ஸ்மூல் பாட்டு அனுபவம் -நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------
சமீபத்தில் நண்பர்கள் நடத்திய ஸ்மூல் பாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . நம்ம ஏற்கனவே வேறொரு குழுவிலே 'பின்னணி இசை இல்லாம பாடினால் தான் நம்ம ஒரிஜினல் வாய்ஸ்ஸை மத்தவங்க கேட்டு அனுபவிக்க முடியும்'னு எல்லாம் கமெண்ட் போட்டிருக்கோம் . ஏதோ எல்லோரும் எல்லார் பாட்டையும் கேட்டு அங்கே அனுபவிச்சுக் கமெண்ட் போடுற மாதிரி நினைப்பு .
பிஜிஎம் இருந்தா என்ன , இல்லாட்டி என்ன , ஆளாளுக்கு நம்ம பாட்டைப் போட்டோமா , அப்புறம் அப்பப்ப வந்து நம்ம பாட்டுக்கு இமோஜியோ , கமெண்ட்டோ வந்திருக்கான்னு பாத்திட்டுப் போறோமான்னு இருக்கிற பெரும்பாலோரில் . ’ பின்னணி இசை இல்லாம பாடுங்க , உங்க ஒரிஜினல் வாய்ஸ் கேட்கணும்னு ஆசையா இருக்குன்னு' சும்மா ஏத்தி விடுறது . அது வேற ஒண்ணும் இல்ல, பின்னணி இசை இல்லாமப் பாடிப் போட்டா மூணு நிமிஷத்தில் கேட்டு முடிச்சிரலாம். பின்னணி இசையோடு அஞ்சு நிமிஷம் ஆகுமே' ன்னு வெளியே சொல்றதில்லே. எதுக்கு வம்புன்னு .
இப்ப வந்து இங்கே மாட்டிக்கிட்டாச்சு . ஸ்மூல் நண்பர்கள் ஆளாளாளுக்கு பின்னணி இசையோடு வெளுத்து வாங்குறாங்க . நம்ம முறையும் வந்துச்சு . டூயட் பாட்டு . ‘ ஞாயிறு என்பது கண்ணாக ‘ டி எம் எஸ் சுசீலா பாட்டு . நமக்குத்தான் உள்ளுக்குள் பாதி டி எம் எஸ் னு நினைப்பு இருக்கே .
போயி நின்ன உடனே ஸ்மூல்லே பி ஜி எம் அடிச்சுச்சு பாருங்க . நம்ம அடி வயிறு கலங்குச்சு . விடுவோமா , அந்த மியூசிக்கையும் தாண்டி உச்சஸ்தாயிலே எடுத்தோம் பாட்டை . 'திங்கள் என்பது பெண்ணாக '. அடுத்து வர்ற ஆபத்தை உணராமே . பக்கத்திலே நின்ன பாடகி முறைச்சுப் பார்த்தாங்க . 'காதல் பாட்டு பாடுற லக்ஷணமா இது'ங்கிற கேள்வி அவங்க முகத்திலே . அவங்க முறை வர்றப்போ ஒழுங்கான ஸ்ருதியிலே பாட்டைப் பாட வேண்டிய முறையிலே பாடிட்டாங்க . அடுத்து நம்ம முறை .
ஏற்கனவே பல்லவியை ‘ ஞாயிறு என்பது கண்ணாக'வை ‘ ஞாயிறு , திங்கள் , செவ்வாய் லெவெலுக்குப் பாடியாச்சு . இப்ப ‘ஊருக்குத் துணையாய் நானிருக்க ‘ ங்கிற வரி. ஊருக்கு உலகத்துக்கே துணையாய் இருக்கிற மாதிரி உச்சஸ்தாயில் புதன் , வியாழன் லெவலுக்குப் போக வேண்டியதாச்சு .
அடுத்த சரணம் 'முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் ' வரி. பக்கத்திலே இருந்த பாடகி . ' அப்படியே தொலைஞ்சு போயிருக்கலாம்ல , இன்னொரு பிறவி எடுத்து வந்து இப்படிப் பாடி மத்தவங்களைக் கஷடப்படுத்த வேண்டாமே ' ங்கிற ஒரு பார்வை .
ஒரு வழியா பாடி முடிச்சு இறங்கினா, நண்பர்கள் ' நல்லா பாடினீங்க சார்' ன்னு பாராட்டு. 'ஏம்பா, நீங்க திருந்தவே மாட்டீங்களா , இப்படி உசுப்பி உசுப்பி விட்டுத்தானே தொண்டையை ரணகளமாக்கி விட்டுட்டீங்க ' ன்னு நினைச்சுட்டு போய் உட்கார்ந்தாச்சு . நம்ம கூடப் பாடின பாடகி உண்மையிலேயே நல்லாப் பாடினதாலே , மற்ற சில ஆண் பாடகர்கள் , அவங்க கிட்டே போயி ' மேடம் , அடுத்த பாட்டு , என்கூட டூயட் பாடுங்கன்னு ' கேட்கிறாங்க. என் கூடவே தைரியமா பாடுனவங்க அவங்க கூடப் பாடுறதிலே தயக்கம் இருக்காதுன்னு நினைப்பு.
நானும் அங்கே இருக்கிற வேறு சில பெண் பாடகிங்க பக்கம் திரும்பிப் பார்த்தேன். நம்ம கூடப் பாடணும்னு யாராவது கேட்பாங்களான்னு . ம்ஹூம். ஒருத்தர் கூட இந்தப் பக்கம், என் பக்கம் திரும்பவே இல்லை. எங்கே தப்பித்தவறி என் பக்கம் பார்த்துட்டா நான் அவங்க கூட டூயட் பாடுறதுக்கு கேட்டுருவேன்னு பயம் போலிருக்கு. அவங்களை பொறுத்த மட்டில் நியாயமான பயமா இருக்கலாம்.
சரி அடுத்துக் கூப்பிடுறப்போ , நம்ம சோலோ பாட்டு பாடலாம்னு நினைச்சா , நிகழ்வை அரேஞ்சு பண்றவரு நம்மைக் கூப்பிடவே இல்லை. இத்தனைக்கும் அவரு நம்ம கூட பழைய கம்பனியிலெ வேலை பார்த்தவர் . அப்பல்லாம் நம்ம நல்ல பிரெண்டா இருந்த ஞாபகம் தான் இருக்கு. நம்ம விடுவோமா. நாமே போயி 'அடுத்த பாட்டு சோலோ பாடுறேன்னு ' சொன்னப்புறம் ' சரி' ன்னாரு. இதுக்குள்ளே லன்ச் நேரம்னு சொல்லிட்டாங்க.
கொஞ்சமா சாப்பிட்டுக் குரலைப் பார்த்துக்கணும்னு நினைச்சுக்கிட்டுதான் போனோம். ஆனா, அங்கே இருந்த சக்கரை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், அப்பளம், பாயாசம், வடை, சப்பாத்தி, குருமா , புலவுன்னு ன்னு எக்கச் சக்க ஐட்டம். ரெண்டு தட்டு எடுத்து வெட்டிட்டு வந்தா ஒரே ஏப்பம். அடுத்து நம்ம பேரைக் கூப்பிடுவாங்களேன்னு வெளியே போயி பெரிய ஏப்பமா ஒண்ணை வரவழைச்சு விட்டுட்டு வந்து உட்கார்ந்தோம்.
இப்ப நண்பர் ஒருவர் குரல் வளம் பாதுகாக்க சில அட்வைஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாரு மேடையிலே. முத்திரை ஒன்று செய்யச் சொன்னாரு , ரெண்டு கை விரல்களை ஒரு மாதிரி வச்சு. அதைப் பண்ணிட்டு , கை விரல்களைப் பிரிச்சு எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமா ஆயிடுச்சு . இருந்தாலும் விடலை. அவரு எந்திரிக்கச் சொன்னா எந்திரிச்சு , உட்காரச் சொன்னா உட்கார்ந்து அந்த முத்திரையைச் செஞ்சாச்சு. அவரு படுக்கச் சொன்னா படுத்துக் கூட பண்ணியிருப்போம். அவ்வளவு ஆசை நம்ம குரலை வளப்படுத்த. இன்னும் பல நண்பர்களுக்கும் தான். சிலர் அந்த முத்திரை பண்ணி விரல்களை விடுவிக்க முடியாம, அந்த முத்திரை பொசிஷனிலே நிகழ்வு முடியிற வரை இருந்ததைப் பார்க்க முடிஞ்சது. நம்ம பரவாயில்லைன்னு நினைச்சுக்கிட்டேன்.
இப்ப நம்ம பேரைக் கூப்பிட்டாரு நண்பர். போயாச்சு மேடைக்கு. சோலோ பாட்டு . நம்மதான் டி எம் எஸ் எதிரொலி ன்னு ன் நினைப்பு ஆச்சே . எடுத்துக்கிட்ட பாட்டு ' நான் அனுப்புவது கடிதம் அல்ல ' . பாடுறப்போ கைகளிலே அந்த முத்திரையைப் போட்டுக்கிட்டே பாடலாம்னு நினைச்சேன் .
ஆனால் ஒரு கையிலே மைக்கைப் பிடிக்க வேண்டி இருந்ததாலே , அந்த முயற்சியைக் கை விட்டாச்சு . மைக்கை விடல. அந்த முத்திரையை விட்டுட்டு ஸ்மூல் பி ஜி எம் கவனிக்க ஆரம்பிச்ச, அது வழக்கம் போல் டமார் டமார். நம்மளும், நம்ம நினைப்பை மறந்து உச்ச ஸ்தாயிலே ' நான் அனுப்புவது கடிதம் அல்ல ' ன்னு ஆரம்பிச்சா, அது கடிதம் லெவலைத் தாண்டி, டெலிக்ராம் , டெலெக்ஸ் லெவலுக்குப் போகுது . அடுத்து சரணம். அதுக்கும் மேலே போகணும். ' நிலவுக்கு வான் எழுதும் கடிதம் ' நிலவுக்கே போயாச்சு . இப்படிப் பாடி முடிச்சுட்டு இறங்கினா, வழக்கம் போல் நண்பர்கள் ' நல்லா பாடினீங்க சார் ' . ஏம்பா, நீங்க திருந்தவே மாட்டீங்களா '
அப்புறம் உட்கார்ந்து யோசிச்சுப் பார்க்கிறப்போ ' உண்மையிலே நம்ம நல்லாத்தான் பாடி இருப்போமோ ' என்ற நினைப்பு. இந்த நினைப்பு தானே பொழைப்பைக் கெடுக்குது . நல்ல நண்பர்கள். இவர்கள் எப்போ நிகழ்வு நடத்தினாலும் போயிப் பாடணும் . .
------------------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக