புதன், 16 செப்டம்பர், 2026

ஐம்பூத நாயகி - சிறுகதை

 

ஐம்பூத நாயகி - சிறுகதை

----------------

அந்த ஆசிரமத்தின் தனி அறையில் பெரும்பாலான நேரம் இதே போன்ற நிலையில் கால்களைத் தூக்கி வைத்து கைகளைத் தலைக்குப் பின் முட்டுக் கொடுத்து,  அந்த நாற்காலியில் அமர்ந்து  ,   ஏதோ   சிந்தனையில் ஆழ்ந்திருப்பது  போல் தோற்றமளிக்கும் அந்த நாலு முழ வேட்டி அரைக்கைச்  சட்டைக்காரப், பரந்தாமனை,   வேடிக்கை பார்ப்பது அந்த ஆசிரம சிறுவர்களுக்கு ஆரம்ப நாட்களில் பொழுது போக்காக இருந்தது. இப்போது அது அவர்களுக்குப் பழகி விட்டது . அந்த அறைப்பக்கம்  வருவது இல்லை.

 

அந்த ஆசிரம நிர்வாகி கோபாலுக்குத்  தெரியும் அவர் நிலைக்குக் காரணம். கோட்டும் சூட்டுமாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பறந்து திரிந்த தொழில் அதிபர் பரந்தாமனின் கல்லூரி  நண்பர், கோபால். ஒரு நாள் இரவு பரந்தாமனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ' நியூயார்க் செல்ல காத்துக் கொண்டிருந்தேன் . விமான நிலையத்தில். அவளைப்  பார்த்தேன். ஒரு நொடி தான், சிறிய கண்ணீர்த்துளி விமான நிலைய வண்ண ஒளியில் பளபளத்தது. என்னைப் பார்த்ததைக் காட்டிக் கொடுத்தது. திரும்பி விரைந்து விட்டாள்.

 

ஆனால்,  என்னுள் மறுபடி  நுழைந்து விட்டாள்.  பழைய மேனகையாய் இல்லை, புதிய மஹாலக்ஷ்மியாய் , அருள் ஒளியாய், அன்பு ஒளியாய் , அழகு ஒளியாய்.   எனக்கு என்னை அடையாளம் கண்ட உணர்வு. அந்த உணர்வைக் கொடுத்து விட்டு  விலகிச் சென்று விட்டாள் வழக்கம் போல்  அவள். ஆனால், இந்த முறை புதிய அவஸ்தை . உன்னிடம் வரவேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிகிறது ' . கோபாலுக்கு அவளையும் தெரியும். அவரையும் புரியும். பதிலுக்கு ஒரே வார்த்தைதான் சொன்னார். ' வா' .

 

வந்து விட்டார். அதற்கு முன்  தொழில் , குடும்பம் சம்பந்தப்பட்ட அத்தனைப் பொறுப்புகளுக்கும்  உரிய ஏற்பாடு செய்து விட்டுத்தான்.  அவர் மனைவிக்குத் தெரியும் அவர் உள்ளும் புறமும். ஆன்மீகம் அவருக்குள் ஊறிக் கொண்டு இருப்பதை உணர்ந்து தான் இருந்தாள். அவர் கிளம்ப நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள் . தயாராகத் தான் இருந்தாள். ஆனால் அவள் கண்கள் தயாராகவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்தன. உணர்ந்த அவரின் கண்கள் திரும்பிய பக்கம் அவரின் பிள்ளைகளின் மௌனத் தலையாட்டல். போதும் அவருக்கு.

 

இப்போது இந்த நிலையில் அவருக்குள் நிறைந்திருப்பவள் மஹாலக்ஷ்மித் தாய். அவள் கருணையில் மூழ்கிக் கிடப்பதே அவரின் தினசரி தவம்.  ஐம்புலன்களும் அவளுக்குள்  அடைக்கலமாகும்  அந்தத் தருணத்தை நோக்கிய காத்திருப்பு அது. மடங்கிய கால்களும், உயர்ந்த கைகளும்  அந்த நிலையில் ஒரு தவக்கோலம் இப்போது , இந்த ஆசிரம அறையில் அவருக்கு. 

 

மானுட உடலின் தினசரி தேவைகள் குறைந்து கொண்டே வந்தன. உணவும் குறைந்தது. கழிப்பறை செல்லும் நாட்களும் குறைந்தன. சுவாசத்தின்  தவிப்பும் குறைந்தது.  அந்த மஹாலட்சுமி அவருக்குள்  நிறைந்து கொண்டு இருந்தாள். அந்த அருட்ஜோதிக்குள் அவர் ஐக்கியம் ஆகிக் கொண்டு இருந்தார். ஐம்பூத நாயகியின் ஆட்டத்துக்குள் , அவரின் ஐம்புலன்களும் ஒடுங்கிக் கொண்டு இருந்தன.

 

அன்று இரவு  வழக்கம் போல் அறைக் கதவைச் சாத்த வந்த கோபால் ஒரு நிமிடம் தயங்கினார். அங்கே  வளைந்த கால்கள் இறங்கி தரையில், நிமிர்ந்த கைகள் இறங்கி கும்பிடும் நிலையில் , பரந்தாமன் கண்கள் கோபாலை உற்றுப் பார்த்தன. இதழ்கள் பிரிந்து  , 'நன்றி நண்பா ' என்றன . மறுநாள் அவர் கதவைத் திறந்தபோது நாற்காலி மட்டுமே இருந்தது.

 

-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஐம்பூத நாயகி - சிறுகதை

  ஐம்பூத நாயகி - சிறுகதை ---------------- அந்த ஆசிரமத்தின் தனி அறையில் பெரும்பாலான நேரம் இதே போன்ற நிலையில் கால்களைத் தூக்கி வைத்து கைகள...