திங்கள், 26 அக்டோபர், 2020

நினைவுகளின் கூடாரம் - கவிதை

 நினைவுகளின் கூடாரம் - கவிதை 

-----------------------------------------------------------

நினைவுகளின் கூடாரமாய்

வீடுகள்


காலத்தின் மாற்றத்தில்

மாறிக் கொண்டு


உள்ளிருந்து வெளியே

விளையாடிக் கொண்டு


வெளியிருந்து உள்ளே

உறங்கிக் கொண்டு 


உற்றுப் பார்ப்போர்

யாரும் உண்டோ

————————நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

புத்தக அறை - கவிதை

 புத்தக அறை - கவிதை 

-----------------------------------------

புத்தகப் பக்கங்களைப்

புரட்டும் பொழுது


அறைக்குள் வந்து

சேர்ந்தவை எத்தனை


அருகருகே கிடக்கும்

ஆகாயமும் சாலையும்


நகரத்து வீதிகளில்

கிராமத்து வயல்கள்


திரும்பி வந்து விட்ட

செத்துப் போனவர்கள்


சேர்ந்தே நடக்கும்

சாவும் கல்யாணமும்


அத்தனையும் பார்த்து

திகைத்துப் போனேன்


புத்தகத்தை மூடினேன்

அறையும் அமைதியானது

———நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English

வெள்ளி, 9 அக்டோபர், 2020

காற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை

 காற்றில் பறக்கும் கோடுகள் -கவிதை 

------------------------------------------------------------

ஓவியத்தின் கோடுகளும்

கவிதையின் கோடுகளும்


கட்டம் கட்டாமல்

காற்றில் பறந்து விடும்


கோடிழுத்த  கையே

படைத்தவனின் பொறுப்பு


காற்றிழுத்த கற்பனையோ

பார்த்தவனின் விருப்பு

—————————————-நாகேந்திரபாரதி

My E-books in Tamil and English

சனி, 3 அக்டோபர், 2020

காந்தி ஜெயந்தி - கவிதை

காந்தி ஜெயந்தி - கவிதை 

------------------------------------------

காந்தி ஜெயந்தி

விடுமுறை ஞாபகங்கள்


ஆரம்பப் பள்ளியில்

ஆரஞ்சு மிட்டாய் ஞாபகம்

உயர்நிலைப் பள்ளியில்

உறுதிமொழி ஞாபகம்


கல்லூரிக் காலத்தில்

ஊர்ப்பயணம் ஞாபகம்

வேலைப் பருவத்தில்

விடுமுறை ஞாபகம்


கல்யாணம் ஆனதும்

கடை வீதி ஞாபகம்

குழந்தைகள் வந்ததும்

சுற்றுலா ஞாபகம்


காந்தி ஜெயந்தியின்

விடுமுறை தினத்தன்று

சத்தியாக் கிரகமோ

சத்திய சோதனையோ

ஞாபகம் வந்ததாய்

ஞாபகம் இல்லை


நவீன விருட்சம்

நடத்தும் விழாவிலே

காந்திஜி ஞாபகம்

வந்து விழுகிறது

————————————-நாகேந்திர பாரதி

My E-books in Tamil and English