ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------
இந்த ஊபர் , ஓலா மூலமா டாக்சி , ஆட்டோ வெல்லாம் நம்ம வீட்டு வாசலுக்கே வர ஆரம்பிச்சப்பறம் நம்ம ரெம்பவே அலட்டிக்க ஆரம்பிச்சுட்டோங்க. ஆட்டோ வர ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டானாலும்  உடனே கேன்சல் பண்ணிட்டு அடுத்த ஆட்டோவுக்கு புக் பண்றது. பழைய ஆட்டோ டிரைவர் போன் பண்ணி திட்டுவாரு. பாதி தூரம் வந்திட்டாராம்.

பிளேனா என்ன ஆகாயத்திலே பறந்து வந்து இறங்க. ரோட்டிலே டிராபிக்   எல்லாம் தாண்டித்தானே வரணும்.கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமெ உடனே கேன்சல்  பண்ணிடுவோம், 'ஆட்டோ டிலே ' என்று காரணம் காட்டி. முந்தியெல்லாம் ரெண்டு மூணு ஆட்டோ கிட்டே பேரம் பேசி வீட்டை விட்டு கிளம்பவே அரை மணி நேரம் ஆனதெல்லாம் மறந்து போயாச்சு.

நம்ம தான் இப்படின்னா சில டிரைவர் களும் பொசுக்குன்னு கேன்சல் பண்ணிடுவாங்க. கேட்டா ' நான் பூந்தமல்லியில் இருக்கேன். நீங்க கோடம்பாக்கத்தில் இருக்கீங்க . எப்படி சார் வர்றது. சிஸ்டம் பாட்டுக்கு அக்சப்ட்  பண்ணிடுது.' ம்பாங்க. கூகிள் மேப்பிலே பார்த்தா அடுத்த தெருவிலே இருந்து சர்ர்ன்னு  ஆப்போசிட் வழியிலே கிளம்பி போய்க்கிட்டு இருப்பாங்க. ஏதோ தூரமா  போற பார்ட்டி கிடைச்சிட்டார் போலிருக்கு.

இது தவிர நம்ம கூகிள் ஜி பி எஸ் மேப்பை நம்பாம நம்ம அட்ரஸ்ஸை போனில் விலாவாரியா எடுத்துரைப்போம் பாருங்க. போன் பில் பத்து ரூபாய் ஆயிடும். 'நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது குறுக்குத் தெரு , கார்பொரேஷன் காலனி, புது சர்ச்சுக்கு எதிரே ' ன்னு ஒப்பிச்சு ஒப்பிச்சு தூக்கத்திலே உசுப்பிக் கேட்டாக் கூட ' நம்பர் முப்பத்திரண்டு' ன்னு சொல்லிக்கிட்டுதான் எந்திருப்போம்.

இவ்வளவு தெளிவா நம்ம அட்ரஸ் ரெண்டு மூணு தடவை சொன்ன பிறகும் , ஆட்டோ வந்திடுச்சுன்னு மெசேஜ் பார்த்திட்டு  வெளியே வந்து பார்த்தா , ஒரு காக்கா கூட வந்திருக்காது.   போன் பண்ணினா ' சர்ச்சுக்கு எதுத்தாப்பலே தான் இருக்கேம்பாரு'. அடுத்த தெருவிலே இன்னொரு சர்ச் இருந்தா இது ஒரு பிரச்னை.

நம்ம தெரு சர்ச், புது சர்ச். இப்படி இப்படி இருக்கும்னு அதோட அங்க அடையாளங்களைச் சொல்லி அதன் வரலாற்று முக்கியத்துவங்களை சொல்லி நம்ம இடத்திற்கு வரவழைப்போம். போன் பில் இன்னொரு பத்து ரூபாய். இதுக்குள்ளே  அவரு பழைய சர்ச்சிலே இருந்தே மீட்டரை ஆன் பண்ணிருப்பாரு.

அப்புறம், போற வழியிலே அடுத்த குழப்பம். 'சார் நீங்க சொல்ற ரூட் கூகிள் மேப்பிலே ரெம்ப டிராபிக் ன்னு காண்பிக்குது. வேற ரோட்டிலே போகலாம்னு' சுத்தி வளைச்சு போக ஆரம்பிப்பார் . ' ஏங்க, மதுரைக்கு திருச்சி வழி போகச் சொன்னா அந்த வழி டிராபிக் ஜாஸ்தின்னு சொல்லிட்டு கோவை வழி போனா எப்படிங்க இருக்கும். 'சரி கூகிள் ஆண்டவர் சொல்றாருவிடுங்க. இது கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரைதானே. பத்து ரூபாய் ஜாஸ்தி ஆகும். சீக்கிரம் போயிடலாம்' னு மனசை சமாதானப் படுத்திக்கிடுவோம்.

போற வழியிலே எங்காவது ரெட்  சிக்னல்  விழுந்துட்டா  'இது என்ன தொல்லை' ன்னுட்டு டிரைவர் திரும்பி நம்மை முறைப்பாருஏதோ நாமதான் கண்ட்ரோல் ரூமிலே   சொல்லி ரெட் சிக்னல் விழுந்த மாதிரி. இப்படி ஒரு வழியா நம்ம இடத்தை அடைஞ்சிடுவோம். ஆட்டோமேடிக்கா கூடப் போட வேண்டியதை போட்டு சார்ஜ் நம்ம மொபைலில் தெரியும்.

நம்ம முந்தி மாதிரி, பேரம் பேசிப் போயிருந்தா வர்றதை விட அம்பது ரூபாய் குறைச்சுதான் வந்திருக்கும். இருந்தாலும் நம்ம சும்மா இருப்போமா . ' போன தடவை வந்ததை விட அம்பது ரூபாய் ஜாஸ்தி . முந்தி கொறச்சு வந்ததா ஞாபகம்' ம்னு சொல்லி   வைப்போம். நம்ம ஞாபக சக்தியைப் பத்தி வீட்டிலே கேட்டா தெரியும் லக்ஷணம்.

டிரைவர் பதிலுக்கு சொல்வாரு ' நீங்க பத்து நிமிஷம் சீக்கிரம் வந்திட்டீங்க இப்ப'. ம்பாருஏதோ போன தடவையும்   இவரே கூட்டிட்டு வந்த மாதிரி.  ' கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்குமாம்' சொல்றாரு. . நேரத்தின் அருமையை எல்லாரும் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவருக்கும் ஒரு நாளிலே அம்பது ட்ரிப் அடிச்சாதான் இன்சென்டிவ் கிடைக்குமாம்.

என்னமோ போங்க . காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லே . பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லே - இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்களில் இதெல்லாம் அடிபட்டுப் போயிடுது. அடடே போன் வர்ரது. ஆட்டோ  வந்தாச்சுங்க. அவரும் ரெண்டு நிமிஷத்துக்கு மேலே ஆயிட்டா கான்செல் பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. பழைய சர்ச் கிட்டே நிக்கிறாரா, புது சர்ச் கிட்டே நிக்கிறாரா . அட்ரஸ் சொல்லணுங்க . நான் வர்றேங்க ' ' நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது  குறுக்குத் ..................'
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி

3 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கட்டுரை

  சிறுகதை மதிப்புரை - கட்டுரை  ------------- அழகியசிங்கரின்  கதை புதிது நிகழ்வில் நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ' மரகதப் புறா'  சி...