வெள்ளி, 18 அக்டோபர், 2024

தாய் உள்ளம் - சிறுகதை

 தாய் உள்ளம் - சிறுகதை 

-------------------------

எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் எத்தனை , பார்த்த திரைப்படங்கள் எத்தனை. கல்யாணம் ஆனது, கனவுகள் கலைந்தன .


அவள் அப்பாவும்தான் தனி ஆளாகச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றினார். அம்மா மேல் ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அன்பு ஒன்று தான் அவரின் ஒரே அடையாளம். இங்கே கணவன், தான் மட்டும் சம்பாதிக்கும் கர்வத்தில் இவளைப் படுத்திய பாடு. படிப்பை முடித்து வேலைக்குப் போயிருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வந்து என்ன பிரயோசனம். . குழந்தை ஆயிற்று. ஒரே மகன். அவனை வளர்க்கும் பொறுப்பு இவளுக்கு மட்டுமே என்று விட்டு விட்டு , தான் குடியில் மூழ்கி, ஆடம்பரச் செலவுகளில் மூழ்கி , கொடுக்கும் குறைந்த பணத்தில் மகனின் வாழ்வே முக்கியம் என்று அவனை வளர்த்து ஆளாக்கி இதோ வேலைக்கும் சென்று விட்டான்.


அப்பாவின் கொடுமை பொறுக்காத மகன், அம்மாவைத் தன்னிடம் கூட்டி வந்து , இதோ மருமகளும் வந்தாயிற்று. அம்மாவுக்குச் சிரமம் வைக்காமல் அவனே பார்த்து அமைந்த துணை. அவன் திருமணத்திற்குக் கூட வராமல் இன்னொருத்தியோடு வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்ட தந்தை.


வாழ்வின் பல கொடிய பக்கங்களை அம்மா கூடவே இருந்து பார்த்து அனுபவித்த அவன் , பொறுமைக்கே முதலிடம் கொடுத்த , குணவதி ஒருத்தியையே மணமுடித்து அழைத்து வந்தான். அனாதை இல்லத்தில் வளர்ந்து படித்து இவனுடன் வேலை பார்ப்பவள்தான் அவள். அவளும் 'அம்மா, அம்மா' என்று தன் மாமியாரை அம்மாவாகவே நினைத்து உதவி செய்து வருவதில் அவனுக்கு மகிழ்ச்சியே . காலம் ஒரே போக்காகப் போவதில்லைதானே. ஒரு நாள் .


குளியலறையில் வழுக்கி விழுந்து அலறிய அம்மாவை ஆஸ்பத்திரி சென்று பரிசோதனைகள் செய்த போது தெரிய வந்தது. சர்க்கரை அளவு அதிகம். கல்லீரல் பிரச்னை. கிட்னியில் கோளாறு . தொடர்ந்து ஆஸ்பத்திரியில் கொடுத்த பல வித மருந்துகளில் இன்னும் பலவித கோளாறுகள் ஏற்பட்டு, தொடர்ந்து ஆறு மாதம் பெட்டில். அவனும், அவளும் மாறி மாறி லீவு போட்டு பார்த்துக் கொண்டு, நடுவில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியைப் பயன் படுத்திக் கொண்டு காலம் ஓடினாலும் அம்மா தேறவில்லை.


இனி ஆஸ்பத்திரியில் பார்த்து பிரயோசனம் இல்லை, வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள். வீட்டில் ஒரு ரூம் ஆஸ்பத்திரி ஆனது. அவ்வப்போது வரும் டாக்டர் மாத்திரைகளை மாற்றி மாற்றி கொடுக்க , உடல் மெலிந்து , படுத்த படுக்கையாக இருக்க , உறவினர்கள் வற்புறுத்தலால் அப்பாவுக்குத் தகவல் சொல்ல , அவரும் வந்து பார்த்து விட்டு ' முடிந்த பின் தகவல் சொல் ' என்று சொல்லிச் சென்றார்.


அந்த வார்த்தைகள் படுத்திய பாட்டில் அம்மாவின் மூளை நரம்புகளில் ஏற்பட்ட கோளாறில் , ஏதேதோ புலம்ப ஆரம்பித்தாள். ' அம்மா, அப்பா ' என்ற வார்த்தைகள் மட்டுமே அவளிடம் இருந்து. பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருந்தாள்.


வந்து பார்த்த உறவினர்கள் ' எப்போ வீட்டுக்கு வந்தாலும் ' சாப்பிடுறியா ' என்ற வார்த்தை தான் முதல் வார்த்தை அம்மாவிடம் இருந்து. பெரும்பாலும் அடுப்படியில் இருந்து கொண்டு சமையல் வேலைதான். காய்கறி ,பருப்பு, சாம்பார் என்று என்ன வாசமான சாப்பாடு . இப்போது அவர்கள் சாப்பிடுவதே கொஞ்சம் கஞ்சி தானா' என்று கண்ணீர் விட்டுச் சென்றார்கள். ஆம் , சமைலறையும் , டிவி சீரியலும் தான் அம்மாவின் வாழ்க்கையாக இருந்தது என்று நினைக்க அவனுக்கும் கண்ணீர் . புரிந்து கொண்ட அவன் மனைவிக்கும் தான்.


படுத்த படுக்கையாக இருப்பவளை , இருவரும் தூக்கிச் சென்று , பாத் ரூமில் சேரில் சாய்த்து உட்கார வைத்து , குளிக்க ஊற்றும் போது நழுவும் கவுன் வழி வெளிப்படும் , அந்த வற்றிய மார்பின் காம்புகள், பிட்டங்கள் வழி வழியும் மலமும் சிறுநீரும். அவனும் அவளும் அவற்றைக் கழுவி , நீர் ஊற்றி குளிக்க வைக்கும் போது மலங்க மலங்க விழிக்கும் அம்மாவின் கண்களில் இருந்தும் திரளும் கண்ணீர். அதைத் துடைக்கும் தன் மனைவியின் கைகளை பிடித்து முத்தம் கொடுக்கும் அம்மாவின் செயல் அனிச்சைச் செயலா. இச்சைச் செயலா.


மனைவியைப் பார்க்க பார்க்க அவனுக்குப் பெருமையாக இருந்தது . இவள் எங்கிருந்து வந்தவள். எப்படி இவ்வளவு அன்பு இவளிடம். எனக்குத் தெரியும் அம்மா பட்ட கஷ்டங்கள். எங்கிருந்தோ வந்த இவளுக்கு எப்படி அம்மாவிடம் இவ்வளவு அன்பு . தாய்மையின் அழகு கனிந்து பொங்கும் இவளின் தூய்மையான முகத்தில் இருந்து தான் உலகில் அன்பும் பாசமும் உருவானதோ என்று ஏதோ ஒரு எண்ணம்.


இருவரும் சேர்ந்து அம்மாவைத் தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்து , சுற்றி வைத்திய உபகரணங்களை பொருத்தி வயிற்று நீர் போக ஒரு டியூப், சிறு நீர் போக ஒரு டியூப், மலம் போக ஒரு டியூப் , மூக்கில் கஞ்சி செலுத்த ஒரு டியூப் என்று எல்லாம் செலுத்தி , வைத்து திரும்பும் நேரம், இரு கை சேர்ந்து கும்பிட முயற்சிக்கும் அம்மாவின் கைகளை பிரித்து விட்டு , சிறிது நேரம் அமர்ந்து விட்டு , செல்லும் நேரம்.


' அம்மா , அப்பா ' என்ற முனகல் கண்கள் மூடிய படி. இது தொடரும். அது அவளின் பழைய உலகம். அந்த உலகத்தில் அவளை விட்டு விட்டு திரும்பிய இருவரும் , சென்று தங்கள் அறையில் அமரும் நேரம், அவள் மடியில் சாய்கிறான் அவன். ' இவளும் என் தாய், என் அம்மாவைப் போல இவளையும் நான் பார்த்துக் கொள்வேன் இறுதி வரை ' என்று அவன் எண்ணுவது புரிந்தது போல் , அவனைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள் அவள்.


---------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 8 அக்டோபர், 2024

திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 திஜர சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

-----------------------------

‘நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .

‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.’

என்ற பெண்கள் விடுதலைக் கும்மி ,  பாரதியின் பாட்டுக்குக் காரணத்தைக் காட்டுகின்ற கதை , பழம் பெரும் எழுத்தாளர் தி அவர்களின் சிறுகதை ' வாசலிலே சிங்கம் '

 

இந்தக் கதையை முழுவதும் அனுபவிக்க வேண்டுமானால் ஆசிரியரின்  வார்த்தைகளை அங்கங்கே அப்படியே சொன்னால் தான் நன்றாக இருக்கும் . அப்படியே சொல்ல முயற்சி செய்கிறேன்.

நாயகன் சுந்தரத்தின் அறிமுகமே அட்டகாசம்.  அவன் குண நலன்களை இப்படிச் சொல்கிறார்.

 

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.

இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு வரும் பெரும் பாடுபட்டு ஏராளமான சொத்தை இவன் அடையும்படி சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார்கள்..

இவனுக்குக் கவிதை பிடிக்கும்; சங்கீதம் பிடிக்காது. இலக்கியம் பிடிக்கும்; கதை பிடிக்காது. நாடகம் பிடிக்கும்; நடனம் பிடிக்காது. வேதாந்தம் பிடிக்கும்; தெய்வம் பிடிக்காது. சுதந்தரம் பிடிக்கும்; சுதேசியைப் பிடிக்காது. பாலைப் பிடிக்கும்; பசுவைப் பிடிக்காது.

 

சுந்தரம் படித்துப் பட்டம் பெற்றான்; அப்பா போய் விட்டார். கல்யாணம் செய்துகொண்டான்; அம்மா போய்விட்டாள்.
நகரத்தில் பெரியபங்களாவாக ஒன்றைச் சுந்தரம் வாங்கினான். அதில் மனைவியோடு சுகவாசம் செய்யத் தொடங்கினான்.
சுந்தரத்தின் மனைவி நல்ல அழகி. நாகரிகப் பெண்.அவள் வந்து புருஷனுடன் குடித்தனம் நடத்தத் தொடங்கிய சில காலம் வரைக்கும் இருவருக்கும் பலத்த போராட்டம் நடைபெற்றது.
.சுந்தரத்துக்குப் புராணமெல்லாம் வெறும் கட்டுக் கதை என்று நிச்சயமான தீர்மானம் உண்டு. என்றாலும் நளாயினியையும் சாவித்திரியையும் போன்றவளாகத் தன் மனைவி இருக்க வேண்டும் என்ற அளவற்ற ஆசையும் உண்டு. இவன் தனக்குத் தலைவலி வந்ததுபோலப் பாசாங்கு செய்வான். அவள் உடனே இவனுக்குச் சைத் தியோபசாரம் செய்யத் தொடங்க வேண்டும்.  நம்ம நண்பர்கள் முதலில் கதைகள் சொல்லும் போது சொன்னது போல, இந்தக் கதையிலும் சைத்தியோபசாரம்  என்ற பழங்கால வார்த்தைப் பிரயோகம் . இதற்கு என்ன அர்த்தம் என்று தமிழ் அகராதியில் தேடித் பார்த்த போது கிடைத்த மொழிபெயர்ப்பு - தாபந்தீர உபசரிக்கை . இதுக்கு சைத்தியோபசாரம் என்ற வார்த்தையே தேவலை என்று தோன்றியது .

உபச்சாரம் என்று புரிந்து கொள்ளலாம். இவன் தனக்குத் தலைவலி வந்ததுபோலப் பாசாங்கு செய்வான். அவள் உடனே இவனுக்கு உபச்சாரம் செய்யத் தொடங்க வேண்டும்.  இல்லாவிட் டால், ‘இவளுக்கு என்மீது காதல் இல்லை;’ என்று அநு மானம் செய்துகொள்வான். பிறகு ஒரே ஆர்ப்பாட்டம் தான்.. சிறிது காலம் வரைக்கும் மனைவிக்கு இதெல்லாம் என்ன வென்றே புரியவில்லை; தான் இன்னது செய்வதென்றும் புரியவில்லை. அப்புறம் அவளுக்கு இந்த மேதையின் வழிகள் தெள்ளத் தெளியப் புலப்பட்டுவிட்டன. இந்த வழிகளிலே நடக்க ஆரம்பித்தாள்.


தனக்குக் காய்ச்சல் வந்ததுபோல இவன் பாசாங்கு செய்தால், அவள் பெருங் கவலை பிடித்தது போலப் பாவனை செய்து, “ஐயோ! இனி நான் என்ன செய்வேன்என்று (ஒரு துளிக் கண்ணீரும் விடாமல்தான்) கதறி, தன் காதலை இவனுக்கு நிரூபணம் செய்வாள். இவன் இரண்டு நாள் அயலூருக்குப் போய்விட்டு வந்தால், அவள் (இவன் திரும்பிவருகிற சம யம் பார்த்து), தலையைப் பரட்டையாகப் பறக்கவிட்டுக் கொண்டு கை, கழுத்திலுள்ள விசேஷ நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிடுவாள். மொத்தத்தில் தான் இவனுக்காகவே உயிர் வாழ்வதுபோலவும், இவனுடன் உடன் கட்டையேறும் அரிய சந்தர்ப்பத்துக்காகச் சதாகாலமும் ஆவலோடு காத்திருப்பதுபோலவுமே அவள் நடந்து கொண்டாள். இப்போது சுந்தரத்துக்கு ஓரளவு திருப்தி உண்டாயிற்று. ஆயினும் ஆரம்பம் முதலே இவன் ஏற் படுத்தியிருந்த கட்டுக் காவல்கள் துளியும் தளரவில்லை.



வீட்டிலே தன்னைத் தவிர வேறு ஆண் வாசனையே இருக்கக் கூடாது என்பது இவனுடைய திடமான அபிப் பிராயம். சமையலுக்குப் பெண், குற்றேவலுக்குப் பெண், தோட்ட வேலைக்குப் பெண் – இப்படி அத்தனை வேலைக் கும் பெண்களையே அமர்த்தியிருந்தான்.

.சுந்தரம் வெளியே போகும்போதெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் இழுத் துப் பூட்டிக்கொண்டு போய்விடுவான். அப்போ உள்ளே இருந்த வேலைக்காரிகளெல்லாம் இவன் திரும்பி வரும்போதும் உள்ளேயே ஆஜர் கொடுக்க வேண்டும்..

இவ்வளவு களேபரமாகச் சுந்தரம் இல்லறம் நடத்தியும். மொத்தம் பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், மூன்றே மூன்றுதான் தக்கின; முதலில் பிறந்த பெண்ணும் மூன்றாவது ஐந்தாவது பிறந்த பையன்களுந்தான்

பெண்ணுக்குக் கல்யாணங்கூட ஆகிவிட்டது. இன்னமும் சுந்தரத்தின் வீட்டில் பழைய கெடுபிடிகளுக்குக் குறைவில்லை

அவன் வெளியே போய்விட்டால், வீடு ஒரேயடியாய் அழுது வடியும் என்பது சுந்தரத்தின் கற்பனை. உண்மையில் அப்படி இல்லை. அப்போதுதான் வீட்டிலே பெருங் குதூகலம் நிறைந்திருக்கும். பெண் நாட்டியம் ஆடுவாள். பிள்ளைகள் பாட்டுப் பாடுவார்கள். அம்மா பட்சணம் பண்ணுவாள். வேலைக்காரிகளெல்லாங்கூட ஒரே உற்சாகமாயிருப்பார்கள்..

ஐயாவின் தலை தெருக்கோடியில் தெரிந்தால், உடனே வீடு ‘சத்தோ சத்து என்று அடங்கிவிடும். இங்கும் ‘சத்தோ சத்து  என்று ஒரு கலைச் சொல். ' கப் சிப் ' என்று புரிந்து கொள்ளலாம். பிள்ளைகள் முணுமுணுத்த குரலில் பாடம் படிப்பார்கள். பெண் பிடிலை வைத்துக் கொண்டு ‘கிர் புர் என்று இழுப்பாள். வேலைக்காரிகள் மும்முரமாக வேலை செய்வார்கள். சிவகாமி கூந்தலைக் கலைத்துப் பரட்டை செய்துகொண்டு, அடுப்பங்கரை மூலை ஒன்றில் படுத்துவிடுவாள். வாசற்கதவு, ஜன்னல் கதவுகள் எல்லாம். ‘பட படவென்று சாத்தியாகிவிடும். இந்த நிலையில் வீட்டை வந்து பார்த்தால் சுந்தரத்துக்குப் பரம திருப்தி.

அந்தக் கால ஆணாதிக்கத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். அதை அந்தக் காலப் பெண்கள் எதிர் கொண்ட விதத்தையும் நகைச்சுவையும் கிண்டலும் கலந்து வெளிப்படுத்துகிறார். இப்படி எதிர்மறையாகவே  போய்க் கொண்டிருக்கும் கதையை  நேர்மறை யாக  முடிக்க , நாயகனின் மனதை மாற்ற , ஒரு புதிய கதாபாத்திரத்தைக் கொண்டு     வருகிறார். அது ஒரு சிங்கம். கதையின் தலைப்பு ' வாசலிலே சிங்கம்    '

 

சுந்தரமும் அவன் மருமகனும் வெளியூர் போயிருக்கும் போது வீட்டு வாசலில் ஒரு சிங்கம் படுத்திருப்பதை இவன் மனைவி மற்றும்  வீட்டார் பார்த்து போலீஸுக்குப் போன் செய்ய , அவர்கள் வந்து பார்க்க , வீடு வழக்கம் போல் வெளியே பூட்டி இருக்க , அவர்கள் கேட்டை உடைத்து உள்ளே வருகிறார்கள்

இவர்களுடைய அரவம் கேட்ட சிங்கம் விழித்தது; எழுந்தது; ஒய்யாரமாக நின்றது; பார்த்தது; ‘ லொள் லொள்என்று குரைத்தது. கர் ஜிக்கவில்லை; குரைக்கத் தான் தொடங்கியது.


சிங்கம் குரைப்பை நிறுத்தாமல் அப்படியே ஓட்டம் பிடித்தது. அப்போது அதன் பிடரி மயிர், ஒரு ரோஜாப் புதரில் மாட்டிக்கொண்டு அங்கேயே விழுந்து விட்டது.. இது உண்மையிலே சிங்கம் அல்ல : சாயம் பூசிய நாய்! அந்தப் பிடரி மயிரை எடுத்துப் பார்த்தபோது, அது வெறும் சணல் குஞ்சமாக இருந்தது!
தாம் வேட்டையாட வந்த சிங்கம் கடைசியில் ஒரு சாதாரண நாயாகப் போனதில் ஸப் இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரமும் அவமானமும் ஒருங்கே மூண்டன.


வெகு கம்பீரமாகப் பங்களாவின் வாசற் கதவை வந்து தட்டினார். அம்மா குடுகுடு என்று சமையலறைக்கு ஓடிவிட்டாள். மாடியிலிருந்து குழந்தைகளும் வேலைக்காரிகளும் கீழே இறங்கி ஓடிவந்தார்கள். சமையல்காரி கதவைத் திறந்தாள்.


ஸப் இன்ஸ்பெக்டர் கேள்விமேல் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
சமையல்காரி கொஞ்சம் கெட்டிக்காரி. அவள் இன்ஸ் பெக்டரிடம் ஐயாவின் போக்கையும் அம்மாவின் நிலைமையையும் தளுக்காகவும் விவரமாகவும் அவரிடம் எடுத்துச் சொன் னாள். இந்த வீட்டில் உள்ள எவரும் நாய்க்கு இந்தச் சிங்க வேஷம் கட்டிவிடவில்லை என்பதையும் அவருக்குப் பிரமாண பூர்வமாகச் சொல்லி அவரை நம்பச் செய்தாள்.பிறகு ஸப் இன்ஸ்பெக்டர், “பாவம்! இப்படியும் ஒரு மனிதர் உண்டா?” என்று அங்கலாய்த்துவிட்டுத் தமது படையை அழைத்துக்கொண்டு அகன்றார்.


மறுநாள் காலையில் சுந்தரம் வந்து சேர்ந்தான்... விஷயம் அறிந்து கொண்ட மருமகன் விஷயத்தைப் பக்குவமாகச் சுந்தரத் திடம் சொன்னார்.


இதைக் கேட்டதும் அவன் என்ன அட்டகாசம் செய்வானோ என்று வீட்டிலுள்ள எல்லாரும் நடுங்கிக்கொண் டிருந்தார்கள். அதற்கு நேர்மாறாக, அவன் பரமசாந்தத்தோடுசிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். கோபம், எரிச்சல், வெட்கம், வேதனை முதலிய பல உணர்ச்சிகள், அவன் மனக்கடலிலே திரைத்தெழுந்து அதிலேயே அடங்கிவிட்டன. அன்று முதல் சில நாள் வரைக்கும் அவனுக்குத் தன்னைப் பார்த்து முழு உலகமுமே பரிகசிப்பது போல் ஓர் உணர்ச்சி உண் டாயிற்று.

அவனை அறியாமலே அவனுடைய கெடுபிடிகளெல்லாம் தளர்ந்தன. கடைசியாக இப்போது மனைவி எப்படி ஆட்டிவைப்பாளோ அப்படியே ஆடும் சூத்திரப்பொம்மையாக அவன் மாறிவிட்டான். அதற்கு இந்தச் சம்பவமே காரணம். இதை நம்மால் நம்பமுடி யாமல் இருக்கலாம். ஆனால், சில சமயம் மிக அற்பமான ஒரு நிகழ்ச்சிநாம் எதிர்பாராதஎதிர்பார்க்கவே முடி யாத-மகத்தான பலனைத் தந்துவிடுகிறது. அது இந்தப் பிரபஞ்ச விந்தைகளுள் ஒன்று.


இதெல்லாம் சரி. அன்று அந்த நாய் எப்படிச் சிங்க வேஷம் போட்டுக்கொண்டு வந்தது?” என்றுநண்பர்கள் கேட்கலாம். ஸர்க்கஸ் சிங்கம் தப்பியோடியதை கேள்விப்பட்ட எவனோ ஒரு விஷமக்காரன் (செய்த வேலையாக இருக்கலாம். இல்லாவிட்டால் நாய் தானாகவா வேஷம் கட்டிக்கொண்டு வந்திருக்கப்போகிறது?

 

என்று முடிக்கிறார்.

 

மொத்தத்தில் அந்தக் காலச் சமுதாய நிகழ்வுகளை , பெண்களின் நிலையை கதையாய் படைத்து முடிவையும் நாயகன் திருந்துவதாகக் காட்டி முடிக்கிறார்.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை. நன்றி. வணக்கம்

 

 ----------------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


இரக்கம் - கவிதை

 இரக்கம் - கவிதை 

------------------

ஓரக் குடை வழி

ஒழுகும் மழைநீரில்


பேண்டு நனைந்திட

பிழைத்த சட்டையோடு


காற்றில் பறக்காமல்

குடையை இறுக்கியபடி


ஓரத்தில் நிற்போர்க்கு

இரக்கப் பார்வையோடு


விரைந்து நடக்கையில்

விரல் ஒன்று நீளும்


குடைக்குள் இடம் கேட்கும்

குறியீட்டை ஒதுக்கி விட்டு


விரையும் வேகத்தில்

கரையும் இரக்கம்


--------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English  


கொலு பொம்மை - கவிதை

 கொலு பொம்மை - கவிதை 

———

நிற்கும் பொம்மைகளிடம்

கதைகள் இருக்கின்றன


படுக்க வைக்கப் படும்போது

பகிர்ந்து கொள்ளப்படும்


மண்ணாக இருந்த காலத்தின்

மகிழ்ச்சிக் கதைகள்


கேட்கும் அம்மாவுக்கும்

கண்கள் கசியும்


மணமான காலத்திற்கு

முன்பிருந்த நிலை நினைந்து


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

------------------


வண்ணப் பூக்கள் எல்லாம்

வாசம் வீசுவ தில்லை


வாசம் வீசும் பூவிலும்

விஷத்தின் தன்மை உண்டு


புறத்தில் சிரிப்பவர் எல்லாம்

அகத்தில் மகிழ்பவர் அல்லர்


ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்

அடிகள் சறுக்குவ தில்லை


நம்பிக் கெட்டவரும் உண்டு

நம்பாமல் கெட்டவரும் உண்டு


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கால (ஏ)மாற்றம் - கவிதை

 கால (ஏ)மாற்றம்  - கவிதை 

--------------------------


அம்மா தலை வாரி விட்ட

காலம் அப்போது


அப்பா சினிமா கூட்டிப் போன

காலம் அப்போது


அண்ணனுடன் சைக்கிள் ஓட்டிய

காலம் அப்போது


தோழியுடன் அரட்டை அடித்த

காலம் அப்போது


ஆபீசும் அடுப்படியும்

ஆஸ்பத்திரியும் இப்போது

--------------- நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சனி, 28 செப்டம்பர், 2024

சொல்லுக சொல்லை - கவிதை

 சொல்லுக சொல்லை - கவிதை 

———-

விழுந்த சொல் ஒன்று

முளைத்து எழுந்து

கிளைகள் பரப்பி

இலைகள் முட்களாய்க்

குத்தவும் செய்யலாம்


விழுந்த சொல் ஒன்று

பூத்துக் குலுங்கி

வண்ணம் காட்டி

மணத்தைப் பரப்பி

மயக்கவும் செய்யலாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பரிமாறும் அன்பு - கவிதை

 பரிமாறும் அன்பு - கவிதை 

———

அவனுக்குப் பிடித்தபடி

அளவான புஷ்டியோடும்

அளவான புளிப்போடும்

தோசையும் துவையலும்


சாப்பிட்டு முடிந்தபின்பு

தட்டைக் கழுவி விட்டு

காய்கறி நறுக்குவதில்

கணவனின் நன்றி


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 20 செப்டம்பர், 2024

வேலை இல்லா வேளை - கவிதை

 வேலை இல்லா வேளை - கவிதை 

———

திட்டியும் பார்த்தாச்சு - யாரும்

திரும்பத் திட்டவில்லை


பாராட்டியும் பார்த்தாச்சு - யாரும்

திரும்பப் பாராட்டவில்லை


அவனவளுக்கு

அவளவன் வேலை


நமக்கு என்னமோ

இதுதான் வேலை


———- நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


செவ்வாய், 17 செப்டம்பர், 2024

தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை

 தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை 

-----------------------

'அம்மனோ சாமியோ' ரெக்கார்ட் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சு ஐந்து நாள் தொடர் சைக்கிள் ஓட்டம் . முளைக்கொட்டுத் திருவிழா முடிஞ்ச சுருக்கொடு ரங்கசாமி வந்துவிடுவார். மங்கள நாதர் கோயில் கோபுர வாசலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் அந்த மைதானத்தில் , இந்தப் பக்கம் அவனது பள்ளிக்கூடத்துக்கு எதிர்ப்புறத்திலே இருக்கிற அந்த மைதானத்தில் தொடர் சைக்கிள் ஓட்டம் . அவனுக்கு அது ஒரு பெரிய ஆச்சரியம் .’எப்படி ஐந்து நாட்களும் சைக்கிளிலேயே உட்கார்ந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். ‘ அவர் மனைவி பிள்ளைகள் எல்லாம் சுற்றி இருக்க, அவர்கள் அவ்வப்போது கொடுக்கும் , தண்ணீர், சாப்பாடு எல்லாம் சைக்கிளில் இருந்தபடியே வட்டமாக ஓடிக்கொண்டே . தொடர் சைக்கிள் ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறார் .


பள்ளிக்கூடம் விட்டதும் அங்க போய் ஒரு ஐந்து நிமிடமாவது அவர் சைக்கிள் ஓட்டுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்து விட்டு தான் அவன் வாணக்கிடங்கு தெரு வழியாக வீட்டுக்கு வருவான். .'உடனே வருவதற்கு என்ன' என்று வீட்டில் அப்பத்தாவின் திட்டு. 'இல்ல அந்த தொடர் சைக்கிள் ஆரம்பிச்சிட்டாங்க .அஞ்சு நாள் ஓட்டப் போறாராம் .' 'அவருக்கு அதாண்டா தொழிலே. அதை வச்சு தான் பொழப்பு ' .' அது சரி , அது எப்படி அப்பத்தா , 5 நாள் சைக்கிள் விட்டு இறங்காமல்' . 'நாலு மணி நேரத்துக்கு ஒரு தடவை இறங்கி கால் மணி நேரம் ரெஸ்ட் உண்டு. '


'அப்படியா நான் போறப்ப எல்லாம் அவர் சைக்கிள்லேயே தான் ஓட்டிக்கிட்டு இருக்காரு . அதுவும் சைக்கிள்லயே என்னென்ன மாதிரி விளையாட்டு எல்லாம் பண்ணுறாரு தெரியுமா. சிலம்பு சுத்தறாரு . தீப்பந்தத்தை தூக்கி போடுறாரு, எல்லாம் சுத்தி சுத்தி வரப்போவே . ' 'நீ போய் படிக்கிற வேலையை பாரு.'


புத்தகத்தைப் புரட்டினாலும் மனம் எல்லாம் ரங்கசாமி மேல் தான் கொஞ்ச நேரம் கழிச்சு 'பிரென்ட் சேதுராஜ் கூடப் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு வரேன்' என்று சொல்லிவிட்டு அந்த மைதானத்துக்கு ஓடினான் .


இப்பொழுது சாயங்காலம் ஆகிவிட்டது . அங்கு பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து எல்லாம் ஜனங்கள் வந்திருக்க , சுற்றி தின்பண்டக் கடைகள். அப்பப்ப அவனுடைய அப்பா, தாத்தா கொடுக்கின்ற பைசாக்களில் இருந்து பத்து பைசா எடுத்து சீனிச்சேவு பொட்டலம் வாங்கி கடித்து சாப்பிட்டு கொண்டு . ஸ்பீக்கர் செட்டில் இருந்து வந்து கொண்டு இருந்தது அப்பொழுது வந்திருக்கிறது ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் பட பாட்டுகள் தான். 'கும்தலக்கடி கும்மா கும்மா கும்மா என்றே ஒரே உற்சாகமான பாட்டுகள் தான் . அந்த ரெகார்ட் போடுற இடத்தைச் சுற்றி வேறு சின்னபசங்க, சின்னப் பொண்ணுங்க கூட்டம்.


ஒரு ஓரத்திலே ஒரு நீளமான கம்பு உச்சியிலே மிட்டாய்களை சுற்றி வைத்து சிவப்பு மிட்டாய் பிசுபசுத்த சிவப்பு மிட்டாய் சுற்றி வைத்து வருபவர்களுக்கெல்லாம் கையில் சவ்வு மிட்டாய் வாட்ச் கட்டிக் கொண்டிருந்தான் ஒருவன். அங்கு சென்று இன்னொரு பத்து பைசா செலவு. கையெல்லாம் பிசுபிசுத்துக் கொண்டு திரும்பிப் போனால் வீட்டில் திட்டு கிடைக்கும் எனவே அந்த சவ்வு மிட்டாய் முழுவதும் கடித்து சாப்பிட்டு விட்டு. கையைத் துடைத்து விட்டுத்தான் வீட்டுக்கு திரும்புவான்.


நடுராத்திரியில் அவனுக்கு ஒண்ணுக்கு போவதற்காக அப்பத்தா உசுப்பி விடுவார்கள். எழுந்து வாணக்கிடங்கு தெருவுக்குப் போகும் பொழுது அந்த தெரு வழியாக அப்படியே கிரௌண்டுக்கு ஓடிப் போய் அங்கே பார்த்தான் .'அவர் நடுவில் ரெஸ்ட் எடுக்கிறதே கிடையாது . அப்பத்தா பொய் சொல்றாங்க. 'இந்த ஆழமான நம்பிக்கை வருங் காலத்தில் தானும் அந்த ஹீரோ அங்கிள் போலவே தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவர் ஐந்து நாட்கள் ஓட்டுகிறார். நான் 10 நாட்கள் ஓட்டுவேன் என்று நினைத்துக் கொண்டு திரும்பினான் .


மறுநாள் முதல் 10 பைசாவுக்கு ஒரு மணி நேரம் வாடகைக்கு சைக்கிள் வாங்கி அதை ஓட்ட ஆரம்பித்து தெக்குத்தெரு நண்பன் மங்களசாமியை துணைக்குச் சேர்த்துக் கொண்டு , கண்மாய்க் கரைப் பக்க ரோட்டில் , சைக்கிள் பழக கீழே விழுந்து முழங்கால் அடிபட்டு , செயின் நழுவ செயினைத் திருப்பி மாற்றும்போது கை எல்லாம் ஒரே பிசுபிசு. . வீட்டில் திட்டு அவனுக்கு .'பரிச்சை எல்லாம் பாஸ் பண்ணி ஏதாவது கவர்மெண்ட் வேலைக்கு போகணும் .பாடங்களை ஒழுங்கா படி நல்ல மார்க் வாங்கிட்டு இருக்க. மனச குழப்பிக்காம ஒழுங்கா படி' என்ற திட்டு .


இதற்கு நடுவில் கிராமத்திலிருந்து அவ்வப்போது வரும் அப்பா மட்டும் அவனோடு சேர்ந்து வந்து அந்த சைக்கிள் ஒட்டியை பார்த்து ' இவன் நம்ம பனைக்குளம் . நாங்க சேர்ந்து தான் அஞ்சாப்பு வரை படிச்சோம் . அப்புறம் நான், விவசாயத்தில் இறங்கிட்டேன். அவன் எங்கேயோ ஓடி போயிட்டான் . பத்து வருஷம் வட நாட்டிலே இருந்து திரும்பி வந்து , அங்கே ஓட்டக் கத்துக்கிட்ட சைக்கிள் விளையாட்டோட இதே பொழப்ப ஆயிட்டான். சுத்துபட்டிக் கிராமம் எல்லாம் எதாவது திருவிழா வந்துட்டா , இவன் சைக்கிள் ஓட்டம் தான்., மத்த நாள் எல்லாம் கஞ்சிக்கு கஷ்டம் தான் '; என்று சைக்கிள் ஒட்டியின் இன்னொரு கோணத்தையும் அவனுக்கு அறிமுகப் படுத்த எங்கோ உதைத்தது அவனுக்கு .


'அப்பா , நான் இது மாதிரி பத்து நாள் தொடர்ந்து ஓட்டணும்பா . ' 'சைக்கிள் ஓட்டப் பழகு. அது ஒரு விளையாட்டா இருக்கட்டும். படிப்பு கவனம் ' என்று அவர் சொன்னது அவன் மனதில் இதமாக இறங்கியது .


அன்று கடைசி நாள் . சைக்கிளில் இருந்தபடி இரண்டு கைகளிலும் தீப்பந்தத்தை ஏந்தியபடி அவர் சுற்றிச் சுற்றி வர, சில கீழத் தெருப் பையன்கள் ,' மாமா , என்னையும் ஏத்திக்கிட்டு 'என்று சொல்ல, அவர்கள் இருவரையும் சைக்கிள் கம்பியில் ஏற்றிக் கொண்டு தீப்பந்தம் சுழற்றி , சுற்றிச் சுற்றி வர இவனுக்கும் ஆசை. ஆனா, 'கீழத் தெருப் பசங்க , ரெம்ப சேட்டை பண்ணுவாங்க , அவனுங்க கூட சேர கூடாது 'என்ற அப்பத்தா எச்சரிக்கை மனதிற்குள் . 'வடக்குத் தெருப் பசங்க சாது 'என்ற பேர் பள்ளிக்கூடத்திலும் உண்டு ஆனா, மார்க் எல்லாம் பர்ஸ்ட் வடக்குத் தெரு தான். கீழத் தெருப் பசங்க விளையாட்டில் கெட்டி . இவன் ஓட்டப் பந்தயத்தில் அவனுங்க கூட , அஞ்சு பேர் ஓடி , அஞ்சாவதா வந்த பெருமை இவனுக்கு உண்டு.


இவனும் சைக்கிளில் ஏற்றச் சொல்லிக் கேட்க, கீழத் தெருப் பசங்க கிண்டல் வேற, 'டேய் , அடிபட்டுடும், உன் அப்பத்தா திட்டுவாங்க. ', எதோ ஒரு வேகத்தில் இவனும் போய் சைக்கிள் வட்டத்தில் நிற்க, ஒரு சுற்று வரும்போது தீப்பந்தம் கை மாற்றி விட்டு, இவனை ஒரு கையில் தூக்கி சைக்கிள் நடுக் கம்பியில் வைத்து வேகம் குறையாமல் ஓட்ட, இவனுக்கு தலை சுற்றியது . சுற்றி தீப்பந்தம் வேறு சுழலுகிறது . சூடு. மயக்கம் வரும் போல் இருக்க , புரிந்து கொண்ட ரங்கசாமி ஒரு சுற்றில் லாகவமாக இவனை இறக்கி விட ,அங்கே வாணக் கிடங்கு தெரு வழியே வந்து கொண்டிருந்த தாத்தா , ஓடி வந்து இவன் முதுகில் ஒரு அடி வைத்து , இவனை இழுத்துக் கொண்டு , வீட்டுக்குப் போக , அங்கே கிடைத்த திட்டுகள் இன்னும் அதிகம். நல்ல வேளை , அடி விழவில்லை. அப்பா இருந்தார் .


அடுத்த வருடம், அதே போல் சவுண்ட் ஸ்பீக்கர் ரவிச்சந்திரன் பாட்டு முழங்க, அவன், தாத்தாவைப் பார்க்க, ' வா போய்ப் பார்த்துட்டு வரலாம் ' என்று கிளம்ப அடுத்து ஐந்து நாட்களும் தாத்தா துணையோடு , தொடர் சைக்கிள் ஓட்ட பார்வை. அங்கே நமுட்டுச் சிரிப்போடு கீழத் தெருப் பசங்க சைக்கிள் கம்பியில் ரெங்கசாமியுடன் ஏறிக் கொண்டு .

---------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English  


ஏனிந்த ஓட்டம் - கவிதை

 ஏனிந்த ஓட்டம் - கவிதை 

----------------------

பள்ளிப்பருவ ஓட்டத்தைப்

பெற்றோர் தடுப்பதில்லை


வேலைப்பருவ ஓட்டத்தை

மற்றோர் தடுப்பதில்லை


குடும்பப்பருவ ஓட்டத்தைச்

சுற்றோர் தடுப்பதில்லை


எண்ணங்களின் ஓட்டத்தை

நாமே தடுப்பதில்லை


எரிகின்ற நேரத்தில்

எழுந்தோட எழும்பும்


உடலின் ஓட்டத்தைத்

தடுத்துப் படுக்க வைப்பான்


கருமமே கண்ணான

சுடுகாட்டுக் காவலாளி


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 16 செப்டம்பர், 2024

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை 

--------------------------------


முற்றிய முதுமை நோயில்

முனகும் அவள் கண்ணுக்குள்


முதலிரவுக் கணவன் முகம்

முதற்பிள்ளை பிரசவ நாள்


அப்பாவின் அமைதி முகம்

அம்மா சுட்ட தோசை


அலுவலக நண்பர் அரட்டை

ரெயிலுக்கு ஓடிய ஓட்டம்


தங்கச்சி கல்யாண மண்டபம்

மதுரை சென்னை கோவை


தம்பி படித்த கல்லூரி

வீட்டு மாடி நிலா


பாட்டி பாடிய பாட்டு

டிவி சினிமா நாடகம்


கோயில் கோபுரம் சூடம்

சலங்கை சத்தம் பாட்டு


வெயில் காற்று மழை

விண் விண் வலி


காட்சியும் உணர்ச்சியும் கலந்து

காணாமல் போகும் வலி


------------------நாகேந்திரபாரதி


My Poems/Stories in Tamil and English 


ஒற்றைச் செருப்பு - கவிதை

ஒற்றைச் செருப்பு - கவிதை 
———-
கலவர அவசரத்தில்
கழன்று விழுந்ததா

ஓடும் பஸ்ஸில்
உதறி விழுந்ததா

வேண்டாம் என்று
விட்டு எறிந்ததா

கொஞ்ச தூரத்தில்
ஜோடி கிடக்குமென

எடுத்துப் போகிறான்
ஏழை ஒருவன்

———-நாகேந்திர பாரதி




ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தோட்டத்துப் பூ - கவிதை

 தோட்டத்துப் பூ - கவிதை 

------------------


மணத்தைப் பரப்பி விட்டு

மண்ணுக்கு வா என்றது

மண்ணில் கிடந்த சருகு ஒன்று


இன்னும் கொஞ்ச நாள்

இருந்துவிட்டு வருகிறேன் என்றது

இன்று பூத்த பூ ஒன்று


அது காற்றின் கையிலும்

அதோ அந்தக் கடவுள் கையிலும்

என்றது சருகு


அந்தக் கடவுள் கையில்

பூக்கூடையோடு

வந்து கொண்டு இருந்தார் .


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சூழலும் சுழலும்- கவிதை

 சூழலும் சுழலும்- கவிதை 

-------------------------


குளத்தில் மூழ்கிய கல்லாக

மூழ்கிப் போனான்

முண்டாசுக் கவிஞன்

வறுமைச் சூழலாய்


விழுந்த கல் அதிர்வு

விரிந்து விரிந்து

கரையைத் தாண்டி

கவிதைச் சுழலாய்


-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 5 செப்டம்பர், 2024

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை 

-------------------------

கள்ளு இறக்கிய காலத்தில்

காத்துக் கிடந்தவர் பல பேர்


கதிர் அறுத்த காலத்தில்

கஞ்சி குடித்தவர் பல பேர்


காஞ்சு போன காலத்தில்

மட்டை உரித்தவர் சில பேர்


உறிஞ்சு விழும் சட்டத்தில்

முதுகு சொறிந்தவர் சில பேர்


கூட இருந்த பனையெல்லாம்

விறகாகவும் வீடாகவும்


ரோடு தெரிகிறது

பஸ் சப்தம் கேட்கிறது


பஸ்சுக்குள் ஒரு பையன்

கை அசைப்பது தெரிகிறது


ஒத்தைப் பனைமரம் இன்னும்

எத்தனை நாளைக்கு


-------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை

 எலெக்ட்ரிக் ட்ரெயின் அனுபவஸ்தை - நகைச்சுவைக் கட்டுரை 

----------------------------------------


 அந்தக் கால மீட்டர் கேஜ் எலக்ட்ரிக் ட்ரெயின் அனுபவ அவஸ்தைகளை பற்றியது இந்தக் கட்டுரை .


முதல்ல குரோம்பேட்டை வாசம் . அப்புறம் கோடம்பாக்கம். அப்புறம் நங்கநல்லூர். இப்படிப் பல இடங்களில் இருந்து மீட்டர் கேஜ் ட்ரெயின்ல பீச் ஸ்டேஷன் போயி இந்தியன் பேங்க் தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்த நாட்கள். தாம்பரம் ,சானிடோரியம் தாண்டி குரோம்பேட்டை. குரோம்பேட்டை ஸ்டேஷனில் வந்து ஏறும் பொழுதே நாம் லேடிஸ் கம்பார்ட்மெண்ட் இல்லாத இடமாக, ஃபர்ஸ்ட் கிளாஸ் இல்லாத இடமாக பார்த்து நின்றாலும் கூட , நாம் நிற்கின்ற இடத்தில் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்ட் வந்து நிற்கும் அது என்ன ராசியோ தெரியாது. பிறகு நாம் ஓடிப்போய் ஜென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறும் போது அங்கே ஏற்கனவே 10 , 15 பேர் ஏறி இடித்து பிடித்துக் கொண்டு ஓரத்தில் தொங்கி உள்ளே நுழைந்து கஷ்டப்பட்டு நிற்க வேண்டியதா இருக்கும்.


அடுத்த ஸ்டேஷன் பல்லாவரம். அதில் வந்து ஒரு பாகவதர் கோஷ்டி ஏறும். தங்கள் குரலைப் பற்றிய எந்தக் கவலையும் படாமல் ,அதைப் பற்றிய எந்த குற்ற உணர்வும் கூட இல்லாமல் அவர்கள் பாடுவதைக் கேட்கின்ற ஒரு அனுபவம் அல்லது அவஸ்தை . யார் வேண்டுமானாலும் பாடலாம், எப்படி வேண்டுமானாலும் பாடலாம், நாமும் பாட வேண்டும் என்கின்ற  ஆரம்ப விதை அப்போதுதான் மனதுக்குள் விழுந்ததோ என்னமோ தெரியவில்லை .


அடுத்து திரிசூலம் மீனம்பாக்கம் ,பழவந்தாங்கல் என்று தாண்டி ,மௌண்ட், கிண்டி வரும்பொழுது சில பேர் இறங்குவார்கள் அப்பொழுது நமக்கு அந்த இரண்டு சீட்டுகளில் அது மீட்டர் கேஜ் வண்டிதானே இரண்டு சீட்டுகளின் ஓரத்தில் அந்த ரெண்டரை சீட்டில் உட்காருவதற்கு இடம் கிடைக்கும். அதில் ஒரு மாதிரி இடித்துப் பிடித்துக் கொண்டு உட்காருவோம். அடுத்தது மாம்பலம் , கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்பட் என்று எக்மோர் வந்த பிறகுதான் முழுமையான ஒரு சீட்டு கிடைக்கும் உட்கார .


அதுவரை அந்த இடைஞ்சலுக்குள்ளும் சிலர் செயினைப் பிடித்து தொங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டும் வருவார்கள். சுற்றி நெருக்கி நிற்கும் மக்கள் கூட்டம் ஒரு சப்போர்ட். ஸ்டேஷனில் நிற்கும் வண்டியின் ஜெர்க் எல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது. . ஆனால் , அவர்களின் பலத்த குறட்டை தான், மற்றவர்களை ஏதாவது செய்யும்.


இன்னும் சிலர் தினத்தந்தியோ இந்து பேப்பரோ நான்காக மடித்து அதை ஒருகையில் பிடித்தபடி மறு கையில் செயினை பிடித்துத் தொங்கிக்கொண்டு , படித்துக் கொண்டு வருவார்கள். நம்மிடமும் தினத்தந்தி இருக்கும் .ஆனால் உட்கார்ந்து பிறகு படிக்கலாம் என்று வைத்திருப்போம் . இப்பொழுது எக்மோரில் உட்கார இடம் கிடைத்த பிறகு ஒரு மாதிரி உட்கார்ந்து பேப்பரை விரித்துப் படித்தால் இரண்டு பக்கமும் இரண்டு தலைகள் வந்து பேப்பருக்கு முத்தம் கொடுக்கும். பேப்பரைப் படிக்கிறார்களாம் . நாம் வேற வழியில்லாமல் ஆளுக்கு ஒரு சீட்டை பிரித்துக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவோம் .


சிலபேர் 'அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்கணும் சார் சீக்கிரம் படிச்சிட்டு தந்துர்றேன்' என்று வாங்குவார்கள் . நாம் அவர்களை நம்பி பேப்பரைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்கும். அவர்கள் பேப்பரோடு இறங்கி போயே போயிருப்பார்கள் அதற்குப் பிறகு பேப்பரை விட்டு விட்டு குமுதம் போன்ற வீக்லி கொண்டு வர ஆரம்பித்தோம். அதில் தலை ஈடுபாடு, இடிபாடு பிரச்சனை கிடையாது . சின்ன பக்கங்கள் தானே . இது படிக்கிற அவஸ்தை .


இதற்கு நடுவில் பத்து ரூபாய்க்கு மூன்று என்று கர்சீப் விற்பவர்கள் வருவார்கள் ஏதோ ஒரு ஆசையில் அவற்றை வாங்கி வந்து அந்த மொடமட கர்சீப்பை கு வீட்டில் வந்து துவைத்த பிறகு தான் அதை உபயோகப்படுத்த முடியும் . ஒருமுறை கூட்டம் குறைவாக இருந்து ஓரமாக வேர்வை முகத்தோடு உட்கார்ந்திருந்த அவர் , கூட்டம் ஏறும் பொழுது திடீரென்று மொத்த கர்சீப்புகளையும் வைத்து முகத்தின் வேர்வையை துடைத்து விட்டு அதை உதறிவிட்டு 'பத்து ரூபாய்க்கு மூன்று' என்று சொல்லிவிட்டு விற்க ஆரம்பித்தார் அத்தோடு கர்சீப் வாங்குவது நின்றது. சில ஹோட்டல்களிலோ இல்லை கையேந்தி பவன்களிலோ பார்த்திருப்போம் .பெரிய தோசைக் கல்லின் மேல் 'சோய்' என்று எண்ணெய் ஊற்றி விட்டு ஒரு பெரிய விளக்குமாறை வைத்து அடித்துத் தேய்ப்பார்கள் அந்த விளக்கமாறு ஒரு அழுக்கு விளக்கமாறாக இருக்கும். அதற்கு பிறகு அந்த மாதிரி இடங்களில் தோசை சாப்பிடுவதுஇல்லை. ஆனால் பெரிய ஹோட்டல்களிலும் உள்ளே கிச்சனில் என்ன மாதிரி விளக்குமாறு வைத்திருப்பார்கள் என்று தெரியாது .


அது போல் இங்கே கர்சீப் வாங்குவது நின்றது. இதற்கு நடுவிலே கூட்டத்திற்கு நடுவே அந்த இடைஞ்சல்களுக்கு நடுவிலும் கால்களை மடித்து ஊர்ந்த படி சிலர் கையை நீட்டி காசு கேட்க , கொடுப்பதற்கு என்றே நாம் ஒரு ரூபாய் காயின்ஸ் கொண்டு போய் இருப்போம். ஒரு ரூபாய் காயின்ஸ் கொடுத்தால் முறைத்துப் பார்த்து வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஐந்து ரூபாய் கொடுப்பவர்களுக்கு ஒரு கும்பிடு கிடைக்கும். .ஒருமுறை இதுபோன்று காலை மடக்கி ஊர்ந்து வந்த ஒருவர் வாசலுக்கு சென்று இறங்கும் நேரத்தில் ரயில் கிளம்பி விட்டதால் டக்கென்று எழுந்து நின்று இறங்கி ஓடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது . எப்படி அவருக்குக் கால்கள் முளைத்தன என்று யோசித்து அதற்கு பிறகு அந்த ஒரு ரூபாய் தர்மம் நிறுத்தப்பட்டது .


இப்படியாக பிரயாணத்தில் வந்து சேருகின்ற பலரைப் பார்ப்பதே ஒரு அனுபவமாக இருக்கும். பல நண்பர்கள் வந்து பேசுவார்கள் . மற்றும் அங்கு இருக்கும் ஜனங்கள் பேசும் அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கேட்கும் பொழுது இவர்களில் யாராவது ஒருவர் ஒரு காலத்தில் தமிழக முதல்வராகவோ தமிழக சூப்பர் ஸ்டார் ஆகவோ , மிகப்பெரிய இலக்கிய ஆளுமையாகவோ மாறுவதற்கு சந்தர்ப்பம் உண்டு என்று யோசித்தது உண்டு . ஆனால் அவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை ரிட்டயர் ஆன பிறகு நண்பர்கள்  whastspp குழுக்களில் சேர்ந்து பேசுவது பாடுவது எழுதுவது இல்லை எதையாவது ஃபார்வேர்ட் பண்ணுவது என்று இருக்கிறார்களோ என்னவோ .



இதுபோன்று நமது பிரயாணம் குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் வரை செல்லும். திரும்பி வரும் பொழுது ஓரளவு சவுரியமாக இருக்கும். ஏனென்றால் அங்கிருந்து தானே ரயில் கிளம்புகிறது .எனவே நிற்கின்ற ரயில்களில் இடம் இருக்கின்ற ரயிலாக பார்த்து ஓரமாக உட்காருவோம் .அதுவும் டிரெயின் போகும் பாதையின் நேரான ஓரத்தில் உட்கார்ந்தால் முகத்தில் காபி இன்னும் பல அபிஷேகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மறுபக்கம் சென்று ஓரத்தில் உட்கார்ந்து கொள்வோம்.


அப்பொழுது நிலக்கடலை விற்பவர்கள் எல்லாம் வருவார்கள் . சூடாக, மண்ணாக இருக்கும் அந்த மண், மற்றும் தோலோடு சேர்த்து விட்டமின்களை விட வேண்டாம் என்று சாப்பிடுவோம். ஆனால் எதிர்த் தரப்பில் இருப்பவர் வேறு எண்ணத்தோடு இருப்பார். அந்த நிலக்கடலை தோல், மண் எல்லாம் ஊதி விடுவதற்காக தனது உள்ளங்கையில் எடுத்து வைத்து ஊதும் பொழுது அந்த மண்ணோடு சேர்ந்து அந்தத் தோல் துகள்களும் சேர்ந்து நம் கண்களை மறைக்கும். பார்த்துவிட்டு 'சாரி' என்று சொல்லுவார் மறுபடி அடுத்த முறை உள்ளங்கையில் போடும் பொழுது நம்மைப் பார்ப்பார் நாம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம். நாம் கண்களை மூடிக்கொண்டு வருவோம். ஆனால் காதுகள் திறந்திருக்கும் . அதை மூடுவதற்கு வழி இல்லையே . பார்ப்பது, பேசுவதைக் குறைக்க வேண்டும், என்று கண்ணையும் வாயையும் மூட வழி செய்து அதிகம் கேட்க வேண்டும் என்று காதுகளைத் திறந்து வைத்துள்ள இயற்கையின் படைப்பை வியந்து கொண்டு, கேட்டுக் கொண்டு வருவோம்.


அங்கே குடும்ப வாழ்க்கை அலுவலக வாழ்க்கை என்று அத்தனையும் அலசப்படும் அத்தனையும் தாண்டி அந்த பேச்சிலே அவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த ரயில் வாழ்க்கையே அவர்களுக்கும் நமக்கும் ஒரு தனி வாழ்க்கையாக தான் இருக்கும் அந்த பீச் ஸ்டேஷனில் இருந்து திரும்பி குரோம்பேட்டை வருவது மறுநாள் காலை குரோம்பேட்டையில் இருந்து பீச் ஸ்டேஷன் செல்வது என்று அந்த ஒரு மணி நேர வாழ்க்கை, அது ஒரு வித்தியாசமான வாழ்க்கை , பல மனிதர்களுடன் சேர்ந்து பழகிய அவர்களுடைய வாழ்வை எல்லாம் அனுபவித்த வாழ்க்கை. சென்னையின் முக்கிய அங்கமான அந்தப் பழைய கால மீட்டர் கேஜ் எலெக்ட்ரிக் ட்ரெயின் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


புதன், 28 ஆகஸ்ட், 2024

ஒத்தையடிப் பாதை - கவிதை

 ஒத்தையடிப் பாதை - கவிதை 

----------------------

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்

அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை


வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதை

கண்மாய் மேட்டினிலே ஒரு பாதை


காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலே

குறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை


புல்லும் பயிரும் அமுங்கிப் போய்

புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை


நடந்து போன மனிதர்களின் வாழ்க்கையிலே

கடந்து போன காட்சிகளும் எத்தனையோ


பாலகனாய் நடந்தவனின் பாதம் பட்டு

பழக்கத்தில் குழைந்திட்ட பாசப் பாதை


சேர்ந்து போன தம்பதியர் சிரிப்புப் பேச்சில்

சில்லென்று சிலிர்த்திட்ட சின்னப் பாதை


விவசாயி தலைச் சுமையைக் கால்கள் வாங்கி

இறக்கிட்ட இறுக்கத்தில் இழந்த பாதை


வயோதிகம் தாளாமல் தள்ளாடி

வருகின்ற முதியோரைத் தாங்கும் பாதை


பருவங்கள் பலவாக மாறி மாறி

வந்தாலும் அங்கேயே அந்தப் பாதை


-----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

கண்மாய்க் காலம் - கவிதை

 கண்மாய்க் காலம் - கவிதை 

----------------------------------

காலையிலும் மாலையிலும்

கண்மாய்க்குப் போனதுண்டா

மழைக்காலம் ஆனாலும்

மறக்காமல் குடையுண்டா


வழுக்கி விட்ட களிமண்ணால்

வேட்டியிலே கறையுண்டா

கரையோரக் கல் மேலே

காலோரம் தேய்த்ததுண்டா


கண்மாயைக் கலக்கி விட்ட

தொபுக்கடீர்க் குதியல் உண்டா

இடுப்புத்துணி பிழிந்தெடுத்து

தலை துவட்டி எழுந்ததுண்டா


பரீட்சைக்குப் படிப்பதற்குக்

கரையோரம் கோயில் உண்டா

பால் பருவக் காதலுக்குப்

படிக்கட்டும் அங்கு உண்டா


தண்ணியிலே ஓட்டுச் சில்லை

தத்திப் போக வைத்ததுண்டா

உண்டென்ற பதிலிருந்தால்

இல்லை என்ற ஏக்கம் உண்டா


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



திங்கள், 19 ஆகஸ்ட், 2024

குடையும் கோட்டும் - சிறுகதை

 குடையும் கோட்டும் - சிறுகதை 

---------------------------------


சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை சொல்லும் கதைகளில் அடங்கி இருக்கும் நினைவுகளுக்காகவே அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறார் அவர். அந்தக் கோட்டு மட்டும் என்னவாம். குளிரை மட்டுமா தாங்கிற்று . எத்தனையோ நினைவுகளைத் தாங்கியபடி இப்போது தளர்ந்து தொங்கியபடி தன்னைப் போல்.


லேசான சிரிப்பு வந்தது. மனைவியின் நினைப்பு . இந்தப் பர்வதம் மட்டும் என்னவாம். எப்படித் தள தள வென்று இருந்தாள் . இப்போது தொள தொள வென்று . அவளிடம் சொல்லிவிட வேண்டும் இந்த வார்த்தை விளையாட்டை. 'பாரு' என்று கூப்பிட்டார்.' என்னவாம் ' என்றபடி அடுப்படியில் இருந்து திரும்பிய பார்வதியின் மூக்குத்தியில் பட்டுத் தெறித்த சாயங்கால சூரிய ஒளி இவர் கண்களைக் கூசச் செய்தது. ' ஏன் கண்ணைச் சுருக்கிறீங்களாம் ' .


. இல்லேம்மா , இந்த வயசிலும் உன் அழகு என் கண்ணைக் கூச வைக்குதுடி ' என்று சிரித்தவர் . 'இல்லே , முந்தி நீ தள தள இப்போ தொள தொள ' என்றதும் கோபம் வந்தது போல் முகத்தை வைத்துக் கொண்ட பார்வதி ' 'முந்தி நீங்களும் பலம் , இப்ப பழம் வேறு என்னவாம் ' என்று ஒரு 'வாம் ' மைச் சேர்த்து முடித்தாள் ,


'இல்லேடி, அந்தக் கோட்டையும் , குடையையும் பார்த்தேன் , பழைய நினைப்பு வந்துச்சு '

'என்னவாம் '

உனக்கு என் பொக்கை வாயாலே கேக்கணும் . சொல்றேன் . கல்யாணம் ஆன புதுசு . அந்த எம்ஜிஆர் சரோஜாதேவி படம் , அது என்ன , நாடோடி மன்னனா பார்க்கப் போனோமே , மதுரையில் தங்கம் தியேட்டரிலே , அப்பா என்ன மழை , என்ன குளிர், இந்த குடைக்குள்ளே உன்னைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு கோட்டையும் விரிச்சு உன் மேலே போர்த்தி விட்டு , வடக்கு மாசி வீதியிலே இருந்து , டவுன் ஹால் வரை சேர்ந்து போனோமே , ஞாபகம் இருக்கா '


'இருக்கு , படம் பார்த்துட்டு வந்து நீங்க மூணு நாள் காய்ச்சல்லே படுத்துக் கிடந்ததும் ஞாபகம் இருக்கு '

' அது என்னமோ , அப்பல்லாம் காய்ச்சல் ஒரு சுகம். பேசாம வேலைக்கு லீவ் போட்டுட்டு வீட்டுலே படுத்துக்கிடக்கிற சுகம், சுக்குத் தண்ணியிலே சரியாயிடும் காய்ச்சல் . அப்புறம் ஓமத்தண்ணீர் குளியல், அப்புறம் சாப்பிடுற சாம்பார் என்ன ருசி. இப்ப, கொரானாக் காலத்திற்குப் பிறகு காய்ச்சல் வந்தாலே பயமா இருக்கு ,ரெண்டு பேரும் பொழைச்சது மறுபிழைப்பாச்சே '


'அப்பவே போய்ச் சேர்ந்திருக்கணும் , இப்படி புள்ளைக ரெண்டும் ஒண்ணு அமெரிக்காவிலும் , ஒண்ணு லண்டன்லியுமா , வாரத்திற்கு ஒரு தடவை , வாட்ஸப் வீடியோவில் பார்த்துக்கிட்டுக் கிடக்கிறது ஒரு பொழைப்பா . அந்தக் காலத்திலே, ஆளும் பேருமா , எத்தனை சனம் வீட்டிலே, சமைச்சு மாளாது. கிராமத்திலே இருந்து வர்ற சொந்த பந்தம் கொண்டு வர்ற அரிசியும் , மிளகாயும் வருஷத்திற்குப் போதும். நம்மளும் , பஸ் பிடிச்சு கிராமத்திற்குப் போயிட்டு வரது என்ன, எல்லாம் கனவாய்ப் போச்சுய்யா '


' பழைய நினைப்பு வந்துட்டாலே, 'அய்யா ' போட்டு பேச ஆரம்பிச்சுடுவீயே , புள்ளே ' என்று கிழவரும் 'புள்ளே' க்குத் தாவினார்.

'ஏன்யா , உன் மடியிலே கொஞ்ச நேரம் தல சாயவா ' என்று மடியில் படுத்த பாருவின் தலை தடவி , காதை லேசாகக் கிள்ளி விட்ட சாம்பசிவத்தை ' சாம்பு ' என்று செல்லமாக அழைத்தாள் பாரு '


'அடிச் சக்கை , பாருக்குட்டிக்கு மூடு வந்துருச்சா , அந்தக் காலம்னா இப்ப நடக்கிறதே வேற ' என்று குறும்பாகச் சிரித்த அவரின் கன்னத்தைத் தடவி விட்ட பாரு ' புள்ளை இல்லாத வீட்டிலே , இல்லே பேரன் இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளி விளையாடுவான் ' ன்னு சொல்றது சரியாத் தான் இருக்கு ' என்று சிரித்தாள்.


' ஆமாம்டி, பேரன் ,பேத்தி எல்லாம் வந்தாச்சுல்லே, வருஷம் எப்படி ஓடிருச்சு . இப்பத் தான், கல்யாணம் ஆயி முதல் பையன் பிறந்த பச்சை உடம்போடு படுத்திருந்ததை பார்த்த மாதிரி இருக்கு , அடுத்த மகன் அடுத்த வருஷமே '

'ஆமாம்யா , உனக்குத்தான் பொறுக்காதே , பச்சை உடம்பாச்சே ன்னு கொஞ்சமாவது யோசிச்சியா ' நெருக்கத்தில் பேச்சு' வா போ 'என்று போவதை இருவருமே ரசித்தனர் .


அப்புறம் புள்ளைங்க படிப்பு, ஆபீஸ் ப்ரோமோஷன் , வீடு வாங்குறது , புள்ளைங்க அயல் நாடு , கிராமத்து நிலம் , வீடு வித்து புள்ளைங்க கல்யாணம், மெட்ராஸிலே வந்து வீடு வாங்கி , கிராமப் போக்குவரத்து நின்னு போயி, பெருசுக ஒண்ணொண்ணா போய்ச் சேர, இப்ப நம்மளே பெருசுகளாகி, என்னடி வாழ்க்கை இது '


'இது தான்யா வாழ்க்கை , எல்லாத்தையும் அனுபவிச்சுத் தானே ஓய்ஞ்சு போயிருக்கோம் , விடு எந்திரிச்சுப் போயி காபி போட்டுட்டு வர்றேன், இது ஒண்ணுதான், அன்னிக்கு போல இன்னிக்கும் . '

'அது மட்டும் இல்லேடி, அந்தக் குடையும் , கோட்டும் தான் '.


'போன் அடிக்குது, அமெரிக்கப் புள்ளையா , லண்டன் புள்ளையா , ஏதோ பெத்து வளர்த்த பாசத்திற்கு , வாரத்திற்கு முறை முகம் காட்டுதுங்க, பேரன் பேத்தியோட '

'யோவ் கண் கலங்காதீய்யா , உனக்கு நான் இருக்கேன், எனக்கு நீ இருக்கே , கூடவே '

'எத்தனை நாளைக்கோ , போறப்ப சேர்ந்தே போயிடணும் தாயி '


============== நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

சாவித்ரி - சிறுகதை

 சாவித்ரி - சிறுகதை 

---------------

வைத்த பூ வாடவில்லை. கட்டிய சேலை கசங்கவில்லை. . அன்று மாலை சேகருடன் சேர்ந்து நின்று கொண்டு, வந்த நண்பர்களை வரவேற்றுக் கொண்டு ,அவன் காதோடு சொல்லும் ஜோக்குகளுக்கு சிரித்துக் கொண்டு, திருமண வரவேற்பு மேடையில் நின்ற நினைவு அழியவில்லை. இதோ மருத்துவமனையின்அவசர வார்டின் வாசலில் அமர்ந்து முழங்காலில் கவிழ்ந்த முகத்தில் வழியும் கண்ணீர் ஓயவில்லை .


ஒரு மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டன.சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று நெஞ்சை பிடித்து விழுந்தவன் நினைவு இழக்க, என்னவென்று புரியாமல் அனைவரும் தடுமாறிய நேரத்தில் அவள் தான் அவனை எடுத்து மடியில் கிடத்தி , ஆம்புலன்ஸ் என்று அலற, இதோ அந்த ஆஸ்பத்திரியில் உள்ளே உயிருக்குப் போராடிய நிலையில் அவன் மருத்துவர்களின் கவனிப்பில் , ஓரத்தில் ஓடும் மானிட்டரில் லேசாக வளைந்து நெளிந்த அந்தக் கோடு இப்போது அமைதி அடைந்து நேர் கோடாய். மார்பில் கருவிகளும் மருத்துவர்களும் கொடுக்கும் அழுத்தம் அந்தக் கோட்டை உயிர் பெறச் செய்யவில்லை .


இவள் எதிரே அருவமாய் நிற்கிறான் சேகர். ' மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன் . ' இந்தக் குரல் அவளுக்குக் கேட்குமா . அவள் நினைவெல்லாம் அவனோடு பழகிய அந்த நாட்களில் . அவன் நடத்தி வந்த அந்தக் காபி ரெஸ்டாரண்டில் அவர்களின் சந்திப்பு. அவள் தோழிகள் இந்த இடத்தின் காபியின் மகிமையைப் பற்றிச் சொன்ன வருணனைகள் , காபி ப்ரியையான இவள் ஆவலைத் தூண்டி விட சென்றிருந்தாள் அன்று மாலை. .


உள்ளே நுழைந்தவுடன் வந்த அந்த வாசனை, உயர்தரக் காபிக்கொட்டை வறுபடும் வாசனை, அத்துடன், மெல்லிய வெளிச்சத்தில் சேர்ந்தே ஒலித்த சுசீலாவின் மென்குரலில் பழைய சினிமாப் பாடல் ' தண்ணிலவு தேன் இறைக்க ' என்று ஒரு இன்ப அனுபவத்தை இழைக்க ஆரம்பித்தது. இனி இங்கு தான் , 'மாலை நேரக் காபி ' என்று அவள் முடிவெடுத்த நேரம் அவன் குரல் . ' நல் வரவு அனைவர்க்கும் ' . சிரித்த முகத்துடன் சேகர் .


இவன் தங்களுடன் கல்லூரியில் படித்த அதே சேகரா . 'சேகர்' என்றதும் அவள் தோழிகள் ஒரே குரலில் ' ஆமாம் , அதே சேகர் தான், நம்முடன் படித்த அதே சேகர் தான். நாம் எல்லாம் படித்து முடித்து வேலைக்கு அலைந்து கொண்டு இருந்த போது , இவன் சுய தொழில் ஆர்வத்தில் , இந்த காபி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து , இன்று சென்னையின் முக்கிய தொழில் அதிபர். காபி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் அத்தனையும் முடித்து, உலகின் சிறந்த காபிக் கொட்டைகளை இறக்குமதி செய்து , அவனுக்கு மட்டுமே தெரிந்த முறையில் அதைப் பக்குவப்படுத்தி சுவையான காபித் தூள் தயார் செய்து ஏற்றுமதி செய்வது மட்டும் அல்லாமல், அந்த காபித்தூளின் ரகசியம் தெரிந்தவன் என்ற முறையில் சேர்க்க வேண்டியதைச் சேர்க்கின்ற முறையில் சேர்த்து இங்கு கிடைக்கும் காபியின் ருசி சென்னையில் எங்குமே கிடைக்காது என்று எங்களுக்கு நமது வாயாடி வரலக்ஷ்மி மூலம் நேற்று தான் தெரிய வந்தது. உனக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று விபரம் சொல்லாமல் அழைத்து வந்தோம். '


'பெரிய தொழில் அதிபர் ஆனாலும் மாலையில் இங்கு வந்து தானே கஸ்டமர்களுக்கு காபி கலந்து கொடுப்பதில் அவனுக்கு ஒரு இன்பம்.'


'என்னடி அப்படியே சேகரைப் பார்த்துக்கிட்டே நிக்கிறே , அங்கே போய் உட்காரலாம் ' என்றவுடன் திடுக்கிட்டுச் சுதாரித்தவள், சற்று வெட்கத்துடன் அவர்களுடன் சேர்ந்து சென்று வீதியைக் கண்ணாடி வழி பார்க்கும் அந்த இடத்தின் மென்மையான சோபாவில் சென்று அமர்ந்தாள்.


கல்லூரியில் அவனுடன் சேர்ந்து பாடிய இசை நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. 'இவன் எஸ் பி பி , இவள் பி சுசீலா ' என்று தோழிகள் உசுப்பி விட்ட ஞாபகம் வந்தது. அது கடந்த காலம். இளமை உணர்வுகள் துள்ளி எழுந்தாலும், அவன் நெருங்கி நெருங்கி வந்தாலும் , குடும்பச் சூழ்நிலையில் படிப்பு, வேலை என்ற எதிர்கால நினைவுகளோடு அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கித்தள்ளி அவள் நாட்களை ஓட்டிய காலம்.


எல்லாம் மறந்து , ஒரு அயல் நாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இப்போது . பெற்றோர் பார்க்கும் வரன்களை எல்லாம் மறுத்து விட்டு, நிறுவனத்தின் முன்னேற்றமே குறிக்கோளாய் , உழைப்பு உழைப்பு. என்று வாழ்க்கை இதோ அந்தப் பழைய உணர்வுகளை உசுப்பி விட அவன் மறுபடியும் அவள் எதிரே.


' நமது பழைய நண்பர்களுக்காக நானே தயார் செய்த ஸ்பெஷல் காபி ' என்றபடி தட்டில் ஏந்தி வந்த ஐந்து வண்ணமயக் கோப்பைகளை அவர்கள் முன் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்தான். அத்தனையிலும் மேலே 'இதய சின்னம் ' ததும்பியது. 'எங்களை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பதற்கு மிக்க நன்றி சேகர் ' என்ற சுமித்ராவிடம் ' எப்படி மறக்க முடியும், அதுவும் இந்த 'பி சுசீலா' மேடத்தை ' என்றவன் இவளைப் பார்த்த பார்வையில் தெரிந்தது என்ன .


கல்லூரி விழாக்களின் ஜோடிப் பாடல்களின் நினைப்பா. அல்லது வேறு எதுவுமா .குழப்பம் இவளுக்குள் . ஒரு சிரிப்பை உதிர்த்து ' தேங்க்ஸ் சேகர் ' என்றாள் . 'உங்கள் அலுவலகம் எல்லாம், இங்கே நுங்கம்பாக்கத்தில் பக்கத்தில் தான்' என்று சுமித்ரா ஏற்கனவே சொல்லி விட்டார்கள், இனி மாலை நேரம், இங்கு தான் உங்கள் காபி நேரம், அரட்டை நேரம் ' என்று மென்மையாகச் சிரித்தான். 'ஸ்யூர் ' என்ற சுமித்ராவை முறைத்தாள் சாவித்ரி. '


'எனக்கு வேலை ..' என்று இழுத்தவளை , ' காபியைச் சாப்பிடுங்கள் ' என்று சொல்லி விட்டு மற்ற கஸ்டமர்களைக் கவனிக்கச் சென்று விட்டான் சேகர். அங்கும் இங்கும் அவன் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் விதமும், வேகமும் , அவனின் சிரிப்பும் , இவள் மனதை அலைக்கழித்தன .காபியை அருந்த ஆரம்பித்தவுடன் தெரிந்தது. இவளுக்கு இனிப்பு கொஞ்சம் அதிகம் வேண்டும். அது அளவோடு இருந்தது .


அந்தக் கப்போடு எழுந்தவளை , 'இங்கேயே இருக்குடி , இன்னும் கொஞ்சம் போட்டுக்க ' என்றவர்களிடம் ' இல்லே, இனிமே , தினசரி வரணும் இல்லையா, அவன் கிட்டேயே சொல்லிட்டு வந்துடறேன் ' என்று சென்றவளை நமட்டுச் சிரிப்போடு அனுப்பி வைத்தனர் தோழிகள்.


அவன் இருக்கும் அந்த காபி கவுண்டர் பக்கம் சென்றவள், 'எனக்கு எப்பவும் கொஞ்சம் இனிப்பு அதிகம் இருக்கணும் ' என்று கப்பை நீட்டினாள் . ஒரு சிறிய கப்பை எடுத்து , இவளின் பெரிய கப்பில் இருந்து ஒரு பக்கம் சிறிது ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் ' சாரி ' என்று சொல்லி விட்டு , அவளது கப்பின் அடுத்த முனையில் இருந்து கொஞ்சம் ஊற்றி சுவைத்துப் பார்த்தவன் மிகவும் மெதுவாகச் சொன்னான்.


' இது இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி' என்றவன் ,' ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா ' என்று அப்பாவி போல் சொல்லிவிட்டுத் திரும்பி , புதியதாக மற்றும் ஒரு பெரிய கப்பில் ஆவி பறக்க அவளுக்குத் தேவையான இனிப்பின் அளவோடு காபி கலந்து , மேலே அந்த இதயம் சின்னத்தை வரைந்து கொடுத்தான் .


அவன் சொல்லி விட்டு உடனே திரும்பி விட்டானே , இவளின் சிவந்த முகத்தைப் பார்க்காமல் , அந்தக் கூடுதல் சிவப்பு கோபத்தாலா , நாணத்தாலா , குழப்பத்தாலா , அந்த வார்த்தைகள் இன்னும் அவள் காதுகளில் . 'இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் இனிப்பு கூடுதலா இருக்கே எப்படி, , ஓ , இந்தப் பக்கம் நீங்க இதழ் வைத்து சுவைத்த பக்கமா '. ஒன்றுமே பேசாமல், காபிக் கோப்பையோடு வந்து அமர்ந்தவள் மனதில் ' எவ்வளவு தைரியம் இவனுக்கு ' என்ற எண்ணத்தோடு கூடவே ' எவ்வளவு உரிமை இவனுக்கு ' என்ற எண்ணமும் சேர்ந்து வந்து ஆக்கிரமித்தது .


இருவரின் கல்லூரிக் கனவுகளின் இடைவெளி குறைந்து இப்போது நெருங்குகின்றனவா. விடை பெறும்போது ' அடிக்கடி வாருங்கள் ' என்று அனைவரிடமும் சொல்லி விட்டு ' இவளிடம் திரும்பி ' ப்ளீஸ் ' என்று அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்த அந்த வேண்டுதல் அவளுக்குப் பிடித்து இருந்தது .


இப்படித் தொடர்ந்தது தான் ,இன்று மாலை இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ரிசப்ஷனில் முடிந்தது . அவன் வாழ்வும் முடிந்தது திடீரென்று . இப்போது அருவமாய் நிற்கும் அவன் வார்த்தைகள் அவள் காதுகளில் விழாதுதான் . இருந்தும் மறுபடி சொன்னான். 'மன்னித்து விடு சாவித்ரி , நாம் சேர்ந்து வாழக் கொடுத்து வைக்கவில்லை, சென்று வருகிறேன்'.


நிமிர்ந்தாள் . அலறினாள். ' முடியாது , என்னை விட்டு நீ போக முடியாது , ஒரு முறை கல்லூரியில் விட்டுச் சென்றாய், அது போதும். இப்போது வந்து விட்டாய். இனி மேல் உன்னை விட மாட்டேன், விட மாட்டேன் ' என்று எழுந்து நின்று அவள் கத்திய அலறலில் , அங்கிருந்த அனைவரும் இவள் பக்கம் ஓடி வர, அவளின் கண்களில் கனன்ற அந்த பார்வையின் உக்கிரம் அந்த அருவத்தை அழுத்திச் சென்று உள்ளே கிடக்கும் சேகரின் உருவத்தில் சேர்க்க, அந்த உருவம் துள்ளியது. மானிடரின் நேர்கோடுகள், நெளிந்து வளைந்து செல்ல ஆரம்பித்தன. அவள் சாவித்ரி .


----------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


தாய் உள்ளம் - சிறுகதை

 தாய் உள்ளம் - சிறுகதை  ------------------------- எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவ...