சக்தி - சிறுகதை
---------------
( கதை புதிது குழுவில் )
அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும் சுறுசுறுப்பு . அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின் பள்ளி , கணவனுடன் அனுசரணை , அலுவலக ஆட்டோ, வேலை செய்வதிலும், வாங்குவதிலும் இருக்கும் வேகம், விவேகம், திரும்பியதும் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகளில் கிடைக்கும் அமைதியும் அறிவும். பூஜை அறையில் வெளிப்படும் அவளின் சங்கீதம், குடும்பத்துடன் இயைந்த பரிவு, உணவு, இரவில் கணவனுடன் கொஞ்சம் போக்கு காட்டி பின்பு பூக்கும் சரசம். இதுதான் சக்தி.
வழக்கமான வாழ்வின் இடையில் வந்த குறுக்கீடு அந்த போன் கால். இதோ அவள் கையில் போனோடு , சிந்தனையோடு . ஆம். அவனிடம் இருந்து தான் . கல்லூரிக் காலத்தில் பருவத்தின் கிளர்ச்சியில் கிடைத்த ஒரு அனுபவத்தின் அடையாள ஆண்மகன். எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது இந்த போன் .
'உன்னை மறக்க முடியவில்லை. நீ மணமுடித்துப் போனது தெரியும். கல்லூரியில் நீ திடீரென்ற நின்ற காரணமும் புரியும். என்னிடம் உன்னை இழந்து விடுவாயோ என்ற பயத்தில் நீ உடனே ஒத்துக்கொண்ட அந்த உடனடித் திருமணத்தில் நீ மகிழ்ந்திருக்கலாம். ஊர் விட்டு ஓடி ஒளிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது.. உன்னைத் தேடிக் கொண்டு இந்த டெல்லி வந்து சேர . உன் அலுவலகம். உன் கணவனின் அலுவலகம், உன் குழந்தையின் பள்ளி எல்லாம் கண்டு கொண்டு, இன்டர்நெட் உதவில் உன் போன் நம்பர் கண்டுபிடித்து இந்த போன். ஒருமுறை பார்க்க வேண்டும். பேச வேண்டும். போய் விடுகிறேன் உடனே . ஒத்துக்கொள். எப்போது வர.வேண்டும், உன் கணவன் இல்லாத நேரம் ' என்று சொல்லி விட்டு உடனே போனை வைத்து விட்டான்.
ஒரு நிமிடம் யோசித்தவள், திரும்ப அதே நம்பருக்கு போன் செய்தாள்.
' இன்று மாலை ஆறு மணிக்கு வா, என் கணவர் இருக்கும் நேரத்தில் வா,. நான் அவரிடம் நம் பழக்கம் பற்றி இது வரை ஒன்றும் சொல்லவில்லை. நீ வந்து முதலில் சொல். '
' பழக்கமா, அது காதல் அல்லவா '
'இல்லை, அந்தப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் உன்னிடம். அதற்கு காதல் என்ற பெயர் இல்லை. இதோ, என் கணவனிடம் எனக்கு உள்ளதே , இதற்குப் பெயர் தான் காதல். உனக்குப் புரியாது. வந்து எங்களைப் பார்த்தவுடன் உனக்குப் புரியும். எனக்கு அப்போதே இந்தப் பழக்கத்தின் போக்கைப் பற்றிய புரிதல் வந்ததால்தான் உடனே விலகினேன். உனக்கு அது இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது. வந்து பார் எங்களிடம் பேசு , உனக்குப் புரியும். வா நண்பா' என்று வைத்தாள் போனை.
வழக்கம் போல் அந்த நாள் தொடர்ந்தது , அவளிடம் எந்த அதிர்ச்சியும், பரபரப்பும் இல்லாமல் . ஆட்டோ. ஆபீஸ். அதே வேகம், விவேகம். மாலை வீடு . ஆறு மணி, குழந்தையுடன் விளையாட்டு. கணவனுடன் காபி. அவன் வரவில்லை. அவள் சொல்லவில்லை. அவள் சக்தி.
---------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக