வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

என் சோகக் கதையைக் கேளுங்க - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு

 என் சோகக் கதையைக் கேளுங்க  - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு  

------------------ 


நன்றி சுந்தரராஜன்  சார் வணக்கம் நண்பர்களே. என்  சோகக் கதையைக்   கேளு தாய்க்குலமே ,தந்தைக்  குலமே, தாத்தாக்  குலமே, பாட்டிக்  குலமே  இது என்னுடைய பாட்டைப் பற்றி நான் பட்ட பாடு  .


 இந்த இசை புதிது குழு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே  நான் பாத்ரூம் லே  பாடுவேன் . அந்தச்  சுவர்கள் எதிரொலிச்சு எக்கோ வோடு சேர்ந்த என்னுடைய பாட்டைக்  கேக்குறப்போ எல்லாம்  எனக்கு எஸ்பிபி சார்  குரல் தான் ஞாபகம் வந்துச்சு.  நானும் எஸ்பிபி மாதிரியே  பாடுறேன் அப்படிங்கற ஒரு பிரமை  கூட வந்துச்சு.


 அதனால என்ன ஆச்சுன்னா பேஸ்புக்ல,  முகநூல்ல என்னோட பாட்டுகளை எல்லாம் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம அப்பவே போட ஆரம்பிச்சுட்டேன்.  எனக்கு முகநூலில் நூத்துக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள் .ஆனா எனக்கு அந்தப் பாட்டுக்களுக்கு எல்லாம் ஒரு லைக் கூட வரல . ஒரு மாசம் கழிச்சு ஒரே ஒரு லைக் வந்துச்சு . அது யார் போட்டதுன்னா அது நான் போட்டது தான்.  ஆனா நம்ம ஒரு லைக்குக்கு  மேல போட முடியாது என்கிறதுனால அந்த ஒரு லைக் தான் ஒரு மாசமா ஓடுச்சு என்னோட ஒவ்வொரு பாட்டுக்கும்.  


அடுத்த மாசம் இன்னொரு லைக் வந்துச்சு. அது யாருன்னு பார்த்தா என்னோட  மனைவியோட லைக். அவங்களுக்கு முகநூல் உருவாக்கிக் கொடுத்தது நான் தாங்க. ஆனா அவங்க அதுக்கு பிறகு வீட்டு வேலைகள் ஜாஸ்தி இருந்ததினால் பேஸ்புக் பக்கமே வரல .அப்புறம்  எப்படி இன்னொரு லைக் வந்துச்சுன்னு கேக்குறீங்களா. நீங்க புத்திசாலி .கரெக்டா யோசிச்சுட்டீங்க.  ஆமாங்க அவங்களோட லாகின் பாஸ்வேர்டை உபயோகப்படுத்தி நானே போட்டேன் இன்னும் ஒரு லைக் .


இது ஏன் இந்த லைக் குக்காக இவ்வளவு அலையுறேன்னு கேக்குறீங்களா. இந்த பேஸ்புக்ல என்னோட பிரெண்ட்ஸ் சில பேருக்கு 100 லைக்கு க்கு  மேல வருதுங்க .என்னென்னமோ போடுறாங்க. எல்லாத்துக்கும் லைக். அந்த ஒரு போட்டியினால் தாங்க நானும் இது மாதிரி ஏங்க ஆரம்பிச்சேன் ஆனா ஒண்ணும் நடக்கல .அப்பத்தான்  இன்னும் ஒரு ஐடியா வந்தது.


 சரி இது பேஸ்புக் ரொம்ப கூட்டமா   இருக்கு .நம்ம வாட்ஸ் அப்ல ஒரு சின்ன குரூப் ஆரம்பிச்சு அதுல பாட்டுக்கள் எல்லாம் போட்டா அந்த நண்பர்கள் எல்லாம் லைக் பண்ணுவாங்க .அப்படின்னு ஒரு நம்பிக்கை. இதை  நம்ம அழகிய சிங்கர் கிட்ட சொல்லி இசை புதிது அப்படின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமா அப்படின்னு கேட்டேங்க அவருதான் புதுசு புதுசா ஆரம்பிக்கிறதுல  ரொம்ப ஆர்வமானவராச்சே.


 'ஓகே ஆரம்பிங்க' அப்படின்னுட்டாரு, ஆனா ஒரு கண்டிஷன் போட்டு .'சினிமா பாட்டு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்காதுங்க. கர்நாடிக் மியூசிக் தெரிஞ்ச யாரையாவது ஒருத்தரை சேர்த்து கிட்டு  ஆரம்பிங்க' அப்படின்னாரு .அப்பத்தான் நான் குவிகம்  குரூப்ல நம்ம சாந்தி மேடத்தோட  பாட்டு கேட்ட ஞாபகம் வந்துச்சு


அவங்க கிட்ட கேட்ட உடனே அவங்க உடனே சரி ன்னுட்டாங்க . நாங்க ஒரு பத்து பேரு தினசரி கர்னாடிக்  பிராக்டிஸ் பண்றோம் .ஆரம்ப காலத்தில் இருந்தே கத்துக்கிட்டவங்க . நான் எல்லாரையும் சேர்த்து விடுறேன்.நாங்க பாடுகிறோம், ன்னு வந்தாங்க .ஆனா எல்லாம் ஒரே கர்நாடிக் பாட்டா இருந்துச்சா அவங்களுக்குள்ள லைக் போட்டுக்கிட்டாங்க .என்னோட சினிமா பாட்டு, ஒரே ஒரு பாட்டுக்கு ஒரே ஒரு லைக் தான் வந்துச்சு . அது சாந்தி மேடத்தோடது.வேற வழியில்லே அவங்களுக்கு. 


 என்னடா பண்றது, அப்படின்னு யோசிச்சு அப்புறம் ஒரு ஐடியா வந்துச்சு. நமக்கு தெரிஞ்ச சினிமா பாடல் நண்பர்கள், இந்தியன் பேங்க் ,  நவீன விருட்சம் குரூப்ல இருக்குற வேற  சில பேர் எல்லாம் அதில் சேர்த்து விட்டேன் . இனிமேலாவது நமக்கு லைக் போடுவாங்களா அப்படின்னு நினைச்சா ,   அவங்க  என்ன பண்ணாங்கன்னா எல்லாரும் காலைல வந்து  எல்லாம் ஒரு சினிமா பாட்டு போடுவாங்க .அப்புறம் காணாம போயிருவாங்க.  மறுநாள் காலையில தான் வந்து இன்னொரு பாட்டு போடுவாங்க.  மத்தவங்க பாட்டுகளை கேட்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை . நான் காலையில, மத்தியானம் ,சாயந்திரம் எல்லாம் போய்ப்  பார்க்கிறது. யாராவது ஒரு லைக் போட்டு இருக்காங்களா. ஒரு லைக் கூட கிடையாது. 


இதை பத்தி யோசிக்கறதுக்காக பக்கத்துல அண்ணா  பார்க்குன்னு  ஒண்ணு  இருக்கு கோடம்பாக்கத்தில். அங்கே போய் உட்கார்ந்து அப்படியே கண்ண மூடிக்கிட்டு யோசித்துக்கொண்டே இருந்தேன் .அப்பத்தான் திடீர்னு ஒரு ஞானோதயம் வந்துச்சு .இந்த புத்தருக்கு போதி மரத்தடியில் வந்த மாதிரி,  எனக்கு ஒரு புளிய மரத்தடியில் வந்துச்சு. எப்படி வந்துச்சுன்னு தெரியாது.  புளியமரத்து மேல பிசாசுகள் தான் இருக்கும்னு சொல்லுவாங்க.  இந்த பிசாசுகள்னால வந்த ஞானோதயமா   என்னன்னு தெரியல. ஆனா வந்திருச்சு .  


ஆஹா மத்தவங்க பாட்டு கேட்டு  நம்ம ஒரு லைக் கூட போடவில்லை .அப்புறம் எப்படி மத்தவங்க நமக்கு லைக் போடுவாங்க அப்படிங்கிறது மனசுல உரைச்சுச்சு .  மறுநாள் பார்த்தேன் 


கர்நாடிக் மியூசிக் பாட்டு ஏதாவது ஒண்ணு  ரெண்டு கேட்கிறது .சினிமா பாட்டு ஒண்ணு  ரெண்டு கேட்கிறது.  இவர்களுக்கு எல்லாம் லைக் போடுறது அப்படின்னு ஆரம்பிச் சேன். என்ன ஆச்சரியம் . நான் போட்ட லைக் போட்டவங்க எல்லாம் திருப்பி எனக்கு லைக்  போட ஆரம்பிச்சிட்டாங்க .அதான் ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல .ஒரு கன்னத்தில் அடிச்சா இன்னொரு கன்னத்தை காமிங்க .சே சே அது பொருத்தமான பழமொழி இல்ல.     ஏதோ ஒண்ணு. பேச்சிலே ஏதாவது பழமொழி சொல்லணும்னு சில பேரு பொருத்தமே இல்லாத பழமொழி எல்லாம் சொல்லிட்டு அவங்களே ரசிப்பாங்களே,  அது மாதிரி முயற்சி பண்ணினேன். சும்மா. பதிலுக்கு பதில் அப்படிங்குற மாதிரி, அந்த நாலு பேராலே  எனக்கு நாலு லைக் வந்துச்சு. திருப்பி இன்னும் ஒரு நாலு பேருக்கு போட் டேன். இன்னும் ஒரு நாலு லைக் எனக்கு. இப்படி  கொஞ்சம் கொஞ்சமா லைக் கூடிக்கிட்டே போச்சு.


ஆனா  என்ன பிரச்சனையாச்சுன்னா .  நான் இந்த பாட்டு கேக்கிறதாலே  வேற எந்த வேலையும் பண்ண முடியல. காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு வீட்ல சொன்னா, கொஞ்சம் இருமா ஒரு பாட்டு கேட்டு லைக்  போட்டு வந்துடறேன், அப்படின்னு சொல்ல  வெறுத்துப் போயிட்டாங்க  வீட்டுல . பெரிய பிரச்சனை ஆயிடுச்சு . சாப்பாட்டுக்கே  பிரச்சனை வந்துடும் போல இருந்துச்சு . 


சரின்னு அப்புறம்,  கொஞ்சம் பாதி கேட்கிறது, லைக் போடுறது அப்படிங்கற மாதிரி ஆரம்பிச்சேன்.  நம்ம  ஒரு பத்தடி பாஞ்சா நம்ம நண்பர்கள் நூறு அடி பாய ஆரம்பிச்சிட்டாங்க.   நானாவது பாதி கேட்டு போட்டேன் .அவங்க எதுவும்  கேட்காமலே போட ஆரம்பிச்சிட்டாங்க. 20 , 30 லைக் வர ஆரம்பித்தது . அவங்க  கேக்காம  போட்டாங்கன்னு எப்படி எனக்குத் தெரியும்கிறீங்களா .இப்ப நான் ஒரு மூணு நிமிஷம் பாட்ட அப்ப தாங்க போட்டு இருப்பேன். அடுத்த செகண்ட் ஒரு லைக் சிம்பல் வந்துரும் கேட்டிருக்க முடியுமா. சொல்லுங்க. ஏதோ ஒரு நட்புக்காக , பாசத்துக்காகப் போடுறாங்கன்னு புரிஞ்சு போச்சு. 


இன்னும் சில நண்பர்கள் ஒரு படி முன்னாலேயே போயிட்டாங்க. அதாவது என்ன பண்ணாங்கன்னா' சார் நாங்கள் லைக்கோட இருக்கோம் . பாட்டு சீக்கிரம் போடுங்க . நாங்க லைக் போட்டுட்டு போகணும்,. எங்களுக்கு வேற வேலை எல்லாம் இருக்கு. நாங்க போகணும் '.


'என்னப்பா இவ்வளவு அவசரமா கேக்குறீங்க'ன்னு சொல்லிட்டு நான் ஏதாவது பாட்டு போடுவதற்கு முன்னாலேயே ஒருத்தர்  ஒரு கமெண்ட் போட்டுருவாங்க . 'நீங்க பாடப்போகும் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது' அப்படின்னு ஒரு கமெண்ட் . இந்த மாதிரி ஒரு போலியான பொய்யான லைக்குகளும் பாராட்டுக்களும் வந்து குவிய ஆரம்பிச்சுச்சு.


 அப்புறம்தான் தெரிஞ்சுச்சு அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு .வராங்க, பாடுறாங்க. சில பாட்டு கேக்குறாங்க. இந்த லைக் கமெண்ட் இதெல்லாம் வேணும்னு நம்ம எதிர்பார்க்க கூடாது. நமக்கு ஏதோ பாடணும்னு  ஆசையா இருக்கு .பாடுவோம் அத்தோடு நிறுத்திக்கணும் .


எனக்கு 100 லைக் வேணும், 200 லைக் வேணும். என் பாட்ட பாராட்டணும் இப்படி எல்லாம் நினைச்சுகிட்டு, நம்ம குரூப்ல போனோம்னா இந்த மாதிரி போலித்தனமான லைக்குகளும் பாராட்டுக்களும் தான் வந்து குவியும் .அதுவும் சில பேரு என்ன பண்ணுவாங்கன்னா நம்மள பத்தி ஒண்ணு  எழுத மாட்டாங்க ஆனா நம்ம பாட்டுக்கு ரிப்ளை பண்ணி இருப்பாங்க.


 'பாட்டு நல்லா இருந்துச்சுன்னு ' ஒரு வரி. நம்ம எப்படி பாடினோம்னு விபரம் இருக்காது. அந்தப்  பாட்டைப் பற்றிய தங்களுடைய அறிவை வெளிப்படுத்திகிறதுக்காக என்னோடு பாட்டை  உபயோகப்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துச்சு.  ஏன்னா சும்மா அதைப்   பத்தி எழுத முடியாது. இல்லையா .ஏதாவது ஒரு பாட்டோட  கனெக்ட் பண்ணித்  தானே எழுதணும். அதுக்கு என்னோட பாட்டு தான் கிடைச்சுச்சு .


சில பேரு நான் ஒரு பாட்டு போட்டிருப்பேன். அவங்க இன்னொரு பாட்டைப் பத்தி பாராட்டி எழுதியிருப்பாங்க.  இப்படி எல்லாம் சில பேரு பயங்கர டெக்னிக்கோடா நமக்குப்   பாராட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்காக நாம பாடுவதை நிறுத்த முடியுமா. நம்ம விருப்பத்துக்கு நம்ம சந்தோஷத்துக்கு பாடுவோம் .எப்பவாவது சில பேரு கேப்பாங்க . நிஜமான பாராட்ட போடுவாங்க. 


நானும் அதுமாதிரி தாங்க        போடுறேன். சுருக்கமா சுவையாக,  அவங்க பாடுறதைப்  பற்றி போடுறேன். அதே மாதிரி சில பேரு போடுறாங்க. அது போதும் நமக்கு .quality  is  more  important  than  quantity . இல்லையா. நம்ம பாட்டும் சரி, பாராட்டும் சரி , quality யோட  இருக்கட்டுமே .


அதிகப் பாராட்டும் லைக்கும் quality யோட  வரட்டும்.  அதுவரைக்கும் பொறுமையாகக்  காத்திருப்போம் காத்திருப்பது தானே வாழ்க்கை. 


 நன்றி வணக்கம்


--------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என் சோகக் கதையைக் கேளுங்க - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு

 என் சோகக் கதையைக் கேளுங்க  - குவிகம் சிரிப்பரங்க நிகழ்வு   ------------------  நன்றி சுந்தரராஜன்  சார் வணக்கம் நண்பர்களே. என்  சோகக் கதையைக...