ஞாயிறு, 14 டிசம்பர், 2025

சமூகத்தின் சிற்பி - கவிதை

 சமூகத்தின் சிற்பி - கவிதை 

———

(கவிதை வனம் குழுவில் ) 


எண்ணத்தில் தூய்மையும்

வாக்கில் உண்மையும்


செயலில் நேர்மையும்

சேர்ந்த எல்லோரும்


செதுக்கிச் சமைத்த

சமூகத்தின் சிற்பிகள்தான்


நேற்றிருந்த அவர்களும்தான்

இன்றிருக்கும் நாமும்தான்


நாளை வரும் மக்களுக்கும்

வழிகாட்டும் வாழ்க்கைதான்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


தொலை தூர நிலவு - கவிதை

 தொலை தூர நிலவு - கவிதை 

—-

( கவிதை வனம் குழுவில் )

தூரத்தில் இருந்தாலும்

நிலவின் ஒளி இறங்கி

பக்கத்தில் வந்துவிடும்


தூய அன்பைத் தரும்

நேயம் மிக்கோரும்

நிச்சயமாய் அப்படித்தான்


தூரத்தில் இருந்தாலும்

பக்கத்தில் இருந்தாலும்

நேரத்தில் உதவிடுவார்


நெருக்கத்தை உணர்வதற்கும்

நெஞ்சத்தை அறிவதற்கும்

தூரம் தடை அல்ல


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


நிறம் மாறும் மேகம் - கவிதை

 நிறம் மாறும் மேகம் - கவிதை 

-------------

( கவிதை வனம்  குழுவில் )

நிறம் மாறும் மேகங்கள்

-------------

காஞ்சு கெடுத்த

காலமொன்று உண்டு


வெளுப்பு கருப்பாகக்

காத்திருந்த காலம்


பேஞ்சு கெடுத்த

காலமொன்றும் உண்டு


கருப்பு வெளுப்பாகக்

காத்திருந்த காலம்


விவசாயி விருப்பத்தில்

விளையாட்டு காண்பிக்கும்


மேகத்திற்குத் தெரியுமா

விளைச்சலின் அருமை


நிறம் மாற்றி விளையாடும்

நண்பர்களின் நெஞ்சமும்


கருப்பா வெளுப்பா

கவனித்துப் பார்ப்போம்


---------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 10 டிசம்பர், 2025

சக்தி - சிறுகதை

 சக்தி - சிறுகதை 

---------------

( கதை புதிது குழுவில் ) 


அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும்   சுறுசுறுப்பு .  அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின்  பள்ளி ,  கணவனுடன்  அனுசரணை  , அலுவலக ஆட்டோ, வேலை செய்வதிலும், வாங்குவதிலும் இருக்கும்  வேகம், விவேகம், திரும்பியதும் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் கிடைக்கும் அமைதியும் அறிவும். பூஜை அறையில் வெளிப்படும் அவளின் சங்கீதம், குடும்பத்துடன்  இயைந்த பரிவு, உணவு, இரவில் கணவனுடன் கொஞ்சம் போக்கு காட்டி பின்பு பூக்கும்  சரசம். இதுதான் சக்தி. 


வழக்கமான வாழ்வின் இடையில் வந்த குறுக்கீடு அந்த போன் கால். இதோ அவள் கையில் போனோடு , சிந்தனையோடு .  ஆம். அவனிடம் இருந்து தான் . கல்லூரிக் காலத்தில் பருவத்தின் கிளர்ச்சியில் கிடைத்த  ஒரு அனுபவத்தின் அடையாள ஆண்மகன். எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது இந்த போன் .


 'உன்னை மறக்க முடியவில்லை. நீ மணமுடித்துப் போனது தெரியும். கல்லூரியில் நீ திடீரென்ற நின்ற காரணமும் புரியும். என்னிடம் உன்னை  இழந்து விடுவாயோ என்ற பயத்தில் நீ  உடனே ஒத்துக்கொண்ட அந்த உடனடித்  திருமணத்தில் நீ மகிழ்ந்திருக்கலாம். ஊர் விட்டு ஓடி ஒளிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது.. உன்னைத் தேடிக்   கொண்டு இந்த டெல்லி வந்து சேர . உன் அலுவலகம். உன் கணவனின் அலுவலகம், உன் குழந்தையின் பள்ளி  எல்லாம் கண்டு கொண்டு, இன்டர்நெட் உதவில்  உன் போன் நம்பர் கண்டுபிடித்து இந்த போன். ஒருமுறை பார்க்க வேண்டும். பேச வேண்டும். போய் விடுகிறேன் உடனே . ஒத்துக்கொள். எப்போது வர.வேண்டும், உன் கணவன் இல்லாத நேரம் ' என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்து விட்டான்.


 ஒரு நிமிடம் யோசித்தவள், திரும்ப அதே நம்பருக்கு போன் செய்தாள்.

' இன்று மாலை ஆறு மணிக்கு வா, என் கணவர் இருக்கும் நேரத்தில் வா,.  நான் அவரிடம் நம் பழக்கம் பற்றி இது வரை ஒன்றும் சொல்லவில்லை. நீ வந்து முதலில் சொல்.  '

' பழக்கமா,  அது காதல் அல்லவா ' 

'இல்லை, அந்தப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் உன்னிடம். அதற்கு காதல் என்ற பெயர் இல்லை. இதோ, என் கணவனிடம்  எனக்கு உள்ளதே , இதற்குப் பெயர் தான் காதல். உனக்குப் புரியாது. வந்து எங்களைப் பார்த்தவுடன் உனக்குப் புரியும். எனக்கு அப்போதே இந்தப் பழக்கத்தின் போக்கைப்  பற்றிய புரிதல் வந்ததால்தான்  உடனே  விலகினேன். உனக்கு அது இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது. வந்து பார் எங்களிடம் பேசு , உனக்குப் புரியும். வா நண்பா'  என்று வைத்தாள் போனை. 


வழக்கம் போல் அந்த நாள் தொடர்ந்தது , அவளிடம் எந்த அதிர்ச்சியும், பரபரப்பும் இல்லாமல் . ஆட்டோ.  ஆபீஸ். அதே வேகம், விவேகம். மாலை வீடு . ஆறு மணி, குழந்தையுடன் விளையாட்டு. கணவனுடன் காபி. அவன் வரவில்லை. அவள் சொல்லவில்லை. அவள் சக்தி. 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


மழைத்துளியின் பயணம்- கவிதை

 மழைத்துளியின் பயணம்- கவிதை 

-------------

( கவிதை வனம் குழுவில் ) 


விண்ணில் இருந்து

விழுந்தது மண்ணில்

வெளியும் உள்ளும்

வாங்கியது பூமி


வெளியின் துளிகள்

குளமாய்க் குழியாய்

ஆறாய் அருவியாய்

வெள்ளமாய்க் கடலாய்


கடலில் சேர்ந்தது

மறுபடி மேகமாய்

விண்ணுக்கும் மண்ணுக்கும்

பரிசாய்ப் பாலமாய்ப்


பொங்கிப் பெருகி

முதலும் முடிவும்

ஒன்றென்று வாழ்வுக்கு

உணர்த்தி ஓயும்

------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


வேர்களின் வியர்வை - கவிதை

 வேர்களின் வியர்வை - கவிதை 

-------------

(கவிதை வனம் குழுவில் ) 


நட்பின் வளர்ச்சி

நம்பிக்கை நடத்தை


உறவின் வளர்ச்சி

உண்மை அன்பு


வாழ்வின் வளர்ச்சி

வற்றாத உழைப்பு


நாட்டின் வளர்ச்சி

நன்னெறி ஒழுக்கம்


தமிழின வளர்ச்சி

தாய்மொழிப் பற்று


விருட்சத்தின் வளர்ச்சி

வேர்களின் வியர்வை


------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தீபம் - ஹைக்கூக்கள்

 தீபம் - ஹைக்கூக்கள்

———

(கவிதை வனம் குழுவில் ) 


தூண்டிடும் திரியால்

துளிர்விடும் தீபம்

அன்பே குச்சி

——


அணையா தீபமொன்றை

நமக்குள் உருவாக்கும்

நம்பிக்கை நெருப்பு

——


இல்லையென்றால் இருட்டு

இருந்தால் வெளிச்சம்

அவளும் தீபமும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கரை சேரும் ஓடங்கள் - கவிதை

 கரை சேரும் ஓடங்கள் - கவிதை 

—————

(கவிதை  வனம் குழுவில் ) 


இன்பமும் துன்பமும்

இரண்டு பக்கங்கள்


மாறி வருபவை

மாற்றி வைப்பவை


வலியை அறிந்தால்தான்

வாழ்க்கை புரியும்


புரிந்த வாழ்க்கைக்கு

இரண்டும் ஒன்றுதான்


புயலைத் தாண்டி

கரை சேரும் ஓடம் தான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


திங்கள், 8 டிசம்பர், 2025

மௌனத்தின் மொழி - கவிதை

 மௌனத்தின் மொழி - கவிதை 

———-

( கவிதை வனம் குழுவில் ) 

ஓரப் பார்வையும்

உதட்டுச் சுழிப்பும்


மூக்குச் சிவப்பும்

முந்தானை உதறலும்


நாக்கு மடிப்பும்

நளின நடையும்


நீட்டும் விரலும்

நிமிர்ந்த கழுத்தும்


சொல்லாத குறிப்பையா

சொற்கள் சொல்லிவிடும்


மௌனத்தின் மொழி போதும்

மங்கையே வா பக்கம்


இதழில் எழுதிடவே

ஏராள மொழி உண்டு


——நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


தமிழெனும் அமுது - கவிதை

 தமிழெனும் அமுது - கவிதை 

——-

(கவிதை வனம் குழுவில் ) 

அறத்தையும் மறத்தையும்

அறிந்திடச் செய்ததால்


உறவையும் நட்பையும்

உணர்ந்திடச் செய்ததால்


நன்னெறி நடத்தையை

நமக்குள் கொடுத்ததால்


ஊட்டி வளர்த்ததால்

உருவாக்கி விட்டதால்


தாய்ப்பாலும் அமுது தான்

தாய் மொழியும் அமுதுதான்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


காத்திருப்பின் சுகம் - கவிதை

 காத்திருப்பின் சுகம் - கவிதை 

——-

( கவிதை வனம் குழுவில் ) 


பூத்திருக்கும் பூவும்

காத்திருந்தது மொட்டாக


பழுத்திருக்கும் பழமும்

காத்திருந்தது காயாக


இயற்கைக்கு மட்டுமா

வாழ்க்கைக்கும் காத்திருப்பே


காத்திருந்த கரு தான்

சிசுவாகி சிரம் காட்டும்


உழைப்பைக் கொடுத்துவிட்டு

சுகமாகக் காத்திருந்தால்


ஊதியம் மட்டும் அல்ல

உயர்வும் பதவியிலே


காரியத்தில் மட்டுமா

காதலுக்கும் காத்திருப்பே


காத்திருந்த சுகக்கனவு

காதலிலே சுபமாகும்


பார்த்திருந்த பாவையுமே

பரிவோடு கைப்பிடிப்பாள்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


புதன், 3 டிசம்பர், 2025

விடியலின் நம்பிக்கை - கவிதை

 விடியலின் நம்பிக்கை - கவிதை 

——

(கவிதை வனம் குழுவில் ) 


போகின்ற சூரியனும்

காலையில் திரும்புவான்


தேய்கின்ற சந்திரனும்

திரும்பவும் வளர்வான்


உதிர்கின்ற பூவுக்குள்

உருவாக்கும் விதை உண்டு


விழுகின்ற மழையால்தான்

விளைகின்ற பயிரெல்லாம்


போவதும் தேய்வதும்

உதிர்வதும் விழுவதும்


இயற்கையின் வழியிலே

எழும்பிட மலர்ந்திட


துன்பத்தின் தொடர்ச்சியாய்

வருவது இன்பமே


விடியலை நம்பிடு

விழுந்ததும் எழுந்திடு


——- நாகேந்திர பாரதி



My Poems in Tamil and English 


சமூகத்தின் சிற்பி - கவிதை

 சமூகத்தின் சிற்பி - கவிதை  ——— (கவிதை வனம் குழுவில் )  எண்ணத்தில் தூய்மையும் வாக்கில் உண்மையும் செயலில் நேர்மையும் சேர்ந்த எல்லோரும் செதுக்...