தூரத்தில் சென்றவள் - விருட்சம் நிகழ்வில் கவிதை
------------------------------------------------------------------------------------------
தூரத்தில் சென்றவள் - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - விருட்சம் நிகழ்வில் கவிதை
------------------------------------------------------------------------------------------
தூரத்தில் சென்றவள் - யூடியூபில்
எதிர்காலம் - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு
---------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - குவிகம் சுந்தரராஜன் பிறந்த நாள் விழா
----------------------------------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - கவிதை
---------------------------------------------
வயிற்றின் அழுகைக்கும்
வலியின் அழுகைக்கும்
மொழியைப் புரிந்திருந்து
மூலம் தீர்த்திடுவாள்
பாடம் புரியாமல்
பரிதவிக்கும் பொழுதினிலே
கூடப் படித்திருந்து
குறையைத் தீர்த்திடுவாள்
புழுதிக் காலோடு
புரண்டு வருகையிலே
கழுவிச் சேலையினால்
காலைத் துடைத்திடுவாள்
காலம் ஓடுகையில்
காதல் கூடுகையில்
பாலம் அமைந்தந்த
படுக்கை போட்டிடுவாள்
வயதின் முதிர்ச்சியிலே
வாழ்க்கைத் தளர்ச்சியிலே
துயரத்தில் நம்மை விட்டு
தூரத்தில் சென்றிடுவாள்
------------------------------------நாகேந்திர பாரதி
தூரத்து மாம்பழம் - கவிதை
-------------------------------------------
ஓரக் கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடி விட்டு
தூரத்து மாம்பழமாய்
தொங்குவதை விட்டுவிடு
நேரத்தில் விழுந்துவிடு
நெருக்கத்தில் வந்துவிடு
காலத்தில் கனிந்தால்தான்
காதலுக்கு மரியாதை
பாலுக்கும் வயதானால்
பழுதாகித் திரிந்துவிடும்
பாலைக்கு நீராக
பாய்ந்து வந்துவிடு
ஏழைக்குச் சோறாக
இன்பம் தந்துவிடு
நாளைக்கு வந்துவிடு
நம்பிக்கை தந்துவிடு
காலைக்குக் காத்திருப்பேன்
கண்ணுக்குள் உன்னோடு
---------------------------------நாகேந்திர பாரதி
குறுங்கவிதைகள்
--------------------------------------
வேர்கள்
————--------------------------
விழுதுகள் வந்து விட்டாலும்
விட்டுவிடாது மரத்தை
வேர்கள்
————
வெயில்
———-
ஏழைகளின் வாழ்வில் மட்டும்
இருட்டில் கூட
வெயில்
————
பொய்கள்
————-
தேவைப் படும் நேரத்தில்
தீங்கில்லாத பொய்களே
வாழ்க்கை
————
----------------------------நாகேந்திர பாரதி
புகைப்படப் புனிதர் - கவிதை
——————————————————
ஆமா என்ற சொல்லுக்கு
அடுத்த சொல் தெரியாதவர்
மாமா என்ற வார்த்தைக்கு
மகத்துவம் சேர்த்தவர்
மகளின் மணாளன் என்ற
மனத்தின் அன்போடு
மகனும் இவன்தான் என்ற
மகிழ்ச்சியில் இருந்தவர்
காலத்தின் கொடுமையினால்
கடுமையாய் நோய்வாய்ப்பட்டு
பொசுக்கென்று போய்விட்டு
புகைப்படமாய் ஆனவர்
மாலையிட்டு வணங்குகின்ற
மாலைப் பொழுதில் எல்லாம்
மங்கலமாய் வாழ்கவென்ற
மன வாழ்த்து புகைப்படத்தில்
—————நாகேந்திர பாரதி
மழையும் விதையும் - கவிதை
——————————------------------—-
முதல் கவிதைக்கு
முத்தம் கொடுத்து
அச்சில் ஏற்றிய
ஆசிரியர் அன்பு
அப்போது தெரியவில்லை
அதுதான் மழையென்று
விழுந்தது மழையென்று
விதைக்குத் தெரியுமா
விட்டுச் செடியாகி
வெளியே வந்தபின்தான்
கவிதை வனத்திலே
கலந்த பின்புதான்
இப்போது தெரிகிறது
அதுதான் மழையென்று
——————- நாகேந்திர பாரதி
மண்ணில் வானவில் - கவிதை
————————————----------------------------—-
ஏழுவண்ண வானவில்லாய்
இந்த மண்ணில் முளைத்து
ஏழுவித குணங்களாய்
எங்களுக்குக் காட்டி
அன்பும் அறிவும்
அமைதியும் ஆனந்தமும்
உண்மையும் உழைப்பும்
உயர்வும் காட்டி
எங்களை விட்டு
இறைவனைத் தொட்டு
எப்போ தாவது
இறங்கி வந்து
வானத்து வில்லாய்
வாழ்த்துவார் அப்பா
—————நாகேந்திர பாரதி
விடியலைத் தேடும் இரவுகள் - கவிதை
————————————--------------------------------
வேலையில்லா வாலிபன் நான்
வேதனையின் காதலன் நான்
என்னை எழுதியவன் சமுதாயம்
எழுதியவன் முகவரியை
எழுதாமல் விட்டதனால்
எடுத்தவர்கள் ஏதேதோ
எழுதினார்கள்
என் மேல்
ரத்த முத்திரை குத்தப்பட்டு
வன்முறை முகவரி
எழுதப்படும் போதெல்லாம்
ஏ சமுதாயமே
நீ ஏன் குதிக்கிறாய்
என் மேல்
முகவரி எழுதாமல் விட்டது
உன் குற்றம்
விடியலைத் தேடும்
இரவாய் என்னை
வீதியிலே விட்டது
உன் குற்றம்
———— நாகேந்திர பாரதி
கடந்து சென்ற தென்றல் - கவிதை
—————————--------------------------——-
துண்டோடு சேத்து
பனியன் ஜட்டியும்
கழட்டிப் போடுடா
துவைச்சுப் போடுறேன்
அறுபது வயதிலும்
குறையாத அன்போடு
குழந்தையாய் நினைத்து
அப்பத்தா சொன்னது
ஊட்டி விட்டது
உறங்க வைத்தது
படிக்க வைத்தது
பழக வைத்தது
வேலை தேடி
வெளிநாடு போனது
ஓலை வந்ததும்
ஓடி வந்தது
சுடுகாட்டில் கிடந்த
சேலை மூட்டையைக்
கட்டி அழுதது
மயங்கி விழுந்தது
நடந்து வந்த
நினைவாய் நின்றது
கடந்து சென்ற
தென்றல் ஒன்று அது
———————நாகேந்திர பாரதி
கண்ணுறங்கும் கவிதை - கவிதை
——————————-----------------------——
பகல் நேரத்தில்
படுத்துகிற பாட்டில்
எப்படா தூங்குமென்று
ஏங்க வைக்கும்
இரவு நேரத்தில்
தூங்கும் போது
எப்போது எழுமென்று
ஏங்க வைக்கும்
குறும்பும் கூச்சலுமாய்
குழந்தை படுத்தினாலும்
காலையில் எழும்வரை
கண்ணுறங்கும் கவிதை
———————நாகேந்திர பாரதி
கவர்ந்த புலவன் - கவிதை
——————————————
என்னைக் கவர்ந்த
புலவன் இவன் - என்
எண்ணம் வளர்த்த
புலவன் இவன்
இவன்
கவிதையில் விளையாடி
பாடலில் தலை சீவி
நடந்த பருவம்
என் இளம் பருவம்
காதலைப் பாடினான்
கடமையைப் பாடினான்
சாதலைப் பாடினான்
சகலமும் பாடினான்
ஆத்திகம் பாடினான்
நாத்திகம் பாடினான்
அத்தனை கருத்துமே
அனுபவித்துப் பாடினான்
இவன் வாழ்க்கை -ஒரு
திறந்த புத்தகம்
அதில்
இன்பமும் இருந்தது
துன்பமும் இருந்தது
நன்மையையும் இருந்தது
தீமையும் இருந்தது
தெரிந்து படிப்பது - நம்
திறமையில் இருக்கிறது
—————-நாகேந்திர பாரதி
உருகும் மனம் - கவிதை
------------------------------------------------------------------
மணலைக் குவித்துக் கலைத்தோமே
அப்போது சொல்லவில்லை
மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமே
அப்போது சொல்லவில்லை
தூரக் கடலை ரசித்தோமே
அப்போது சொல்லவில்லை
துணிகள் நனைய நடந்தோமே
அப்போது சொல்லவில்லை
ஓரப் படகில் ஒளிந்தோமே
அப்போது சொல்லவில்லை
உன்னை என்னை மறந்தோமே
அப்போது சொல்லவில்லை
காலம் கடந்து சொல்கின்றாய்
காதல் மறக்கச் சொல்கின்றாய்
கன்னிப் பெண்ணே வாழ்த்துக்கள்
காதல் வாழும் நெஞ்சுக்குள்
உன்னை மறக்க முடியாமல்
உள்ளே பொங்கும் நெருப்புக்குள்
உலைத் தீயில் உருகும் மனம்
ஒன்றும் வேண்டாம் போடி போ
-------------------------------
உள்ளுக்குள் ரௌத்ரம் - கவிதை
————————————-------------------—-
தான் மட்டும் தழைக்கட்டும் தோழர் எல்லாம்
தரைப்பட்டுக் கிடக்கட்டும் என்ற எண்ணம்
ஊனொட்டி உயிரொட்டி உலகைக் காக்க
உருவெடுத்து விட்டோரைப் பார்த்தாலே
வராதா ரௌத்ரம்
நான் என்ற எண்ணத்தால் அகந்தை கொண்டு
நல்லவரை எல்லாமே நசுக்கி விட்டு
தேன் என்று வெளியினிலே காட்டிக்கொண்டு
தேளாகத் திரிவோரைப் பார்த்தாலே
வராதா ரௌத்ரம்
தீயோரைத் திருத்திடுவோம் முடியாதென்றால்
தீயாக்கிப் பொசுக்கிடுவோம் , நல்லோர் எல்லாம்
ஒன்றாகக் கூடிடுவோம் உலகைக் காப்போம்
உள்ளுக்குள் இருக்கின்ற ரௌத்ரத்தை
உழைப்பாக்கி உயர்ந்திடுவோம்
————— நாகேந்திர பாரதி
வண்ணத்துப் பூச்சி - கவிதை
——————————————————————-
பாட்டுப் போட்டியும்
பேச்சுப் போட்டியும்
ஓட்டப் போட்டியும்
உற்சாகத் தருணங்கள்
படங்கள் வரைந்து
பாராட்டு பரிசுகள்
பரத நாட்டிய
ஆடை அணிகலன்கள்
எத்தனை வண்ணங்கள்
இருந்த பருவம்
காலம் வந்ததும்
கணவன் வந்ததும்
குடும்பம் வேலை
குழந்தை வந்ததும்
ஒவ்வொரு வண்ணமாய்
உதிர்ந்து போனதால்
வண்ணம் தொலைத்தது
வண்ணத்துப் பூச்சி
————நாகேந்திரபாரதி
கல்யாண மண்டபம்- கவிதை
---------------------------------------
மண்டபத்து வாசலில்
கழற்றிப் போடும் செருப்புக்கு
சில அடையாள நினைவுகள்
வரவேற்பு சந்தனத்திற்கு
கல்யாண வீட்டாரின்
பொறுக்கியெடுத்த அழகிகள்
போவது அழகிப் போட்டிக்கா
திருமண வரவேற்புக்கா
புரியாத அலங்கோலம்
வந்து வரவேற்கட்டும் என்று
விறைப்பாய்ச் சென்றமரும்
ஓர நாற்காலிகள்
இது மாதிரி இடங்களில் மட்டும்
சொந்தம் என்று தெரிய வரும்
சில தூரத்துப் பச்சைகள்
அட்சதையைக் கையை விட்டு
அய்யர் மேல் எறிகின்ற
உச்சஸ்தாயி நேரங்கள்
அப்புறம் போகலாமே என்றபடி
தானாக நகர்கின்ற
பந்திக் கால்கள்
மற்றவர்கள் மொய்க் கணக்கை
நோட்டம் இட்டபடி
நீட்டுகின்ற நோட்டு
லட்டா தேங்காயா என்று
தடவிப் பார்த்தபடி
வாங்குகின்ற பைகள்
வீட்டுக்கு வந்தபின்தான் தெரிகிறதோ
போட்டு வந்த புதுச் செருப்பு
வேறு யாருடையதோ என்று
---------------------------------------- நாகேந்திர பாரதி
கல்லறை பேசினால் - கவிதை
—————————————-------------
தள்ளாத வயதினிலும்
தாங்கித் தாங்கி
நடந்து வந்து
உண்மையான தர்மத்தை
உபதேசம் செய்தேனே
மதச் சண்டை மாறவில்லை
சாதிச் சண்டை தீரவில்லை
பெண்ணடிமை போகவில்லை
பெருஞ்செல்வம் பிரியவில்லை
பேச்சு மட்டும் போகவில்லை
இன்னும் ஒருமுறை நான்
எழுந்து வரப் போவதில்லை
என் காலம் போயாச்சு
உங்க காலம் ஆயாச்சு
பொழைக்கத் தெரியலைன்னா
போங்கடா வெங்காயம்
———————நாகேந்திர பாரதி
முதல் வசந்தம்- கவிதை
————————————
வனத்தின்
முதல் வசந்தம்
வாழ்க்கையின்
முழு வசந்தம் ஆனது
பதினெட்டு வயதில்
பார்வைகளின் பரிமாற்றம்
பார்த்தவர் ஏற்பாட்டில்
எல்லாமே பரிமாற்றம்
அன்று தொடங்கிய
அன்பும் அறனும்
இன்றும் தொடர்வது
இறைவன் கட்டளை
வாழ்த்தும் வயது
வந்து விட்டாலும்
வாழ்த்தைக் கேட்டு
வளரும் வசந்தம்
————————நாகேந்திர பாரதி
எல்லாமே மாயம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------
மீதியான பக்கங்கள்- கவிதை
———————————----------——
ஆரம்பப் பக்கங்கள்
அற்புத மானவைதான்
அரண்மனை வீடும்
ஆளும் பேருமாய்
படிப்பும் பாட்டும்
பாசமும் நேசமுமாய்
அழுக்குப் படிந்தது
எப்போது பக்கங்களில்
அவனைப் பார்த்த
அந்தப் பொழுதிலா
அவனைச் சேர்ந்த
அந்திப் பொழுதிலா
புரண்ட பக்கங்கள்
புரட்டிப் போட்டன
ஓடிப் போனதால்
ஒழுக்கம் போனதால்
மீதிப் பக்கங்கள்
கசங்கிக் குப்பையில்
——————நாகேந்திர பாரதி
விளைந்த வியர்வைகள் - கவிதை
—————————————---------------——
விதைகள் மட்டுமா
விளைந்து செழிக்கும் ,
வியர்வைகளும் கூடத்தான்
கூட்டிப் பெருக்கிக்
குப்பை கழிக்கும்
வீட்டம்மா வியர்வை
காட்டைத் திருத்திக்
கழனி ஆக்கும்
வீட்டய்யா வியர்வை
நாட்டில் நிலவும்
நச்சைப் போக்கும்
நாட்டய்யா வியர்வை
வீடும் நாடும்
விளங்க உழைக்கும்
வீரர் வியர்வை
எல்லாம் சேர்ந்து
விளைந்து செழிக்கும்
—————நாகேந்திர பாரதி
முன்னாடி திரும்பு - கவிதை
—————————------------------------
கட்டம் போட்ட சேலை
கவ்வுதடி இடுப்பை
கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
ஏத்தி வச்ச குடத்தில்
தளும்புதடி மனசு
குளத்தங்கரை வராத
கோபமாடி பொண்ணே
நெத்திச்சுட்டி வாங்கியாற
நேரமாச்சு புள்ளே
உனக்குப் புடுச்சதுன்னு
சொன்னியேடி நேத்து
மாலைக் கருக்கலு
மயக்குதடி என்னை
பின்னழகு காட்டி
பித்தனாக்கிப் போட்டே
முன்னழகு வேணுமடி
முன்னாடி திரும்பு
————நாகேந்திர பாரதி
நினைவில் நிற்கும் காதல் - கவிதை
————————-------------------------—————
இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும்
இதழில் நெளியும் சிரிப்பில்
என்றும் இளமை
நடையில் தளர்ச்சி தெரிந்தாலும்
நடையின் நாணத் தவிப்பில்
என்றும் இளமை
உடலின் இறுக்கம் குறைந்தாலும்
உடலின் இன்ப உணர்வில்
என்றும் இளமை
முதுமைக் காலம் வந்தாலும்
முதிர்ந்த அன்பு மனதில்
என்றும் இளமை
நேரம் காலம் நகர்ந்தாலும்
நினைவில் நிற்கும் காதலில்
என்றும் இளமை
———— நாகேந்திர பாரதி
கல்யாண மண்டபம் -' நவீன விருட்சம்' கவிதை வாசிப்பு
------------------------------------------------------------------------------------------
தொகுப்புரை - விருட்சம் கதைஞர்கள் நிகழ்வு
----------------------------------------------------------------------------------
மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு ------------------------------------------------------------------------------------...