திங்கள், 19 அக்டோபர், 2026

‘இது நல்லா இருக்கா’ - குறுங்கதை

 ‘இது நல்லா இருக்கா’ - சிறுகதை

-----------

அந்தக் கிராமத்துப் பெண்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வரும்  அவர் வருகை ஒரு வரம். தோளில்  ஒரு பையையும் கையில் ஒரு பையையும் தூக்கிக் கொண்டு அவர் வருவதைத் தூரத்தில் பார்த்தவுடனே அந்த முளைக்கொட்டு திண்ணைக்கு ஓடி வந்து விடுவார்கள். 


பக்கத்து டவுன் ஜவுளிக் கடையில் இருந்து, கொண்டு வந்து அந்தத் திண்ணையில் அவர் பரப்பி வைக்கும் சேலை , தாவணி, பாவாடை, என்ற  வண்ண மயமான துணிக்கும்பலில் தங்களுக்குப் பிடித்தவற்றை எடுத்து பேரம் பேசி வாங்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது அந்த சேலை வியாபாரியின் மனதிலும் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். 


இப்படித்தானே தன் பெண்ணும் ஒரு காலத்தில் ,தான் கடையில் இருந்து கொண்டு வந்து கொடுத்த தாவணித் துணிகளை மாறி மாறி  எடுத்து போர்த்திக் கொண்டு காண்பித்து  'அப்பா , இது நல்லா இருக்கா , இது  நல்லா இருக்கா'  என்று கேட்ட காட்சிகள் அவர் கண்களில் மட்டும் நிரம்பி இருக்கின்றன. 


கொரானா என்ற கொள்ளை நோய் வந்து அவளையும், அவர்  மனைவியையும் கொண்டு போன பின் ஜவுளிக் கடையை மூடி விட்டு , வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில், பக்கத்து வீட்டுப் பெருமாள் சொன்னான். ' ஐயா, உங்க துக்கம் புரியாம இல்லை. நான் ஒன்னு சொல்லுதேன். உங்க மனசுக்கு ஆறுதல் கிடைக்கும் ' என்று இந்தக் கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் ஊர்க் கட்டுப்பாட்டைப் பற்றிச் சொன்னார்கள். ஏதோ சாமிகுத்தம்னு அந்த ஊர்ப் பொண்ணுகளை இங்கே டவுனுக்கெல்லாம் வர வேண்டாம்னு சொல்லிட்டு , அந்த ஊர் ஆம்பிளைங்க தான் உங்க கடைக்கு வந்து  வாங்கிட்டுப் போனாங்க. உங்க கடை நியாய விலையும், விதவித நிறமும் அந்த ஊரு ஜனங்களுக்குப் பிடிச்சு போயிடுச்சுன்னு உங்களுக்குத் தெரியும் தானே.  இப்படி பூட்டிப்  போட்டா எப்படிய்யா ' . 


யோசித்த மாரிசாமி சொன்னார். என்னாலே அந்தக் கடையைத் திறக்க முடியாது பெருமாள். கடையைத்  திறந்தா, தினசரி கூடவே  வந்து  , தாவணியை எடுத்துப்  போர்த்திக்கிட்டு நின்ன   என் பொண்ணு முகம் தான் தெரியும். ஒண்ணு செய்றேன். அந்தக் கிராமத்துப் பொண்ணுங்களுக்கும்  உதவின மாதிரி இருக்கும். மூணு கல்லு தூரம்தான். நானே வாரம் ஒருதடவை ரெண்டு பையிலே எடுத்துக்கிட்டு போயிட்டு வரேன் ' என்று ஆரம்பித்த பழக்கம் அது. 


இங்கு வந்து  துணிகளை எடுத்து தங்கள் மேல் போர்த்திக் கொண்டு ' இது  நல்லா இருக்கா' என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் அந்தப் பொண்ணுங்கள் எல்லாம், அவரது மகளாகவே தெரிகிறார்கள். அதோ ஒல்லியாய் , உயரமாய் , தோளிலும் கையிலும்  துணிப்பைகளை சுமந்துகொண்டு ,அந்த சந்தோஷத்துக்காகவே போய்க் கொண்டிருக்கிறார் அவர்.


---------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‘இது நல்லா இருக்கா’ - குறுங்கதை

 ‘இது நல்லா இருக்கா’ - சிறுகதை ----------- அந்தக் கிராமத்துப் பெண்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வரும்  அவர் வருகை ஒரு வரம். தோளில்  ஒரு பையையு...