வியாழன், 7 பிப்ரவரி, 2019

புலரும் பொழுது

புலரும் பொழுது
-------------------------------
இரவெல்லாம் தூக்கம் வராக் காரணத்தால்
ஏங்கிப் போய்க் கொக்கரிக்கும் கிழட்டுச் சேவல்
உறவாடித் தென்றலிட்ட முத்தத்தின்
பனிச்சாறைப் பார்த்தேங்கும் பசுஞ்   செடிகள்

அடங்கிவிட்ட அலைக்கூட்ட மேகங்கள்
ஆகாயக் கடலினிலே அமைதிக் காட்சி
அவசரமாய் மரத்தை விட்டு பறவைக் கூட்டம்
அணிவகுப்பை நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்

எங்கேயோ செல்லுகின்ற ரயிலின் ஓசை
பிரிந்தவளின் நினைவுக்குச்  சுருதி கூட்டும்
பால்கார மணியோசைச்   சப்தம் வந்து
பாதியிலே நினைவுகளை அறுத்துப் போடும்
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

புதன், 30 ஜனவரி, 2019

இடைவெளி உலகம்

இடைவெளி உலகம்
---------------------------------------
இரைச்சலுக்கும் அமைதிக்கும்
இடையிலே உலகம்

இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடையிலே உலகம்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
இடையிலே உலகம்

இழுமூச்சுக்கும் விடுமூச்சுக்கும்
இடையிலே உலகம்

இடைவெளியில் இருக்கிறது
இறைவனின் உலகம்
------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 18 ஜனவரி, 2019

காலச் சுவடுகள்

காலச் சுவடுகள்
----------------------------
சில முகங்கள் - எப்போதோ
பார்த்தவை போல இருக்கலாம்

சில குரல்கள் - எப்போதோ
கேட்டவை போல இருக்கலாம்

சில பாதைகள் - எப்போதோ
கடந்தவை போல இருக்கலாம்

சில நிகழ்வுகள் - எப்போதோ
நடந்தவை போல இருக்கலாம்

காலச் சுவடுகள் - எப்போதும்
கலைந்து  போகாமல் இருக்கலாம்

----------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 17 ஜனவரி, 2019

கண்ணீர்ப் பொங்கல்

கண்ணீர்ப் பொங்கல்
------------------------------------
கரும்புத் தோட்டம்
கடலிலே கரைஞ்சாச்சு

நெல்லு வயலெல்லாம்
பதராய்ப் பறந்தாச்சு

மீதிக் காடெல்லாம்
மேல் ரோடாய் மாறியாச்சு

ரேஷன் அரிசியும்
பருப்பும்  வந்தாச்சு

கிராமத்துப் பொங்கல்
கண்ணீரில் பொங்கியாச்சு
-------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book