நானே நானா
- சிறுகதை
---------------
காற்றில் தவழ்ந்து
வந்தது வாணி ஜெயராமின் மென்மைக் குரலில் '
நானே நானா , யாரோ தானா, மெல்ல மெல்ல மாறினேனா '
சினிமாப் பாட்டு . கையில் இருந்த ஆல்பத்தில் தெரிந்த புகைப்படத்திற்கும் அந்தப் பாட்டுக்கும் இருந்த பொருத்தத்தை நினைத்து
கோமதியம்மாளுக்குப் புன்னகை வந்தது.
புகைப்படத்தில்
இருந்தது கோமு , குரங்கு பெடல் கோமு. அப்பாவிடம்
அடம் பிடித்து வாங்கிய அந்தச் சைக்கிளில் பத்து வயதில், சீட்டில் உட்கார முடியாமல், கம்பிக்கு இடையே கால் நுழைத்து குரங்கு பெடல் போட்டு
ஓட்டிய சந்தோசத்தை அப்படியே படம் பிடித்துக் கொடுத்த அப்பாவின் அன்பு இன்றைய எண்பது
வயது கோமதியம்மாளின் கண்களில் கண்ணீராய் நிறைந்தது.
கேமராக்கள்
அதிகம் வராத அந்தக் காலத்தில் அப்பாவின் அயலநாட்டு நண்பர் கொண்டு வந்து கொடுத்த அந்தக்
கேமராவில் அப்பா எடுத்துக் குவித்த புகைப்படங்களில் பெரும்பாலும் கோமு தான் , ஒவ்வொரு
வயதிலும்.
அந்தப் புகைப்படங்கள்
அடங்கிய ஆல்பம் தான், இப்போது சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடிய படி, மூக்குக் கண்ணாடியைத்
தூக்கி விட்டுக் கொண்டு அவள் பார்த்துக் கொண்டு இருப்பது. 'நானே நானா, மெல்ல
மெல்ல மாறினேனா', 'நானே தான் , ஆனால் வேக வேகமாக
மாறிவிட்டேன்' என்று வாய் முணுமுணுத்தது .
'குரங்கு பெடல்
கோமு' என்றும் சில சமயம் 'குரங்கு கோமு' என்றும், கூடப் படித்த பசங்கள் கிண்டல் செய்வதை
அப்பாவிடம் சொல்லி அவர்களுக்கு அடி வாங்கிக் கொடுத்ததும் ஞாபகம் வந்தது. ' கோமு கோபக்காரி
' என்று அப்பா செல்லம் கொஞ்சிய ஞாபகம். அந்தப் பசங்கள் விட்டார்களா அதோடு . தூரத்தில் நின்றபடி
வாயை மட்டும் அசைத்து ' குரங்கு கோமு ' என்று சொல்லிக் கொண்டு தான் இருந்தார்கள்.
பிறகு வந்த
படம் . முதன் முதலில் தாவணி போட்ட படம். பெரிய
மனுஷி போல் திமிராக நடந்து போன உயர்நிலைப்
பள்ளிக் காலம். பசங்க மட்டுமா, சில அங்கிள்களும் தன்னை திரும்பிப் பார்த்துப்
போவதை பெருமையாக நினைத்த காலம்.
கல்லூரிப் பருவத்தில்
தான் அது நிகழ்ந்தது. வேறு என்ன. அந்த எழவு காதல்தான். கவிஞர் மீரா கவிதைகளையும், கவிஞர்
மேத்தா கவிதைகளையும் சொல்லி அவள் மனதை வீழ்த்திய
சங்கர் . அயோக்கியன். மூன்று வருடங்கள் முழுதாகக் காதலிப்பது போல் நடித்து , சில இன்பங்களையும்
புரிய வைத்து , தன் பெற்றோர் காட்டிய பணக்காரப்
பெண்ணை மணமுடித்துப் போனான். அன்று கிடைத்த அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் தான்
அவளை உயிரோடு வாழ வைத்தன. அப்பா தவிர அத்தனை ஆண்களிடமும் வெறுப்பு.
அப்பாவும் இறந்தபின்,
எந்த ஆணைக் கண்டாலும் வெறுப்பு. 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்' என்று வெறித்தனமாக
படிப்பு , வேலை என்று உயர்ந்து ,மேலாளராகச் சேர்ந்த அந்தக் கம்பெனியின் ஆண்களை எல்லாம் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிய
காலம்.
அப்போது பருவத்தின்
உணர்வுகள் பொங்காமல் இல்லைதான். தீர்த்து வைக்க சில தோழிகள் கிடைத்தார்கள். பிறகு அதிலும்
ஆர்வம் இல்லை. வேலை , வேலை. பொது மேலாளர் ஆக
உயர்ந்து, ஓய்வு பெற்ற கூட்டத்திற்கு வந்திருந்தோர் மிகக் குறைவுதான். அதனால் என்ன.
அவள் கோமதியம்மாள். அனைவரையும் வேலை வாங்கியவள்
, கம்பெனிக்காக., அவளுக்காக அல்ல, நிறுவனத்தின்
முதலாளியின் பாராட்டுக்கள். மலர் மாலைகள். கணிசமான ஓய்வு ஊதியம்.
தொடர்ந்து எழுத்து.
அறுபது வயது முதல் எண்பது வயது வரை. எழுதிக் குவித்தாள். அவள் கதைகளில்
பெண்ணுரிமைக் கருத்துக்கள் பொங்கி நிரம்பி வழிய, எத்தனை பத்திரிகைகள். எத்தனை
பாராட்டுக்கள். எண்ணிக்கொண்டிருக்கும் போதே காற்றில் கலந்து வந்தது அடுத்த பாடல்.
' சொந்தம் இல்லை, பந்தம் இல்லை, வாடுது ஒரு பறவை , அது தேடுது தன் உறவை ' அன்னக்கிளி படத்தில் சுசிலாவின் சோகக் குரல்.
ஆம் கோமுவும்
தேடத்தான் செய்கிறாள், ஆனால், எந்த ஆணின் உறவையும்
அல்ல , இதோ இந்தப் புகைப்படத்தில் , குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டும் இந்தக் கோமுவின்
உறவைதான். 'அடியே , கோமு, வாடி, நான் நீயாக வேண்டும், அந்த பிஞ்சு மனதின் சந்தோசம்
வேண்டும், தருவாயாடி, வாடி ' என்றபடி கண்கள் மூட, இதழ்கள் கோமுவுடன் சேர்ந்த சந்தோஷத்தில்
புன்னகைக்க , ஆல்பம் நழுவியது. கையில் இருந்து.
கோமதியம்மாள், கோமுவாய் ஆனாள்.
-------நாகேந்திர
பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English