புதன், 29 மே, 2024

எல்லைச் சாமி - சிறுகதை

 எல்லைச் சாமி - சிறுகதை 

---------------------------


தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.


வானம் பார்த்த பூமியில் விதைத்த விதை முளைக்க மழை வேண்டும் வேதனை அந்தக் கண்களில் தெறிக்க முனியன் திண்ணையில் அமர்ந்திருந்தான்.' பெய்யும்யா மழை , அதுக்குத்தான் முளைக்கொட்டு உத்சவம் போட்டாச்சே . முளைப்பாரியிலே நவதானியம் முளைச்சாச்சே. கொண்டுபோய்க் கொட்ட தண்ணியாலே கண்மாய் நிரப்ப வேண்டியது சடச்சி அம்மன் பொறுப்புய்யா. நீ மனசைப் போட்டு ஒளப்பிக்காதே. நீ ஊரு நாட்டாமை. எல்லோருக்கும் தகிரியம் சொல்ல வேண்டியது நீ தாய்யா ' என்ற காத்தாயியின் குரலில் தெறித்த நம்பிக்கை இவனுக்கும் கொஞ்சம் தைரியத்தைக் கொடுக்கத்தான் செய்தது. போன வருடம் பெய்யாத மழையால் , விதைத்த நெல்லெல்லாம் சாவியாகிப் போய் கொஞ்ச நஞ்சம் வைக்கோல் தான் மிஞ்சியது. வச்சிருந்த விதை நெல்லும் பொங்கிக் காலியாச்சு .


வயசுக்கு வந்து நிக்கும் பொண்ணு வடிவைப் பார்க்கும்போதேல்லாம் இவளை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்ற தந்தையின் தவிப்பு. விளைஞ்சால்தானே எல்லாம் நல்லபடியாய் நடக்கும். பூமித்தாய் கொடுக்குறதை வச்சுதான் கஞ்சியும் கல்யாணமும் அந்தக் கிராமத்தில் .


இதுக்கு நடுவிலே 'இந்த முளைக்கொட்டு உத்சவம் எல்லாம் தேவை இல்லை , அதுக்குப் பண்ற செலவுக்கு , நிலத்தையெல்லாம் கோழிப் பண்ணையா மாத்தி தொழில் ஆரம்பிச்சு பக்கத்து டவுனுக்கு முட்டை, இறைச்சி வித்தாலாவது, ஏதோ கொஞ்சம் காசு கிடைக்கும் னு ஒரு இளவட்டக் கூட்டம் ஒண்ணு நாட்டாமை பண்ணி இழுத்தடிக்க, ஒரு வழியா முனியன் ஊரு பெருசுங்களை எல்லாம் சேர்த்துப் பேச வச்சு முளைக்கொட்டு ஆரம்பிச்சாச்சு. தினசரி ராத்திரி ராமாயணக் கூத்து. நடிக்கிறது எல்லாம் ஊரு ஆளுங்கதான். முனியன் தான் ராவணன் வேஷம். அந்த இளவட்டக் கூட்டத்து சுப்பு தான் ராமன்.


ஆச்சு , உத்சவம் இன்னியோடு முடியுது. வானம் கருக்கக் காணோம். துடைச்சுப் போட்ட மாதிரி கிடக்குது. அப்பப்ப வந்து போற வெள்ளை மேகங்களைக் கூடக் காணோம். திரும்ப அந்த இளவட்டங்கள் எல்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா கூத்திலே ஆட்டத்தில் அவங்க பங்கும் உண்டு. இன்னிக்கு கூத்திலே , ராவணன் வதம் .ஒயிலாட்டம் கலந்த கூத்து அது . முனியன் வெறி வந்த மாதிரி கர்சீப்பை உதறி கால் துள்ள ஆடின ஒயிலாட்டத்திலே தூசி பறந்தது . பறந்த தூசி மேலே பறக்க பறக்க வானம் இருண்டது . சனங்களின் ஆனந்தக் கூச்சல் .. ஆட்டம் முடிச்சு முனியன் நிக்க , ஆக்ரோஷப் பாட்டுப் பாடி அம்பு விட்டான் ராமனா நடிச்ச சுப்பு. பாய்ந்த அம்பு பட்டு துடித்து விழுந்தான் முனியன் . நாக்கில் நுரை தள்ள.


ஏற்கனவே ஏற்பாடு செய்த படி , சுப்பு விட்ட விஷ அம்பு அது. 'எல்லாத்துக்கும் காரணம் இந்த முனியன்தான். ஒழுங்கா பண்ணை வைக்க விட மாட்டேங்கிறான். பக்கத்தூரு அரசியல் முக்கியஸ்தரு , ஊர் சனங்க கிட்டே நிலத்தையெல்லாம் வாங்கி , எல்லாம் பண்ணையா மாத்திர ரோசனை நடக்காத கோபத்தில் செஞ்ச முடிவுக்கு , பணத்துக்கு ஆசைப்பட்ட இந்த ஊரு இளவட்டக் கூட்டம் துணை போன விளைவு. '


இடிச்சது ஒரு இடி. விழுந்தது மின்னல் தீ ஒன்று சுப்பு மேலே. துடிச்சு விழுந்து சுப்பு நெருப்பில் கருகும் நேரத்தில் மேலே வந்து பொழிந்தது காட்டு மழை . எங்கிருந்து மேகம் திரண்டது. எப்படி மழை வந்தது. 'ஆத்தா , சடச்சி, மழையையும் கொண்டு வந்து இப்படி முனியன் உயிரை வாங்கிட்டியே , இனி காத்தாயியும் வடிவும் எங்க பொறுப்பு. எங்க குலசாமி குடும்பம் இனி எங்க குடும்பம் 'என்று அழுத சனத்தோடு சேர்ந்து கண்ணீரோடு கதறும் காத்தாயிக்கும் வடிவுக்கும் ஆறுதல் சொல்வது போல் வானமும் சேர்ந்து அழுதது .


முனியன் அன்று முதல் சாமியாகி நிற்கிறான் ஊர் எல்லையில், காத்தாயியும் வடிவும் அவன் கண்ணில் கண்ணீராய் வடிய , தானியப் பச்சையும் தீமையை நசுக்கும் சிவப்பும் கலந்த முகத்தோடு உக்கிரமாக , எல்லைச் சாமியாக .


----------------நாகேந்திர பாரதி


   My Poems/Stories in Tamil and English   


இன்ப வாழ்க்கை - கவிதை

 இன்ப வாழ்க்கை - கவிதை 

————

இரை தேடக் கிளம்பி விட்ட

பறவைகளின் இசை


வழி அனுப்பி வைக்கின்ற

இலைகளின் ஓசை


வரவேற்கும் ஆகாயம்

பசியாற்றும் பூமித்தாய்


சுற்றிக் காண்பித்த

சூரியனும் இளைப்பாற


நிலவின் வெளிச்சத்தில்

வீட்டின் வழி தெரியும்


இயற்கை காட்டுகின்ற

இன்ப வாழ்க்கை நிலை


———நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 3 மே, 2024

நம்பிக்கைச் செடி- குறுங்கதை

 நம்பிக்கைச் செடி- குறுங்கதை 

———

மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .


உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித்து ஓய்ந்து போன கிழிசல் பை .


மொண்டு வந்து ஊற்றிய தண்ணீர் நினைப்பில் ஓட்டையாய்க் கிடக்கும் உடைந்த வாளி .


மேலும் கீழுமாய் மானம் காத்து மினுக்கித் திரிந்து காலம் போன கழிசல் ஆடைகள் .


தம்ளராய்ப் பையாய் வண்டியாய் திரிந்து ஓய்ந்து போய்க் கிடக்கும் எத்தனை சாமான்கள் .


முடிந்ததது வாழ்க்கை என்று முனகிக் கிடக்கும் அவற்றோடு சேர்ந்து இலையுதிர்ந்த செடி ஒன்றும் ஓரத் தொட்டியில் .


‘ஒரு துளி விழுந்தால் போதும் , நான் துளிர்த்து எழுந்து விடுவேன் ‘ என்ற நம்பிக்கையோடு .


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


அன்புத் துளி - கவிதை

 அன்புத் துளி - கவிதை 

———


வளர்த்து எடுக்க

உழைத்துக் களைத்து


வயதும் ஏற

அடங்கும் நேரம்


ஆசை நெஞ்சின்

துடிப்பின் வெளிச்சம்


கண்ணில் தெரியும்

கவலை நேரம்


அன்புத் துளியை

அள்ளித் தெளித்தால்


வாடிய செடியின்

வருத்தம் போகும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 1 மே, 2024

ஆற்றுச் சுழல் - கவிதை

 ஆற்றுச் சுழல் - கவிதை 

————

கண்மாய்த் தண்ணீரில்

கண்ட மகிழ்ச்சியை

ஆற்றுச் சுழலில்

அறிய ஆசை


கொள்ளிடக் குளிர்ச்சியில்

குளிக்கும் வேகம்

தள்ளிடும் ஆற்றின்

தாக மோகம்


இன்னும் உள்ளே

இன்னும் உள்ளே

கண்கள் சிவந்து

கலங்கும் நேரம்


சுழலின் மத்தியில்

சுழலும் போது

கழலும் நினைவின்

கணப் பொழுது


மனைவி நினைவு

மக்கள் நினைவு

நினைவு பிறழும்

நேரம் நிம்மதி


———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


பசி- சிறுகதை

 பசி- சிறுகதை  -------------------- விட்டு வைத்திருக்கிறார்கள் குட்டி விழட்டும் என்று. தாய்ப் பாசம் கொஞ்சம் குட்டிக்குக் கிடைத்த பிறகு , அரி...