புதன், 30 செப்டம்பர், 2026

லட்சுமி வந்தாள் -சிறுகதை

 லட்சுமி வந்தாள் -சிறுகதை 

-----

கூட்டுப் பட்டிக்கு பொங்கல் வைக்க  வருவதை நிறுத்தவில்லை மஹா . அதுவும் இந்த வருஷம் ரெம்ப முக்கியம் அவளுக்கு. அவளின் காதலன் சுந்தர்  சொன்ன ஒரு விஷயத்தை சரி பார்க்கணும் என்ற குறுகுறுப்பு  அவளுக்குள். 


வழக்கம் போல் 'நேரு தொப்பி மாமா' அவள் பஸ் வந்து நிக்கிற நேரத்திற்கு சரியா, தனது மாட்டு வண்டியிலே,அந்தக் கூட்டுத் தடத்திற்கு வந்திட்டார்.  ஊருத்தண்ணீ சவுக்களிச்சுக்    கிடக்கிறதாலே பொங்கல் வைக்க  பக்கத்து நல்லதண்ணிக்  கிணத்தில்  காத்திருந்து கிடைச்ச ஊத்துத் தண்ணியை மண்ணுப் பானையில் சுமந்துக்கிட்டு அவரு சம்சாரம் ராமி யும் தான், 'அவள் ராமி ன்னா மாமா பேரு ராமனா இருக்குமோ' , கேட்டதில்லை அவள். 'நேரு தொப்பி மாமா' வே போதும் அவளுக்கு. அந்தத் தொப்பி அவரு அப்பாரு கொடுத்ததாம். சுதந்திரப்  போராட்ட தியாகி அவரு. 


 'ஏ ராமி , அது என்ன , தண்ணிப்பானையை தலையிலே பாதி, வண்டியிலே பாதி சாத்திக்கிட்டு  , மாட்டை வெரசா விரட்டமுடியலே பாரு.' என்று செல்லமாகத் திட்டியவனிடம் , 

'எதிலேயும் நிதானமா இரு. அதுக்குதான் இப்படி   வாரேன் ' என்று சிலுவிழுத்தவளிடம் , கோபிக்கப் போன மாமாவைத் தடுத்தாள் மஹா .


 ' பரவாயில்லை , மெதுவாய்ப்    போங்க மாமா, இந்த மரங்கள் அடர்ந்த இந்த  மாட்டு வண்டிப் பாதையிலே உங்க ரெண்டு பேரு பேச்சையும் கேட்டுக்கிட்டே போறது ஒரு சுகம் மாமா ' என்றதும் , 'அது சரி  ' என்றபடி ராமியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார் மாமா. 


அதோ வந்துவிட்டது லக்ஷ்மி கோயில். மேலே கூரை போட க் கூடாதுன்னு   அம்மன் உத்தரவு. வெயிலிலும், மழையிலும் கிராமத்து மக்களோடு மக்களா கலந்து  இருக்கிறவ அவ. 


இறங்கினதும்,பொங்கலுக்கு  வேண்டிய சாமான் எல்லாம் இறக்கி, பொங்கல் வைத்து முடித்து, வயக்காட்டு பக்கம் இருந்து ஓடி வந்த வாண்டுகளுக்கு  எல்லாம் கொடுத்து முடித்தாள் மஹா . அதிலே ஒரு குட்டிப்பையன்,  சுட்டிப்பையனைப் பார்த்ததும்,  தனக்கும் சுந்தருக்கும்  இந்த மாதிரி வாண்டு தான் பொறக்க வேணும் னு நினைச்சதும் கூடவே வெட்கமும்  வந்தது அவளுக்கு. அத்தோடு வந்ததில் இருந்து , லக்ஷ்மி சிலை மேல் தான் கண் மஹாவிற்கு . 


ஒரே ஒரு முறை தான் வந்திருந்தான் அந்தக் கோயிலுக்கு,  சுந்தர் . நேற்றுதான் இவள் கோயிலுக்குப் போகப் போவதைச் சொன்னபோது  இதைச் சொன்னான். ' ஓ , உன்னைப் பார்க்கப் போறியாக்கும்' ' என்ன ' என்று திடுக்கிட்டவளிடம்  சொன்னான், ' ஆமாம், அந்த அம்மனோட முகம்தாண்டி   உனக்கு , அச்சு அசல் அப்படியே. முன்னமே சொல்லணும்னு  நினைச்சேன்.' 


மறுபடியும் அம்மனைப் பார்த்தாள். செதுக்கிய மூக்கு, சிவந்த இதழ் , கருணைக் கண்கள் , அடர்ந்த தலைமுடி , இளமையான  உடம்போடு நின்று கொண்டு இருந்த அந்த லக்ஷ்மி அவளைப்  பார்த்து ஆமோதித்து புன்னகைப்பது போல் இருந்தது. நாணத்துடன் தலை குனிந்தாள் மஹா , உடனே சுந்தரைப்  பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு . 


-----------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லட்சுமி வந்தாள் -சிறுகதை

 லட்சுமி வந்தாள் -சிறுகதை  ----- கூட்டுப் பட்டிக்கு பொங்கல் வைக்க  வருவதை நிறுத்தவில்லை மஹா . அதுவும் இந்த வருஷம் ரெம்ப முக்கியம் அவளுக்கு. ...