வெள்ளி, 29 டிசம்பர், 2023

தங்கச்சி - சிறுகதை

தங்கச்சி - சிறுகதை

---------------------------------------

' சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா 'அலறும் அப்பத்தாவின் குரல்.' வயித்தாலே, வாயாலே ' போய்த் திணறிக் கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தவன் அழுதபடி , அடுத்த நிமிடம் கிராமத்துக்குச் செல்லும் அந்த மண் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான். தாத்தா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் இவனும் இவன் தங்கையும். ஆரம்பப் பள்ளி வரை கிராமத்தில் படித்துவிட்டு ஆறாவது படிக்க இப்பொழுது இவன் இருக்கும் தாத்தா வீட்டுக்கே வந்து விட்டாள் இவன் தங்கையும் .


அங்கே அந்தக் கிராமத்து ஓட்டு வீட்டில் , இவன் அங்கு போகும் போதெல்லாம் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த அவளுக்கு இங்கே தாத்தாவின் பெரிய கல்லு வீட்டில் இந்தத் தெரு முதல் அடுத்த தெரு வரை நீண்டுள்ள அந்தப் பெரிய வீட்டில் அண்ணனுடன் சேர்ந்து ஓடி விளையாடுவதில் பெரிய குஷி . ஆட்டம் பாட்டம் ஆகத்தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை.


முந்தாநாள் மாலை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவுடன் சேர்ந்து பக்கத்து டவுனுக்குப் பஸ்ஸில் போய் ஃபர்ஸ்ட் ஷோ செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு, உறவினர் வீட்டில் தங்கி விட்டுத் திரும்பும் போது அப்பா கிராமத்தில் இறங்கிக்கொள்ள, இவர்கள் இருவரும் தாத்தா வீட்டிற்குத் திரும்பினர் . அன்று இரவில் இருந்து தங்கை பார்வதிக்கு வயிற்றுப்போக்கு . அங்கு இருக்கும் ஒரே டாக்டரும் ஏதோ மருந்து கொடுத்து நிற்காமல் இரவு முழுக்க காய்ச்சல் வயிற்றுப் போக்கு . துரும்பாக வதங்கிக் கிடந்த தங்கையைப் பார்க்கப் பார்க்க சங்கருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவள் உதடுகளில் நேற்றுப் பார்த்த சினிமா பாட்டு லேசாக முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.


பஸ் போக்குவரத்து வசதி அடிக்கடி இல்லாததால் அந்த நாலு கிலோமீட்டர் தூரத்தை அப்போது ஓடிக் கடந்து கொண்டிருந்தான் சங்கர் . தங்கையோடு சேர்ந்து நிதானமாக நடந்து வந்த காலத்தில் , அந்த ரோட்டோரம் கிடக்கும் பெரிய குழாய்களுக்குள் ஒளிந்து கொண்டு விளையாடிய ஞாபகம். 'கடவுளே அவள் பிழைக்க வேண்டும், திரும்ப நாங்க ஒளிந்து பிடித்து விளையாட வேண்டும். . என்னுடன் ஓடிப் பிடித்து ஒளிந்து பிடித்து விளையாடுவதில் எவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு'.


அங்கே கிராமத்து கண்மாய் மேட்டிலேயே இவனைப் பார்த்துவிட்டு அம்மா ஓடிவந்தாள் . ' என்னடா 'செய்தி தெரிந்ததுமே அம்மாவும் அப்பாவும் பரக்கப் பரக்க மறுபடியும் மூன்று பேராக அந்த மண் ரோட்டில் திரும்ப ஓடி வர அப்பா நினைப்பில் ' பிரியமான பாரு . 'அப்பா அப்பா ' என்று வாய்க்கு வாய் கூப்பிட்டு கூப்பிட்டு அவள் பேசும் பேச்சு. அதைக் கவனித்து கேட்காவிட்டால் அவள் முறைக்கும் முறைப்பு. '


காலையில் சாப்பிடும் போது அண்ணனுக்கு தனக்கு வைக்கும் இட்லியின் அந்த மெல்லிசான ஓர இதழ்களை பிய்த்து அண்ணனுக்குப் பிடிக்கும் என்று அவள் சாப்பிடும் போது இவன் தட்டில் பிய்த்துப் போடுகின்ற பாசம். பள்ளியில் எல்லாவற்றிலுமே ஃபஸ்ட். இவளோட பிரண்ட்ஷிப்பா இருக்க போட்டி போடும் ஆறாவது வகுப்பு தோழிகள் . ' பாரு பாரு' என்றபடி வீட்டுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்து டாக்டர் வீட்டுக்கு ஓட, அங்கு மூச்சுவிட திணறி விழி பிதுங்கிய நிலையில் பார்வதி.


' ஏதோ மாத்திரை கொடுத்துட்டாரு டாக்டர் ,அதுக்கப்புறம் இப்படி ஆயிட்டா' என்று டாக்டரை அடிக்கக் கிளம்பும் தாத்தா. ' அது மாத்திரையினால் இல்லைங்க ,தண்ணி எல்லாம் வெளியேறிடுச்சு,குளுக்கோஸ் வாட்டர் ஏத்தணும் . இங்கே ஆஸ்பத்திரி இல்ல, அதுக்குரிய வசதி இல்ல, பக்கத்து டவுனுக்குத் தான் போகணும், அதுக்குக் காருக்கு ஏற்பாடு பண்ணி இருக்கோம் ' என்று சமாதானப்படுத்தும் கம்பவுண்டர் .


'அப்பா, அம்மா, எல்லாம் வந்திருக்காங்க ,தைரியமா இரு 'என்று அழுகையோடு படுக்கையில் கிடக்கும் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தான் சங்கர். 'அந்த விழி ஏன் சொருகுகிறது. ஏன் நெஞ்சு எம்பி எம்பி, என்ன இது தங்கச்சி' என்று அவன் கத்த , கூடியிருந்த அந்தக் கிராமத்துக் கூட்டம் டாக்டர் மேல் பாய்ந்தது.


--------------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English ஆட்டோப் பிரசவங்கள்- கவிதை

 ஆட்டோப் பிரசவங்கள்- கவிதை 

---------------------------

வாயில் சோற்றைத் திணித்திட்டு

வயிற்றில் பெல்ட்டை இறுக்கிட்டு

வாசல் அனுப்பும் பெற்றோர்கள்


பெட்ரோல் விலையின் ஏற்றத்தில்

வீட்டுச் செலவின் சீற்றத்தில்

கூட்டம் சேர்க்கும் ஆட்டோக்கள்


கையைக் காட்டிப் போகவிட்டு

கண்டும் காணாப் பார்வையிலே

போக்கு வரத்துப் போலீசார்


கல்விக் கூடம் காசாக்கி

கணக்கும் வழக்கும் பார்க்கின்ற

பள்ளிக் கூடத் தாளாளர்


இந்தக் கூட்டணி இயக்கத்தில்

இடித்துப் பிடித்து உறக்கத்தில்

ஏறிப் போகும் பிள்ளைகள்


விரையும் பஸ்ஸின் ஓரத்தில்

வேகத் தடையின் பாரத்தில்

ஓடும் ஆட்டோ அபாயங்கள்


அலறும் ஆம்புலன்ஸ் வண்டிகளின்

அபாயக் குரலைக் கேட்டிட்டால்

அச்சம் ஏறும் அடிவயிற்றில்


பள்ளிக் கூடம் சேர்ந்தவுடன்

பிதுங்கி வழியும் பிரசவங்கள்

என்றும் சுகமாய் நடந்திடுமா


--------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சுனாமி நினைவலைகள் - கவிதை

 சுனாமி நினைவலைகள் - கவிதை 

——————————

போதுமடி கடல்தாயே நிப்பாட்டு

போனமுறைக் காயமின்னும் ஆறவில்லை

மோதிவந்து கோபத்தில் முட்டாதே

முன்னிருந்த பாசமெல்லாம் என்னாச்சு


பூமிக்குப் பிறந்தவளே பொறுமை காட்டு

புறப்பட்டுக் கரை தாண்டி வாராதே

மீனுக்குப் பசியென்றால் பாசி கொடு

மீனவரை உணவாக்க எண்ணாதே


பிள்ளைகுட்டி குடும்பத்தை அள்ளிப் போய்ப்

பெருஞ் சோறு போட்டாயே போதாதா

பின்னுமென்ன ஆசையடி பேரழிவே

பிள்ளைகளைத் தின்னுகின்ற பேயா நீ


தாலாட்டாய் உன்னலையைக் கேட்டிருந்தோம்

ஒப்பாரி ஆனதடி அப்போது

படகோட்டி மீன் ஈட்டி வாழ்ந்திருந்தோம்

பயம் காட்டி நிறுத்தி விட்டாய் சரியாடி


உத்தரவு இடுகின்றோம் உள்வாங்கு

உன்மத்தம் போதுமடி பின் வாங்கு

கத்து கடல் சப்தத்தைக் குறைத்துக் கொள்

கண்மூடித் தூங்க விடு வாழ விடு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 27 டிசம்பர், 2023

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

---------------------------------------------------------------------------

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே .

எழுத்தாளர் , இயக்குனர் ஜெயபாரதி அவர்களின் ' அம்மாவுக்கு ஒரு புடவை ' என்ற சிறுகதையைப் பற்றிய எனது கருத்துரை .

 பொருட்காட்சி மைதானத்தில் நுழைந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் மனவோட்டம் , பாசத்தோடும் , ஆசையோடும்,  தன்னிரக்கத்தோடும்  அலைவதை எழுத்தில் வடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். ஒரு நியூ வேவ் படம் பார்ப்பது போன்ற உணர்வு .

 சுருக்கமாக அவன் எண்ணங்களைப் பற்றி .

முதலில் அந்தப் பொருட்காட்சியில் உலவும் மனிதர்களின் முகங்கள், எண்ணங்கள் பற்றிய இவனது கற்பனை. நல்லதும் கெட்டதுமாக  . திடீர் என்று தானும் அவர்களைப் போல் ஒருவன்தான் என்ற வெளிச்சம் ஏற்பட்டு அதில் இருந்து விடுபட  மருந்து மாத்திரை சாப்பிட ஆசைப்பட்டு திரும்பவும் அந்த மருந்தின் வேகம் குறைந்ததும் மாறித்தான் போய் விடுவோம் என்ற விரக்தி நிலைக்குத் திரும்புவது .

 அடுத்து ஒரு அரசியல்வாதி, அவருக்குப் பாதுகாப்பாய் போலீஸ், தொடரும் தொண்டர் அல்லது தோழர் . இவர்களை பற்றிய கிண்டல் . இந்த அரசியல்வாதிகள் பேச்சில் மயங்கி , ஒரு இன்டெர்வியுவில் ' என் அப்பா, அம்மா பிராமணர்கள், நான் மனிதன்' என்று தன்னை அறிமுகம் செய்து வேலை கிடைக்காத விடலைப் பருவ உணர்ச்சி வேக ஞாபகம்.

அடுத்தது பானி பூரி விற்கும் இடம். அந்த இடத்தின் வருணனை. அப்படியே கண் முன் கொண்டு வந்து விடுகிறார் கடையை. படித்து ரசியுங்கள். அதே நேரம், அவன் , பானி பூரியின் நடுவே கட்டை விரலால் ஓட்டை போடும் போது , தன் அம்மா, மொட்டை மாடியில், தனக்கும் , தனது சகோதர சகோதரிகளுக்கும் புளியோதரை, சாம்பார் சாதம் , தயிர் சாதம் கொடுக்கும் காட்சியில் தயிர் சாதத்தின் நடுவில் அம்மா கட்டை விரலில் ஓட்டை போட்டு நடுவே குழம்பு ஊற்றும் காட்சி. வட நாட்டு, தென் நாட்டு சாப்பாட்டு முறையில் உள்ள  ஒற்றுமையை உணரும் இடம் .

அப்போது  தான் தன் சேலையைக் கிழித்து தங்கைகளுக்கு தாவணி பாவாடை தைக்கச் சொன்ன அம்மாவின்  பேச்சு ஞாபகம் வந்து  அம்மாவுக்குப் புடைவை வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறது நாயகனுக்கு ..

அடுத்து பொருட்காட்சிக்குள் உள்ள புடைவைக் கடைக்குள் நுழைய , சேலை சம்பந்தப் பட்ட சில கிளுகிளுப்பான உணர்வுகளை  அந்தக் கடையில் உள்ள சேலை கட்டியுள்ள பொம்மையும் , அங்குள்ள பெண்களும்  கிளப்பி விட சேலை வாங்காமல் , வெளியே வந்து  ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் ஒரு இடத்திற்குப் போகிறான். அங்கே நடக்கின்ற ஆபாச நடனங்கள் பற்றிய வருணனையும் அங்கு இருப்பவர்களின் எண்ணங்கள் பற்றிய  வருணனையும் தொடர்கிறது . 

இதற்கு நடுவில் திரும்பவும் அவனுக்கு அம்மாவுக்கு புடவை வாங்கும் ஞாபகம் வருகிறது . இவன் அடிக்கடி போகும் ஒரு விலைமாது  வித்யா பற்றிய விபரங்களைத்  தொடர்ந்து அவளிடம் போய் ‘அம்மாவுக்கு என்ன மாதிரி  சேலை வாங்கலாம்  என்று  கேட்கலாமா’ என்று தோன்றுகிறது .  ஆனால் அவள் தனக்கு சேலை எடுத்துக் கொடுக்கச் சொல்வாள் என்று தோன்றி அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு தானே எடுக்க முடிவு செய்து இன்னொரு சேலைக் கடைக்குள் நுழைந்து அங்கு சேலை எடுக்கும் சிலரிடம்,  'ஒரு சேலை எடுக்க உதவ முடியுமா ' என்று கேட்க , அவர்கள் ' ஒய்புக்கா என்று கேட்க , இவன் எண்ணம் ' ஜானகி ' என்ற பெண்ணைப் பற்றி .

 அவளைத் தனது மானசீக மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இருவருக்கும் ஆறு குழந்தைகளாம் . அவள் சிறு வயதில் இவனால் விரும்பப் பட்டு இவனை நிராகரித்தவள். இவனோ விடாமல் கற்பனையில் அவளை மனைவியாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இப்போது அம்மா பேசிய பேச்சு ஞாபகம் வருகிறது. ' வேலைக்குப் போய்  மூணு வருஷம் ஆகிறது . ஆசையா ஒரு நூல் புடைவை வாங்கிக் கொடுத்தானா பாரு , அவ்வளவுதான் , புள்ளைங்களுக்கு அம்மா மேல '  உடனே அந்த ஜானகி பற்றிய  அந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டு , அம்மாவுக்கு ஒரு புடைவை எடுத்து விடுகிறான்.

 இப்போது வித்யா அந்தக் கடைக்கு வேறு ஒரு வாடிக்கையாளனோடு வருகிறாள். இவனைப் பாத்ததும்  சுவாதீனமாக ' இந்தப் புடவை எனக்கா, அப்புறம் வீட்டுக்கு வந்து கொடு ' என்று சொல்ல இவன் ' அம்மாவுக்கு ' என்றதும் , எரிச்சல் பட்டு  . ' புள்ளையோடு மனசைப் போலவே இருக்கு இந்தப் புடைவை, நாளைக்கு பொண்டாட்டிக்கு இந்த மாதிரி புடவை வாங்கிட்டுப் போங்க, தலை மயிரைப் பிடிச்சு குலுக்குவா ' என்று கிண்டல் செய்து விட்டுப் போகிறாள்.

 இவன் பொருட் காட்சியில்  இங்கும் அங்குமாக அலைகிறான். இப்போது நாயகன் பற்றிய வருணனை

' சேவ் செய்து கொள்ளாத முகம். வற்றிப் போன உதடுகள் , நிலை கொள்ளாத கண்கள் ' . எல்லோரும் இவனையே பார்ப்பது போன்ற பிரமை .

திடீர் என்று ஜானகி தன் மனைவி ஆகி இங்கு தன்னோடு வந்திருக்கக்கூடாதா என்ற ஒரு ஏக்கம். அங்கிருக்கும் போலீஸ் பூத்தில் இருந்து ஒரு அறிவிப்பு. இவன் மனைவி ஜானகி அங்கு இருப்பதாகவும் இவனை அழைப்பதாகவும்  ஒரு பிரமை உணர்வு. இப்படி மாறி மாறி அம்மாவுக்கு வாங்கிய சேலையைப் பற்றியும் இவனது மன ஏக்கங்களையும் காட்டி அவனது விரக்தி நிலையைக் காட்டுகிறார் ஆசிரியர்.

 பொருட் காட்சி விட்டு  வெளியே வந்து விட்டான்.

அங்கே ஒரு இடத்தில்  ஒரு கிழப் பிணம். அனாதைப் பிணம் அதை வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் . அதன் அருகே போய் 'போயிட்டியே , என் கண்ணு, என் ராசாத்தி , ஒரு தடவை சிரியேன் . கூட வா , உன்னை இட்டுக்கிட்டுப் போயி நீ கேக்கிற கலர்லே , நம்பர்லே, ஸ்பெஷல் தறியில் செஞ்ச புடவை வாங்கித் தரேன். முந்தி மாதிரி ' ஐ டோன்ட் லைக் தீஸ் திங்க்ஸ் ' இன்னு சொல்லிறாதே ' என்று தன் கற்பனை மனைவி ஜானகி இறந்து விட்டதாக நினைத்து புலம்பி விட்டு , அந்தப் புடவையை அந்தப் பிணத்தின் மேல் போட்டு விட்டுப் போகிறான் ' என்று முடிகிறது கதை.

வித்தியாசமான கதை. நான் முதலில் சொன்னது  போல் ஒரு நியூ வேவ் படம் பார்ப்பது போன்ற உணர்வு . அம்மாவுக்குப் புடவை வாங்க நினைத்து ,  வாங்கி விட்டாலும் கூட அவனது அலை பாயும் நினைப்பு விலைமாது , கற்பனை மனைவி , ரெகார்ட் டான்ஸ் என்று அவனது உடல் உணர்வுகளில் தடுமாறி கடைசியில் அவற்றில் இருந்து விடுபட முடியாமல், இந்த உணர்வுகள் கலந்த இந்த சேலையை  அந்தப் பிணத்திற்கே போட்டு விட்டுப் போவதாக முடிக்கிறார் ஆசிரியர். 

எழுத்தாளர் இயக்குனர் அல்லவா. காமிராப் பார்வை பார்த்து எழுதி இருக்கிறார் கதையை.   கதை முழுக்க, அவனது எண்ணங்கள் . அந்த எண்ணங்களின் வருணனைகள் படங்களாக மாறி நம் கண் முன் விரியும் போது  ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான எண்ணங்கள் , விம்மலும் விகாரமும் ஆக மாறி நம் மனத்தைத் தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி .

 -------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கால மாற்றம் - கவிதை

 கால மாற்றம் - கவிதை 

--------------------------

அன்று

மார்கழிக் காலையில்

நடுங்கும் பஜனைகள்

கண்மாய் மழைக் கரையில்

சகதிச் சறுக்கல்கள்

கோயில் கூட்டத்தில்

சூடப்புகை சுவாசங்கள்

பச்சைப் புளியங்காய்

பல்லில் கூசல்கள்

முழங்கால் வரை ஏறும்

வெள்ளைப் புழுதிகள்


இன்று

எப் எம் கேட்டபடி

எட்டுவரை போர்வைகள்

பாத்ரூம் ஷவரின் கீழ்

ஷாம்புக் குளியல்கள்

பூஜை அறைக்குள்

அவசர அர்ச்சனைகள்

பல்லை நடுங்கவைக்க

ப்ரிட்ஜுக்குள் ஐஸ்க்ரீம்கள்

ஷூ பாலீஷ் கலையாமல்

காருக்குள் பயணங்கள்


---------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஜென்மங்கள் ஆயிரம் - கவிதை

ஜென்மங்கள் ஆயிரம் - கவிதை 

—————————-

எத்தனை ஜென்மங்கள்

எடுத்தாலும் முடியாது


கிடைத்த அன்புக்குக்

கைம்மாறு செய்வதற்கு


குளிப்பாட்டி வளர்த்த

அப்பத்தா அன்பிற்கு


சோறூட்டி வளர்த்த

அம்மாச்சி அன்பிற்கு


அப்பாவின் அம்மாவின்

தாத்தாவின் மாமாவின்


சின்னம்மா சித்தப்பா

அத்தைகள் உறவுகள்


எத்தனை பேர்களின்

அன்பிலே வளர்ந்தோம்


தொடர்கிறது அன்பு

மனைவியாய் மக்களாய்


நட்பாய்ச் சொந்தமாய்

நடக்கிறது இன்றும்


ஜென்மங்கள் ஆயிரம்

சேர்ந்தாலும் போதாது


சேமித்த நன்றிகளைச்

செலவு செய்வதற்கு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


இருகரை இணைவதில்லை - கவிதை

 இருகரை இணைவதில்லை - கவிதை 

————————————-


நன்மையையும் தீமையும்

இன்பமும் துன்பமும்


இணையவே முடியாத

இரண்டு கரைகள்


இவற்றின் வழியிலே

நடக்கும் வாழ்க்கையே


நடைமுறை வாழ்க்கை

நம்முடை வாழ்க்கை


ஒற்றைக் கரையிலே

ஓடாது ஆறு


இருகரை நடுவே

இருப்பதே ஆறு


———-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


பனித்துளிக்குள் பகலவனாய் - கவிதை

 பனித்துளிக்குள் பகலவனாய் - கவிதை 

—————————————-

ஒவ்வொரு பனித்துளியிலும்

ஒவ்வொரு பகலவன்


மேலே ஒருவன் தான்

கீழே ஆயிரமாய்


இறைவனும் அப்படியே

இருக்கிறான் நமக்குள்ளே


எல்லா உயிர்க்குள்ளும்

இருப்பவன் ஒருவனே


இருப்பும் அவனே

இயக்கமும் அவனே


அன்பே அவனென்று

அறிந்து கொள்வோம்


பகலவன் சூட்டில்

பனியாய்க் கரைவோம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


நேற்று இன்று நாளை - கவிதை

 நேற்று இன்று நாளை - கவிதை 

——————————-

நேற்று என்பது

நடந்து முடிந்தது


நாளை என்பது

நடக்கப் போவது


இன்று என்பதே

இருப்பது கையில்


இந்த நாளே

இந்த நேரமே


நேற்றாய் மாறும்

நாளை ஆக்கும்


இந்த உண்மை

இறுத்திக் கொண்டால்


இன்று செய்வதை

நன்றே செய்வோம்


என்றும் இன்பம்

தங்கும் வாழ்வில்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பனியில் நனைந்த பூவாக - கவிதை

 பனியில் நனைந்த பூவாக - கவிதை 

———————————-

பனியில் நனைந்த பூவாக

பாதி புலர்ந்த பொழுதாக


காலை நேரக் களிப்பாக

கண்கள் மகிழும் காட்சியாக


வந்து நின்றாய் என் முன்னே

வாரி அணைத்தேன் என் கண்ணே


உச்சந் தலையில் ஒரு முத்தம்

உதட்டின் ஓரம் ஒரு முத்தம்


கண்ணின் இமையில் ஒரு முத்தம்

காதின் மடலில் ஒரு முத்தம்


கன்னக் குழியில் ஒரு முத்தம்

கழுத்தின் அருகில் ஒரு முத்தம்


தந்து முடித்த பின்னாலும்

தயக்கம் என்ன தாமரையே


திருப்பிக் கொடுக்கும் நேரமிது

தென்றல் தீண்டும் ஈரமிது


அச்சம் நாணம் விட்டு விட்டு

அருகில் வாடி ஆரணங்கே


————நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 22 டிசம்பர், 2023

அப்பத்தா - சிறுகதை

 அப்பத்தா - சிறுகதை

-------------------------------------

' துண்டு பனியன் ஜட்டியை நான் துவைச்சுப்போடுறேன் . அவுத்து போட்டுட்டு குளிச்சிட்டு வாடா' என்ற அப்பத்தாவின் அன்புக் குரல் . கிராமத்தில் பேரன் இருக்கும் நாட்களில் பனியன் ஜட்டியைக் கூட அவனைத் துவைக்க விடமாட்டார்கள். பேரன் மேல் அவ்வளவு பிரியம் . ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான். அவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் பகல் முழுக்க.


' எப்போது திடீரென்று ஊருக்குக் கிளம்பி விடுவானோ தெரியாது. ‘ டவுன் கதை, அரசியல் நடப்பு ,சினிமா பேசிக் கொண்டே இருப்பார். சொந்தக்காரங்க புரணியும் சேர்ந்து விடும். பழைய நாட்கள் நினைப்பு வந்து விட்டால் மட்டும் பொசுக்கென்று மூலையில் சென்று முடங்கிக் கொள்வார். அந்தத் துணி தலையணையை அவர் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் நனைக்கும் .


வாழ்ந்த காலங்கள் கணவனோடு சேர்ந்து இருந்த காலங்கள். இறந்து போன குழந்தைகள். விதவையாகத் தனியாகத் தம்பி வீட்டில் ஒதுங்கியது. தம்பி பிள்ளைகளை வளர்த்தது . பின் தம்பியின் பேரன் பேத்திகளையும் வளர்த்தது. எத்தனை கல்யாணங்கள். எத்தனை கருமாதிகள். வளர்த்தது எல்லாம் கட்டிக் கொடுத்து எங்கெங்கயோ போயிடுச்சு.


இன்பமும் துன்பமும் கலந்து வாழ்ந்த வாழ்க்கை. நடுவில் உடல் முழுக்க வெள்ளைத் தேமல் வந்து சிலர் தள்ளியே நின்று பேசிய காலங்களில் எல்லாம் , தன் மேல் விழுந்து புரண்டு விளையாடி , பிரியமாக இருந்த பேரன் மேல் மட்டும் கூடுதல் பிரியம். மனதைப் பிழிந்து கண்ணீர் விட்ட பின்பு 'கொஞ்ச நேரம் அசந்துட்டேன்' என்று தூங்கினாற் போல் பாவனை செய்து திரும்பி வந்து மறுபடியும் சேர்ந்து கொள்வார். மறுபடியும் அரட்டை.


' இந்தக் குடும்பம் , இந்தக் குழந்தைகள் இவர்களின் இன்ப துன்பம் தான் தன்னோடது' என்று பின்னிப் பிணைந்து விட்ட மனம் . அவ்வப்போது வயிற்றுப்போக்கு காய்ச்சல் வந்து மருந்து மாத்திரை சாப்பிடும் போது மட்டும்' எங்கே போய் விடுமோ இந்தக் குடும்பத்தை விட்டு' என்று சாவைப் பற்றிய ஒரு கலக்கம். நோய் சரியான பின் மறுபடி ரெம்ப காலம் இருப்பது போல், பேரன் கல்யாணம் செய்வது முதற்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்.


அவ்வப்போது ஒரு குறை. 'என்ன ஒண்ணு , வரவர கண்ணு சரியா தெரியல, மங்கலா இருக்கு. என் சித்தப்பு மாதிரி கண்ணு போயிட்டுக் கிடக்கக் கூடாது. அதுக்குள்ளே போயிடணும் ' என்று முனகிக் கொள்வார். ' அது யாரு தூரத்தில் வர்றது, சிவகாமியா ' என்று கண்களை சுருக்கித் தூரத்தில் வருகிறவளை அடையாளம் காணும் முயற்சி. 'அவள் தான்' என்று பக்கத்தில் வந்ததும் தெரிந்து கொண்டால் ஒரு மகிழ்ச்சி .'கண்ணு இன்னமும் கெட்டுப்போகலே '.


' ஏண்டி இவளே' என்று தம்பி மகளை அழைத்துப் பேசிக் கொண்டிருப்பார் . இவன் அம்மா வீட்டில் தான் இப்போது வசிப்பு. தம்பி, தம்பி பொண்டாட்டி போன பின்பு கிராமத்தில் இருக்கும் தம்பி மகள் வீட்டில்தான்.

.தம்பியோட மற்ற பொண்ணுகள்லாம் கட்டிக்கொடுத்து டவுனுக்குப் போயாச்சு. எப்பவாவது வரப் போக. பிரியமான இந்தப் பேரனும் அப்படிதான். வெளியூரில் வேலை. எப்படியும் அஞ்சாறு மாசத்துக்கு ஒருமுறை அப்பத்தாவைப் பார்க்க வந்து விடுவான். இப்போது வந்திருக்கிறான்.


மற்ற நாட்களில் தம்பி மகள் மட்டும் தான் பேச்சுக்கு. வாஞ்சையோடு அழைத்து 'இப்படி வந்து உட்காரேண்டி . எப்பப் பார்த்தாலும் வேலை தானா ',. 'வர்றேன் அத்தை, கொஞ்சம் பாத்திரம் கிடக்கு, கழுவிப் போட்டுட்டு வரேன். அப்படியே சோத்தையும் வடிச்சுட்டு வரேன் . உங்களுக்கு தெரியாதா . அவுக வந்த உடனே பசி பசின்னு பறப்பாக ' என்று புருஷனைப் பற்றிச் சொல்லிக் கொண்டு 'கட கட' என்று பாத்திரம் கழுவும் சத்தம் அந்த ஓட்டு வீடு முழுக்க எதிரொலிக்கும். ' அடிக்கடி கேட்ட பதில் தானே . அதே கேள்வி .அதே பதில். தினசரி பொழுதுபோக்கு அதுதான்.


அந்தக் கிராமத்தில் வேறு என்ன இருக்கு. பேச்சுத் துணைக்கு ஆள் வேணும். அவ்வளவுதான். ' என்னடி இது கீழ வீட்டு அலமேலு இன்னும் காணோம் 'என்று சாயங்காலம் திண்ணையில் உட்கார்ந்து புலம்பி கொண்டு இருப்பார் . தினசரி ராத்திரி அங்கே ஒரு கூட்டம் வந்துவிடும். பக்கத்து வீடு ,எதித்த வீடு ,தெரிந்த பொண்டுகள் எல்லாம் வந்து அப்பத்தாவிடம் பழைய கதைகளைக் கேட்டு ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இவன் வரும் நாட்களில் இவனும் சேர்ந்து உட்கார்ந்து விடுவான். ' அப்பல்லாம் இந்த எலக்ட்ரிக் லைட் எல்லாம் இல்ல .நானும் அவுகளும் வீட்டு வேலையை முடிச்சுட்டு ராத்திரி கண்ணு முழிச்சு சிரிச்சு பேசிகிட்டு கீசிக்கிட்டு இருப்போம் ' . 'என்ன கீசிக்கிட்டு இருப்பீங்க பாட்டி ' என்று அந்தப் பெண்கள் வம்பு இழுப்பார்கள் . கூட உட்கார்ந்து இருக்கும் இவன் நெளிவான் .


'இப்ப நீங்க இளவட்டப் பொண்ணுங்க எல்லாம் பேசுறீங்களே உங்க புருஷன் கிட்ட அதுதான்' என்று சொல்ல ஒரே சிரிப்பு . சட்டென்று பேச்சை நிறுத்தி உட்கார்ந்து விடுவாள் . கண்கள் லேசாகக் கசியும் . ' அதை விடுங்க பாட்டி ,சிக்கல் திருவிழா கதையைச் சொல்லுங்க' என்று ஆரம்பித்து விடுவார்கள்.'என் பேரன் வந்திருக்கான்ல. அவன் எனக்கு வாசிச்சுக் காண்பிச்ச 'பொன்னியின் செல்வன்' கதையைச் சொல்லுறேன் கேளுங்க ' என்று ஆரம்பிப்பார். பேரன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது வாசித்துக் காண்பித்த கல்கியின் கதையை அவ்வளவு சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்ல அவர்களால் மட்டுமே முடியும். கிராமத்துப் பொண்ணுகளுக்கும் வந்தியத்தேவன் மேல் ஆசை வர வைத்து விடுவார்கள்.


ராத்திரி ரெம்ப நேரம் கழித்து படுக்கப் போனாலும் 'தூக்கம் வரலை' என்று புலம்பிக் கொண்டே புரண்டு கொண்டு இருப்பார்கள் . பகலில் மட்டும் துணித் தலையணையைத் தலைக்கு கொடுத்து கொஞ்ச நேரம் படுத்து தூங்கி எந்திரிப்பார்கள் இவன் வந்த அன்று இரவும் வாசல் திண்ணைப் பேச்சு ரொம்ப நேரம் தொடர்ந்தது. மறுநாள் காலை இவன்' வேலைக்குப் போகணும் அப்பத்தா' என்று கிளம்பினான். 'ஒரு வாரம் போனதே தெரியலைப்பு , என் கூட உட்கார்ந்து இது மாதிரி யாருமே பேசறதில்லே, தாயம் விளையாடறதில்லே . நான் உன் கூட வந்து இருக்கவா, தனியாத்தானே இருக்கே. சமச்சுப் போடுறேனே .'


உள்ளே இருந்து தம்பி மகள் , இவன் அம்மா குரல் . ' அய்யய்யோ அத்தை , என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க. அவுக வயலுக்கு அதிகாலை புறப்பட்டுப் போனா ராத்திரிதான் வருவாக . நான் கொட்டக் கொட்டக் கிடக்கிறதா , உங்களை நான் விட மாட்டேன் ' உரத்த குரல். தம்பி மகள் பிரியத்தில் பெருமைதான் அப்பத்தாவுக்கு. 'சரிடா , அடிக்கடி வந்து போ , சனிக்கிழமை எண்ணை தேச்சுக் குளி , வேலை வேலைன்னு இருக்காம உடம்பைப் பார்த்துக்க . ' . அவன் கிளம்பினான்.


அன்று மதியம் படுத்த அப்பத்தா எழுந்திருக்கவில்லை  . துணித் தலையணையின் ஓரம் நனைந்திருந்தது .


------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கண்ணான கண்ணே - கவிதை

 கண்ணான கண்ணே - கவிதை 

——————————

என் கண்ணான கண்ணாக

மாறி விட்ட பின்னே


உன்னைப் பார்ப்பது

நான் அல்ல பெண்ணே


பார்ப்பதும் நீயே

ரசிப்பதும் நீயே


உன்னையே நீ பார்த்து

ரசிப்பதைக் கண்டு


முறைக்காதே அப்படி

திருப்பாதே முகத்தை


இன்னும் பார்ப்பதற்கு

ஏராளம் இருக்கிறதாம்


உன்னிடம் இருந்த நீ

என்னிடம் சொல்கிறாய்


——————-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


வியாழன், 21 டிசம்பர், 2023

அம்மாச்சி- சிறுகதை

 அம்மாச்சி- சிறுகதை

------------------------------------

' போய்ப் பாருடா, உன்ன வளத்த அம்மாச்சி போயிட்டாடா 'என்று தேம்பும் தாத்தாவின் தளர்ந்த குரலை உள்வாங்கி வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கல்லூரி ஹாஸ்டலில் இருந்து தந்தி கிடைத்ததும் கண்ணீரோடு கிளம்பி வந்து இருந்தான் .


'என்ன அம்மாச்சி தூங்கறீங்களா '. வயிற்றில் மடக்கிக் கட்டிய கைகளோடு , கீழே சேர்த்துக் கட்டிய கால் விரல்களோடு, முக வாயோடு அமுக்கிக் கட்டிய துணியோடு வாய் மூடி மௌனமாக, மல்லாந்த நிலையில் கண் மூடி அம்மாச்சி. 'இது என்ன, இவ்வளவு தானா, முடிஞ்சு போச்சா, இனிமே அம்மாச்சி எழுந்திருக்க மாட்டாங்களா, பேச மாட்டார்களா, கோபிக்க மாட்டார்களா, தண்ணி எடுக்க சாயங்காலம் இடுப்பில் குடத்தோடு ஊரணிக்கு போக மாட்டார்களா, இரவில் தாத்தாவுக்குப் படுக்கை தட்டிப் போட மாட்டார்களா, நான் தலையணை எடுத்து வந்து கொடுத்து உதவி செய்ய முடியாதா'


' சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு எண்ணெய் விளக்கு போட கோயிலுக்குக் கூட்டிப் போக மாட்டார்களா, திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மாச்சியோடு சேர்ந்து நிற்க முடியாதா , இரவில் லேட்டாக படித்துக் கொண்டிருக்கும் போது சூடாகப் பால் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்களா , 'கருவாயன்' என்று மற்றவர்கள் கேலி செய்யும் போது கோபப்பட மாட்டார்களா, தான் மட்டும் சில சமயம் செல்லமாக 'போடா கருவாய்ப் பயலே' என்று சொல்ல மாட்டார்களா, 'இன்னும் இரண்டு சாப்பிடு' என்று இட்டிலியை சாப்பாட்டுத் தட்டில் இறக்கிக் கொண்டே இருக்க மாட்டார்களா'.


'எந்திரிங்க அம்மாச்சி'. இனிமேல் எழுந்திருக்க மாட்டார்கள் . உயிர் எங்கேயோ போயிடுச்சு. செத்துப் போயிட்டாங்க அம்மாச்சி' என்று கண்ணீர் கண்களை நனைக்க அருகே சென்று அமர்ந்தான் . சுத்தி அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்கள் இவனைப் பார்த்ததும் 'ஓ' என்று சப்தமிட்டு அழ ஆரம்பித்தனர் . வாசலில் இருந்த தாத்தா துண்டை வாயில் பொத்திக்கொண்டு குனிந்து உடைந்து அழுகிறார்.


எத்தனை ஊர்களில் சேர்ந்து போய் வேலை செய்து, சேர்ந்து இருந்து, குழந்தை பெற்று ,வளர்த்து, பேரன்பேத்தி எடுத்து. 'என்னை விட்டுப் போக எப்படி மனசு வந்தது உனக்கு, உன்னைப் பிரிந்து எப்படி நான் இருக்கப் போறேன்'. உள்ளுக்குள் குடையும் கேள்விக்கு விடை தெரியாமல் கண்கள் மட்டும் குளமாகி குழம்பிப்போய் தாத்தா.


' அம்மாச்சி , அந்த உயிர் திடீரென்று திரும்பி உங்க உடம்புக்குள்ள நுழைஞ்சிராதா, 'என்ன இது' என்று திகைத்தபடி முழிக்க மாட்டீர்களா. இந்தக் கால்கள் லேசாக அசையாதா, கைகள் அசையாதா, அம்மாச்சி எந்திரிங்க அம்மாச்சி , அம்மாச்சி'. உடலை லேசாக உலுக்கிக் கொண்டு கண்ணீரோடு அவன் உள்ளுக்குள் அரற்றிக் கொண்டிருந்தான். மெதுவாக ஒரு பெரியவர் 'அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம் , எல்லாரும் ஒரு காலத்துல போக வேண்டியதுதான், விலகுங்க ,பாட கட்டியாச்சு .கொண்டு போய் வைக்கணும்.' என்று ஆரம்பிக்க அடுத்த வேலைகள்.


ஏதோ மூட்டையைத் தூக்குவது போல் கால் மாடு கை மாடு சேர்த்துத் தூக்கி பச்சைப்பாடையில் , அழுது அரற்றிய குரல்களுக்கு நடுவே, மயக்கமாகும் மகள்களுக்கு நடுவே, அம்மாச்சி புறப்பட்டு விட்டார்கள் .


அந்தப் பாடையைத் தூக்கிச் செல்பவர்களில் ஒருவனாக அவன் . அம்மாச்சி முகத்தருகே தோள் கொடுத்து 'பேசுங்க அம்மாச்சி .குரல் கொடுத்து பேசுங்க அம்மாச்சி'. கம்மாக்கரைப் பக்கம் சுடுகாடு .விறகு , எருக்களுக்கு நடுவே வைத்து தீ மூட்டி 'அய்யோ' , யாரோ இவனைத் தாங்க அங்கே தாத்தா தடுமாறிக் கீழே விழ, தாங்கிப் பிடிக்கும் சொந்தங்கள் . இனி அம்மாச்சியைப் பார்க்க முடியாதா'.


அப்போது அம்மாச்சி சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது. .’செத்துப் போனவர்கள் எல்லாம் மேகமா மேல போய்கிட்டு இருக்காங்க.’ ஆகாயத்தைப் பார்த்தான். அங்கே வெண்மேகங்கள் சில வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. ' அம்மாச்சி, நீங்க எந்த மேகம்'.


-----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 20 டிசம்பர், 2023

நீர் சூழ ஊரெங்கும் - கவிதை

 நீர் சூழ ஊரெங்கும் - கவிதை 

————————-

இடைவிடா மழை பொழிந்து

இப்படியும் நீர் வருமா


மடை திறந்த வெள்ளம் போல்

மானம் உடைந்திடுமா


வீடு நிலம் எல்லாம்

வீணாக்கிப் போக்கிடுமா


இயற்கைக்குக் கோபம் வந்தால்

இப்படியும் நடந்திடுமா


என்ன பிழை செய்தோம்

இந்தக் கொடுமைக்கு


ஆகாயம் பூமி எல்லாம்

அழுக்காகிப் போகும்படி


என்னவெல்லாம் செய்தோமோ

எண்ணிப் பார்த்திடுவோம்


தூய்மைப் பணி செய்து

துடைத்து எறிந்து விட்ட


இயற்கையைப் பாதுகாக்க

இனியேனும் தவறு செய்யோம்


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 19 டிசம்பர், 2023

குப்பைத் தொட்டில் - சிறுகதை

 குப்பைத் தொட்டில் - சிறுகதை 

—————


மடியில் இருக்கும் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது . இப்படித்தானே சிரித்துக் கிடந்தார்கள் அவள் பெற்ற மகனும் மகளும் ஒரு காலத்தில் அவள் மடியில் இரட்டைக் குழந்தைகளாய் .


கைம்பெண்ணான நான்கே மாதங்களில் வயிறு திறந்தது . வந்து விழுந்தார்கள் . ‘தன் வாழ்க்கையும் திறக்கும் . அவர்களால் சிறக்கும் ‘என்று சீராட்டிப் பாராட்டி வளர்த்தாளே . எத்தனை வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து , வீட்டு வேலை பார்த்து , படிக்க வைத்து , மகனுக்கும் மகளுக்கும் பிடித்தவர்க்கே மணமுடித்துக் கொடுத்து .


அவ்வளவுதான் போய் விட்டார்கள் .மகன் மாமியார் வீட்டோடு. மகளும் வருவதில்லை . எல்லாம் இவள் உடம்பில் தெரிந்த வெண் புள்ளிகள் பரவி ஏற்பட்ட இந்த வெண்மை நிறத்தால் . இது ஒட்டுகின்ற வெண் குஷ்டம் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார் . இருந்தும் நெருங்கப் பயம் அவர்களுக்கு . தங்களுக்கும் பரவி விடுமோ , தங்கள் குழந்தைகளுக்கும் வந்து விடுமோ . டாக்டர் சொல்வதை நம்பத் தயாராய் இல்லை . ஒதுங்கி விட்டார்கள் . இல்லை , ஒதுக்கி விட்டார்கள் .


வாழ்வின் பிடித்தம் போய் வெறுப்பே வந்து விட்டது இவளுக்கு . உடல் முழுக்கப் போர்த்தியபடி ஒதுங்கி விட்டாள் . தன் மேலே வெறுப்போடு . தன் உடல் பார்க்கத் தானே தயக்கப்பட்டு .


இனி ஏன் வாழ்க்கை என்று முடிவெடுத்த அன்று தான் அது நடந்தது . வீதியில் நடந்து வரும்போது ஓரத்துக் குப்பைத் தொட்டியில் இருந்து அழுகைச் சப்தம் . பிறந்து சில மாதங்கள் இருக்கலாம் . இவள் தூக்க , அழுகை அடங்கி இவளைப் பார்த்துச் சிரித்தது . இவள் தூக்கி அணைக்க அவள் தோளில் ஒட்டிக் கொண்டது . அருகில் கிடந்த உடைந்த சேரில் கவனமாக உட்கார்ந்து அந்தச் சிசுவையே கவனித்தாள் .


‘நெருங்கப் பயப்பட்ட பலர் நடுவே என் நெருக்கம் விரும்பும் இவன் . இவனை விட்டுப். போக மாட்டேன் . என் வெண்மை நோயைப் பற்றிப் பயப்படாமல் நெருங்கிக் கிடக்கும் இவன் வளர்வான் , இந்த வெண்மை நோய் அம்மாவுடன் சேர்ந்தே . இந்த நோயைப் பற்றிப் பயப்படாமல் , கவலைப்படாமல் . நிச்சயம் . இவனின் இந்தச் சிரிப்பு என்றும் நிலைக்கும் என்னிடம் . என் தோள் கிடந்து , என் கைபிடித்து ஒட்டி உரசியபடி நடந்தபடி வளர்வான் . இந்தக் குப்பைத் தொட்டியே எங்களை வாழ வைக்கும் . குப்பை பொறுக்கி , கிடைத்த வேலை செய்து இவனை வளர்ப்பேன் . ‘


எண்ணங்களில் இருந்து விடுபட்டு ஒரு நிம்மதியோடு , குப்பைத் தொட்டி அருகே கிடந்த அந்த பாதி உடைந்த அழுக்குச் சேரை விட்டுக் கவனமாக எழுந்தாள் . வாழ்க்கைப் பிடிப்பு கிடைத்த உறுதியோடு தன் குடிசை நோக்கி நடந்தாள் . அவளோடு இறுக்கிக் கிடந்த அந்தக் குழந்தையின் வாய் மலர்ந்து ‘ ம்மா ' என்றது .


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தண்டவாளப் பயணங்கள் - கவிதை

 தண்டவாளப் பயணங்கள் - கவிதை 

———————————-

பக்கத்துத் தண்டவாளத்தில்

பாய்ந்து ஓடும் ரெயிலுக்கும்


இந்தத் தண்டவாளத்தில்

இழுத்து ஓடும் எனக்கும்


அண்ணன் தம்பி உறவுதான்

அக்கா தங்கை உறவுதான்


ஒன்றாகப் பிறந்தாலும்

ஒன்று போல் இருந்தாலும்


பாதைகள் வேறு

பயணங்கள் வேறு


சேர்ந்து இருப்போரைச்

சேர்க்குமிடம் சேர்த்து விட்டு


ஓய்ந்த நேரத்தில்

ஏதோ ஒரு இடத்தில்


பக்கத்தில் நிற்கின்ற

பாங்கொன்று அமைந்தாலே


பார்த்துச் சிரிப்போம்

பயணம் தொடரும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கனவாகப் போகட்டும் - கவிதை

 கனவாகப் போகட்டும் - கவிதை 

——————————


கட்டிய கோட்டைகள்

இடிந்தால் என்ன


கிட்டிய சுகங்கள்

மறைந்தால் என்ன


எட்டிய நேரம்

விழுந்தால் என்ன


தோல்வியும் துயரமும்

கனவாய்ப் போகட்டும்


முட்டியும் மோதியும்

முயல்வோம் மறுபடி


தட்டிய போது

திறக்காக் கதவுகள்


தளரா முயற்சியில்

மறுபடி திறக்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 15 டிசம்பர், 2023

தாத்தா - கவிதை

 தாத்தா - கவிதை 

—————


கண்மாய்க் குளியல்

வேட்டி துவைத்தல்


எட்டுமுழ வேஷ்டி

இறுக்கிய பெல்ட்டு


தொளதொள ஜிப்பா

தோளில் துண்டு


மார்கழி மாதம்

அதிகாலை பஜனை


நாதஸ்வர ஓசைக்குத்

தலையாடும் நடனம்


பட்டணம் பொடி டப்பா

பழுப்பு நிற கர்சீப்பு


கோயில் மணியோசை

அர்த்தஜாம பூஜை


இப்போது நினைத்தாலும்

இழுத்து வருகிறது


எப்போதோ மறைந்திட்ட

தாத்தாவின் நினைவை


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


மீண்டு வருவோம் - கவிதை

 மீண்டு வருவோம் - கவிதை 

———————


இன்பமும் துன்பமும்

இயற்கையின் பக்கங்கள்


மாறும் பக்கங்கள்

கூறும் உண்மைகள்


திரும்பிப் பார்த்துத்

திருந்திக் கொள்வோம்


ஆறுகள் ஏரிகள்

குளங்கள் அமைப்போம்


காடுகள் மலைகள்

நிலங்கள் காப்போம்


இயற்கைக்கு உரியதை

இயற்கைக்கே அளிப்போம்


இயற்கை கொடுப்பதை

ஏற்றுக் களிப்போம்


மீண்டு வருவோம்

மீண்டும் பெறுவோம்


————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 13 டிசம்பர், 2023

அழியும் ஊருணி - கவிதை

அழியும் ஊருணி - கவிதை 

------------------------------------------------

அருநெல்லி மரத்து 

மஞ்சள் புளிப்பு 


தென்னை மரத்து 

பட்டை நடனம் 


தோப்புச் சூழல் 

துள்ளும் மீன்கள் 


நடுவில் மிதக்கும் 

தாமரைப் பச்சை 


தண்ணீர் மொள்ளும் 

குடத்துப் பெண்கள் 


ஊருணித் தண்ணீர் 

ஊறிய ரத்தம் 


கோடையில் அழியுதாம் 

தண்டோராச் சப்தம் 


மீனைப் பிடிக்க 

மேவும் கூட்டம் 


-------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


காட்டு வழி - கவிதை

 காட்டு வழி - கவிதை 

————---------------------—-

காட்டு வழியில் நடந்து பாரு

காட்டும் வழியில் கவிதை நூறு

மெட்டுப் போடும் மூங்கில் விரல்கள்

பாட்டுப் பாடும் குயிலின் குரல்கள்


கூட்டிச் செல்லும் கூதல் காற்று

குதித்துப் போகும் ஆற்றின் ஊற்று

மேட்டுப் பாதை மலையின் சாட்சி

மெல்லத் தடவும் மேகக் காட்சி


நீரும் நிலமும் கணவன் மனைவி

நேர்ந்த செடியும் கொடியும் குழவி

ஊறும் பாம்பும் உறுமும் விலங்கும்

ஒன்றாய் வாழும் உறவில் விளங்கும்


நிமிர்ந்த மரங்கள் இயற்கைப் பிச்சை

நெளிந்து செல்லும் பாதைப் பச்சை

அமிழ்ந்து ஆட அகன்ற ஓடை

அழகுப் பூக்கள் வீசும் வாடை


ஏழை பாழை இல்லை இங்கு

இயற்கை வளங்கள் எவர்க்கும் பங்கு

காலை மாலை பகலும் இரவும்

காட்டில் தவழும் நட்பும் உறவும்


—————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


முட்டி வளர்வோம் - கவிதை

 முட்டி வளர்வோம் - கவிதை 

---------------------------------------------------------------------

விழுந்தே கிடந்திருந்தால்

வீணாய்ப் போயிருக்கும்


முட்டி மோதித்தான்

விதையும் மரமாகும்


முயற்சி செய்தால்தான்

முன்னேற்றம் உருவாகும்


அடித்து நொறுக்கவும்

அமுக்கி வைக்கவும்


ஊரும் உலகமும்

ஒன்றாய்க் கூடலாம்


எண்ணத்தைச் செயலை

இளக்காரம் செய்வோரை


எட்டி உதைத்து

முட்டி வளர்வோம்


--------------------


My Poems/Stories in Tamil and English 


ஏணிகள் - கவிதை

 ஏணிகள் - கவிதை 

----------------------------------------

ஏறிப் போவதற்கும்

ஏற்றம் பெறுவதற்கும்

ஒன்றா இரண்டா

எத்தனையோ ஏணிகள்


சொல்லிலும் செயலிலும்

சுத்தம் சேர்ந்திட

வாழ்ந்து காட்டினோர்

வாழ்க்கையும் ஏணி தான்


அறமும் பொருளும்

இன்பமும் காட்டி

எழுத்தில் இருக்கின்ற

திருக்குறள் ஏணி தான்


வாழ்வின் பொருளை

அனுபவித்து உணரும்

இன்பமும் துன்பமும்

இரண்டுமே ஏணி தான்


இயற்கையும் ஏணிதான்

இறைவனும் ஏணிதான்

எண்ணத்தை உயர்த்திடும்

எல்லாமே ஏணிதான்


----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 11 டிசம்பர், 2023

அன்பே சிவம் - கவிதை

 அன்பே சிவம் - கவிதை 


——————-


கோயில் கோயிலாய்க்

கடவுளைத் தேடிக்


கும்பிட்டு இருப்பதும்

ஒருவகை யோகம்


செய்யும் தொழிலில்

திறமை காட்டி


சேவித்து இருப்பதும்

ஒருவகை யோகம்


மனதின் உடலின்

மயக்கம் நீக்கி


ஒடுங்கி இருப்பதும்

ஒருவகை யோகம்


நீயும் நானும்

சேர்வதை உணர்ந்து


அன்பே சிவமாய்

ஒருவகை யோகம்


பக்தியோ கர்மமோ

ராஜ யோகமோ


ஞான யோகத்தில்

நாம் ஒன்றாவோம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 10 டிசம்பர், 2023

வயற் காலம் - கவிதை

 வயற் காலம் - கவிதை 

—————-

வெட்டைப் பரப்பாய்

வெயிலில் காய்ந்து

வேர்த்தது ஒரு காலம்


இருட்டினில் அடைந்திடும்

ஆட்டுப் புழுக்கையின்

உரத்தில் ஒரு காலம்


மழையினில் இளகி

வாசனை பரப்பி

குழம்பிய தொரு காலம்


சள புள சகதியில்

உழவன் ஏரினால்

குத்திய தொரு காலம்


தூவிய விதையினால்

துருத்திய நாற்றினால்

வருந்திய தொரு காலம்


தாங்கிய பசுநெல்

வீங்கிய நெற்கதிர்

சாய்ந்தது ஒரு காலம்


அரிவாள் வீச்சால்

அடிவரை அறுபட

வலித்தது ஒரு காலம்


போரடி மாடுகள்

நெல்லைப் படப்பாய்

மிதித்தது ஒரு காலம்


பொறுமையும் பூமியும்

ஒன்றாய்ச் சொல்லிப்

புண்ணாய் வயற் காலம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


சனி, 9 டிசம்பர், 2023

வெகு நாளாய்த் தேடுகிறேன் - கவிதை

 வெகு நாளாய்த் தேடுகிறேன் - கவிதை 

————————————


வெகு நாளாய்த் தேடுவதில்

வேதனை இருந்தாலும்


தேடுதல் என்பது

தேவை தான் எப்போதும்


கிட்டா தாயின்

வெட்டென மறப்பது


சோம்பேறித் தனத்தின்

சுகமான செயல்


கிட்டும் வரைக்கும்

முயன்று பார்த்தால் தான்


கிட்டே நெருங்கும்

கேள்வியின் பதில்


எடிசனின் பல்பும்

இந்தியச் சுதந்திரமும்


வெகு நாளாய்த் தேடிய

விடா முயற்சிதான்


எண்ணமும் சொல்லும்

செயலும் சேர்ந்து


இயங்கிக் கொண்டே

இருக்க வேண்டும்


நாட்களும் மாதங்களும்

வருடங்களும் நடக்கட்டும்


நம்பிய கை விடாது

நம்பிக்கை எப்போதும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பழைய கோயில் - கவிதை

 பழைய கோயில் - கவிதை 

———————

ஆராதனை தீபத்தில்

அம்மன் கண்ணொளி


எண்ணைய்ப் புகையோடு

குங்கும வாசம்


உட் பிரகார

வௌவால் படபட


வெளிப் பிரகார

இடிந்த சுவர்கள்


அங்கும் இங்குமாய்ப்

படர்ந்த செடிகள்


பாதியில் நிற்கும்

மொட்டைக் கோபுரம்


ஓரத்தில் வளர்ந்த

நாகப் புற்றுகள்


அரச மரத்தில்

மஞ்சள் கயிறுகள்


வாசல் கோபுர

வீச்சுக் காத்து


பழைய கோயிலாய்ப்

பாவமாய் நின்றாலும்


பாசம் காட்டிக்

கூப்பிடும் மறுபடி


கர்ப்பக் கிரகத்தின்

கர்ப்பப்பைப் பாதுகாப்பு


—————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நீரோடிய நிலமெல்லாம் - கவிதை

 நீரோடிய நிலமெல்லாம் - கவிதை 

———————————-

ஏரிகளாய்க் குளங்களாய்

இருந்த நிலங்கள் தான்


வீடுகளாய்ச் சாலைகளாய்

விலை போன பின்னாலே


வேதனையால் வெக்கையிலே

விம்முகின்ற போதினிலே


கொட்டியது மழை

குளிர்ந்தது நிலமெல்லாம்


கிட்டியது இடமென்று

கிளர்ச்சியிலே திளைக்கையிலே


வடிக்கின்றார் நீரையெல்லாம்

வாழ்க்கையினை இழந்திட்டோர்


இயற்கைக்கும் மனிதர்க்கும்

இடைவந்த போரினிலே


நீரோடிய நிலமெல்லாம்

நிமிர்கின்ற  கட்டிடங்கள்


பூமித்தாய்ப் பொறுமையினைப்

புரிந்து கொண்டால் நல்லது


இல்லையென்றால் இருக்கிறது

இயற்கையின் பேரழிவு


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சாவி - கவிதை

 சாவி - கவிதை 


———-

பூட்டின் ரகசியக் கதவைப்

புரிந்து வைத்திருக்கும்

சாவி


ஒவ்வொரு மனதைத் திறக்கத்

தேவை ஒவ்வொரு

சாவி


தொலைத்து விட்ட உறவில்

தொலைந்து போன

சாவி


மாட்டிக் கொண்டு முழிக்கிறது

மற்றொரு பூட்டில்

சாவி


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கொடியேற்றம் - கவிதை

 கொடியேற்றம் - கவிதை 

————

கோயில் திருவிழா

கொடியேற்றப் பூஜை


அம்மன் சுவாமி

அலங்காரம் அர்ச்சனை


நெய்யின் வாசத்தில்

சுடர் ஆராதனை


தெருவை அடைத்துத்

தேரோட்டப் பயணம்


கையசைவில் கழுத்தசைவில்

நழுவாத கரகங்கள்


காற்சதங்கை ஒலியோடு

கைத்துண்டின் ஒயிலாட்டம்


மணிக்கட்டை ஒட்டியபடி

கடிகாரச் சவ்வுமிட்டாய்


குவிந்து சிவந்திருக்கும்

குச்சிச்சேவுக் காரங்கள்


சத்திரத்துத் திண்ணையிலே

சரியான சாப்பாடு


திருவிழா முடிந்து விடும்

தெருவெல்லாம் வெறிச்சோடும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பேஞ்சு கெடுத்தாச்சு - கவிதை

 பேஞ்சு கெடுத்தாச்சு - கவிதை

--------------------------------------------

ஏரி ஒடப்பெடுத்து சேரிக்குள் நுழைஞ்சாச்சு

ஈரக் குடிசைகளின் கூரையெல்லாம் பறந்தாச்சு

மண்ணும் களியாகி சுவர்களும் கரைஞ்சாச்சு

மானம் கொட்டியதில் வீடே மறைஞ்சாச்சு 


இடிக்கும் மின்னலுக்கும் இறுமாப்பு ஏறியாச்சு

இறங்கும் மழைவேரும் பூமிக்குள் ஊறியாச்சு

துடிக்கும் மரமெல்லாம் துவண்டு போயாச்சு

துள்ளும் செடியெல்லாம் தூள்தூளாய் ஆயாச்சு


பேயாமல் கெடுத்தப்போ வெயிலிலே காஞ்சாச்சு

பேஞ்சு கெடுக்கிறப்போ மழையிலே சாஞ்சாச்சு

ஓயாமல் ஊத்தியதில் ஊரே காடாச்சு

ஓஞ்சு நொம்பளத்தில் உசிரை விடலாச்சு


பக்கத்து ஊருக்கும் பாதை மறைஞ்சாச்சு

பாழும் தண்ணியிலே தீவாய் ஒறைஞ்சாச்சு

திக்கத்த எங்களுக்குத்  தெருவே கதியாச்சு

திங்கவும் பொங்கவும் தீனியில்லா விதியாச்சு


ஊரு ஒலகத்தில் ஊர்கோலம் போறவரே

காரு பணத்தோட கண்காட்சி ஆறவரே

நாறிப் பொழப்பெல்லாம் நாராகி உரியிறது 

நாங்க கெடக்கிறது கண்ணுக்குத் தெரியறதா


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வாசிக்க விடுங்கள் - கவிதை

 வாசிக்க விடுங்கள் - கவிதை 

————————

பிடில் வாசித்த

நீரோக்கள் மன்னர்கள்


கவிதை வாசிக்கும்

நாங்களோ மக்கள்


பொறுப்பைத் தட்டி விட்ட

பொல்லாங்கு மனிதனோடு


அலுப்பை அகற்றுகின்ற

ஆண்டவனைச் சேர்க்கலாமா


ஒயினை அருந்துகின்ற

உல்லாச மன்னனோடு


தேநீர் குடிக்கின்ற

எங்களைத் திட்டலாமா


இந்தப் புயல் போல

ஏராளம் பார்த்தவர்கள்


இளமைக் காலத்தில்

எவ்வளவோ செய்தவர்கள்


வாழ்க்கைப் புயலில்

வசம் இழந்த ஓடங்கள்


வயதாகிப் போனதனால்

வாடிப் போனவர்கள்


முடிந்த உதவிகளை

முடியாதவர்க்குச் செய்து விட்டு


முடியும் காலம் மட்டும்

முயற்சி செய்பவர்கள்


துன்பத்தைப் பகிர்ந்து

துணையைத் தேடுபவர்கள்


படங்கள் போடுவோரைப்

பரிகாசம் செய்யாதீர்


பாடல் எழுதியும்

பாட்டுப் பாடியும்


இரக்கம் தேடுவோரை

இளக்காரம் செய்யாதீர்


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


இயற்கையை அழித்தால் - கவிதை

 இயற்கையை அழித்தால்  - கவிதை 

———————————----------------------—


காடுகள் அழிப்பு

யானைகள் நாசம்


பூமியில் தோண்டல்

தானியம் இறக்குமதி


கான்க்ரீட் கட்டடம்

ஊற்றுநீர் ஒழிப்பு


ஓசோனில் ஓட்டை

உள்ளூரில் நோய்கள்


இயற்கையை அழித்தால்

இயற்கையால் அழிவு


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 3 டிசம்பர், 2023

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

----------------------------------------------------------------------------


நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே . 

அழகியசிங்கர் இந்த நுட்பமான கதையை எனக்குக் கொடுத்து கூகிளில் போய் எல்லம்மா கதை  தேடிப் படிக்க வைச்சுட்டாரு.


புதியமாதவி அவர்களின்  ' திரைகளும் வெளிகளும் ' கதையில் சித்தரிக்கப்படும் பெண்ணின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், ரேணுகா தேவி , ஜமதக்கினி  ரிஷி , பரசுராமன் சம்பந்தப்பட்ட புராணக் கதையும்  அதை ஒட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு விதமாகக் கொண்டாடப் படும் எல்லம்மன் வரலாறும், பல்வேறு  மாநிலங்களில் உள்ள சில பழக்கங்கள் போன்ற பலவற்றையும் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

இவற்றை எல்லாம் புரிந்து கொண்டால் தான் , ஆணாதிக்கத்தால் , பெண்கள் படும் அவதியை புதிய மாதவி அவர்கள் புதிய முறையில் திரையை இழுத்தும் வெளியைக் காட்டியும் எழுதியுள்ள இந்தக் கதை யுக்தியைப்  புரிந்து கொள்ள முடியும். 


 இவற்றைப் பற்றி நான் கூகிளில்  தேடிப் படித்தபோது கிடைத்தவை  பலவிதமான கதைகள். அவற்றில் இருந்து நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் அந்தப் புராணக் கதைப் பின்னணியை முதலில் சொல்லிவிடுகிறேன். 


ரேணுகா தேவி ஜமதக்கினி முனிவர் தம்பதிகள். இவள் கணவரிடம் மிகவும் பக்தி கொண்டவள். ஒருமுறை  குளத்திற்குச்  சென்றபோது கீழே விழுந்த ஒரு கந்தர்வனின் நிழலைப் பார்த்து சற்றே மனம் சலனப்பட்டு விடுகிறாள். இது தெரிந்த ஜமதக்கினி முனிவர் அவள் கற்பு இழந்து விட்டதாகக் கருதி , அவள் மூலம் 

 பிறந்த தனது மகன்களிடம் அவளைக் கொலை செய்யச் சொல்ல , அவர்களில் இளையவன்  பரசுராமன் மட்டும் தந்தை சொல்லை நிறைவேற்ற அவளைத் தேடிச் சென்று அவள் தலையைத் தன் கோடாரியால் வெட்டி எறியும் போது , அவளுக்கு அடைக்கலம் கொடுத்த  எல்லம்மா என்ற பெண்ணின் தலையும் சேர்ந்து  அறுபடுகிறது . 


பிறகு ஜமதக்கினி முனிவர் சாந்தமடைந்து பரசுராமனிடம் ஏதாவது வரம் கேட்கச் சொல்ல, அவன் சகோதரர்கள், தாயின் உயிரைத் திரும்பத் தரக்  கேட்கிறான். அப்போது . ரேணுகா தேவியின் தலையும் எல்லம்மாவின் தலையும் மாற்றி வைத்து உயிர் பெற  இப்போது எல்லம்மா உடம்பில் ரேணுகா தலை . ரேணுகா தலையில் எல்லம்மா உடல். இந்த தலை  மாறிய இருவரும் தெய்வங்களாகக் கொண்டாடப் படுகிறார்கள் . இதனுடன் தொடர்புடைய சாதி வேறுபாடுகள் போன்றவற்றை எல்லாம் விவரித்தால்  நீண்டு விடும். ஆனால் அதன் பாதிப்புகள் இந்தக் கதையில் வெளிப்படுவதால் அவற்றைப் பற்றி எல்லாம் விரிவாக நீங்களே கூகிளில் படித்துக் கொள்ளலாம் .இதன்  பின்னணியில் இந்தக் கதையைப் பார்க்கலாம்.  


இங்கே நடிகை நாயகியின் உணர்வுகள்  திரைக்குள்ளும், வெளியேயும் அந்தத் தலை மாறிய பெண்ணின் உணர்வுகளாக  மிக அருமையாக எழுத்தில் வடிக்கிறார் புதிய மாதவி அவர்கள். எனவே பொருத்தமான தலைப்பு ' திரைகளும் வெளிகளும் ' .  அவரது எழுத்து  நடையில் வெளிப்படும்  வெளிப்படைத் தன்மையும்  கதையின் உணர்வுகளை அப்படியே கடத்துவதற்கு உதவுகிறது . 


சுருக்கமாக இந்தக் கதை. நாயகியின் காதல் ஏற்கப்படாமல், அப்பாவால்  அடி வாங்கப்பட்டு, அந்தக் கொடுமை அம்மாவால்  ஏற்கப்பட்டு , வலுக்கட்டாயமாய் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு , வேறு விதமான வாழ்க்கையில் தள்ளப்பட்டு , தலை வேறு , உடல் வேறான , மனம் வேறு , வாழ்க்கை வேறான அந்த இரட்டை உணர்வுகளை அவள் நடிகையாக அனுபவித்த ரேணுகா எல்லம்மாவின் உணர்வுகளாக அனுபவித்து,  பிறக்கும் குழந்தையால் தனக்கு  வாழ்வு கிடைக்காதா என்று அந்தப்  பேதைப்பெண்  ஏங்கும்போது அவனும் ஒரு பரசுராமனாக மாறி இவளைக் கொல்ல வருகின்ற கற்பனையோடு கதை முடிகிறது . 


ஆரம்பத்தில் அந்தப் பெண்ணின், காதலுக்கு  ஏங்கும்   இளமை உணர்வுகளின் ஏக்கம் அழகாக வெளிப்படுகிறது. உதாரண வரிகள் . 

 தன் அம்மாவிடம் அந்தப் பெண் முறையிடுவதாக வரும் அந்த நாடக வரிகள். திரை வரிகள் . 


'அந்த அற்புதக் கலைஞன் தன் கலைகளின் தேவியை உன் உருவத்தில் பார்த்துப் பார்த்து பூஜை செய்து தேவியிடம் சரணாகதி ஆகி தன்னைக் கரைத்துக் கொண்டான். உன்னைப் போல் காதலை அனுபவித்த பெண் இந்தப் பூவுலகில் உண்டாம்மா. உன் காதலின் அடையாளமாக உன் முத்தங்களின்   ஈரத்துடன் , உன் கருவறையில் நடந்த பூஜைக்கு விளக்கேற்றியவளுக்கு , எப்படிம்மா ' நீ மட்டும் காதலிக்கவே கூடாதுன்னு சொல்ல உனக்கு மனசு வந்துச்சு' . 


அந்த விழிகள் என்னைத் துரத்திக்கிட்டே இருக்கும்மா  , ஓடிப்போய் அவன் தோள்களில் சாய்ந்து கொள்கிறது என் நிழல். நிழலில்லாமல் எப்படிம்மா நிஜம் இருக்க முடியும். 


இந்த இடத்தில் கந்தர்வனின் நிழல் பார்த்து மயங்கிய அந்தப் புராண ரேணுகா  தேவி  இந்தக் கால ரேணுகாவிடம்  புகுந்து பேசுவதாகவே தோன்றுகிறது . 


தொடரும் அந்த நாடக வசனம். 

'அவன் என் நிழலைத் தொடும்போது யுகம் யுகங்களாக எனக்குள் இருந்த அந்த ஜீவ ஊற்று என்னை நனைக்கிறது . தூங்கிக் கொண்டிருந்த யாழிலிருந்து நான் இதுவரை கேட்காத அவன் கரங்கள் மீட்டுகின்றன .அலை அலையாய்ப் புறப்பட்டு வருகிறது உயிரின் ராகம் . பஞ்சு பறப்பது போல் ஆகாசத்தில் பறக்கும்  மேகக்கூட்டங்கள் போர்வையாகி  என்னைத் தூக்கிச் செல்கின்றன. மாயக் கம்பளத்தில் நான் பறக்கிறேனம்மா . எந்த ஈர்ப்பு விசையுமில்லாத அந்த வெளி. என்ன ஓர் அற்புதம். நிஜத்தைப் பார்க்காமல். எல்லாமே மாயைன்னு எப்படிம்மா நான் சொல்ல முடியும்.  அன்றைக்கு நீ . இன்று நான். 


இங்கே இந்த நடிகை ரேணுகா,  அந்த இறைவி  ரேணுகா தேவியிடம்  சொல்லும் வார்த்தைகள் போல் அல்லவா இருக்கின்றன  இவை . 


அந்தப் பெண்மையின் ஏக்கம் இப்படி திரையில் ஆரம்பமாகி அடுத்தடுத்து வெளியில் ஆணாதிக்கத்தில் அவதிப்பட ஆரம்பிப்பது அடுத்த அத்தியாயத்திலேயே ஆரம்பம். 


இப்போது திரை விழுகிறது. பிம்பம் தெரிகிறது . 

ஆம் இந்த ரேணுகா அப்பாவின் பெல்டால் அடிபட்டு இருட்டு ரூமுக்குள் தள்ளிப் பூட்டப்படும், காட்சி  அவள் காதலுக்கு எதிரான  நிகழ் காலக்  காட்சிகள் . இங்கே காதலுக்கு எதிரியாக அவள் தந்தை உதிர்க்கும் வசனங்கள் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்ட வார்த்தைகள்.  


'ஓடுகாலி , ஆம்பிளை கேட்குதாடி உனக்கு . ' என்று தொடரும் அப்பாவின் கொச்சை வார்த்தைகள் . அதற்கடுத்து வரும் வருணனைகள் . வார் வாராக முதுகிலும் கழுத்துப் பகுதியிலும் கண்ணிப் போய் , கை வைக்க முடியலை, காந்துச்சு  . இதற்குள் பிசு பிசுவென உள்ளாடையில் . அடித்த அடியில் பத்து நாளைக்கு முந்தியே வந்துட்டதா '  .


அப்பாவை இப்படிப் பார்க்கும்போது பசிகொண்ட அந்த மிருகத்தின் வெறித்தனம். 


'காதலிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாப்பா '  என்ற அவள் கேள்வியில் தொங்கும் பரிதாபம் நம் மனதையும் தாக்குகிறது. அதே நேரம், மற்றொரு புறம், அவளைக் கை விட்டுப் போன காதலனின் முகம். 

விலக விலக துரத்தித் துரத்தி மான் வேட்டை ஆடிய வேட்டைக்காரன். கடைசியில் காரணமே சொல்லாமல் கதவை அடைச்சானே. 


ஒரு பக்கம் தந்தையின் செயலால் உடல் படும் வேதனை கொடுமை, மறுபக்கம் காதலனின் கைவிடலால் மனம் படும் வேதனை. இந்த அதிகாரத்தைப் படிப்பவர்களுக்கு ஆண் வர்க்கத்தின் மீதே வெறுப்பு ஏற்படலாம். .

இப்போது வேறு ஒருவனுடன் மணம் முடித்து  குழந்தையும் பிறந்து , எல்லாம் நடந்து , இப்போது எல்லம்மாவாக  துடிக்கிறாள் . மாறி மாறி பிளாஷ் பாக் காட்சிகள் ,, கொஞ்சம் கவனத்துடன்தான் படித்து தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டு இப்போது வெளி முடிந்து மறுபடியும் திரை .அவள் மன உணர்வுகள் அந்த ரேணுகா  தேவியோடு தொடர்பு படுத்தி திரையில் எல்லம்மாவாக மாறி . . 'பரசு , நீ ஏண்டா என்னைப் பார்க்க வரலே , அம்மாவுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தவனாச்சே நீ . 

முகத்தை இங்கேயும் , என் புருஷன் அறிந்த பாகத்தை அங்கேயும் வச்சிட்டு , வாழ்க்கையிலே நாங்க எங்கே இருக்கோம்னே தெரியாம . நாங்க இப்போ யாருன் னே தெரியாமே , நாங்க வாழ முடியுமா .எங்களைத் தொலைச்சிட்டோம்டா .


அங்கெ பாருடா, என்னோடவே கொலையுண்ட எல்லம்மாவைப் பாருடா . 


யாக சாலை வேள்வித்தீயில் திரௌபதி அம்மன் சிரிக்கிறாள். திரை விழுகிறது . 


மறுபடி வெளி. 

 

இப்படி மாறி மாறி அந்தப் பெண்ணின் மன உணர்வுகளை, தலை வேறு உடல் வேறு ஆக மாறித் தவிக்கும் எல்லம்மாவோடு தொடர்பு படுத்தி  திரையிலும் திரும்ப நிஜ உடல் வாழ்வுக்கு வெளியில் வந்து மாறி மாறி எழுத்தில் ஒரு ஊழி நடனம் ஆடுகிறார் ஆசிரியர் புதிய மாதவி. அடிப்படையில் அவர் சாடுவது ஆணாதிக்க உணர்வுகளை. 


இப்போது வெளி.

 பிரசவ வலியில் துடிக்கும் அந்தப் பெண்ணின் வலி உணர்வுகளையும் அந்தச் சூழலையும் நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார்.  தொப்புள்  கொடி அறுந்து விழுகிறது. அவள் ஆகாசத்தில் மிதக்கிறாள் . வலி வலி. 


ஆரம்பம்  முதல் அவள் அனுபவித்த வலிகள் எல்லாம் இப்போது தொடர்ச்சியாக வார்த்தைகளில் .


' மாட்டேம்பா, அடிக்காதீங்கப்பா. 


அம்மா , ரெம்ப வலிக்குதும்மா 


வலிக்குது , ரெம்ப வலிக்குது .


அம்மா, அப்பா இருவரிடம் பெற்ற வலிகள் போதாதென்று இப்போது மகன் வெளிவரும் பிரசவ வலி  அவள் வார்த்தைகளில் உச்சக்கட்டமாக மகன் பரசுராமன் பெயரைச் சொல்லி கத்துகிறாள்.


 திரையும் வெளியும் ஒன்று  சேரும் நேரம் அது .  


' பரசு , ரெம்ப வலிக்குதுடா ' 


ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண்டாண்டு காலம் பெண்ணினம் அவதிப்பட்டு வரும் அந்த அடிமைத்தனத்தின் வலியாக  இது ஓங்கி ஒலித்து நம் இதயத்தில் இறங்குகிறது . பெண்மையின் மென்மையான காதல் உணர்வுகளில் ஆரம்பித்த கதை, காதலனால் வலி, தந்தையால் வலி, கணவனால் வலி,  சமுதாயத்தால் வலி, என்று தொடர்ந்து  தாங்க முடியாத பிரசவ வலியில் முடிவது வாசகர்கட்கு ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் .


அத்துடன் நிற்கவில்லை ஆசிரியர். கடைசிப் பாராவில் ஆணாதிக்க உச்சக் கட்டம். 


'கட்டிலில் அவள் மயக்கத்தில் படுத்திருந்தாள் 


பிறந்த அந்தக் குழந்தை கையில் அருவாமனையோடு அவள் அருகில் வர வர அவள் ஓடிக் கொண்டே இருக்கிறாள் , எல்லம்மாவைத் தேடி  .


திரை விலகி பிம்பங்கள் வெளியே வந்தன. 


ஆம். இந்த ஆணாதிக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது . வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பிம்பங்களாக.  தானே பாதிக்கப்பட்டு அம்பாளாகவே மாறிய எல்லம்மாவே வந்து இதையெல்லாம் எடுத்தெறிவாளா என்பது ஒரு கேள்விக்குறிதான். 


நன்றி . வணக்கம். 


------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


அமைதி மணி - கவிதை

 அமைதி மணி - கவிதை 

-------------------------

அதிகாலை ஐந்து மணி 

அமைதியின் மௌன மணி 


சந்திரப் பிறைக்குச்    

சாயங்கால நேரம் 


கொஞ்சம் கொஞ்சமாய்க் 

குறையும் இருட்டு 


சத்தமும் புகையும் இல்லாச்  

சத்தான காற்று 


தூங்கிய மரங்களின் 

சோம்பல் முறிப்பு 


குச்சிக் கூட்டுக்குள் 

குருவிகள் கீச்கீச் 


வேர்வைக்கு வேலை வைக்கும் 

விறு விறு நடைகள் 


பத்திரிகைப் பையோடு 

சைக்கிள் பையன் 


பாற் குடத்தோடு 

பைக்கில் பெரியவர் 


போர்வைக்குள் இருந்தால் 

புரியாது இவையெல்லாம் 


-----------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


அன்று போல் இன்றில்லை - கவிதை

 அன்று போல் இன்றில்லை - கவிதை 

———————————-


வன்முறையும் வஞ்சகமும்

அன்றும்தான் இன்றும்தான்


காதலும் கண்ணியமும்

அன்றும்தான் இன்றும்தான்


காலத்தின் ஓட்டத்தில்

அறிவியலின் ஏற்றத்தில்


பழக்கத்தில் மாற்றங்கள்

பார்வைக்குத் தெரிவதனால்


அன்று போல் இன்றில்லை

என்பதுவும் உண்மை தான்


இன்று போல் அன்றில்லை

என்பதுவும் உண்மைதான்


அடிப்படை அன்பும்

அரவணைக்கும் பண்பும்


மாறாமல் இருந்தாலே

மனிதத்தின் வெற்றி தானே


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


தூரத்து மாம்பழமே - கவிதை

 தூரத்து மாம்பழமே - கவிதை 

---------------------------------------

ஓரக்கண் மலராலே 

உள்ளத்தை வருடி விட்டு 

ஈரத்துப் பார்வையினால் 

இதயத்தைத் திருடிவிட்டு 


தூரத்துப் மாம்பழமாய்த் 

தொங்குவதை  விட்டுவிட்டு 

நேரத்தில் விழுந்து விடு 

நெருக்கத்தில் வந்து விடு 


காலத்தில் கனிந்தால் தான் 

காதலுக்கு மரியாதை 

பாலுக்கு வயதானால் 

பழுதாகித் திரிந்து விடும் 


பாலைக்கு நீராகப்  

பாய்ந்து வந்து  விடு 

ஏழைக்குச் சோறாக 

இன்பம் தந்து விடு காலைக்குக் காத்திருப்பேன் 

கண்ணுக்குள் உன்னோடு 

நாளைக்கு வந்துவிடு 

நம்பிக்கை தந்து விடு 


---------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 24 ஜூன், 2023

இயற்கையும் செயற்கையும் - மின் புத்தக அறிமுகம்

 இயற்கையும் செயற்கையும்  - மின் புத்தக அறிமுகம் 

----------------------------------------------------------------------------------------------

இயற்கையும் செயற்கையும் - யூடியூபில்  


My Poems/Stories in Tamil and English 


கதம்பக் கட்டுரைகள் - மின் புத்தக அறிமுகம்

 கதம்பக் கட்டுரைகள் - மின் புத்தக அறிமுகம் 

-----------------------------------------------------------------------------------

கதம்பக் கட்டுரைகள் - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 14 மே, 2023

நாளை நமதே - தமிழூற்றில் கவியரங்கப் பேச்சு

 நாளை நமதே - தமிழூற்றில் கவியரங்கப் பேச்சு 

---------------------------------------------------------------------------------

நாளை நமதே - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


பசுமை நினைவுகள் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

 பசுமை நினைவுகள் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு 

-------------------------------------------------------------------------------------------

பசுமை நினைவுகள் - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


கனவும் நனவும் - மின்புத்தக அறிமுகம்

 கனவும் நனவும்  - மின்புத்தக அறிமுகம் 

---------------------------------------------------------------------

கனவும் நனவும்   - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English


நிழலும் நிஜமும் - மின்புத்தக அறிமுகம்

 நிழலும் நிஜமும் - மின்புத்தக அறிமுகம் 

---------------------------------------------------------------

நிழலும் நிஜமும்  - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 17 ஏப்ரல், 2023

சேட்டை ஜேப்படி ( chat GPT ) - குவிகம் நிகழ்வில் பேச்சு

 சேட்டை ஜேப்படி ( chat GPT ) - குவிகம் நிகழ்வில் பேச்சு 

------------------------------------------------------------------------------------------

சேட்டை ஜேப்படி ( chat GPT )  - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


சிறப்பு நிகழ்வின் சிறப்பு - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

 சிறப்பு நிகழ்வின் சிறப்பு - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு

-----------------------------------------------------------------------------------------------------

சிறப்பு நிகழ்வின் சிறப்பு - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 3 மார்ச், 2023

வாழ்க்கைப் பயணம் - நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் தொகுப்பு 7

 வாழ்க்கைப் பயணம் - நாகேந்திர பாரதியின் சிறுகதைகள்  தொகுப்பு 7

----------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கைப் பயணம் - அமேசான் கிண்டிலில் மின்புத்தகம் 


My Poems/Stories in Tamil and English 


காதல் நேரம் - நாகேந்திர பாரதியின் கவிதைகள் தொகுப்பு 67

 காதல் நேரம் - நாகேந்திர பாரதியின் கவிதைகள் தொகுப்பு 67

----------------------------------------------------------------------------------------------------------

காதல் நேரம் - அமேசான் கிண்டிலில் மின்புத்தகம் 


My Poems in Tamil and English 


திங்கள், 13 பிப்ரவரி, 2023

பழைமையைப் போற்றுவோம் - குவிகம் கவியரங்கம்

 பழைமையைப் போற்றுவோம்  - குவிகம்  கவியரங்கம்  

-------------------------------------------------------------------------------------------------

பழைமையைப் போற்றுவோம் - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English


கு ப ரா சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 கு ப ரா சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு 

----------------------------------------------------------------------------------------

 கு ப ரா சிறுகதை மதிப்புரை - யூடியூபில் 


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 6 பிப்ரவரி, 2023

தேர்வுத் திருவிழா - கவிதை

 தேர்வுத் திருவிழா - கவிதை  —— ஒன்றா இரண்டா எத்தனை தேர்வுகள் எதைப் படிப்பது எப்படிப் படிப்பது எந்த வேலையில் எங்கே சேர்வது எவரை விரும்புவது எ...