சனி, 31 அக்டோபர், 2015

காதல் பாற்கடல்

காதல் பாற்கடல்
-------------------------
முப்பாலாம் திருக்குறளின்
மூன்றாம் பால் படித்தோர்க்கு

தப்பாது காதல்
தவறாது சேர்தல்

காதற் சிறப்புரைக்கும்
களவியலைக் கற்றுவிட்டால்  

ஊடல் உவகையென்னும்
கற்பியலில் கலந்துவிட்டால்

காதல் பாற்கடலில்
கல்யாணக் கப்பல் வரும்
--------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 30 அக்டோபர், 2015

புரொகிராமர் படும் பாடு - நகைச்சுவைக் கட்டுரை

புரொகிராமர் படும் பாடு  - நகைச்சுவைக்  கட்டுரை 
-----------------------------------------------------------------------------------------------------------------
இந்த மேனேஜர் என்கிற ஜீவராசிங்க எங்களை, புரோகிராமரைப் படுத்திற பாடு இருக்கே , அப்பப்பா .இவங்கதான் ப்ராஜெக்டாம் . நாங்கள்லாம் வெறும் ப்ராசெஸ்ஸாம்  ,  ஏங்கப்ராஜெக்ட் இல்லாம ப்ராசெஸ் இருக்கலாம். ஆனா  ப்ராசெஸ்   இல்லாம ப்ராஜெக்ட் இருக்குமா. சொல்லுங்க. அப்புறம். ப்ராஜெக்ட் டெம்பரரிங்க   . ப்ராசெஸ் பெர்மனண்டுங்க. அப்ப நாங்கதானே மெயின். பி எம் பி படிச்சுருக்கிறதா பெருசா சொல்லிக்கிறாங்க . இது கூடத் தெரியலீங்க.

கோடு எழுதுறதெல்லாம் நாங்க. அதை டெலிவரி பண்றவங்கதான் இவங்க. நாங்க தான் குக் . இவங்க வெறும் சர்வர் தாங்க. அதுக்காக நாங்க கோடு  எல்லாம் குக் பண்ணி எழுதுறதா நினைச்சுடாதீங்க. ஏதோ அந்தக் காலத்திலே கம்பனியிலே சேர்ந்த புதுசிலே புரோகிராம் எழுத கத்துக்கிறது பாதி, எழுதுறது பாதின்னு இருந்தோம். ஆனா இப்பல்லாம் சீனியர் ஆயிட்டோம்ல .புரோகிராம் எங்க மூளையிலே ஒரு மூலையிலெ அப்படியே ஓடுதுங்க. என்ன ஒண்ணு. இந்த டொமைன்  லாஜிக்கை புரோக்கிராம் லாங்குவேஜிலே எழுத கொஞ்சம் கஷ்டப்படுவோம். அவ்வளவுதான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க புரோகிராம் எழுதி முடிச்ச உடனே இந்த மேனேஜர்ஸ் , கஸ்டமர் மாத்தச் சொல்றாங்க ன்னு வருவாங்க. கஸ்டமர் கொடுக்கிற அப்ளிகேஷனை எல்லாம் உடனே அக்செப்ட் பண்ணிடுவாங்க. நம்ம கொடுக்கிற லீவ் அப்ளிகேஷனை மட்டும் போஸ்ட்போனோ  ரிஜெக்டோ   பண்ணுவாங்க.     ஏங்க , நமக்கு வர்ற காய்ச்சலைத் தள்ளிப் போடவோ ரிஜெக்ட் பண்ணவோ முடியுமாங்க. ரெம்பப் படுத்துறாங்க.


அப்புறம் இந்த ப்ரோக்ராம் மாத்துறது எல்லாம் உடனே உடனே மாத்தணுமாம் நாளைக்குப் பண்ணி முடிக்க வேண்டியதை நேத்தே பண்ணிட்டியான்னு கேக்கிறாங்க. டிசைன் , டெவலப்மெண்ட் , டெஸ்டு, லொட்டு, லொசுக்குன்னு எவ்வளவு பிராசஸ் இருக்கு. அது தவிர இவங்க சி எம் எம் , சிக்ஸ் ஸிக்மா அப்படின்னு கஸ்டமருக்கு காமிக்கற ப்ரெசெண்டெஷன் லே பெருசா பெருமை வேறு அடிச்சுருக்காங்க    .  எல்லாம் கம்ப்ளை பண்ண வேணாமா. அஜைல் அஜைல் ன்னு வேற சொல்லிக்கிறாங்களே தவிர ஆயிரத்தெட்டு டாக்குமெண்ட் பண்ணணும் கிறாங்க  .   எப்படிங்க அவ்வளவு சீக்கிரம் முடிக்கிறது.    

கம்ப்யுட்டர் மெஷின்லே வேலை செய்றோம் சரி, அதுக்காக நாங்களே மெஷின்னா எப்புடி . அப்புறம் நாங்க கம்ப்யுடெரிலெ வொர்க் பண்ணுறப்போ பின்னாலேயே வந்து நிக்கிறது. நாங்க பேஸ் புக், டுவிட்டர் போறமான்னு பாக்கிறதுக்கு . எங்களுக்கு மல்டிபிள் விண்டோஸ் ஓபன் பண்ணி மறைக்கத் தெரியாதா. நாங்கள்லாம் பேஸ் புக் ஸ்டேட்டஸ் விண்டோவையே பெருசு பண்ணி கோடு அடிக்கிறவங்க. எங்க கிட்டேயேவா.     .அப்புறம் இவங்களுக்கு என்ன புரியுதுன்னு பாக்கிறாங்க. இங்கிலீஷ் லாங்குவேஜே புரியறது இல்லை . எங்களோட புரோக்கிராம் லாங்குவேஜா புரியப் போகுது இதுங்களுக்கு .

அப்புறம் இந்த டைம் ஷீட்டுன்னு ஒண்ணு வாரக் கடைசியிலே வருங்க. வெள்ளிக்கிழமை  ராத்திரிக்குள்ளே முடிக்கணும். ஒண்ணா ரெண்டா ஒன்பது சிஸ்டத்திலே ஒன்பது பார்மட்டிலெ பதிவு பண்ணணும். நாங்க செஞ்சது செய்யாதது   எல்லாம்    யோசிச்சு அடிக்க வேண்டாமா. அதுக்கு ஒரு அரை நாளாவது ஆகும்.   அவசரப் படுத்துவாங்க. அது   தவிர அதுக்கு ஆகிற   நேரத்தை  வேலை நேரத்திலே  சேத்துக்கக் கூடாதாம். ரெம்ப மோசங்க.

 எல்லாம் முடிச்சு கோடு எழுதி டெஸ்டு பண்ணி கஸ்டமர் சிஸ்டத்திலே லைவ் பண்ணிருவோம். இந்த மேனேஜருங்க நைசா எல்லாக் கிரெடிட்டையும் இவங்க எடுத்துக்கிட்டு மேனேஜ்மெண்ட்டிலெ    இருபது பெர்செண்ட் இன்க்ரிமெண்ட்  இவங்களுக்கு வாங்கிடுவாங்க. எங்களுக்கு வெறும் அஞ்சு பெர்சென்ட் இன்க்ரிமெண்ட் தான் கிடைக்கும். அப்புறம் ஏன் நாங்க ஒவ்வொரு கம்பெனியா   மாற மாட்டோம்.   அதுக்கு பெருசா கம்ப்ளைன்ட் பண்றது. என்ன செய்யலாம்  .  பேசாம  மேனேஜர் ஆகிட வேண்டியது தான் போலிருக்கு,

-----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

டெவலப்பர் படும் பாடு - நகைச்சுவைப் பேச்சு

டெவலப்பர்  படும் பாடு  - நகைச்சுவைப் பேச்சு
-------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/ny22jtxuufft

Click here to buy Nagendra Bharathi's poems

புதன், 28 அக்டோபர், 2015

கவிதைப் பூக்கள்

கவிதைப் பூக்கள்
----------------------------
சிதறிய எண்ணங்களைச்
சேர்த்துப் படிக்கையிலே

சித்திரம் ஒன்று
பார்க்கக்  கிடைக்கணும்

சிறுகதை ஒன்று
படிக்கக் கிடைக்கணும்

சின்னஞ் சிறிய
கவிதைப் பூக்களில்

வண்ணம் தெரியணும்
வாசம் வீசணும்  
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சமுதாயக் கொடுமை

சமுதாயக் கொடுமை
------------------------------------
கரியான உடல்
மண்ணுக்குள் மறையும்

காற்றான உயிர்
விண்ணுக்குள் மறையும்

மண்ணுக்கும் விண்ணுக்கும்
பொதுவாக இருப்பதை

சாதிக்கும் மதத்திற்கும்
பிரித்துப் போட்டுவிட்ட

சமுதாயக் கொடுமையை
என்னவென்று சொல்வது
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

இளமை நில்லாது

இளமை நில்லாது
--------------------------------
இதழோரச் சுழிப்புக்கு
ஏங்கிக் கிடந்த  போது

சுண்டு விரல் அழகுக்கு
சொக்கிக் கிடந்த  போது

பேசிச் சிரித்த   போது
பிணங்கிச் சேர்ந்த   போது

சேர்ந்திருந்த   இளமை
செலவழிந்து போகுமென்றும்

காலமது ஓடுமென்றும்
கனவு கூடக் கண்டதில்லை
-----------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems


திங்கள், 26 அக்டோபர், 2015

பொம்மை விளையாட்டு

பொம்மை விளையாட்டு
-------------------------------------------
'தாத்தா உனக்கு
பாட்டி எனக்கு '

'ம்ஹூம் பாட்டி எனக்கு
தாத்தா உனக்கு '

பொம்மை விளையாட்டில்
பேரனும் பேத்தியும்

பொம்மைப் பெரியவர்களை
ஆட்டுகின்ற  நேரம்

உண்மைப் பெரியவர்களும்   
ஆடித்தான் போவார்கள்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

பட்டணத்துச் சந்தை

பட்டணத்துச் சந்தை
---------------------------------
பட்டிக்காட்டு மலையிருந்து
வெட்டி வந்த பழங்கள்

பட்டணத்துச் சந்தையிலே
விற்பனைக்கு இருக்கும்

வெட்டி வைத்த ருசிக்கான
துண்டுகளோ பறக்கும்

கட்டி வைத்த  விலைக்கான
பழங்களோ கிடக்கும்

சந்தையிலும் காயாத
சம்சாரி வியர்வை
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சனி, 24 அக்டோபர், 2015

ரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை


ரோஜா என்றும் ரோஜாவே - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------------
ரோஜாவை மல்லிகை என்றோ மலை வாழைப்பழம்   என்றோ சொல்லாதவரை  ரோஜாவை ரோஜா என்று சொல்லுவதில் நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா என்றும் ரோஜாதான் ; அதன் மணம் என்றும் நறுமணம்தான் என்று சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறது.

ஆனால் இந்தக் காலத்தில் பெயருக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறதே . 'மேலாளர்' என்பவருக்கு ' மேலாண்மைப் பேராண்மைப் பெரியவர்' என்றால் தான் பிடிக்கிறது  . 'புராகிராமர் ' என்பதை விட 'மென்பொருள் மேதாவி மேதை' என்று அழைக்கப் படவே விரும்புகிறார்கள் . எப்படி அழைத்தாலும் ரோஜா ரோஜா தான். அவர்கள் வேலை அதே வேலைதான்.

மற்றும் வயதாக ஆக  மகன் என்றும் அப்பா என்றும் தாத்தா என்றும் அழைக்கப் பட்டாலும் நமது மனிதப் பிறவியின் அடிப்படைக் குணம் மாறுவது இல்லையேகிளார்கில் இருந்து    மேனேஜர் ஆகி டைரக்டர் ஆனாலும் அம்மாவுக்குப் பிள்ளைதானே . தாத்தாவுக்கு பேரன்தானே . ரோஜா என்றும் ரோஜா தானே.

ஆனால் எவ்வளவோ விஷயங்கள் உலக மயமாக்கலால், பெயரிலும் உருவத்திலும்  மாறி இருப்பதைப் பார்க்கிறோம் .

இட்டிலிபர்கர் ஆகி விட்டது. தோசை , பிஸ்ஸா ஆகிவிட்டது. தண்ணீர் ' தண்ணிஆகிவிட்டது .வயல் வீடு ஆகி விட்டது. மரம், கரி ஆகி விட்டது . மணல், குழி ஆகி விட்டது . கடை ' மால் ' ஆகி விட்டது. கிராமம் நகரம் ஆகி விட்டது. நகரம் ' மெட்ரோ ' ஆகி விட்டது.

கொஞ்ச நாள் போனால் தமிழும் இங்கிலீஷ் ஆகி விடும் போல் இருக்கிறது. அது வரைக்கும் சொல்லிக் கொள்ளலாம் ' ரோஜா என்றும் ரோஜா தான் '
-----------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 23 அக்டோபர், 2015

அந்தக் காலத்திலே .. - நகைச்சுவைக் கட்டுரை

அந்தக் காலத்திலே ..   - நகைச்சுவைக் கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------------
இந்த வயசானாவங்க மேலே எங்களுக்கு  ரெம்ப மரியாதைங்க   . என்ன ஒண்ணு . அவங்க வாயைத் திறந்து அட்வைஸ் பண்ணாம இருந்தாங்கன்னா அந்த மரியாதை இன்னும் கொஞ்சம் கூடுங்க. வாயைத் திறக்கவே கூடாதுன்னு சொல்லலேங்க. இந்த, சாப்பிடறது , தண்ணி குடிக்கிறது இந்த மாதிரி எவ்வளவோ முக்கியமான வேலைங்களுக்கு நல்லாவே பெருசாவே வாயைத் திறக்கலாம். ஆனா எங்களுக்குப் பிடிக்காத எங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பத்தி நீட்டி முழக்கிப் பேச    வேணாம் கிறதுதான்  எங்களோட தாழ்மையான விண்ணப்பங்க.  

இப்ப உதாரணத்துக்கு கிரிக்கட்டை எடுத்துக்கலாம். எல்லா வயசுக் காரங்களுக்கும் புடித்தமான விளையாட்டுத்தான் .ஒத்துக்கிறோம் . ஆனா நாங்க இப்ப ட்வெண்டி ட்வென்டி போரடிச்சுப் போயி டென் டென்னுக்கு போயிக்கிட்டு இருக்கிறப்போ இவங்க அந்தக் காலத்திலே டெஸ்ட் மேட்சிலே பாரூக் எஞ்சினீயரொ பாரூக் டாக்டரோ  விளையாண்டதெல்லாம் சொல்லி எங்களை வெறுப் பேத்தணுமா   .

அப்புறம் இந்த சினிமாப் பாட்டு. எம் கே தியாக ராஜ பாகவதருக்கு நல்ல குரல் வளம் தான். நாங்க ஒத்துக்கிறோம். ஆனா அதே பாட்டை இவரு கர கர தொண்டையிலே உச்ச ஸ்தாயிலே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட பாடி அந்தப் பாட்டு மேலேயும் பாகவதர் மேலேயும் எங்களுக்கு ஏன் கோபம் வர வைக்கணும். அவரு பாடினதுனாலே தானே இவரு பாடுறாரு. தேவையா.

  அப்புறம் இந்த நடிகர்கள் மாதிரி ஆக்டிங். சிவாஜி சார் டயலாக் டெலிவரி எல்லாம் நாங்களும் கேட்டு ரசிச்சிருக்கோம். அதுக்காக இவங்க அவரு மாதிரி பேசி சிரிச்சு முகத்தை துடிக்க வச்சு எங்களை எல்லாம் பயமுறுத்தணுமா . அப்புறம் எம் ஜி ஆர் சார் மாதிரி சிலம்பமாம் - குடைக் கம்பை   சுத்தி விளையாண்டு கம்பு குத்தி பேண்டேஜ் போட்டு ஒரு வாரம் படுக்கை. அவங்க ஆசைகள்ளே எவ்வளவோ நிறைவேறாமப் போயி இருக்கலாம்.     அதுக்காக நாங்களா கிடைச்சோம். இப்படிப் போட்டு படுத்துறாங்க.

ஏங்க நான்  தெரியாமாத் தான் கேக்கிறேன். அவங்க அனுபவத்தை ட்ரை பண்ண விஷயமா இல்லை. இப்ப ஒரு நாளைக்கு மூணு குலாப் ஜாமுனுக்குப் பதிலா ரெண்டு சாபிட்டாங்கன்னு வச்சுகுங்க. அவங்க குறைக்கப் போறதில்லே. சும்மா ஒரு பேச்சுக்கு வச்சுக்குங்க. அப்ப சுகர் டெஸ்ட் பண்ணி சுகர் லெவல் குறைஞ்சிருக்கான்னு டெஸ்ட் பண்ணி பாக்கலாம். பொழுது போகலேன்ன டெய்லி  டெஸ்ட் பண்ணலாம். ஒரு துளி ரத்தம் தானேஒரு பாய்ன்ட் குறைஞ்சாலும் சந்தோசம் தானே.

அப்புறம் பழைய நண்பர்கள் படம் பேப்பரிலே இரங்கல் பகுதியிலே வந்தா வாழ்க்கையைப் பத்தி நிலையாமைப் பத்தி யோசிக்கலாம். ஏன் கவிதையே கூட எழுதலாம். இப்படி அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி  எதையாவது செய்யலாம். அய்யய்யோ வயசைப் பத்தி சொல்லிட்டேனா . அவங்களுக்குக் கோபம் வந்திடப் போகுது.   அப்ப  பேசாம பேஸ் புக்கிலே வயசைக் குறைச்சுப் போட்டு வாலிபப் பசங்க கூட அரட்டை அடிக்கலாம்

இதையெல்லாம் விட்டுப் போட்டு நம்மளைப் போட்டு படுத்துறாங்க. நமக்கும் வயசாகத் தான் போகுது. அப்ப நாம எப்படி இருப்போம்னு கேக்கறீங்களா .அதை அப்ப பாத்துக்கலாங்க . என்ன நான் சொல்றது.
-------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 20 அக்டோபர், 2015

காட்டுக்குள்ளே திருவிழா

காட்டுக்குள்ளே திருவிழா
------------------------------------------
நிலவின் குளுமை
ஒளியினை விரட்டி

நியான் விளக்குகளின்
நெருப்பு வெளிச்சம்

குருவிகள் கீச்சுக்
குரலினை விரட்டி

வாத்தியக் கருவிகள்
வறட்டுக் கூச்சல்

நாட்டு மனிதர்கள்
காட்டுக்குள் வந்ததால்

காட்டு விலங்குகள்
நாட்டுக்குள் நகரும்
--------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சம்பந்தா சம்பந்தம்

சம்பந்தா சம்பந்தம்
--------------------------------
மலருக்கும் மணத்திற்கும்
சம்பந்தம் இருப்பது போல்

இரவுக்கும் உறவுக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

இளமைக்கும் இனிமைக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

உரிமைக்கும் கடமைக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

அவளுக்கும் அவனுக்கும்
சம்பந்தம் இருக்கிறது
------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தாத்தா பாட்டி

தாத்தா பாட்டி
-----------------------
கோமாவில் கிடக்கின்ற
கொண்டவளைப் பார்க்கின்றார்

கண்டதும் களித்ததும்
உண்டதும் உணர்ந்ததும்

சேர்ந்து நடத்திய
சிறப்புக்கள் அனைத்துமே

கண்களில் உருண்டு
கண்ணீராய்த் திரண்டு வர

அவ்வுலகில் வரவேற்க
அவளுக்கு முன் செல்கின்றார்
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems
   

வியாழன், 15 அக்டோபர், 2015

'சென்' பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை

'சென்பிரான்சிஸ்கோ - நகைச்சுவைக் கட்டுரை 
---------------------------------------------------------------------------------------------------------
சான்பிரான்சிஸ்கோ   விலே இருக்கிற 'சான்'       எடுத்துட்டு சென்னையிலே இருக்கிற 'சென் போட்டு சென் பிரான்சிஸ்கோ ஆக்கிட்டேங்க. சென்னைக்கும் சான்பிரான்சிஸ்கோ வுக்கும் அவ்வளவு ஒற்றுமை இருக்குங்க.

தங்கம் கிடைக்குதுன்னு 'தங்க ஆசையிலே ' வந்த வெளி நாட்டுக்காரங்க ளாலே உருவானது தான் சான்பிரான்சிஸ்கோ வாம். சினிமாவிலே சேரணும்னு  'சினிமா ஆசையிலே' வந்த வெளி மாநிலம், வெளி மாவட்டக் காரங்களாலே உருவானது தானுங்களே நம்ம சென்னை.

தண்ணிக்கு மேல அங்கே கோல்டன் கேட்  ப்ரிட்ஜாம். நம்மளும் தரைக்கு மேல அண்ணா மேம்பாலம்  வச்சிருக்கொம்லே. அதுவும் ஒண்ணுக்குப் பத்தா பாலங்கள் இருக்குல்லே.

அப்புறம் மேட்டிலிருந்து பள்ளத்துக்கு வளைஞ்சு வளைஞ்சு ஊருக்குள்ளேயே லோம்பார்டு ரோடுன்னு ஒண்ணு இருக்காம்.   உலகத்திலேயே கார் ஓட்ட ரெம்ப கஷ்டமான ரோடாம். நம்ம சென்னை தெருவிலேயே குண்டும் குழியுமா இருக்குமே. அதிலே வளைஞ்சு வளைஞ்சு கார் ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்முன்னு    நமக்குத் தானே தெரியும். பெரிசா பெருமை அடிச்சுகிறாங்க

சைனா டவுன் ன்னு ஒரு ஏரியாவாம். அங்கே வித விதமான கலைப் பொருட்கள் கிடைக்குதாம். ஏங்க நான் தெரியாமதான் கேட்கிறேன். நம்ம ரங்கநாதன் தெருவிலே கிடைக்காத கலைப் பொருட்களாங்கஅப்புறம் பாண்டி பஜார் , சைனா பஜார் ன்னு எம்புட்டு இருக்கு.

வெளிநாட்டுக்காரங்க வந்து வச்சிருக்கிற வித வித மான ரெஸ்டா ரண்டாம். வித விதமான சாப்பாடாம்  .  நம்மகிட்டயும் தான் முருகன் இட்டிலி கடையிலே இருந்து முனியாண்டி விலாஸ் வரை வித விதமா இருக்கு. பேச வந்துட்டாங்க.

அப்புறம், அங்கே அடிக்கடி பூகம்பம் வருமாம். ஏங்க, இதெல்லாம் பெருமைக்கு உரிய விஷயமாங்க . சென்னையிலும் தான் இப்ப அடிக்கடி பூகம்பம் வருது. ஏன் சுனாமியே வந்துச்சே.  . ரெம்ப வருத்தத்துக்கு உரிய விஷயங்க. 'வி வில் ரீபில்ட்' ன்னு சொல்லிட்டு பில்டிங் எல்லாம் உயர உயரமா கட்டிறாங்க. போன உயிர் எல்லாம் திரும்ப வருமாங்க.

பணக்காரன் பிள்ளை பணக்காரன், ஏழை பிள்ளை ஏழைன்கிற மாதிரி அவங்க வசதிக்கு அவங்க உயரமா பில்டிங் கட்டுறாங்க. நம்மளும்தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஈஸியார் ரோடு , எம் ஆர்  ரோடுன்னு கட்டிக்கிட்டு   இருக்கோம். என்ன கொஞ்சம் விளை நிலங்கள் எல்லாம் வீடாய் மாறுறது கஷ்டமாய்   இருக்கு.

     அப்புறம் சான் பிரான்சிஸ்கோ  ஐடி இன்னோவேஷன் சென்டராம்நான் தெரியாம தான் கேக்கிறேன். அங்கே இருக்கிற ஐடி கம்பனிகள்ளே வேலை பாக்கிற பயலுகள்ளே பாதிப் பயலுக யாரு. எல்லாம் நம்ம கிட்டே   இருந்து  போன பயலுவ தானே .

என்னமோ போங்க. இப்ப எனக்கு இந்த சான் பிரான்சிஸ்கோ செல்பி ஆல்பத்தை பேஸ் புக்கிலெ ஏத்தி பெருமை அடிச்சுக்கணும். வர்றேங்க.
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி