சனி, 7 நவம்பர், 2026

சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் ' கதை புதிது நிகழ்வு '

 

 சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் ' கதை புதிது நிகழ்வு '

---------------------------

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே!

எஸ்.வி. ராஜதுரை அவர்களின் 'கலியுகம் பாருங்கோ' சிறுகதை.

ஒவ்வொரு கதையையும் அந்தக் கதை எழுதப்பட்ட காலத்தோடு     சேர்த்துப் பார்த்து அந்தக் கால அரசியல், சமுதாய நிகழ்வுகளோடு சேர்த்துப் பார்த்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தக் கதை 1968  ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்  என்று கேட்டுக் கொண்டு இந்த மதிப்புரையை ஆரம்பிக்கிறேன்

வாழ்வின் முரண்களை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் சிறுகதை இது. 'கலியுகம் பாருங்கோ' என்று வருத்தப்படும் மனிதர்களே அந்தக் கலியுகத்தின் காட்சிப் பொருட்களாக இருப்பதைக் காட்டும் கதை.

வருணனைகள் மட்டுமே இருந்தால் கட்டுரையாகிவிடும். வசனங்கள் மட்டுமே இருந்தால் நாடகமாகிவிடும். வருணனைகளும் வசனங்களும் அளவோடு கலந்து அழகான சிறுகதையாகப் பரிணமிக்கும் இந்தச் சிறுகதையின் சுருக்கம் இதுதான்.

மேல்தட்டு வர்க்க மக்கள் நாகரிகம் பற்றிப் புரணி பேசத் தேர்ந்தெடுக்கும் ஒரு பிரம்மாண்ட மண்டபத்தில் நடக்கும் கதாகாலட்சேபத்திற்கு வருகை தரும் பெரிய மனிதர் ஒருவரின் அரசாங்க அந்தரங்கமும், அந்தக் கதாகாலட்சேபச் சக்ரவர்த்தியின் அலட்டலும் அம்பலப்படும் விதத்தில் வார்த்தைகளை வடித்திருக்கிறார் ஆசிரியர்.

உடற்கேலி இருந்தாலும், அதற்கு ஆளாகுபவர்கள் மோசமான மனிதர்கள் என்பதால் அதை ரசிக்க முடிகிறது.

நான் இந்தக் கதையில் ரசித்த கேலி வருணனைகளும் கிண்டல் வசனங்களும் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில், அந்த மண்டபம் பற்றிய வருணனை.

சென்னை நகரத்தின் இதர பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை அப்பகுதியின் நடுவே செல்கிறது. அந்நெடுஞ்சாலையில் மக்கள் நெருக்கம் அதிகமற்ற பகுதியில், நீண்ட பரப்புமிக்க முன்புறக் காலி மைதானத்தைக் கொண்ட மண்டபமொன்றும், அதனருகே சிறுகோயிலும் இருக்கின்றன.

கோயில் சிறிய கோயில்தான் என்றாலும், பிரபல சினிமா நடிகை 'ஜெயகவிதா' வியாழக்கிழமைதோறும் அங்கே தரிசனம் தருவதால் அதற்குப் பிரபல்யம் கிடைத்துள்ளது.

நடிகை பற்றிய விவரம் புன்னகையை வரவழைக்கிறது.

அடுத்து, மண்டபத்தினுள்ளே நிரம்பியிருக்கும் மனிதர்கள் பற்றிய வருணனைகள்.

மண்டபத்தினுள்ளே எரியும் நூற்றுக்கணக்கான மின் விளக்குகளுக்கடியில், சமுதாயத்தின் ஒரு பகுதியில் மட்டும் தேங்கிக் கிடக்கும் செழிப்பு எதிரொலித்தது.

"சமுதாயத்தின் 'எலைட்'டுகள்" என்று கருதப்படுவோரின் மனைவிமார்கள் தங்களது பட்டுப்புடவைகளின் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும், நவீன மோஸ்தர் நகைகள் உமிழும் ஒளியில் தங்களது நாகரிகத்தை எடுத்துச் சொல்வதற்காகவும், "சூப்பர் மார்க்கெட் அப்பளம்" முதல் "பாண்டிபஜார் ஷாப்பிங்" வரை பேசுவதற்காகவும், சமய நிகழ்ச்சி என்ற பெயரில் அங்கு நடைபெறும் கதாகாலட்சேபத்தில் கூடியிருந்தார்கள்.

மண்டபத்தில் காற்று வசதி நிரம்ப இருந்தாலும், இந்நாரீமணிகளின் சொகுசான உடல்களின் பவுடர் மற்றும் இதர வாசனைப் பொருட்களின் மணம், அதற்கும் மேலாக அவர்களது வியர்வை மணம், மண்டபத்தை நிரப்பின.

இளம் பெண்கள் என்ற நினைப்போடு தங்களை அருவருக்கத்தக்க முறையில் அலங்கரித்துக் கொள்ளும் பெரிய மனிதர்கள் வீட்டு 'லேடீஸ்' யுவதிகள், எல்லோரையும்விடச் சற்று உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால் பலரது கவனமும் அவர்கள் பக்கம் திரும்ப ஏதுவாயிற்று.

அடுத்து, அந்தக் கதாகாலட்சேபம் செய்பவர் பற்றிய வருணனை.

'கதாகாலட்சேப சக்ரவர்த்தி வடிவழக அருளானந்த சுவாமியார். மூன்றாவது தினமாக இன்று அவரது பாதுகா பட்டாபிஷேகக் காலட்சேபம் நடைபெறுகிறது.

நெடிதுயர்ந்து திரண்ட, சற்றே மாநிறமான அவரின் உடலின் உச்சியில், தலையென்ற பெயரில் ஒரு 'உருண்டை' உட்கார்ந்திருந்தது. சவரத்தாலும் கருமை படராத மென்மையான 'போண்டா'க் கன்னங்களுக்குமேல், காதுகளிரண்டிலும் வைரக் கடுக்கன்கள் டாலடித்தன. 'உருண்டை'யில் மேலேயிருக்கும் பாகத்தை வெண்ணிறக் கோடுகளும் சந்தனப் பொட்டும் அலங்கரித்தன. மடிப்பு விழுந்த கழுத்தில் உத்ராட்ச மாலையும் எட்டுப் பவுன் தங்கச் சங்கிலியும் தொங்குகின்றன.'

அடுத்து, வந்திருக்கும் முக்கியப் பிரமுகர்கள்.

வெற்றிலை பாக்குப் பெட்டியும், தங்க மூக்குக் கண்ணாடியுமாய் உட்கார்ந்திருக்கும் ஐ.சி.எஸ். அதிகாரி. அவர் முற்போக்கு ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர். வாலிபர்களை எவ்விதத்திலும் கவர முடியாத வகையில், சர்வ ஜாக்கிரதையாக உயிரற்ற நடையில் எழுதுவதில் கெட்டிக்காரர். அவர் தலையாட்டிக்கொண்டிருப்பது காலட்சேபத்தை ரசிக்கிறார் என்பதால் அல்ல. நரம்புத் தளர்ச்சி - பாவம், அவர் தலையை ஆடவைத்துக்கொண்டே இருக்கிறது.

அடுத்து, ஏ.வி.எஸ். மதனா, கமலா குமாரசாமி. தொழிலதிபர்கள்.

கமலா குமாரசாமி கான்கிரீட் சுவரைப்போல முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல், 'அடித்துப் போட்ட காட்டெருமை'யன்னராகக் காட்சியளித்தார். கன்னங்களிரண்டும் பெரிய அளவில் விரிந்து, கூர்மையான தாடையில் அவையிரண்டும் ஒன்று சேர்வதையும், அம்முகத்தில் வாய் என்ற பெயரில் சிறு துவாரத்தையும் பார்க்கும் எவருக்கும் அது முகமா அல்லது பூட்டா என்ற ஐயம் ஏற்படும். அவர் சில சமயம் வாயில் புகை பிடிக்கும் பைப்பை வைப்பதைப் பார்த்தால், பூட்டுத் துவாரத்தில் சாவியை வைத்துக் குடைவதைப்போலத் தோன்றும்.

வடிவழக அருளானந்த சுவாமியார் எக்கச்சக்கமாக ஜோக்குகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். அங்குள்ள பக்தர் கூட்டம் மிக நாகரிகமான கூட்டமாதலால், அவர்களது நாகரிகத்திற்கு ஏற்ற சிரிப்பு வெடிகளைப் பொரிந்து தள்ளினார்.

அசோகவனத்தில் சீதையைச் சுற்றிலும் காவலிருந்த அரக்கப் பெண்டிரை வர்ணிக்கும்போது, "சினிமாவிலே 'பிரா' போட்டுண்டு வராளே பத்மினி - அவ மாதிரி இருக்கும்" என்று சொன்னாரே பாருங்கள்! கிழடுகளும் வயசுப் பெண்களும் சிரித்த சிரிப்பு இருக்கிறதே!

இப்போது...

கூட்டத்தில் ஒரு பரபரப்பு. பட்டுப் புடவைகள் பல எழுந்து நின்று, யாருக்கோ வழிவிடுவது போல் நகர்ந்து நின்றன.

ஒரு புறம் நாற்பத்தைந்து வயதான, மூக்கில் வைர மூக்குத்தி அணிந்திருந்த பெண்மணியும், மற்றொரு புறம் ஆந்திர நாட்டவர்போலத் தோற்றமளிக்கும் மெலிந்த மனிதர் ஒருவரும் தாங்கிப் பிடிக்க, எண்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் மெதுவாக அடியெடுத்து வந்து கொண்டிருந்தார்.

கேள்விக்குறிபோல வளைந்திருந்த அவரை எல்லாரும் வணங்க, ஆசீர்வதிப்பதுபோலக் கைத்தடியை உயர உயரத் தூக்கியவாறு நடந்து வந்தார் அவர்.

"பெரியவர்!" என்ற சலசலப்பு.

கூட்டத்தின் பரபரப்புக்கான காரணத்தை அறிந்துகொண்ட காலட்சேப சக்ரவர்த்தி உடனே எழுந்து நின்று பெரும் கும்பிடு ஒன்றைச் செலுத்தினார்.

"ஸ்ரீ ராமபிரானே நவபாரதத்தில் எழுந்தருளியிருப்பதுபோல, நமக்குப் பெரியவர் கிடைத்துள்ளார். அவர் நம் சபைக்கு விஜயம் செய்வது நம் பாக்கியம்தான்."

தொழிலதிபர்கள் அருகில் அமர்ந்த பெரியவர்,

"என்ன மதனா, யூனியன் பிரச்னையா? நான் போலீஸ் பெரிய அதிகாரிகிட்டே சொல்லித் தீர்த்து வைக்கிறேன்."

"என்ன கமலா, வெஸ்ட் ஜெர்மன் ப்ராஜெக்ட் பிரச்னையா? கேபினெட்டிலே சொல்லித் தீர்த்து வைக்கிறேன்."

என்று தனது அரசியல் தொடர்புகளைச் சொல்லி அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் போதே, தனது அம்பி ஒருவனுக்கும் அவர்களிடம் வேலைக்கு உத்தரவாதம் வாங்கிவிடுகிறார்.

இப்படி, தனது ஊழல், லஞ்ச நடவடிக்கைகளைச் செய்துவிட்டு மேடையில் ஏறிப் பேசும் பேச்சு இது:

"இப்போ நம்ப நாட்டிலே தர்மம் போச்சு. சத்தியம் எங்கேயும் இல்லை. பெரியவாள், ரிஷிகள் எல்லாரும் சொன்னதை யாரும் கேட்கறதில்லை. வியாபாரம் செய்யறதுக்கு வரி வரி. பள்ளிக்கூடத்திலே ஸ்ட்ரைக், ஸ்ட்ரைக். தொழில் சரியா நடக்கறதில்லை. இது கலியுகம் பாருங்கோ!"

"இப்படிப்பட்ட காலத்திலே தர்மத்துக்காகவும், நமது கலாச்சாரத்தை நமக்கு ஞாபகப்படுத்தறதுக்காகவும், அருளானந்த சுவாமியார் போன்றவர்கள் சிலர் கிடைத்திருப்பது நமது பாக்கியந்தான். அவருக்கு ஆண்டவன் பூரண ஆயுசு கொடுக்கும்படி பிரார்த்திக்கிறேன். எல்லாருக்கும் என் ஆசீர்வாதம்."

என்று சொல்லி இறங்கிப் போக, அந்தத் தர்மத்தின் காவலர்களான ஊழல்வாதிகள் ஏ.வி.எஸ். மதனாவும் கமலாவும் அவரை வழியனுப்ப, கதாகாலட்சேபம் தொடர்கிறது.

'இந்தக் கலிகாலத்தில் ஸ்ரீ கண்ணபிரான் எழுந்தருளியிருப்பது போல...'

என்று முடிகிறது கதை.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஆன்மிகவாதிகள் அனைவரையும் கிண்டலும் கேலியும் செய்து, அவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் சமுதாயச் சேவையைச் செய்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
நான் முதலில் குறிப்பிட்டது போல் இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தோடு சேர்த்துப் பார்த்து இந்தக் கதையை படித்து ரசிக்கலாம்.

அழகியசிங்கருக்கு நன்றிகள்.

- நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் ' கதை புதிது நிகழ்வு '

    சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் ' கதை புதிது நிகழ்வு ' --------------------------- நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே...