சனி, 3 அக்டோபர், 2026

கிளிப் பேச்சு – சிறுகதை

 கிளிப் பேச்சு – சிறுகதை

--------------

‘சொன்ன நேரத்திற்கு வருகிற பழக்கமே கிடையாது, அவரோட இந்தக் கவிதை புத்தகத்தில் எழுதியிருக்கிற முதுமை எனக்கு வந்தபின்தான் வருவார் போல  ' என்று  செல்லமான கோபத்தோடு காத்திருந்தவளையே உற்றுப் பார்த்தது அந்தச் சிவப்புக் கிளி .'ஏய் கிளி, என்னடி முறைச்சுப் பார்க்கிறே, அதான் பழம் கொடுத்து சாப்பிட்டு முடிச்சிட்டியே, கிளம்பிப் போக வேண்டியதுதானே. இன்னும் என்ன, என்ன படிக்கிறேன்னு கேட்கிறியா '


புரிந்தது போல் தலையை ஆட்டியது .சொல்றேன் கேளு, இது அவரோட , அதுதான் என்னோட அவரோட கவிதைப் புத்தகம் , என்னைப் பற்றி எழுதின கவிதை ஒண்ணு இருக்குன்னு  அந்த இடத்தை மடிச்சுக் கொடுத்திட்டுப் போயிருக்காரு. அதைத்தான் திரும்பத் திரும்ப படிச்சுக்கிட்டு இருக்கேன் . கேட்கிறியா ' 


' ம் ' என்பது போல் தலை ஆட்ட , அவள் சொன்னாள். ' எல்லோரையும் போல   அழகைப் பற்றி எழுதி இருப்பாருன்னு பார்த்தா அப்படி இல்லேடி, எங்களோட முதுமையைப் பற்றி எழுதி  இருக்காரு. கேளு . ' உன் இதழோர  ஈரங்கள் உலர்ந்தாலும், அந்த இதழில் நெளியும் புன்னகையில் என்றும் இளமை . உன் நாசியில் மூச்சு தடுமாறினாலும், அந்த மூக்கு நுனியின் கோபத்தில் என்றும் இளமை , உன் கண்ணோரம் கோடுகள் வந்து விட்டாலும் அந்தக்  கண்ணுக்குள் குதிக்கின்ற குறும்புக்குள் என்றும் இளமை , உன் கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும், உன் சிரிப்பில் விழும்  கன்னக்    குழியில் என்றும் இளமை' .. 


'இப்படி என்னோட முதுமையில் நான் எப்படி  இருப்பேன்னு அனுபவித்து அவரோட அன்பை வெளிப்படுத்தி இருக்காரே , புரியுதா  ' என்றதும் , அங்கே வந்துகொண்டிருந்த அவனைப் பார்த்து விட்ட கிளி 'கீ கீ ' என்று கத்திவிட்டு ஒரு புன்னகையோடு பறந்து சென்றது  .

---------------நாகேந்திர பாரதி   


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பேசும் வீடு - சிறுகதை

  பேசும் வீடு   - சிறுகதை  --------------- ' போட்டோ பேசுதுன்னு பார்க்கிறியா. பூட்டிட்டு எடுத்தியே ,அப்பவே என்னோட நினைவுகளோடே போனுக்குள்ள...