் தாண்டித்தானே வரணும்.கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமெ உடனே கேன்சல்  பண்ணிடுவோம், 'ஆட்டோ டிலே ' என்று காரணம் காட்டி. முந்தியெல்லாம் ரெண்டு மூணு ஆட்டோ கிட்டே பேரம் பேசி வீட்டை விட்டு கிளம்பவே அரை மணி நேரம் ஆனதெல்லாம் மறந்து போயாச்சு.

நம்ம தான் இப்படின்னா சில டிரைவர் களும் பொசுக்குன்னு கேன்சல் பண்ணிடுவாங்க. கேட்டா ' நான் பூந்தமல்லியில் இருக்கேன். நீங்க கோடம்பாக்கத்தில் இருக்கீங்க . எப்படி சார் வர்றது. சிஸ்டம் பாட்டுக்கு அக்சப்ட்  பண்ணிடுது.' ம்பாங்க. கூகிள் மேப்பிலே பார்த்தா அடுத்த தெருவிலே இருந்து சர்ர்ன்னு  ஆப்போசிட் வழியிலே கிளம்பி போய்க்கிட்டு இருப்பாங்க. ஏதோ தூரமா  போற பார்ட்டி கிடைச்சிட்டார் போலிருக்கு.

இது தவிர நம்ம கூகிள் ஜி பி எஸ் மேப்பை நம்பாம நம்ம அட்ரஸ்ஸை போனில் விலாவாரியா எடுத்துரைப்போம் பாருங்க. போன் பில் பத்து ரூபாய் ஆயிடும். 'நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது குறுக்குத் தெரு , கார்பொரேஷன் காலனி, புது சர்ச்சுக்கு எதிரே ' ன்னு ஒப்பிச்சு ஒப்பிச்சு தூக்கத்திலே உசுப்பிக் கேட்டாக் கூட ' நம்பர் முப்பத்திரண்டு' ன்னு சொல்லிக்கிட்டுதான் எந்திருப்போம்.

இவ்வளவு தெளிவா நம்ம அட்ரஸ் ரெண்டு மூணு தடவை சொன்ன பிறகும் , ஆட்டோ வந்திடுச்சுன்னு மெசேஜ் பார்த்திட்டு  வெளியே வந்து பார்த்தா , ஒரு காக்கா கூட வந்திருக்காது.   போன் பண்ணினா ' சர்ச்சுக்கு எதுத்தாப்பலே தான் இருக்கேம்பாரு'. அடுத்த தெருவிலே இன்னொரு சர்ச் இருந்தா இது ஒரு பிரச்னை.

நம்ம தெரு சர்ச், புது சர்ச். இப்படி இப்படி இருக்கும்னு அதோட அங்க அடையாளங்களைச் சொல்லி அதன் வரலாற்று முக்கியத்துவங்களை சொல்லி நம்ம இடத்திற்கு வரவழைப்போம். போன் பில் இன்னொரு பத்து ரூபாய். இதுக்குள்ளே  அவரு பழைய சர்ச்சிலே இருந்தே மீட்டரை ஆன் பண்ணிருப்பாரு.

அப்புறம், போற வழியிலே அடுத்த குழப்பம். 'சார் நீங்க சொல்ற ரூட் கூகிள் மேப்பிலே ரெம்ப டிராபிக் ன்னு காண்பிக்குது. வேற ரோட்டிலே போகலாம்னு' சுத்தி வளைச்சு போக ஆரம்பிப்பார் . ' ஏங்க, மதுரைக்கு திருச்சி வழி போகச் சொன்னா அந்த வழி டிராபிக் ஜாஸ்தின்னு சொல்லிட்டு கோவை வழி போனா எப்படிங்க இருக்கும். 'சரி கூகிள் ஆண்டவர் சொல்றாருவிடுங்க. இது கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரைதானே. பத்து ரூபாய் ஜாஸ்தி ஆகும். சீக்கிரம் போயிடலாம்' னு மனசை சமாதானப் படுத்திக்கிடுவோம்.

போற வழியிலே எங்காவது ரெட்  சிக்னல்  விழுந்துட்டா  'இது என்ன தொல்லை' ன்னுட்டு டிரைவர் திரும்பி நம்மை முறைப்பாருஏதோ நாமதான் கண்ட்ரோல் ரூமிலே   சொல்லி ரெட் சிக்னல் விழுந்த மாதிரி. இப்படி ஒரு வழியா நம்ம இடத்தை அடைஞ்சிடுவோம். ஆட்டோமேடிக்கா கூடப் போட வேண்டியதை போட்டு சார்ஜ் நம்ம மொபைலில் தெரியும்.

நம்ம முந்தி மாதிரி, பேரம் பேசிப் போயிருந்தா வர்றதை விட அம்பது ரூபாய் குறைச்சுதான் வந்திருக்கும். இருந்தாலும் நம்ம சும்மா இருப்போமா . ' போன தடவை வந்ததை விட அம்பது ரூபாய் ஜாஸ்தி . முந்தி கொறச்சு வந்ததா ஞாபகம்' ம்னு சொல்லி   வைப்போம். நம்ம ஞாபக சக்தியைப் பத்தி வீட்டிலே கேட்டா தெரியும் லக்ஷணம்.

டிரைவர் பதிலுக்கு சொல்வாரு ' நீங்க பத்து நிமிஷம் சீக்கிரம் வந்திட்டீங்க இப்ப'. ம்பாருஏதோ போன தடவையும்   இவரே கூட்டிட்டு வந்த மாதிரி.  ' கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்குமாம்' சொல்றாரு. . நேரத்தின் அருமையை எல்லாரும் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவருக்கும் ஒரு நாளிலே அம்பது ட்ரிப் அடிச்சாதான் இன்சென்டிவ் கிடைக்குமாம்.

என்னமோ போங்க . காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லே . பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லே - இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்களில் இதெல்லாம் அடிபட்டுப் போயிடுது. அடடே போன் வர்ரது. ஆட்டோ  வந்தாச்சுங்க. அவரும் ரெண்டு நிமிஷத்துக்கு மேலே ஆயிட்டா கான்செல் பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. பழைய சர்ச் கிட்டே நிக்கிறாரா, புது சர்ச் கிட்டே நிக்கிறாரா . அட்ரஸ் சொல்லணுங்க . நான் வர்றேங்க ' ' நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது  குறுக்குத் ..................'
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

பாட்டியின் தூக்கம்

பாட்டியின் தூக்கம்
------------------------------
லேசான குறட்டையோடு தூங்கிய பாட்டி முழித்ததும் ' என்ன பாட்டி , நல்ல தூக்கமா' என்று பேரன்  கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டாள் . ' தூக்கமா , நானா , இந்த தூக்கச் சனியன் தான் வந்து தொலையவே மாட்டேங்குது ' என்று சலித்துக்கொண்டபடி  போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவளோட துணி மூட்டை ஒன்றை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடுவாள்.

பாவம் பாட்டி. பகலில் தான் கொஞ்ச நேரம் இப்படி அசந்து விடுவாள். ராத்திரியில் தூக்கம் வராம இங்கும் அங்கும் புரண்டு கொண்டு ஏதாவது அனத்திக் கொண்டே கிடப்பாள்.

எல்லாம்   இந்த எழுபது வயது ஆன  பின்னாடிதான். அந்தக் காலத்திலே என்னமா வேலை பார்ப்பா பாட்டி. ஒரு மரத்து புளியம் பழத்தை அடிச்சு கொண்டாந்து போட்டிருக்கும் . கட்டையை வச்சு அடிச்சு அடிச்சு தோலை உடைச்சுடுவா ஒரே நாளிலே. அது மட்டுமாஅதி காலையிலே இருந்து ராத்திரி வரைக்கும் மாங்கு மாங்கு ன்னு வேலை இருக்கும். வீடு கூட்டறது, நெல்லு குத்தறது , பாத்திரம் கழுவறது , சமையல் வேலை அது இதுன்னு ஒவ்வொரு நாளும் ஓயாத  வேலைதான்.

கல்யாணம் ஆயி புருஷனை பறி கொடுத்துட்டு அடுத்த மாசமே  தம்பி வீட்டோட வந்தவ தான். தம்பி குடும்பம். பெரிய குடும்பம். பொண்ணு , பிள்ளைங்கன்னு அத்தனை பேரையும் வளர்த்து ஆளாக்கி வருஷங்கள் ஓட பேரன் பேத்திகளை வளர்க்கிற பொறுப்பு.
            
          அதுவும் இந்தப் பேரன்னா அவளுக்கு ரெம்ப பிரியம். அவனும் அவளைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டே தான் தூங்குவான்.  சின்னப் பிள்ளையிலே சிரங்கு வந்து ரெம்பக் கஷ்டப் பட்டான். குளிக்க ஊத்துறப்போ சீயக்காய் பட்டா அவ்வளவுதான். பாட்டிக்கு அடி உதை தான். எல்லாத்தையும் பொறுமையா வாங்கிக்கிடுவா. அது தவிர, அடிக்கடி காய்ச்சல்  வேற. ஓமியோபதி உருண்டை கொடுத்து பத்தியச் சாப்பாடு போட்டு மூணு நாளு ஆகி காய்ச்சல் தணிஞ்சு ஓமத் தண்ணி ஊத்தி குளிப்பாட்டி விடுற வரைக்கும் துடிச்சு போயிடுவா. சீக்காளிப் புள்ளைன்னு ரெம்பச் செல்லம்.

ஆவணி ஞாயிற்றுக்   கிழமை  புரட்டாசி சனிக்கிழமை விரதம் வேற. அன்னிக்கிச்   சாயந்திரம்  சுடச் சுட   தோசை மிளகாய் சட்டினியோடு . அந்த மொந்த தோசையிலே மேலே காத்துக் குமிழி போட்டிருக்கிற சின்ன சின்ன ஓட்டைகளை எண்ணிப் பார்த்துக்கிட்டு அவன் சாப்பிடற அழகை பார்த்து ரசிப்பா.

அந்தப் பேரனுக்கும் பாட்டின்னா கொள்ளைப் பிரியம். பெரியவன் ஆக ஆக , லைப்ரரி யிலே இருந்து பொன்னியின் செல்வன் அஞ்சு பாகத்தையும் எடுத்து வந்து பாட்டிக்குப் படிச்சு காண்பிக்கிறது , அவ தலைக்குப் பேன் பார்க்கிறது , கால் வலி ன்னு படுத்தா  காலை அமுக்கி விடுறதுன்னு பார்த்துக்கிடுவான்.

ஆச்சு. வருடங்கள் ஓடியாச்சு. அடுத்த ஊருக்கு வேலைக்கு போனவன், மாசம் ஒரு வாட்டி வருவான். பழைய மாதிரியே பாட்டி கூட பல்லாங்குழி விளையாட்டும் தாயம் விளையாட்டுமா நாட்கள் ஓடும்தாயச் சோவிய  வீசி விளையாடாம , புடிச்சி வச்சு அஞ்சும் ,ஆறும்பன்னெண்டுமா போட்டு அழுகுணி ஆட்டம் விளையாடி ஒரே சண்டை தான். திரும்ப அடுத்த மாதம் .

 இப்ப பாட்டி தளர்ந்து போயிட்டா. முதல்லே  சொன்ன  மாதிரி  ராத்திரி தூக்கம் வராம கஷ்டப்படுறா   .   ரெம்ப முடியாமப் போகறதுக்குள்ளே  முருகனோட ஆறு படை வீடுகளை பாக்கணும்னு ஆசை பட்டான்னு கூட்டிட்டுப் போனான். ஒவ்வொரு இடத்திலும் இறங்கின உடனே பாட்டியை பாத் ரூம் கூட்டிட்டுப் போயிட்டுத் தான் கோயிலுக்கு கூட்டிட்டுப் போவான். ' சீக்கிரம் வாங்க, கோயில் பூட்டிடப் போறாங்க' என்று கூட வந்தவர்கள் அவசர படுத்தினாலும், பாட்டி ஒண்ணுக்கு போயிட்டு வந்தப்புறம் தான் கோயிலே. அவளின்  உடல் உபாதைகளை புரிந்து நடந்து கொள்ளும் பேரனை பெருமையோடு பார்ப்பாள் பாட்டி.  ரெம்ப திருப்தியுடன் திரும்பி வந்த பாட்டி எல்லாரிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

வருடங்கள் ஓட ஓட பாட்டி தளர்ந்து போய் விட்டாள்படுத்த படுக்கை தான். பாயும், தலையணையும். போர்வையும் . அந்தப் பழைய துணி மூட்டையை  கட்டிக் கொண்டே தான் படுத்துக் கிடப்பாள்ஒவ்வொரு தடவையும் பேரன் வந்துட்டுப் போறாப்ப சொல்லுவா . ' நான் செத்தப்புறம் என் உடம்பை பஸ்பமா எரிச்சுப் புடணும்பா. ரெண்டு வேளை குளிச்சு சுத்த பத்தமா வளர்த்த உடம்பு. ஒரு புழு பூச்சி திங்க கூடாது . சுத்தமா எரிச்சு புடணும். '  ' நீ இன்னும் ரெம்ப நாள் இருப்பே பாட்டி'  ' அட ப்  போடா , அடுத்த தடவை நீ வரப்போ நா இருப்பேனோ மாட்டேனோசொன்னவுடனே வந்திருவையிலேகண்கள் கலங்க  கேட்டாள்.

அவள் சொன்ன மாதிரிதான் நடந்ததுஅவன் அயல் நாட்டில் வேலைக்குச் சென்றபோது அது நடந்தே விட்டது. காரியம் முடிந்தபின்தான் வந்து சேர்ந்தான். மெயின் ரோட்டில் இறங்கி ஒத்தையடிப் பாதை வழி நடந்து கண்மாய்க்கு கரையைத் தாண்டி ஊருக்குப் போகும் வழியில் தான் சுடுகாடுஅவன் கால்கள், வீட்டுக்குப் போகாமல் சுடுகாட்டுக்கு விரைந்தன.

அங்கே ஒரு சாம்பல் மேடு. அதற்குப் பக்கத்தில், பாய், தலையணை, போர்வை, அந்த பழைய துணி மூட்டை. . பாட்டியை எரித்த இடம்தான். ஒரு நிமிடம் அந்த சாம்பல் மேடு திடீர் என்று  பாட்டியாக மாறி புரண்டு படுத்த படி ' தூக்கமே வர மாட்டேங்குதுடா' என்ற படி அந்த துணி மூட்டையை இழுத்து கட்டிப் பிடிப்பது போல் ஒரு பிரமைக் காட்சி. அந்த துணி மூட்டை பிரிந்திருந்தது. அதற்குள் தெரிந்தன அவன் பள்ளிப் பிராயத்தில் போட்டிருந்த பழைய டிரவுசர் ,சட்டைகள். கண்கள் பனிக்க நினைத்துக் கொண்டான். ' பாட்டி, எனக்குப் பொண்ணா வந்து பிறப்பியா' ,

-------------------------------------------------------------------நாகேந்திர பாரதி






தொடர் கதை- கவிதை

 தொடர் கதை- கவிதை  ——- ரொட்டித் துண்டு போட்டாலே பாதுகாப்பாய் நாய் நீர் ஊற்றி வளர்த்தாலே நிழலாக மரம் தோட்டப் பழம் உண்டாலே பாட்டிசைக்கும் குயி...