செவ்வாய், 20 நவம்பர், 2018

66 - நகைச்சுவைக் கட்டுரை


66 - நகைச்சுவைக் கட்டுரை
---------------------------------------------------------------------------
அம்பத்தி ஆறில் பிறந்து அறுபத்தி ஆறில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிரிந்த அவனும் அவளும் அறுபது வயதுக்கு மேல் நடக்கின்ற பழைய மாணவர் சந்திப்பில் சந்திக்க இருக்கிறார்கள்.
அவன் கண்கள் பள்ளிக்கூட வாசலையே பார்த்தபடி இருக்கின்றன. அதோ வருகிறாள். தளர்ந்த நடையோடு , கைத்தடியோடு நடந்து வரும் அவளை நோக்கி தனது சக்கர நாற்காலியை திருப்பிக் கொண்டு போகிறான் அவன்.
நண்பர்கள் பர பரக்கிறார்கள். ' எதுவும் ஏடாகூடமா நடந்திடாதே' .பதிலும் வருகிறது ' அவனோ சக்கர நாற்காலி, அவளோ கைத்தடி , கவலைப்பட  வேண்டியதில்லை  ' 
அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் ..
அவள் கேட்கிறாள் ' என்னோட பென்சிலை திருடிக்கிட்டு போயிட்டியே, பயந்திட்டு ஓடி போயிட்டியே , என்னோட பிரியமான பென்சிலடா அது '
'அந்த பென்சில் பத்திரமா என் நெஞ்சுக்கு பக்கத்திலேயே இருக்கு' என்று சட்டை பாக்கெட்டில் இருந்து முனை முறிந்த அந்த பாதி பென்சிலை எடுத்து கொடுக்கிறான்.
'அட பாவி , அதை சீவ கூட இல்லையா' என்று போலிக் கோபத்துடன் வாங்கிக் கொள்கிறாள் .
'வா போகலாம், நண்பர்கள் ஏதாவது தப்பா நினைத்துக் கொள்ள போகிறார்கள். ' என்ற அவனோடு சேர்ந்து பள்ளி மைதானம் நோக்கி.
' ஏய் என்னடி இப்படி இளைச்சு கூனிப் போயிட்டே என்னை மாதிரியே ' என்று அவளை அணைத்துக் கொள்கிறாள் அவளின் தோழி .தோழிகளின் கைத்தடிகள் உரசிக் கொள்கின்றன. நட்பின் நெருக்கத்தில் கைத்தடிகள் நழுவி விழுகின்றன.
'அந்தப் பாட்டை பாடு'  என்று நண்பர்கள் கோஷமிட , அவள் அவனைப் பார்க்க, அவனும் 'ப்ளீஸ்' என்று சொல்ல மேடைக்கு செல்கிறாள்.
'கிச்சு கிச்சு தாம்பாளம், கியா கியா தாம்பாளம் ' என்று அவள் ஆரம்பித்ததும் பலத்த கரகோஷம். அனைவர் கண்களிலும் கண்ணீர்.
அவனும் தனது குண்டு கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்கிறான். எத்தனை முறை அவன் கேட்டு அவள் பாட மறுத்த பாடல்.
திரும்பி வரும் அவள் தனது பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறாள் அவனிடம் ' உனக்குப் பிடித்த கடலை மிட்டாய் ' மறுக்கிறான். ' எனக்கு டயபடீஸ்' . அவன் கொடுக்கும் லெமன் சால்ட் ஜூஸ் - அவள் மறுக்கிறாள். 'எனக்கு ஹை பிபி'.  காதலை மீற வைத்த  ஆரோக்கிய குறைவு அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
கர்சீப்பை எடுத்து துடைத்துக் கொள்கிறான் .
'அது என்னோட கர்சீப் தானே . என்னடா இவ்வளவு அழுக்கா இருக்கு'
'உன்னோட வாசம் போயிடக் கூடாதுன்னு துவைக்கவே இல்லே '
'அம்பத்திரெண்டு வருஷமாவா , அட பாவி' என்று சந்தோஷத்தோடு அலுத்துக் கொண்டாள். 
அவர்கள் நிலையை எண்ணி கலங்கியபடி , நண்பர்கள் அவர்களை தனிமையில் விட்டு விலகுகிறார்கள் ஒன்றும் நடந்து விடாது என்ற தைரியத்தில்.
தனது பேத்தியின் போட்டோவை எடுத்து காண்பிக்கிறாள் அவள் 'உன்னை மாதிரியே இருக்கிறா'  என்ற அவனிடம் கேட்கிறாள் .
'உனக்கு எத்தனை பேரன் பேத்திகள்'
'இல்லை '
'ஏன் ,  உன் பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா'
'இல்லை, பசங்களும் இல்லை' என்று சொல்லும் அவனை உற்றுப் பார்க்கிறாள்.
'அட பாவி, நீ இன்னும் கன்னிப் பையனாடா ' என்று கண் கலங்குகிறாள்
' நீ நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கணும்டா , என்னை மாதிரி பேரன் பேத்தி எடுக்கணும் ''அது முடியாது ' பேரன் பேத்தி எடுக்கணும்னு முதல்லே புள்ளைங்க பெத்துக்கணும். , முடியாது ' என்ற அவனை இரக்கத்துடன் பார்க்கிறாள் .அவனும் அவளையே பார்க்கிறான்.
'அப்படிப் பார்க்காதேடா . பேரன் பேத்தி எடுத்த எனக்கு, ஏற்கனவே கல்யாணம் ஆய்டுச்சுன்னு உனக்கு தெரியணும் '
'தெரியும் , உன்னோடபையனோட பிறந்த நாளில் இருந்து  பேத்தியோட பிறந்த நாள் வரை பார்த்திருக்கேன். பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலே இருந்து பைனா  குலர் வழியா பார்த்திருக்கேன் '
'அட பாவி ' என்றவள் , அவன் நெஞ்சில் குத்தி அழ முயல அவன் தடுக்கிறான்.
' என்னை தொடாதே',  என்றவனை அவள் பெருமையோடு பார்க்க அவன் ' எனக்கு இருமல் வந்திடும் ' என்று முடிக்கிறான்.
'கிளம்பலாம் ' என்றபடி நண்பர்கள் நெருங்க , கைத்தடி ஒரு புறமும் சக்கர நாற்காலி மறுபுறமும் திரும்ப ,நண்பர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட படி பேசிக் கொள்கிறார்கள்  .
' நல்ல வேளை, ஒண்ணும் நடக்கலேடா , அவளோட பேரன் பேத்திகளுக்கு யாரு பதில் சொல்றது '
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி
(பி.கு - '96 ' திரைப்படத்தை மிகைப்படுத்திப் பார்த்ததின் விளைவு )
Humor in Business - Poetry Book


செவ்வாய், 23 அக்டோபர், 2018

பள்ளிப் பாடங்கள் - நகைச்சுவைக் கடடுரை


பள்ளிப் பாடங்கள்  - நகைச்சுவைக் கடடுரை 
---------------------------------------------------------------------------------------------------
அது எப்படியோ தெரியலீங்க. பள்ளிக்கூடத்தில் எந்தப் பாடத்தை கிண்டல் பண்ணுனாங்களோ  அதிலேயே இப்ப பெரிய ஆளா இருக்காங்க.
'அகர முதல எழுத்து, ஆகார முதல இட்டிலி' ன்னு சொன்னவன் இன்னைக்கு தமிழ்க் கவிஞன்.
'பிரீபொசிஷன் ன்னா அர்த்தத்துக்கு ஏத்த மாதிரி முதல் பொசிஷனிலே தானே வரணும், ஏன் நடு பொசிஷனிலே  வர்றது ன்னு கேட்டவன் இன்னைக்கு இங்கிலிஷ் ப்ரொபஸர்.
' தமிழ் லே  ஒரு '' வுக்கே கஷ்டப் படுறோம். இந்தியில் நாலு ' ' வா ன்னு கிண்டல் பண்ணுனவன், இப்ப டில்லியில் வேலை பாத்துக்கிட்டு இந்தியில் பொளந்து கட்டுறான்.
இதே மாதிரிதான். மத்த சப்ஜெக்ட்டுகளும் .
பிப்பெட்டையும் பியூரெட்டையும் வச்சுக்கிட்டு 'பேல் பெர்மனண்ட் பிங்க் ' கலரை வரவழைக்க படாத பாடு பட்டவன், இன்னைக்கு கெமிக்கல் இன்ஸ்டிடியூட்டியிலே  சயிண்டிஸ்ட்.
பிரிசத்தைப் பார்த்து நேர்கோட்டில் குண்டூசி வைக்க முடியாதவன் , குவி லென்சும் குழி லென்சும் தயாரிச்சுக்கிட்டு இருக்கான்.
கால்குலஸும் இன்டெகிரஷனும் தப்பு தப்பா பண்ணினவன் இப்ப கணித மேதை அவார்ட் வாங்கியிருக்கான்.
'அது என்னடா ஹைபிஸ்கேஸ் ரோஸா சைனன்சிஸ் , செம்பருத்தின்னு சொல்லுங்கடா ' ன்னு பூக்களின் பொட்டானிக்கல் பேர்களை கிண்டல் பண்ணினவன் , தாவர ஆராய்ச்சியாளர் இப்ப.
பூகோள கிளாசில் கொடுத்த மேப்பிலே கங்கையை தெற்கேயும் வடக்கில் காவேரியையும்     குறிச்சு  வச்சு அப்பவே நதிகள் இணைப்புக்கு அடி போட்டு , அது புரியாத வாத்தியார் கிட்டே அடி வாங்கினவன் , இப்போ நதி நீர் இணைப்பு செயலாளர்.
அசோகரின்  ஆட்சியில் , வலது புறம் வேப்ப மரம் நட்டார், இடது புறம் ஆல மரம் நட்டார், என்று அஞ்சு பக்கம் வலது புறமும் இடது புறமும் மரங்களாகவே நட்டு அசோகரின்  ஆட்சியின் புகழை எழுதி  பள்ளி  வரலாற்றில் இடம் பெற்று பெயில் ஆனவன் தொல் பொருள் இலாக்காவில் இருக்கான்.
'டெபிட் வாட் கம்ஸ் இன், க்ரெடிட் வாட் கோஸ் அவுட் ' ங்கற அக்கவுண்டன்சி விதியில் முரண் பட்டு ' அது எப்படி உள்ளே வந்த டெபிட் வெளியே வராம , கிரெடிட்டை  வெளியே விடும்' என்று லாஜிக்கலா சண்டை போட்டவன் இப்ப சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் .
என்னமோ போங்க. எதை எதையெல்லாம் கிண்டல் பண்ணிக்கிட்டு திரிஞ்சாங்களோ , அதிலே இப்ப பெரிய ஆளா ஆயிட்டாங்க.
பசங்களை கிண்டல் பண்ற பொண்ணுங்க அதிலே ஒரு பையனையே காதல் பண்ற மாதிரி தான் போலிருக்கு.
முதல்லே கிண்டல் பண்ணிட்டு அப்புறம் அதிலே சீரியஸ் ஆகணும் போலிருக்கு. நமக்கு அப்ப இது புரியலீங்க.
நம்ம என்னமோ எல்லாப் பாடத்தையும் மாங்கு மாங்குன்னு  படிச்சு நல்ல மார்க் எடுத்து இப்ப ஒரு கம்பெனியில் ஏதோ ஒரு  வேலை பார்த்துக்கிட்டு எப்படா ரிடையர் ஆகலாம்னு உடகார்ந்துக்கிட்டு இருக்கோம். அட, அப்ப ஆடின கபடி விளையாட்டை ஒழுங்கா ஆடியிருந்தாக் கூட இப்ப ' பாயும் புலி' யோ இல்லே ' பதுங்கும் புலி'யோ ஏதோ ஒரு அணி யிலே  சேர்ந்து உலகம் சுத்தி பரிசு வாங்கி குவிச்சிருக்கலாம்.
அதுக்காக படிக்காம விட்டுராதீங்க. அதோட சேர்ந்து கிண்டல், விளையாட்டுன்னு  பள்ளி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க . அப்பத்தான் பெரிய ஆளா வரலாம். என்ன நான் சொல்றது .
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 16 அக்டோபர், 2018

வாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை


வாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------
இந்த வாட்ஸ் அப் உலகத்தை மூணாப் பிரிக்கலாங்க. சொந்தக்காரங்க உலகம், நண்பர்கள் உலகம், ஆபிஸ் உலகம்னு.
இந்த சொந்தக்காரங்க உலகத்திலே குழந்தைங்க போட்டோ , வீடியோ போட்டுக்கிட்டு இருப்பாங்க.  அவங்க பெண் குழந்தையோட டான்ஸ் வீடியோ . அது பாதி இறங்கிக்கிட்டு இருக்கிறப்போவே பதில் வந்திடும் . . ' பிரமாதமா ஆடுற, வருங்காலத்தில் பத்மா மாதிரி வருவா'.
அதே மாதிரி பசங்க கராத்தே வீடியோ வரும். அதுவும் இறங்க ஆரம்பிச்ச உடனேயே பதில் போட்டுடுவாங்க. ' சூப்பர் , வருங்கால ஜாக்கி சான் '.  பாக்கணும்கிற அவசியமே இல்லை. பதில் தான் முக்கியம். அனுப்புனவங்களும் சந்தோசம் ஆயிடுவாங்க.
அதே மாதிரி நம்ம கவிதை , கட்டுரை, லிங்க் அனுப்பினா, பட்டுன்னு பதில் வந்திடும். ' அருமை' ன்னு. ' என்ன அருமை'ன்னு கேட்டா உடனே , ஆப் லைனிலே போயிடுவாங்க. படிச்சிருந்தாத்தானே  பதில் போடுவாங்க.
இதே மாதிரி வயசான சில பேரு எல்லாத்துக்கும் ' சூப்பர்' ன்னு  ஒரே பதில் தான் தான்.
'என் பொண்ணு பர்ஸ்ட் கிளாஸ்லே பாஸ் பண்ணிட்டா ' - 'சூப்பர்'
'என் பையன் கராத்தேயிலே பிளாக் பெல்ட் '- 'சூப்பர் '
'எங்க பெரிய தாத்தா இறந்து போயிட்டாரு ' - ' சூப்பர்'
என்ன இது.. எங்க தாத்தா மேலே இவருக்கு என்ன பகைன்னு விசாரித்த பிறகு தெரிய வந்தது . அவரு போன் மெமோரியிலே 'சூப்பர்'ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்காரு. எதையும் படிக்கிறதே இல்ல. எல்லாத்துக்கும்  மெமரி பேஸ்ட் தான்.

இப்படிப் போகுது சொந்தக்காரங்க வாட்ஸ் அப் உலகம். ஆபிஸ் நண்பர்கள் உலகம். அது தனி உலகம். 'ப்ரோக்ராம் சந்தேகம், வேலை வாய்ப்புன்னு ' ஓடிக்கிட்டு இருக்கும்.
'இப்' புக்கு பிறகு இருக்கிற புள்ளியை எடுத்துடு. ப்ரோக்ராம் ஒர்க் ஆகும் '
'செர்வெரை டௌன் பண்ணி பூட் பண்ணு, ஒர்க் ஆகும் ' - இப்படி ஒரு பக்கம்.
மறு பக்கம், ஏதாவது வேலை பத்தி போஸ்ட் ஆகிட்டா, உடனே ரெஸ்யூமை அப்டேட் பண்ணுறது. ' சி பிளஸ் பிளஸ் அஞ்சு வருஷம், டி பிளஸ் பிளஸ் ஏழு வருஷம் , பிளஸ் பிளஸ் 10  வருஷம்’னு அடிச்சு விடுறது. மொத்தம் கூட்டுனா , அவங்க வயசை விட அதிகமாக வந்துடும்.
ஹெச் ஆருக்கு தெரியாதா, நம்ம பசங்க லட்சணம். வேலையை யாருக்காவது கொடுத்துட்டுதான் , சைட்டிலே போஸ்ட் பண்ணுவாங்க. உடனே பதில் போட்டுடுவாங்க . 'சாரி , வேகன்ஸி பில் அப் ஆயிடுதுன்னு'


ஆபிஸ் நண்பர்கள் உலகம் இப்படின்னா, வேற நண்பர்கள் உலகம் வேற மாதிரி. இதையும் மூணா பிரிக்கலாம்.  காதல் உலகம் , ஆன்மீக உலகம், அரசியல் உலகம்.
காதல் உலகத்திலே, முதல் நாள் காதலிச்சு அடுத்த நாள் கல்யாணம் பண்ணி அதுக்கு அடுத்த நாளே விவாக ரத்து அப்ளை பண்ணிடுவாங்க. ரெம்ப வேகமான உலகம்.

ஆன்மீக உலகத்திலே அனுப்புவாங்க அட்வைஸ். ' என்ன வந்தாலும், அப்படியே ஏத்துக்கணும். அப்பத்தான் நம்ம ஆன்மா விரிவடையும் ' நம்மளும் அப்படியே ஏத்துக்கிட்டு என்ன வந்தாலும், நம்ம டைனிங் டேபிள் மேலே என்ன வந்தாலும் இட்டிலி, தோசை , பூரின்னு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு சாப்பிட்டுடுவோம். நம்ம ஆன்மா இல்லே  இடுப்பு தான் விரிவடைஞ்சுக்கிட்டே போகும்.
  
இந்த அரசியல் உலகத்திலே, ஒரே அடி தடி தான்.. எழுத்திலே தான். அந்த தலைவர் சரி இல்லே, இவன் சரி இல்லேன்னு , ஒரே திட்டுதான். . நம்ம சும்மா இருந்தாலும், வம்புக்கு இழுப்பாங்க. ' நீங்க என்ன நினைக்கிறீங்க. ' ' நாம ஒண்ணும் நினைக்கலேன்னா நமக்கு திட்டு. '  ' உனக்கு ஆரோக்கிய அரசியல் தெரியலை, நீ ஒரு கூமுட்டை' ன்னு சொல்லிடுவாங்க. நமக்கும் கோபம் வந்துடும். அது எப்படி கூமுட்டைன்னு சொல்லலாம். ஒரு கோழி முட்டை , வாத்து முட்டைன்னு சொல்லி இருந்தாலாவது புரிஞ்சிருக்கும். அது என்ன கூமுட்டை. நம்ம கோபமா , வர்ற மெசேஜ் எல்லாமே அப்புறம் படிச்சுக்கலாம்னு மெமரி யிலே ஏத்திடுவோம். இதிலே நம்ம போன் மெமரி காலி ஆகி, எல்லா மெஸ்ஸஜும் காணாம போயிடும். 'ரெம்ப நல்லது' ன்னு பார்த்தா, நம்ம போன் காண்டாக்ட் லிஸ்டும் அவுட்டு.

'யாரு போன் பண்ணுறாங்க . தெரியலே '
எடுத்து ' ஹல்லோ, யாரு ' ன்னு கேட்டதும் அவ்வளவுதான்.
' என்ன, நான் யாரா, குரலை மறந்தாச்சா, அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா '  ன்னு கேட்டு போனை கட் பண்ணிட்டாங்க. . யாருன்னு தலை  முடியை பிச்சுக்கிறேன். யாரா  இருக்குங்க  .
 ------------------------------------நாகேந்திர பாரதி