இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை
------------
நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே.
இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர் என்பது நம்மில் பலர் அறிந்ததே. இந்த நாயக்கர் பங்களா கதையும் அது போல் ஒரு மர்மக்கதை தான்.
நாயக்கர் பங்களா ஒன்றின் பின்புறத் தோட்டத்தில் அடிக்கடி தோண்டியெடுக்கப்படும் , சமீபத்தில் இடுகாட்டில் புதைக்கப்பட்ட கன்னிப்பெண்களின் சடலங்களும், திரைசீலைக்குப் பின்னே தெரியும் வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்களும் , அதை ஒரு மர்ம பங்களாவாக ஆக்கி , அதை விற்க முயலும் அதன் சொந்தக்கார பரம்பரைப் பணக்கார வியாபாரிக்கு இறுதியில் அதை சொன்ன விலைக்கு பாதி விலைக்கு விற்க வைக்கிறது.
இந்த வியாபாரியும் பல தகிடுதத்தங்கள் செய்து வியாபாரத்தில் செழித்துக்கொண்டிருப்பவன். இதில் பாதி விலைக்கு அதை வாங்கி அதே விலைக்கு மற்றொருவரிடம் ஒத்திக்கு விடும் இன்னுமொரு, மோசக்காரனுக்கு மோசக்கார வியாபாரியைக் காட்டி , அந்த பங்களாவின் மர்மத்தையும் முடிச்சவிழ்த்து விடுகிறார், தனக்கே உரிய பாணியில் ஆசிரியர்.
மர்மக் கதைகளின் முடிவைச் சொல்லக் கூடாது என்பதால் , ஆசிரியரின் எழுத்து நடையில் நான் ரசித்த சில இடங்களை மட்டும் சொல்லி ,முடிவை கதையில் , அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆரம்பத்தில் ஒரு வரியில் காட்டப்பட்ட , பக்கத்து மெடிக்கல் கல்லூரியுடன் தொடர்பு படுத்தி கதை முடிகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் .
-----------
ரசித்த அந்த வர்ணனைகள். முதலில் அந்த நாயக்கர் பங்களா பற்றிய வர்ணனை .
பங்களாவா அது. அரண்மனை. இருபது செண்டு நிலத்தில் மூவாயிரம் சதுர அடியில் நறுக்கி எடுத்த மைசூர்பாகு துண்டம் போல் உருண்ட தூணும் தேக்கு ஜன்னலுமாய், சுற்றிவர வாதநாராயண மரமும் வேப்ப மரமும் குசலம் விசாரிக்க, தாஜ் மகால் கணக்குக்கு ஜொலிக்கும் அந்த கட்டடத்திற்கு ஒரு காலத்தில் அசாத்திய கிராக்கி .
வாசல் புறம் கன்னங்கரேலென்று ஈட்டியாய்க் குத்தி நிற்கிற வாசல் கதவு . தாண்டி உள்ளே நுழைந்தால் கார் நிற்கும் போர்டிகோ வரை பவழ மல்லிகைச் செடிகளின் குபீர் வளர்ச்சி + வாசம் .
எங்கும் இல்லாதபடி நாலு மனோரஞ்சித செடி மரங்களுக்கு அந்த பங்களா பிரசித்தம் . பின்பக்கம் தோட்டம் . ஜாதிக்கு ஒரு மரம் சத்தியமாய் உண்டு . ஆங்கிள் கிராதியில் ஊஞ்சல் . இடுப்புயர சிமெண்டு திட்டில் , சின்ன சைஸ் பிள்ளையார் அன்று அந்தத் தோட்டம் கூட அட்டகாச ரகம்.
-----
முன்னும் பின்னுமாக கண்முன் கொண்டு வருகிறார் நாயக்கர் பங்களாவை ஆசிரியர். அந்த இயற்கைக் சூழலோடு கூடிய அந்த அழகிய பங்களாவில் போய்க் குடியேற விரும்புவோர்க்கு அடுத்து வரும் வர்ணனைகள் அதிர்ச்சி அளிக்கும்.
------
ஊரு சுடுகாட்டில் புதைக்கப்படும் கன்னிப்பெண்களின் பிணங்கள் பங்களாவில் இருந்து தோண்டி எடுக்கப்படுவது பங்களாவின் பிரதான மர்மங்களில் ஒன்றாகி விட்டது . ஒருமுறை வீட்டின் உள் ஒரு திரைசீலைக்குப் பின்னே இரண்டு கால்கள் தெரிந்தன . 'யார் அது ஒளிந்து கொண்டு ' ... திரைச் சீலையை விலக்கி விட்டுப் பார்த்தால் இதயத்தைத் தீக்குச்சியால் உரசின மாதிரி ஒரு வலி அங்கே யாரும் இல்லை. வெட்டி எடுத்த இரண்டே இரண்டு கால்கள் மட்டும் தனியாக.
----
ஒரே நிமிடத்தில் நம் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுகிறார் ஆசிரியர் தன் எழுத்துத் திறமையால் . இயற்கை அழகோடு நம்மை வா வா என்று ஏங்க வைத்த அந்த நாயக்கர் பங்களா , இப்போது பேய்ப் பங்களாவாக மாறி நம்மைப் போ போ என்று ஓட வைக்கிறது .
இதற்கு நடுவில் அந்த பங்களாவை விற்க முயலும் சொந்தக்கார வியாபாரியின் வியாபார மோசடிகள்
----------------
அப்பளம் போடுபவனில் இருந்து யமஹாவை விற்பவன் வரை புரணி கிளப்பி விட்டு சாய்த்த அவன் தந்திரங்கள் .
‘அந்த அப்பளத்திலே மரத்தூள் மாவு கலந்திருக்கு , லிவருக்கு ஆபத்து ,’
‘அந்த யமஹாவா, அது பன்னி அடிச்ச வண்டிங்க , வாங்கினா தொலைஞ்சிங்க .’
‘பிஸினஸிலே இதை எல்லாம் பண்ணிதான் பெரிய ஆள் ஆயிருக்கேன்’ என்று பெருமை அடித்துக் கொள்ளும் அவனுக்கு ஆப்படிக்க மோசக்காரனுக்கு ஒரு மோசக்காரன் வந்து , இப்போது அவனது அந்த பங்களாவை விற்க முடியாத நிலை.
இறுதியில் பாதி விலைக்கு அதை விற்க முடிவு செய்ய , அதை வாங்குபவன் அந்த மோசக்காரனுக்கு மோசக்காரன். இப்போது அவிழ்கிறது அந்த பேய்பங்களாவின் மர்ம முடிச்சுகள் . நீங்கள் கதையில், அழகியசிங்கரின் ' நவீன விருட்சம் தினசரி' யில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் .
----
மிகவும் விறுவிறுப்பான கதை. மர்மத்துக்கு மேல் மர்மம் . அதற்கு நடுவில், ‘நாம் மற்றவரை ஏமாற்றினால் , நம்மை ஏமாற்றவும் ஒருவன் வருவான்’ என்ற ஒரு சிந்தனையையும் கிளப்பி விட்டு கதை முடிகிறது.
இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் மர்மக் கதைகளும் ஆன்மீகக் கதைகளும் எழுதி புகழ் பெற்றவர். ஆன்மிகம் கலந்த அவரது மர்மத் தொடர் கதையான ' ஆனந்த விகடனில் வெளிவந்த ' இறையுதிர் காடு ' நம்மால் மறக்க முடியாத ஒன்று. இந்த ' இந்த நாயக்கர் பங்களா கதை மர்மமும் வியாபார தந்திரமும் கலந்த வித்தியாசமான கதை. படித்து ரசியுங்கள். வாய்ப்புக்கு நன்றி அழகியசிங்கர் .
-------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக