'தாழமுக்கம்' சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு
-------------------------------------------------------------------------------------------------
நன்றி அழகியசிங்கர், வணக்கம் நவீன விருட்சம் நண்பர்களே .
மென்மையான சோகம் கலந்த காதல் கதைகள், எனக்குப் படிக்கப் பிடிக்கும், எழுதவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்ட அழகியசிங்கர் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் கதை ஈழ எழுத்தாளர் தாட்சாயணி அவர்கள் படைத்துள்ள இந்தத் ' தாழமுக்கம் ' கதை.
'தாழமுக்கம் ' என்ற தலைப்பே படிக்கும் ஆவலைத் தூண்டியது. படித்து முடித்தபின்தான் இந்தத் தலைப்பின் பொருள் விளங்கியது. நாம் நமது தொலைக்காட்சி, வானொலிச் செய்திகளில் மழைக் காலத்தில் அடிக்கடி கேட்போமே ,' வங்கக் கடலில் உருவாயிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் , சென்னையிலே, அதற்கு மேலோ கீழோ, இன்றோ நாளையோ, மிதமாகவோ , கனமாகவோ , மழை பெய்தோ பெய்யாமலோ இருக்கலாம் என்று. அந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தான் தாழமுக்கம். தாழ் ப்ளஸ் அமுக்கம். தாழ்வான அழுத்தம். எவ்வளவு அழகான ஈழத் தமிழ். இது போன்று இனிமையான தமிழ் வார்த்தைகள் இந்தக் கதை உரையாடல்களில் கலந்து வந்து , இந்தக் கதைக்கே, ஒரு சங்கீதப் பின்னணியைக் கொடுக்கிறது . கே வி மஹாதேவன் அவர்களோட கர்னாடிக் மியூசிக் பின்னணி மாதிரி.
வழக்கமான காதல் கதைதான். பெற்றோரை எதிர்த்து மணமுடிக்கும் காதலர்கள் படும் கஷ்டத்தைச் சொல்லும் கதைதான். ஆனால் அதற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் லாக்டௌன் காலமும் அதில் அன்றாட வேலையும் கிடைக்காமல் , வெளியேற முடியாமல் தவிக்கும் அந்தத் தொழிலாளி காதலன் நிலையும் , நமக்கும் பரிச்சயமான இந்தக் காலச் சூழ்நிலையாய் இருப்பதால் நம்மை உடனே கதையோடு ஒன்ற வைத்து விட்டது.
இரால் மீன் சாப்பிட ஆசைப்படும் காதல் மனைவிக்கு அதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கும் தன்னை எண்ணி வருத்தப்படும் அந்த இளைஞனின் ஆதங்கத்தோடு ஆரம்பிக்கும் இந்தக் காதல் அடுத்தடுத்து ஆசிரியர் காண்பிக்கும் காட்சிகள் எல்லாமே மென்மையான காதல் காட்சிகள்.
ஆரம்பத்தில் கோயில் நந்தவனத்தில் அவள் பூப்பறித்து மாலையாக்கி கடவுளுக்குப் படைக்கும் கைங்கரியத்துக்கு இடைஞ்சலாக , பக்கத்தில் கோயில் கட்டுமான வேலை செய்து கொண்டு இருக்கும் அவன் ரேடியோவை அலற வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்பது. அதை அவள் நிறுத்தச் சொல்லும் போது அவன் வம்பு வளர்ப்பது , பிறகு மறுநாள் அவன் அவளுக்காக அதை நிறுத்துவது ,
' Pity follows love ' என்று ஒரு shakespearen வரி வருமே. இரக்கத்தைத் தொடர்ந்து காதல் வந்துடும் என்று. அது மாதிரி , அவன் அவளுக்காகத் தனக்குப் பிடித்தமான சினிமாப் பாடல்களையே நிறுத்திட்டான்னாதும் , அவன் மேலே ஒரு பிரியம் வந்துடுது அவளுக்கு.. அவன் உடல் உழைப்பின் களைப்பை மறக்க பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்ததை இவளுக்காக நிறுத்தியதை உணர்ந்து அந்த இரக்க உணர்வு காதலாக மாறுகிறது
சில நாட்களிலே அவளுக்கும் அந்தப் பாட்டுக்களைக் கேட்கும் ஆசை வந்து , 'எனக்காகப் பாட்டை ஒருத்தரும் நிப்பாட்ட வேண்டாம் , மெல்லப் போடலாம் , பிரச்னை இல்லை ' என்று கேட்பது, என்று மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் அந்தக் காட்சிகளும் வருணனைகளும் அந்த நந்தவனத்தின் நந்தியாவட்டைப் பூக்களும் , பொன்னூச்சிப் பூக்களுமாய் நம் முன் மலர்கின்றன. நீங்க அதெல்லாம் படிச்சு அனுபவிக்கணும்.
அவர்கள் பரிமாறிக் கொண்ட புன்னகைகள், பார்வைகள் தொடர்ந்து , அவள் பரீட்சையில் இரண்டாம் முறை தோல்வி அடைஞ்சுடுறா. எதிர் பார்த்தது தானே. காதல் பாடம் படிக்கும்போது மற்ற பாடம் எல்லாம் மனதிலே ஏறாது தானே.'அவனை விட வேறொரு வெகுமதி தனக்குத் தேவை இல்லை ' என்று அவள் எண்ணத் தொடங்கி விட்டாள் ' என்ற வரிகளில் அந்தக் காதலின் ஆழத்தை நமக்குக் காட்டி விடுகிறார்.
பிறகென்ன, , நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாத அவள் , அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் இவனை மணமுடித்து , அந்த ஓலைக் குடிசையில், மண் தரை வீட்டில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறாள்.
இந்த நேரம் லாக் டவுன் வந்துடுது. இந்த லாக் டவுனைப் பத்தி சொல்றப்போ தான், நமக்கும் நமக்குத் தெரிந்த எவ்வளவு பேர் அன்றாட கூலி வேலை செய்யும் எவ்வளவு பேர், எப்படி எல்லாம் வறுமையில் கஷ்டப்பட்டார்கள் என்பது நினைவுக்கு வந்து, கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது .
வெளியிலும் போக முடியாமல், வேலையும் கிடைக்காமல், சாப்பாட்டுக்கு அரிசி இல்லாமல் , நண்பன் ஒருவன் கொண்டு வந்து கொடுக்கும் கழிவு மரக்கறிகளை சமைத்து உண்டு கொண்டிருக்கும் அந்த வறுமை நிலையைக் காட்டும் இடங்களில் எல்லாம், அந்த வறுமையையும் மீறி , அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் அன்பையும், காதலையும் ஆசிரியர் வெளிப்படுத்தும் இடங்கள் உணர்ச்சிகரமானவை.
இங்கே ஆண் பெண் மன உணர்வுகளையும் அருமையா சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
சவுகரியமான இருந்த இவளைக் கஷ்டப்பட வைச்சுட்டோமேன்னு அவன் புழுங்கிக்கிட்டே இருப்பான். அவள் அமைதியா எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அமைதியா இருப்பா.
ஒன்றிரெண்டு காட்சிகள் சொல்றேன் .
காலையிலே எந்திரிச்சதும் அடுப்பில் குவிந்திருந்த சாம்பலை அள்ளி உள்ளங்கையில் ஏத்திக்கிட்டு அவ பாட்டுக்கு பல்லு விளக்கப் போறா. இவன் பார்த்து வருத்தப்படுறான்.
“சாம்பலைத் தேய்த்து பல் விளக்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்க அவனுக்கு நெஞ்சு எரிந்தது. அவளது வீட்டில் பற்பசை இல்லாமல் ஒரு நாளும் பல் துலக்கியிருக்க மாட்டாள் .'”
அவ அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாம பல்லு விளக்கிட்டு வந்து தேநீர் போட ஆரம்பிக்கிறா
இன்னும் ஒரு காட்சி
இவன், யார் கிட்டேயும் எதுவும் கேட்க மாட்டான். ஆனால் இவளுக்காக நண்பனிடம் கேட்டு அவன் கொண்டு வந்து கொடுத்த மரவள்ளிக் கிழங்கையும் தேங்காயையும் இவள் கிட்டே குடுக்கிறான். ,
அதை அவிக்கப் போட்டுட்டு வர்றாள் அவள் 'இண்டையப் பாட்டை ஒருவாறு சமாளிச்சுப் போடலாம்' என்றபடி , அவனிடம் தேநீரை நீட்டி விட்டு அவன் அருகே அமர்ந்தாள் . அவன் அவளது நெற்றியை வருடி விட்டான் ' .
அவள் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த குங்குமம் அவளுக்கு ஒரு புது சோபையைத் தருவது போலிருந்தது
அப்போது ' தாழ முக்கம் ' ஏற்பட்டு, மழை பொழிய ஆரம்பிக்கிறது .
அவனை நெருங்கி உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு மிடறாய் தேநீரை உறிஞ்சிக் கொண்டு மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். காற்றில் குளிர் கூடத் தொடங்கியது . அவள் அவனது தோள்களைக் கட்டிக் கொண்டாள் .
அவனுக்கு தேநீரின் ருசியையும் அவளின் நெருக்கத்தையும் அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறிக் கொண்டு இருக்கிறது .
இந்த நேரத்திலே பொதுவா யாருக்கும் என்ன நினைப்பு வரும். உங்களுக்குத் தெரியாதது இல்லே. ஆனா, இங்கே தான் அந்த காதல் அன்பு வெளிச்சிடும் பளிச்சிடும் வரிகள் வர்றது. .
“
அவன் நினைக்கிறான்.
“இரவு குளிர் கூடினால் ,ஆனா போர்வை இல்லாமல் , அவள் குளிரில் கொடுகப் போகிறாளே எனத் தோன்றியது . '
அவனே அவளுக்குப் போர்வையாய் மாறக் கூடிய அந்த சந்தர்ப்பத்திலே கூட,, அவளுக்குப் போர்வை வாங்கி கொடுக்க முடியாமல் இருக்கிறோமோ என்ற நினைப்பு வருகிறதே, அது உடலை மீறிய உள்ளக் காதல் அல்லவா.
அந்த அன்பையும் , காதலையும் , காதலித்து மணந்த அவளை சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும் இந்த லாக் டௌன் காலத்து கஷ்டத்தை ,தனது இயலாமையை நினைத்து அவன் தவிக்கும் தவிப்பை வெளிப்படுத்தும் இடங்கள் உருக்கமான இருக்கின்றன.
நீங்கள் படித்து ரசிக்க வேண்டும். என்னைப் போல் ரெம்ப உணர்ச்சி பூர்வமானவராய் இருந்தால் படிக்கும் போதே, உள்ளுக்குள் அழ வேண்டும்
அதன் பின், அவள் அவித்த அந்த மரவள்ளிக் கிழங்கை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பாதி மரவள்ளிக் கிழங்கை அவன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவன் கத்திக் கொண்டு வருகிறான்.
'இந்த மழையினால் பேயாட்டம் ஆடும் பனை மரம் வெட்ட ஆள் தேடுகிறார் ' என்று
உடனே இவன் கிளம்பி விடுகிறான். வேலைக்குப் போனா உடனே காசு கிடைக்குமே. அவளுக்கு வேண்டியதை வாங்கிடலாமே .
'சாப்பிட்டுட்டுப் பொங்கோவனப்பா ' ராகினியின் குரல் அவனை இழுக்க அவன் திரும்பிப் பார்த்தான்.
நீர் சாப்பிடும். நான் வரேக்கை அரிசி வாங்கி வாறன் , நாளைக்கு இறாலோடைதான் சாப்பாடு '
அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை .
எந்தத் தாழமுக்கம் வந்தாலென்ன என்பது போல் அவன் உறுதியோடு நடக்க ஆரம்பித்தான்.
என்று முடிக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா விலே ஒரு இடம் உண்டு. ஆண்டனி கிளியோபாட்ரா கிட்டே சொல்வான்.
Let rome melt in tiber,
Here is my space
'ரோமாபுரியே டைபர் நதியில் மூழ்கினால் என்ன, இதோ இருக்கிறது என் இடம். இவள் மடி ' என்று .
அதைப் போல், தாழமுக்கு வந்து எவ்வளவு சேதம் வந்தால் என்ன, எனக்கு ஒரு வேலை கிடைக்கப் போகிறது , இவளுக்கு இவள் விரும்பிய இறால் மீன் வாங்கி வந்து கொடுக்கப் போகிறேன். அது போதும் ' என்று
கஷ்டங்களைக் கொடுக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அந்தக் காதல் தம்பதியருக்கு, அந்த லாக் டவுன் காலத்தில் கஷ்டம் தீர்க்க வந்து விட்டதாக முடிக்கிறார். வறுமையிலும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் அந்தக் காட்சிகளை எல்லாம், இனிமையான ஈழத் தமிழில் கவிதைகளாகப் படைத்திருக்கும் விதத்தில் இந்தக் காதல் கதையை வித்தியாசப் படுத்திக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர் தாட்சாயிணி அவர்கள். அவர்க்கு வாழ்த்துக்கள். விருட்சம் அழகியசிங்கருக்கு நன்றிகள்
நன்றி. வணக்கம்
'
---------------------------------நாகேந்திர பாரதி
My Poems in Tamil and English