மா.அரங்கநாதன் - சிறுகதை அனுபவம்
(நவீன விருட்சம் நிகழ்வு - 19/2/2021)
-------------------------------------------------------------------------------------
சைவ சிந்தாந்தத்திலும் சங்க இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட திரு அரங்கநாதன் அவர்களின் ‘ஓர் இரங்கற் கூட்டம்’ என்ற சிறுகதையை நான் படித்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்வின் சொல்ல முடியாத பக்கங்களை சொல்ல முயலும் தத்துவ நோக்கமும் , சமகால வாழ்வின் நிகழ்வுகளை நையாண்டி செய்யும் நகைச்சுவையும் கலந்து இருக்கும் சிறுகதைகளை இவர் படைத்துள்ளார் என்று ஒரு குறிப்பில் படித்தேன். இந்த சிறுகதையும் சம கால வாழ்வை நையாண்டி செய்யும் ஒரு அருமையான சிறுகதை. கதையின் முக்கிய கதாபாத்திரமான ' முத்துக்கருப்பன் ' ஒரு சிற்றிதழ் ஆசிரியன். இலக்கியவாதி. அவரது கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கு பெரும்பாலான கதைகளில் முத்துக்கருப்பன் என்றே பெயரிடும் வழக்கம் இருந்துள்ளது.. அவர் கருப்பசாமி போன்ற பழந் தமிழர் கடவுளரிடம் ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த பெயர் மேல் அவருக்கு ஒரு பிரியம் இருந்திருக்கலாம்.
முத்துக்கருப்பன் ' ஒரு சிற்றிதழ் ஆசிரியன். இலக்கியவாதி. ஆசிரியரே முன்றில் என்ற சிறுபத்திரிகை நடத்தியதும் அனைவரும் அறிந்ததே. இப்போது கதைக்குள் வருவோம்.
முத்துக்கருப்பன் மறைவுக்கு ஒரு இரங்கற் கூட்டம் திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மொத்தம் வந்திருப்பவர்கள் பத்தே பேர் தான். அந்த பத்து பேர்களில் மூன்று பேரின் பெயர்களை சொல்லி அதில் இருவர் ஜமுக்காளம் நாற்காலி போன்றவற்றை ஒழுங்கு படுத்தும் விவரங்களை விவரிக்கும் போது நமக்கே அந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். நடுவில் ஒரு நையாண்டியும் வருகிறது.
அந்தப் பத்து பேரில் ஒருவர் ‘கீழ் வீட்டில் இருந்து வந்த குழந்தையும்’ என்று குறிப்பிடும் போது நிலைமை நமக்கு புரிகிறது. பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களே மொத்தம் பதினான்கே பேர் தானே. அதுவும் நமது கதாபாத்திரம் முத்துக்கறுப்பன் 'தன்னைப் பற்றி எழுதி விடக் கூடாது என்பதற்காகவே அவன் வம்புக்கே போகாதவர் பலர் . அவன் இலக்கியத்தில் யாரை விட்டு வைத்தான் ' என்று முக்கிய பேச்சாளர் ஜெயச்சந்திரன் சொல்லும்போது நமக்கு புரிகிறது.
அடுத்து அவன் கதையை ஜெயச்சந்திரன் மூலமாக நமக்கு சொல்கிறார். முத்துக்கருப்பன் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் என்றும் அவனுக்கு ஆரம்ப காலத்தில் அவர் வேலை வாங்கி கொடுத்ததையும் அவன் திருமணத்திற்கு பின் அதை விட்டு விட்டதையும் சிறு பத்திரிகை ஆரம்பித்ததையும் , அவன் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் , அவனுக்கு கவிதை ஆர்வம் இருந்ததையும் ,ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதையும் ' சொல்லிக் கொண்டு போகிறார்.
இந்த இடத்தில் முத்துக்கறுப்பனை பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கும் ஜெயச்சந்திரனின் குணத்தையும் நமக்கு ஒரு அருமையான யுக்தி மூலம் உணர்த்துகிறார்.
ஜெயச்சந்திரன் பேச்சுக்கு இடைஇடையே அடைப்புக் குறிக்குள் தனது குறிப்பையும் சொல்கிறார் ஆசிரியர்.
உதாரணத்துக்கு ஒரு சில.
ஜெயச்சந்திரன் ,’முத்துக்கருப்பனும் நானும் பேசிக் கொள்ளாத நாட்களே கிடையாது. அடுத்து அடைப்புக்கு குறிக்குள் ஆசிரியர். 'பொய். கடந்த மூன்று மாதங்களாக பேச்சு வார்த்தையே கிடையாது "
ஜெயச்சந்திரன் 'அவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான் என்னால் காப்பாற்ற முடிந்தது’. அடைப்புக்குறிக்குள் ஆசிரியர் 'இது பொய்’.
ஜெயச்சந்திரன் ‘ஒரு முறை கவிதைக்கு முடிவு உண்டா என்று அவன் கேட்டதும் ' நிச்சயம் உண்டு , அது தான் மௌனம் ' என்று நான் கூறினேன்’. மகிழ்ச்சியில் துள்ளினான் ‘. அடைப்புக்குறிக்குள் ஆசிரியர் 'இந்த வாக்கியத்தை சொன்னதே முத்துக்கருப்பன் தான்' .
இப்படி கதை விடும் ஜெயச்சந்திரனைப் பற்றி நமக்கு உணர்த்தி விடுகிறார். அடைப்புக்குறிக்குள் உண்மை சொல்லுவது . அருமையான சிறுகதை யுக்தி.
அடுத்து ஜெயச்சந்திரன் தொடர்ந்து பேசுகிறார். 'அவன் ஆரம்பித்த சிறு பத்திரிகை இதழ் இரண்டே இதழ்கள் தான் வந்தன . மூன்றாவதை விடுவதற்குள் போய் விட்டான். இதில் எனக்கு ஒரு இலக்கிய நஷ்டம் . அந்த இதழில் தான் எனது புதிய கவிதை தொகுப்புக்கு விமரிசன கட்டுரை போடுவதாக சொல்லியிருந்தான். உங்களுக்கு தெரியும். அவன் எனது கவிதை தொகுப்பை பற்றி சொன்னால் அதன் மதிப்பே தனி ' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது
வந்திருந்த பத்துப் பேரில் ஒருவரான ' காய்கறிப் பை இலக்கிய வாதி’ ஒருவர் எழுந்தார். ' காய்கறி வாங்கிவிட்டு அப்படியே இந்த இரங்கற் கூட்டத்திற்கும் வந்திருக்கிறார் அந்த இலக்கியவாதி. சமகால வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டும் வேதனை கலந்த கிண்டல் அல்லவா இது.
அந்த காய்கறிப் பை இலக்கியவாதி சொல்கிறார். ‘அந்த மூன்றாவது இதழ் இன்றுதான் எனக்கு வந்தது. அதை வெளியிட்டு விட்டுத்தான் செத்துப் போயிருக்கான். இதில் உங்கள் கவிதை புத்தகம் பற்றிய விமரிசனம் வந்துள்ளது ‘ என்று அதை வாசிக்கிறார்.
முத்துக்கருப்பன் எழுதியுள்ளது . 'இந்த ஜெயச்சந்திரனுக்கு ஒரு எழவும் தெரியாது .இலக்கியவாதிகளுடன் நெருங்கிப் பழகுவதால் தனக்கு அது தோன்றி விடும் அல்லது சமாளித்துக் கொள்ளலாம் என்று நம்புகிற நப்பாசை ஆசாமி ' என்று அவர்படித்துக் கொண்டிருக்கும் போதே ' சண்டாள பாவி' என்று சொல்லிக்கொண்டே ஜெயச்சந்திரன் கையை அசைக்க மேசை மேல் இருந்த சோடாப் புட்டி பறந்து சன்னலில் மோதி கண்ணாடிச் சில்லுகள் தெருவில் விழுந்தன.
இதோடு முடியவில்லை கதை. அடுத்த வரி. ‘அப்போது பிள்ளையார் சதுர்த்தி காலமாகையால் திருவல்லிக் கேணியின் அந்தத் தெருவில் யாரும் வாராது வீட்டுக் கதவுகளை தாளிட்டு உள்ளே பத்திரமாக இருந்து கொண்டனர்.’ என்று முடிக்கிறார். சமகால திருவல்லிகேணி பிள்ளையார் சதுர்த்தி மதப் பிரச்சினைகளையும் கோடி காட்டி முடிக்கிறார். இந்த இடத்தில் அவர் வைதீகத்திற்கு எதிரான சைவ சித்தாந்த நோக்கம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஐந்தே பக்கங்களில், சமுதாய நிகழ்வு, தனி மனித தம்பட்டம், மற்றவரை ஏளனம் செய்யும் இலக்கிய செருக்கு, கவிதை வெறியில் குடும்பத்தை கை விடுதல் என்று மிகவும் கனமான கருத்துகளையும் கிண்டல் கலந்து
' இரங்கல் கூட்டத்தில் வந்து அமர்ந்திருக்கும் குழந்தை, காய்கறி வாங்கிவிட்டு இரங்கற் கூட்டத்திற்கு வந்திருக்கும் இலக்கிய வாதி '
என்று வாழைப்பழத்தில் மருந்து கலந்து கொடுப்பது போலவும்,
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலவும்
அருமையான சிறுகதையாக படைத்துள்ளார்.
அவரைப் பற்றி நான் படித்த மற்றுமொரு குறிப்பையும் சொல்லி இந்த உரையை முடிக்கிறேன். அவரது 'பறளியாற்று மாந்தர்' நவீனம், சாஹித்ய அகாதெமியின் பரிசுக்கு இறுதி சுற்றுக்கு சென்றிருந்தபோது அந்த குழுவில் இருந்த ஒருவர் சொன்னாராம். ' இந்த கதை பரிசுக்கு மிகவும் தகுதியான து. ' என்று. மற்றொருவர் சொன்னாராம் ' இவர் பெயரை நான் கேள்விப் பட்டதே இல்லையே' என்று. இவ்வாறு மா.அரங்கநாதன் கதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் தமிழவன் குறிப்பிடுகிறார்.
அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன் கட்டுரைகள் , கதைகள், மொழி பெயர்ப்பு என்று தன் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்தி வாழ்ந்த அந்த எளிமையான ஆனால் வலிமையான அந்த இலக்கிய ஆளுமை மா. அரங்கநாதன் அவர்களை வணங்கி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம் .-------நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English