அப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 செப்டம்பர், 2026

அழகு உணர்ச்சி - சிறுகதை

 அழகு உணர்ச்சி - சிறுகதை 

---------------------

அந்தப் பழைய பைலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சுமதியின் கண்ணில் பட்டு நீங்காமல் அதே இடத்தில் நின்றது அந்தப் படம். ஆம், அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது , அப்பா அப்போது தான் வாங்கிக் கொடுத்த வாட்டர் கலர் வண்ணப் பெட்டியின் கலர் கேக்குகளில் தண்ணீர் தெளித்து பிரஷால் தேய்த்து தேய்த்து கையில் கிடைத்த எல்லாப் பேப்பர்களில் படம் வரைந்து கொண்டிருந்த காலம் அது. 


இதுவும் ஒரு ஆங்கிலப் பேப்பரின் மேல் கலரைப் பட்டை அடித்து அதன் மேல் வரைந்த பாப்பா படம் , பறவை படம், பூக்கள் படம் எல்லாம் சேர்ந்து அவளை ஒரு ஓவியராய் உணர வைத்த நேரம். பாப்பாவின் சட்டைக்குள் தெரியும் ஆங்கில எழுத்துக்களை சுட்டிக் காட்டி , அந்தப் படம் போட்டிக்கு உகந்ததல்ல என்று நிராகரித்த நடுவர் மேல் அவளுக்கு கோபமோ கோபம். 


போட்டியின் விதிப்படி வெள்ளைப் பேப்பரில்தான் வரைய வேண்டுமாம். இது என்ன விதி. படத்தில் எவ்வளவு நுணுக்கங்கள். உணர்ந்து பாராட்டியவர் அவள் அப்பா மட்டும் தான். ‘அது எப்படிம்மா, பாப்பாவோட ஒரு கண்ணு சூரியன் மாதிரி ஜொலிக்குது  இன்னொரு கண்ணு அமாவாசை சந்திரன் மாதிரி கருக்குது . பாப்பாவோட மகிழ்ச்சியும் , அழுகையும் கலந்து  காட்டியிருக்கே   . உனக்குப் பிடிச்ச அந்தப் பறவைக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்துருக்கே . பூவைக் கூட லவ் ஸிம்பலோட வரைஞ்சிருக்கே . என்னா கற்பனைம்மா உனக்கு' என்று பாராட்டிய அப்பாவின் நினைவு கண்களில் கண்ணீராக நிறைந்தது. 


மேஜையின் மேல் தட்டின் மேல் வைக்கப்பட்டிருந்த தோசை அவளைப் பார்த்துச் சிரித்தது போல் இருந்தது .'என்ன தோசை  இதும்மா  , தோசைன்னா ஒரு ஷேப் இருக்க வேண்டாம் . வட்டமாக , அழகா உள்ளே சின்ன சின்ன ஓட்டைகளோட ஓரம் லேசா சிவந்து , நடுவிலே  முழுவதும் வெள்ளையா மெதுவா இருந்தா பார்வைக்கும் அழகு. சாப்பிடவும் டேஸ்ட் . இது என்ன கன்னா பின்னா ஷேப்பில், உப்பி பெரிய இட்லி மாதிரி , உனக்கு அழகுணர்ச்சியே  இல்லம்மா, இதை எடுத்துட்டு ஸ்கூல் போனா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேலி செய்வாங்க. நான் கேண்டீனிலே சாப்பிட்டுக்கிறேன் ' என்று சொல்லி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு வேகமாக ஓடிய மகளின் வார்த்தைகளுக்குத்தான் அந்தத் தோசை சிரித்ததா . 


--------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


அழகு உணர்ச்சி - சிறுகதை

 அழகு உணர்ச்சி - சிறுகதை  --------------------- அந்தப் பழைய பைலைப் புரட்டிக் கொண்டிருந்தபோது சுமதியின் கண்ணில் பட்டு நீங்காமல் அதே இடத்தில் ...