பொம்மைப் பாட்டி - குறுங்கதை
--------------
அந்தப் பூனை செல்வியின் வருகைக்காகக் காத்திருந்தது. அதோ யூனிஃபார்மோடு உள்ளே நுழையும் செல்வி, வீட்டு சாவியைக் கொக்கியில் மாட்டிவிட்டு , ஷூவைக் கழற்றிவிட்டு , புத்தகப் பையை இறக்கி வைத்து விட்டு ஓடி வந்தாள்.
பூனையைத் தூக்கிக் கொண்டு ' இன்னும் கொஞ்ச நேரம் பொறு , ஹோம் ஒர்க் கொஞ்சம் தான் இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன். அப்புறம் விளையாடலாம். ' என்று சொன்னாலும் பூனை சமாதானம் அடையாமல், தான் இருந்த மூலையையும் , இவளையும் பார்த்து ' மியாவ் , மியாவ் ' என்றது.
' சரி இரு, இந்தப் பாலை மட்டும் குடிச்சுட்டு வந்துடுறேன் , அம்மாவும் அப்பாவும் வேலை முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே நம்ம ஒரு ஆட்டம் ஆடிடலாம். ஒரே ஒரு ஆட்டம்தான் சரியா. ' என்றபடி அம்மா பிளாஸ்கில் இவளுக்காக ஊற்றி வைத்திருந்த பாலை குடிக்கும் போது, கிண்ணத்தில் கொஞ்சம் பாலை ஊற்றி பூனையையும் குடிக்க வைத்தாள்.
சரி வா' என்றபடி வயர் இணைத்த பிளக் கை எடுத்துச் சென்று ஒரு முனையை சுவரின் மூன்று பின் சாக்கெட்டிலும் ,மறு முனையை, அந்த பாட்டி பொம்மையின் நெற்றியில் உள்ள இரு பின் சாக்கெட்டிலும் மாட்டி ரிமோட் மூலம் இயக்க ஆரம்பித்தாள். பாட்டி பொம்மை எழுந்து பாடியபடி ஆட ஆரம்பித்தது. 'வா, நம்மளும் சேர்ந்து ஆடலாம். என்று செல்வியும் பூனையும் ஆட ஆரம்பித்தனர்.
வளர்த்த பாட்டி இறந்தபின், பிரமை பிடித்துப் போய் இருந்த செல்வியின் மனநிலை சரியாக மருத்துவர் ஏற்பாட்டின் படி செய்யப்பட்ட அந்தப் பொம்மை வந்தபின் தான் செல்விக்கும் அவள் பெற்றோருக்கும் வாழ்க்கை திரும்பியது. பொம்மையின் உள்ளிருந்த பாட்டியின் ஆவிக்குக் கண்ணீர் வந்தாலும், பொம்மை ஆடுவதை நிறுத்தவில்லை.
------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக