வெள்ளி, 30 டிசம்பர், 2016

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து
---------------------------------
சாதிமத பேதமில்லா
சமுதாயம் மலரட்டும்

ஊழலில்லா சூழலொன்று
உருவாகி வளரட்டும்

வன்முறையே இல்லாத
நன்முறையே நடக்கட்டும்

வளமான நலமான
வாழ்க்கை கிடைக்கட்டும்

புத்தாண்டு பிறக்கட்டும்
புது வாழ்வு சிறக்கட்டும்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 29 டிசம்பர், 2016

ஊழல் ஒழிப்பு

ஊழல் ஒழிப்பு
-------------------------
ஆயிரத்தில் ஊழலென்றால்
அவ்வப்போது மனச்சாட்சி

கோடியிலே ஊழலென்றால்
குறுகுறுப்பு ஒன்றுமில்லை

கையசைத்துச் சிரித்தபடி
காரினிலே கடந்து போகும்

சமுதாய நினைப்பு இன்றி
தன் முனைப்பு இருக்கும் வரை

ஊழலெல்லாம் ஒழியாது
ஒரு  முடியும்  இழியாது
--------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 20 டிசம்பர், 2016

காசேதான் கடவுளேயப்பா

காசேதான் கடவுளேயப்பா
-----------------------------------------------
காப்பிக் கடையோ
காய்கறிக் கடையோ

கருவாட்டுக் கடையோ
கடலைமிட்டாய் கடையோ

அரிசிக் கடையோ
அரசிலவுக் கடையோ

தள்ளுவண்டிக் கடையோ
தெருமுக்குக் கடையோ

காசேதான் கடவுளேயப்பா
கண்ணிலேதான் தெரியலேயப்பா
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 28 நவம்பர், 2016

குறும்புக் குழந்தை

குறும்புக் குழந்தை
--------------------------------
வாலு, குட்டி என்றெல்லாம் அழைத்தால்
அம்மா அன்பு என்று
தெரியுமாம் குழந்தைக்கு

பெயரை அழுத்திச் சொல்லி அழைத்தால்
அம்மா கோபம் என்று
புரியுமாம் குழந்தைக்கு

சொல்லும் வார்த்தையும்
சொல்லும் தொனியும்

பதிலுக்கு குழந்தையிடம்
குறும்பாய் பணிவாய் 
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

யாரோ யாரோ

யாரோ யாரோ
-----------------------
யாரோ இறந்துட்டதா
யாரோ   சொன்னாங்க
யாரு எங்கே
எப்படின்னு கேக்காம
யாரோ போனாங்க

யாரோ இறந்துட்டதா
யாரோ சொல்வாங்க
யாரு எங்கே
எப்படின்னு கேக்காம
யாரோ போவாங்க
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 16 நவம்பர், 2016

நூறு ரூபாய் நோட்டு

நூறு ரூபாய் நோட்டு
--------------------------------
ஐநூறு ரூபாய் நோட்டு
அதிகமா புழங்குனப்போ

நூறு  ரூபாய் நோட்டை
நோகாம விட்டதாலே

திறந்திருக்கும் ஏ டி எம் மை
தேடிப் போய் நின்னு

இருபது இருபதாய்
எடுத்துட்டு வரச் சொல்லி

நூறு ரூபாய் நோட்டு
நொந்து விட்ட சாபம்
---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆகாயத்தின் அடையாளம்

ஆகாயத்தின் அடையாளம்
----------------------------------------------
வந்து போகும் மேகங்கள்
கலைத்துச் செல்லும் காற்று

உயரப்  பறக்கும் பறவைகள்
விரைந்து திரியும் வாகனங்கள்

எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள்
இரவும் பகலுமாய்த் தோற்றங்கள்

எதுவும் இங்கே காட்டாது
ஆகாயத்தின் அடையாளம்

சுத்தமாய் சுகமாய் வெளியாய்
சுதந்திரமாய்  ஆகாயம்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 20 அக்டோபர், 2016

அதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை

அதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை 
----------------------------------------------------------------------------------------------------------
இந்த அதிகாலைப் பொழுது எப்படி இருக்கும்னே ரெம்ப நாளா தெரியாம இருந்துச்சுங்கநம்ம காலையிலே ஒன்பது மணிக்குத்தானே சாவகாசமா எந்திரிப்போம். எந்திரிச்சு அவசர அவசரமா குளிச்சுட்டு சாப்பிட்டு ஓடுற பஸ்ஸிலே இடிச்சுப் பிடிச்சு ஏறி வேர்த்து விறுவிறுத்து பத்து மணி ஆபீசுக்கு பத்தே காலுக்கு உள்ளே நுழைஞ்சு மேனேஜர் கிட்டே திட்டு வாங்கிக்கிட்டே அட்டெண்டன்ஸிலே கையெழுத்து போடுறது பழக்கம் ஆயிடுத்தே.

ஒரு நாள் என்னமோ தெரியலீங்க. காலையிலே அஞ்சு மணிக்கே முழிப்பு வந்திடுச்சு . அதுக்கு பிறகு தூக்கமே வரலை. சரி, வெளி உலகம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு வெளியே போயி நடந்தா , ஆஹா, ஆஹா.

அந்த லேசான இருட்டிலே நடக்கிறப்போ சுகமான காத்து சூப்பர். டிராபிக் இல்லாததால்  சத்தமும்  இல்லை . பெட்ரோல்  வாசமும்  இல்லை மரத்தில் இருந்து பறவைகளின் கீச் கீச் சப்தம்ஒண்ணு ரெண்டு  பேரு தொந்தியும் தொப்பையுமா ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்க ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி அந்த தொந்தியும் உருண்டு ஓடுது . அப்புறம் சைக்கிள் பெல் சத்தம். அடுக்கிய தினசரி பேப்பர்களை பின்னாலே வச்சுக்கிட்டு சைக்கிள் பையன்கள். பால் பாக்கெட்டுகள் டப்பாக்களை  வேனில் இருந்து இறக்கிக்கிட்டு இருக்காங்க.

 பக்கத்து டீக்கடையில் இருந்து சுகமான தேநீர்   வாசம்போயி ஒரு டீ சாப்பிட்டா   அது என்னமோ தெரியலீங்க, அந்த இதமான குளிருக்கும் அந்த சூடான டீக்கும் என்ன ஒரு பொருத்தம். இந்த டீயை தினசரி சாயந்தரம் இதே டீக்கடையில் சாப்பிட்டுத்தான் இருக்கோம். ஆனாலும் இந்த காலை நேர வாசம் சேர்ந்து அது ஒரு ருசிங்க.

அப்படி ஒரு அரை மணி நேரம் நடந்து இயற்கையை ரசிச்சுட்டு திரும்பி வந்து ' நான் திரும்ப வந்துட்டேன்னு ' நம்ம படுக்கை கிட்டே சொல்லிட்டு படுத்தா ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு. திரும்ப அதே அவசரம்  அவசரம் .

சரி, இனிமே  தினசரி அஞ்சு மணிக்கே எந்திரிச்சுடணும். திரும்ப வந்து படுக்கக் கூடாது ன்னு ஒரு தீர்மானம் போட்டுட்டு அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிட்டு சீக்கிரம் படுக்கப் போயாச்சு. காலையிலே அலாரம் அடிக்குது. எந்திரிக்க முடியலீங்க. போர்வையை இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கத் தான் தோணுது. ம்ஹூம். முடியலே. அலாரத்தை ஒரு அழுத்து அழுத்திட்டு தூங்கியாச்சு. மறுபடி ஒன்பது மணிக்குத்தான் முழிப்பு.

தினசரி இதேதான் . ஆனா  அன்னைக்கு  அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சது  மட்டும்  மனசிலே  பசுமையா  இருக்குது. தூய்மையான காத்து. அமைதியான சூழல். பறவைகளின் சப்தம். எல்லாத்துக்கும் மேலே அந்த அதிகாலை டீ. ஆனா அனுபவிக்கத்தான் கொடுத்து வைக்கலீங்க. அது அதிகாலைக் கனவாகவே இன்னமும் இருக்கு. என்ன செய்ய
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி   


புதன், 19 அக்டோபர், 2016

காலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு

காலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு
------------------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/p7ivrmvo1eii

http://www.nagendrabharathi.com

இனிமைக் காலை

இனிமைக் காலை
---------------------------------------
காற்றின் துணையால்
சோம்பல் முறிக்கும்

மரங்களின் ஆட்டத்தில்
பறவைகள் நெளியும்

கீச் கீச் சப்தம்
கிளைகளை நிரப்பும்

படுத்துக் கிடக்கும்
பாதையும் விழிக்கும்

இயற்கை எழுப்பும்
இனிமைக் காலை
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 17 அக்டோபர், 2016

நட்புப் பறவைகள்

நட்புப்  பறவைகள்
-----------------------------------
கீச் கீச் என்று
கத்திக் கொண்டு

இரையை  கூடித்
தேடிக் கொண்டு

ஒன்றாய்ப்   பறந்த
பறவைகள்

உறவாய்த்  திரிந்த
பறவைகள்

சில மறந்து போயின
சில மறைந்து போயின
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை

ஒன் லைன் சினிமா  - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------
டைரக்டர் ஒன் லைனிலே கதை சொல்ல ஹீரோ ஓகே சொல்லிட்டாருன்னு படிச்சுட்டு அந்த படத்தை பாக்குறப்போ அந்த ஒன் லைன் என்னன்னு ஈஸியா புடிச்சுட முடியுதுங்க.

'ஹீரோ உலகம் சுத்துறாரு' இந்த ஒன் லைன் பெரும்பாலான ஹீரோக்களுக்கு புடிச்சுப் போயிடுங்க. ஹீரோ அமெரிக்கா போகலாம், லண்டன் போகலாம். பாரிஸ் போகலாம். அங்கே எல்லாம் ஹீரோயின் கூட டான்ஸ் ஆடிட்டு பாட்டு பாடிட்டு , வில்லன் கூட சண்டை போட்டுட்டு திரும்பி இந்தியா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம். ரெண்டு மணி நேர படம் ஆக்கிடலாம்.

அடுத்த ஒன் லைன். 'ஹீரோ ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கிறார்’. பள்ளிக்கூடத்தில் துரத்தலாம். காலேஜில்  துரத்தலாம். ரோட்டிலே துரத்தலாம். வீட்டிலே துரத்தலாம். சப்ளிமெண்டா  பாட்டு, டான்ஸ், சண்டை. எல்லாத்துக்கும் காரணம் வேணுமா என்னா. ரெண்டு மணி நேர படம்.

இன்னொரு ஒன் லைன். 'இன்ஸ்பெக்டர் ரவுடி யாக  மாறிடுவாரு ' . ஆக்சன் ஹீரோவா புடிச்சு சண்டைப்படம் எடுத்துடலாம். ஹிந்தி வில்லன், இங்கிலிஷ் வில்லன் எல்லாரையும் புடிச்சு போட்டுடலாம். கப்பல்லே சண்டை, விமானத்தில் சண்டை . ஒரே அடிதடி தான். ரெண்டு மணி நேரத்துக்கு.

அப்புறம் இருக்கவே இருக்கு  பேய்ப் பட ஒன் லைன். ' ஒரே ஒரு பங்களாவில் ஒரே ஒரு பேயாம்' . ஹீரோயினைப் பேயாக்கிட்டு  , ஹீரோவைப் பேய் விரட்டுறவனா ஆக்கிட்டு  இருட்டையையும்   டமா  டமா மியூசிக்கையும் போட்டு  ரெண்டு மணி நேர படமாக்கிடலாம்.

நகைச்சுவைப் படம் வேணுமா ' கொஞ்சப் பேரு  உதைக்கிறாங்க. மத்தப்  பேரு வேடிக்கை பாக்கிறாங்க.   'சட்டையை கிழிச்சு விடலாம். பேண்டை கிழிச்சு விடலாம். வேட்டியை கிழிச்சு விடலாம்கிராமப் படம்னா வயக்காட்டிலே கிழிக்கலாம். டவுன் படம்னா மால்லே கிழிக்கலாம்.

எல்லா ஒன் லைன் படங்களுக்கும் பொதுவா டாஸ்மாக் பாட்டு ஒண்ணு வச்சுடலாம். ஹீரோயினையே  கவர்ச்சியா ஆட விட்டுடலாம்.

கொஞ்சம் ஹை கிளாஸ் படம் மாதிரி காண்பிக்கணும்னா  யாராவது ஒரு பழைய  பிரபல எழுத்தாளர்கிட்டே அவரு பேரை யூஸ்  பண்ணிக்கிறோம்னு சொல்லிட்டு கதை உதவின்னு அவரு பேரைப் போட்டு விட்டுடலாம். இதுக்கும் மேலே நம்மளாவே ஒரு புரளியை கிளப்பி விட்டுடலாம், ' டசுக் புசுக்' ங்கிற கொரிய படத்தை காப்பி அடிச்சு எடுத்திருக்குன்னு  .

இப்படி ஒன் லைன் படமாவே வாரத்துக்கு பத்து வரது. அதிலே ஒண்ணு ரெண்டு படம், பத்து நாள் ஓடிட்டாலே 'வெற்றி விழா' தான். ' நன்றி விழா' தான்.
-------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 13 அக்டோபர், 2016

ஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு

ஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு
----------------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/roqnpujazs6r

http://www.nagendrabharathi.com

இயற்கைப் பண்

இயற்கைப் பண்
--------------------------
இடியின் சப்தம்
மேளம் முழங்க

மின்னல் கீற்று
ஒத்து ஊத

மழையின் ஊற்று
தரையில் ஓசை

மனதை மயக்கும்
நாதசுர  இசை

இயற்கை இசைக்கும்
மங்கலப்   பண்
--------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 5 அக்டோபர், 2016

தொடரும் பயணம்

தொடரும் பயணம்
---------------------------------
வளர்ந்து திரிந்து வாடிப் போகும்
உடலின் பயணம்

பிறந்து இருந்து தேய்ந்து போகும்
உயிரின் பயணம்

அலைந்து அறிந்து அமைதி ஆகும்
மனதின் பயணம்

உடலாய் உயிராய் மனமாய் ஆகும்
மனிதன் பயணம்

சக்தியும் சிவமும் சமமாய் ஆகும்
இறையின் பயணம்
------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 3 அக்டோபர், 2016

ஆறிலிருந்து அறுபது வரை

ஆறிலிருந்து அறுபது வரை
---------------------------------------------
விளையாடி வாழ்க்கையினை
ஆரம்பிக்கும் சிறியோரும்

தலையாட்டி வாழ்க்கையினை
முடிக்கின்ற பெரியோரும்

இளமையின் குறும்புகளில்
ஈடுபடும் இளையோரும்

பொறுப்புகளின் சுமையால்
சிரிப்பிழந்த பெற்றோரும்

ஒன்றாகக் கூடுகின்ற
ஓரிடமே பூங்காவாம்
---------------------------------------நாகேந்திர  பாரதி
http://www.nagendrabharathi.com

திருக்குறள்: அடக்கமுடைமை

திருக்குறள்: அடக்கமுடைமை
-------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/2o6apymguola

http://www.nagendrabharathi.com

வியாழன், 29 செப்டம்பர், 2016

உலக மய மாயம்

உலக மய மாயம்
-------------------------------
நிலத்துக்குத் தாகமென்றால்
நீர் கொடுக்கும் மேகம்

மேகத்துக்குத் தாகமென்றால்
நீர் ஏற்றும் கடல்

கடலுக்குத் தாகமென்றால்
கரையோரக் கண்ணீர்

கண்ணீரின் காரணத்தில்
உழைப்பாளர் வேர்வை

வேர்வையை மதிக்காத
உலக மய மாயம்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

தோசையம்மா தோசை

தோசையம்மா தோசை
---------------------------------------
அரிசி உளுந்து சேர்த்து
ஆட்டி வரும் தோசை

மாவு நல்லா புளித்து
மலர்ந்து வரும் தோசை

மேனி முழுக்க பூத்து
மின்னி வரும் தோசை

மூணு கரண்டி தோசை
முக்கால் வாசி தோசை

மூணு சட்டினி  சேர்ந்தா
முழுமையான தோசை

மெத்து மெத்து தோசை
பத்து தோசை ஆசை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஓம் சாந்தி

ஓம்  சாந்தி
-------------------
வெளிச்சத்தில் நுழைந்து
இருட்டைக் காண்போம்

சப்தத்தில் நுழைந்து
நிசப்தம் கேட்போம்

இன்றுக்குள் நேற்றாய்
இருக்கின்ற பொருளை

ஒன்றுக்குள் ஒன்றாய்
உணர்ந்து அறிவோம்

ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி
---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 21 செப்டம்பர், 2016

ரெயில்வே கேட்

ரெயில்வே கேட்
-----------------------
ரெயில்வே கேட்
மூடும் பொழுது

திண்பண்டக் கூச்சல்
திறக்கும் பொழுது

தெருவோர மரங்களில்
பழுத்த பழங்களும்

சுக்கு காப்பியும்
சுடச்சுட வடைகளும்

கேட்டைத் திறக்க
லேட்டானால் நல்லது
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திருக்குறள் - நடுவு நிலைமை


திருக்குறள் - நடுவு நிலைமை
------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/qq37wddzt32e

http://www.nagendrabharathi.com

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கிராமத்துப் பாதைகள்

கிராமத்துப் பாதைகள்
----------------------------------------
வாசலை விட்டு
வந்தால் பாதை

வரப்பும் பாதை
வயலும் பாதை

குடிசைகள் நடுவே
இருப்பதும் பாதை

கண்மாய் மேட்டில்
நடப்பதும் பாதை

காற்தடம் பதியும்
எல்லாம் பாதை
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

பாட்டுப் பாடவா - நகைச்சுவைப் பேச்சு

பாட்டுப் பாடவா - நகைச்சுவைப் பேச்சு
---------------------------------------------------------------

https://soundcloud.com/knbharathi/ckoe8dxhhd88

http://www.nagendrabharathi.com

திங்கள், 19 செப்டம்பர், 2016

அசை போட ஆசை


அசை   போட ஆசை
--------------------------------
கண்களையும் காதுகளையும்
தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டு

இருக்கின்ற ஒரு வாயால்
'இம்'  என்று சப்தமிட்டு

உபசரிக்கும் நண்பரிடம்
'உம்'  என்று பேசிவிட்டு

திரும்புகின்ற வழியினிலே
தெரு முக்கில் மாடுகள்

ஒன்றை ஒன்று பார்த்தபடி
உற்சாகமாய்  அசை போட்டபடி
-----------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

எப்படி இருக்கீங்க - நகைச்சுவைப் பேச்சு

எப்படி இருக்கீங்க - நகைச்சுவைப் பேச்சு
--------------------------------------------------------------------
https://soundcloud.com/knbharathi/8hcuydvs1ccv

http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

மரம்தாய் மறந்தாய்

மரம்தாய்  மறந்தாய்
-----------------------------------
ஊரை விட்டுப் போகும் போது
அந்த ஒற்றைப்  பனை மரம்
உற்றுப் பார்க்கிறது

பதினியைக் குடித்தாய்
பனங்காய் சப்பினாய்
நுங்கைச் சுவைத்தாய்
கிழங்கைக் கடித்தாய்

தாயாய்க் கொடுத்தேன்
எல்லாம் மறந்தாய்
எங்கோ பறந்தாய்

வீட்டுச் சட்டமாக
நான் விழுந்து விடும் முன்னே
மரம் தான் நான்  மறப்பாயா  
மரம் தாய்  வருவாயா
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திருக்குறள் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - செய்ந்நன்றி அறிதல்
------------------------------------------
https://soundcloud.com/knbharathi/qdztchuu57vv

http://www.nagendrabharathi.com

புதன், 14 செப்டம்பர், 2016

உடைந்த மண் சட்டிகள்

உடைந்த மண் சட்டிகள்
----------------------------------------
அடுப்படி மண்சட்டியில்
தெரிவது  அரிசி

வயக்காட்டு மண்சட்டியில்
தெரிவது  கொழம்பு

கோயில் மண்சட்டியில்
தெரிவது  பொங்கல்

சுடுகாட்டு மண்சட்டியில்
தெரிவது தண்ணீர்

கடலோர மண்சட்டியில்
தெரிவது  எலும்பு
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காதல் நினைவு

காதல் நினைவு
-------------------------
பார்த்துக் கொண்டே இருக்கும்
அவள் முகம்

படுத்துக் கொண்டே இருக்கும்
அவள் மடி

தொட்டுக் கொண்டே இருக்கும்
அவள் விரல்

தொடர்ந்து கொண்டே இருக்கும்
அவள் கால்

இருந்து கொண்டே இருக்கும்
அவள் காதல் 
---------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை

ஆட்டோ சவாரி - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------------------------------------------------------------------------
இந்த ஊபர் , ஓலா மூலமா டாக்சி , ஆட்டோ வெல்லாம் நம்ம வீட்டு வாசலுக்கே வர ஆரம்பிச்சப்பறம் நம்ம ரெம்பவே அலட்டிக்க ஆரம்பிச்சுட்டோங்க. ஆட்டோ வர ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டானாலும்  உடனே கேன்சல் பண்ணிட்டு அடுத்த ஆட்டோவுக்கு புக் பண்றது. பழைய ஆட்டோ டிரைவர் போன் பண்ணி திட்டுவாரு. பாதி தூரம் வந்திட்டாராம்.

பிளேனா என்ன ஆகாயத்திலே பறந்து வந்து இறங்க. ரோட்டிலே டிராபிக்   எல்லாம் தாண்டித்தானே வரணும்.கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமெ உடனே கேன்சல்  பண்ணிடுவோம், 'ஆட்டோ டிலே ' என்று காரணம் காட்டி. முந்தியெல்லாம் ரெண்டு மூணு ஆட்டோ கிட்டே பேரம் பேசி வீட்டை விட்டு கிளம்பவே அரை மணி நேரம் ஆனதெல்லாம் மறந்து போயாச்சு.

நம்ம தான் இப்படின்னா சில டிரைவர் களும் பொசுக்குன்னு கேன்சல் பண்ணிடுவாங்க. கேட்டா ' நான் பூந்தமல்லியில் இருக்கேன். நீங்க கோடம்பாக்கத்தில் இருக்கீங்க . எப்படி சார் வர்றது. சிஸ்டம் பாட்டுக்கு அக்சப்ட்  பண்ணிடுது.' ம்பாங்க. கூகிள் மேப்பிலே பார்த்தா அடுத்த தெருவிலே இருந்து சர்ர்ன்னு  ஆப்போசிட் வழியிலே கிளம்பி போய்க்கிட்டு இருப்பாங்க. ஏதோ தூரமா  போற பார்ட்டி கிடைச்சிட்டார் போலிருக்கு.

இது தவிர நம்ம கூகிள் ஜி பி எஸ் மேப்பை நம்பாம நம்ம அட்ரஸ்ஸை போனில் விலாவாரியா எடுத்துரைப்போம் பாருங்க. போன் பில் பத்து ரூபாய் ஆயிடும். 'நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது குறுக்குத் தெரு , கார்பொரேஷன் காலனி, புது சர்ச்சுக்கு எதிரே ' ன்னு ஒப்பிச்சு ஒப்பிச்சு தூக்கத்திலே உசுப்பிக் கேட்டாக் கூட ' நம்பர் முப்பத்திரண்டு' ன்னு சொல்லிக்கிட்டுதான் எந்திருப்போம்.

இவ்வளவு தெளிவா நம்ம அட்ரஸ் ரெண்டு மூணு தடவை சொன்ன பிறகும் , ஆட்டோ வந்திடுச்சுன்னு மெசேஜ் பார்த்திட்டு  வெளியே வந்து பார்த்தா , ஒரு காக்கா கூட வந்திருக்காது.   போன் பண்ணினா ' சர்ச்சுக்கு எதுத்தாப்பலே தான் இருக்கேம்பாரு'. அடுத்த தெருவிலே இன்னொரு சர்ச் இருந்தா இது ஒரு பிரச்னை.

நம்ம தெரு சர்ச், புது சர்ச். இப்படி இப்படி இருக்கும்னு அதோட அங்க அடையாளங்களைச் சொல்லி அதன் வரலாற்று முக்கியத்துவங்களை சொல்லி நம்ம இடத்திற்கு வரவழைப்போம். போன் பில் இன்னொரு பத்து ரூபாய். இதுக்குள்ளே  அவரு பழைய சர்ச்சிலே இருந்தே மீட்டரை ஆன் பண்ணிருப்பாரு.

அப்புறம், போற வழியிலே அடுத்த குழப்பம். 'சார் நீங்க சொல்ற ரூட் கூகிள் மேப்பிலே ரெம்ப டிராபிக் ன்னு காண்பிக்குது. வேற ரோட்டிலே போகலாம்னு' சுத்தி வளைச்சு போக ஆரம்பிப்பார் . ' ஏங்க, மதுரைக்கு திருச்சி வழி போகச் சொன்னா அந்த வழி டிராபிக் ஜாஸ்தின்னு சொல்லிட்டு கோவை வழி போனா எப்படிங்க இருக்கும். 'சரி கூகிள் ஆண்டவர் சொல்றாருவிடுங்க. இது கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரைதானே. பத்து ரூபாய் ஜாஸ்தி ஆகும். சீக்கிரம் போயிடலாம்' னு மனசை சமாதானப் படுத்திக்கிடுவோம்.

போற வழியிலே எங்காவது ரெட்  சிக்னல்  விழுந்துட்டா  'இது என்ன தொல்லை' ன்னுட்டு டிரைவர் திரும்பி நம்மை முறைப்பாருஏதோ நாமதான் கண்ட்ரோல் ரூமிலே   சொல்லி ரெட் சிக்னல் விழுந்த மாதிரி. இப்படி ஒரு வழியா நம்ம இடத்தை அடைஞ்சிடுவோம். ஆட்டோமேடிக்கா கூடப் போட வேண்டியதை போட்டு சார்ஜ் நம்ம மொபைலில் தெரியும்.

நம்ம முந்தி மாதிரி, பேரம் பேசிப் போயிருந்தா வர்றதை விட அம்பது ரூபாய் குறைச்சுதான் வந்திருக்கும். இருந்தாலும் நம்ம சும்மா இருப்போமா . ' போன தடவை வந்ததை விட அம்பது ரூபாய் ஜாஸ்தி . முந்தி கொறச்சு வந்ததா ஞாபகம்' ம்னு சொல்லி   வைப்போம். நம்ம ஞாபக சக்தியைப் பத்தி வீட்டிலே கேட்டா தெரியும் லக்ஷணம்.

டிரைவர் பதிலுக்கு சொல்வாரு ' நீங்க பத்து நிமிஷம் சீக்கிரம் வந்திட்டீங்க இப்ப'. ம்பாருஏதோ போன தடவையும்   இவரே கூட்டிட்டு வந்த மாதிரி.  ' கூட்டிக் கழிச்சுப் பார்த்தா எல்லாம் சரியாத்தான் இருக்குமாம்' சொல்றாரு. . நேரத்தின் அருமையை எல்லாரும் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவருக்கும் ஒரு நாளிலே அம்பது ட்ரிப் அடிச்சாதான் இன்சென்டிவ் கிடைக்குமாம்.

என்னமோ போங்க . காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லே . பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லே - இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்களில் இதெல்லாம் அடிபட்டுப் போயிடுது. அடடே போன் வர்ரது. ஆட்டோ  வந்தாச்சுங்க. அவரும் ரெண்டு நிமிஷத்துக்கு மேலே ஆயிட்டா கான்செல் பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு. பழைய சர்ச் கிட்டே நிக்கிறாரா, புது சர்ச் கிட்டே நிக்கிறாரா . அட்ரஸ் சொல்லணுங்க . நான் வர்றேங்க ' ' நம்பர் முப்பத்திரண்டு , நாலாவது  குறுக்குத் ..................'
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி