போட்டோ - சிறுகதை
--------------------------
மறுபடியும் மதுரையில் திவ்யா . அதே பழைய வீடு, கல்லூரியில் படித்தபோது இருந்த வீடு . அப்பா , அம்மாவுக்கு அந்த வீட்டை இடித்து புது விதமாகக் கட்டுவதில் விருப்பம் இல்லை. இந்த முற்றம், இந்தக் கொல்லை, தாங்கி இருக்கும் அத்தை நினைவுகளைக் கலைக்க விருப்பம் இல்லையாம். அவர்கள் நம்பிக்கை. அந்தப் பழைய திருநீற்று டப்பாவில் கூட அத்தையின் மணம் வீசுகிறதாம். ஆமாம். பாட்டி இருந்தபோது இருந்தபடியே எல்லாம். பூஜை அறை உட்பட.
அப்போதெல்லாம், எல்லாமே அத்தை சாம்ராஜ்யம்தான் . அன்றைய காலை உணவு, குழம்பு , காய்கறி எல்லாமே அவள் விருப்பம்தான். அந்த வயதிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் , வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டும் ,சித்தி கல்யாணம், மாப்பிள்ளை பார்த்ததில் இருந்து, கல்யாண மண்டபம் எல்லாமே அவள் பார்த்துப் பார்த்துப் பண்ணியது தான்.
'எல்லாமே அத்தை பார்த்துக் கொள்வாள்'. அந்த வீட்டின் தாரக மந்திரமே இதுதான். எப்படி, எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது . பள்ளிக்கூடம் கூடப் போனது இல்லை. எல்லாம் பார்த்துப் பழகித் தெரிந்து கொண்டது தான். வாக்கப்பட்டுப் போன இடத்தில் சில வருடங்களிலேயே தாலி அறுத்து வந்ததில் இருந்து இங்கே அவள் தம்பி வீடு தான். இவளின் அப்பாதான் அந்தத் தம்பி. இந்தக் குடும்பம்தான். அவள் வாழ்க்கை என்று ஆகிப்போனது .
ஒருநாள் பொட்டென்று அவள் போனபின் இவள் அம்மாவும் அப்பாவும் பட்ட பாடு. 'மிளகாய் டப்பா எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அம்மாவும், 'அந்த சிவப்புக் கலர்ப் பணப்பை எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அப்பாவும் மீண்டு வர ரெம்ப நாட்கள் பிடித்ததைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவள் தானே இவள். அதுவும் இவள் தன் சாயல் என்பதில் அத்தைக்கு ஏக சந்தோசம். 'திவ்யாவை ஒண்ணும் சொல்லாதே ' ஒரே வார்த்தை தான் அத்தையிடம் இருந்து அனைவர்க்கும்.
இப்படி அத்தை பொண்ணாக இருந்து வளர்ந்த அவளுக்கு அவள் மறைவு பெரும் அதிர்ச்சிதான். காலம் தான் எல்லாவற்றையும் மாற்றியது. இன்று அவள் சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் உயர் அதிகாரி. அயல் நாடுகள் பல சென்று, தனது பேச்சுத் திறமையால் பல பெரிய ஒப்பந்தங்கள் முடித்து , தனது நிறுவனத்தை இந்தியாவின் உயர்தர நிறுவனமாய் மாற்றியதில் முக்கிய பங்கு அவளுக்கு.
திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை. பழகிய பல ஆண்களின் பார்வைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இள வயதிலேயே ஏற்பட்டு விட்டதால் எந்த ஆணின் மேலும் நம்பிக்கை ஏற்படவில்லை இன்று முதிர் கன்னியாகியும் , தன் அழகு, அறிவு, ஆற்றல் பற்றிய கர்வமும், நம்பிக்கையும் கொஞ்சமும் குறையாமல் வாழும் நவயுக யுவதி அவள். அவளிடம் ப்ரொபோஸ் செய்த எத்தனையோ ஆண்களை நிர்தாட்சண்யமாக நிராகரித்திருந்தாள். காரணங்களை யோசிக்க வில்லை. வேண்டாம் ஆண்துணை என்ற ஒரு பிடிவாதம்.
ஆனால் , ராபெர்ட்ஸை அப்படி நினைக்க முடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. காரணம் எப்போதும் புன்னகை மாறாத அவன் முகமா, அதற்குள் தெரியும் ஒரு குழந்தைத்தனமா, வேலையில் மூளை களைத்துச் சோர்வு அடையும் நேரத்தில் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ,ஒரு ஜோக் அடித்துச் சிரிக்க வைத்து விட்டு போய்க் கொண்டே இருப்பானே , அந்த அலட்சியமா .
பிறந்த நாள், அலுவலக முக்கிய நாள், இவற்றின் போது அனுப்பும் வாழ்த்துக் குறுஞ்செய்தி மட்டுமே, தனிப்பட்ட செய்தி. மற்றபடி , வேறு சிலர் போல் 'அசடு வழியும், அன்பு என்ற போர்வையில் ஆசை வழியும் ' எந்தக் குறுஞ் செய்தியும் அவனிடம் இருந்து வந்தது இல்லை. இவளது கம்பெனியின் உயர் தர வாடிக்கையாளர்களில் ராபெர்ட்ஸும் ஒருவன்.
நியூயார்க் செல்லும் போதெல்லாம் அவனைச் சந்திப்பது உண்டு. கம்பெனி விஷயமான பேச்சுக்கள், சின்னப் பார்ட்டி அவ்வளவுதான். ஆரம்ப அறிமுகத்தில் ஒரு முறை, ஒரே ஒரு முறை சொல்லி இருக்கிறான் . டெல்லியில் இருந்து இங்கே படிப்பதற்கு வந்தவன், வேலை , தொழில் என்று இன்று அமெரிக்க பிரஜை. திருமணம் ஆகவில்லை. அதற்கு மேல் சொல்லவில்லை . இவளைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. வேலை விஷயம், அவ்வளவுதான். இப்போது ஏன் அவன் நினைப்பு, திரும்பி வந்தாள்.
இதோ தனது தொடர் வேலைகளுக்கும், பிரயாணங்களுக்கும் இடையில் கிடைத்த ஒரு வார இடைவெளியில் மதுரையில் அம்மா அப்பாவுடன் சேர்ந்து அந்தப் பழைய வீட்டில் இருக்கும் ஆசையுடன் வந்திருக்கும் இவளின் எண்ணங்கள் வீட்டின் நினைவில் பின்னோக்கி ஓடின . அந்த வீட்டின் இயல்பு அப்படி இழுத்துச் சென்றது. இதோ இங்கு தானே , அத்தை சடை பின்னி விட்டாள். இதோ இங்கு விழுந்து பட்ட தழும்புதானே இன்னும் முழங்காலில். இன்னும் எத்தனையோ எண்ணங்களில் மூழ்கியவளை அந்தக் குரல் உசுப்பி விட்டது .
'கீரை வாங்கலையோ கீராயி'. இது முத்தம்மா குரல்தான். ஆமாம். அவளேதான். ஓடிப் போய்ப் பார்த்தாள். உடல் தளர்ந்து, முகம் சுருங்கி , ஆனால், அந்தப் புன்னகை மாறாமல் ' கூடையை இறக்கி விடு தாயி '
என்றவளின் கூடையை இறக்கி திண்ணையில் வைத்தவளை மேலும் கீழும் பார்த்து விட்டுக் கேட்டாள். ' நீ திவ்யா தானே . ஒல்லிக் குச்சியா இருந்தவள் , நெடு நெடுன்னு வளர்ந்து உடம்பு பூசின மாதிரி ஆகி , அம்பாள் மாதிரி இருக்கே. அப்படியே உங்க அத்தையோட சந்தன நிறத்தோடு சந்தன மணமும் சேர்ந்து மணக்கிறேடி தாயி ' என்றவளிடம் 'அந்த சந்தன மண உபயம் மிலன் நகர பெர்ப்யூம் பாட்டி 'என்று சொல்லாமல் நினைத்துக்கொண்டு 'எப்படி இருக்கீங்க பாட்டி' என்றாள்.
'எனக்கென்னடியம்மா , இந்தக் கீரையும் , இந்தக் கூடைக்குள் இருக்கிற கிருஷ்ணனும் சோறு போடறான். பொண்ணுங்க புள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணியாச்சு . 'தன் கையே தனக்குதவி 'ன்னு காலையிலே இந்தக் கீரை வியாபாரம். அப்புறம் அவரு, அதான் என் புருஷன் , அவரும் நல்லாத்தான் இருக்காரு , அவரு காய்கறிக் கடையிலே எடுபிடி வேலை , ஓடுது வண்டி, அவருக்கு முன்னாலே ,பொட்டுன்னு ஒரு நாள் போயிடணும். இதுதான், இந்தக் கிருஷ்ணனிடம் வேண்டுதல் ' என்று கூடைக்குள் இருக்கும் அந்தக் குட்டிக் க்ரிஷ்ணனைக் காண்பித்தாள். கிருஷ்ணன் கோயிலில் மட்டும் இல்லை,இந்தக் கீரைக்காரியின் கூடையிலும் இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு .
அவன் வாயில் வெண்ணை அப்பியிருந்தது.' புள்ளைக்குப் பசிக்கும் இல்லே, அதான், அவனுக்குப் பிடித்த வெண்ணை , அப்பப்போ ஊட்டி விட்டுடுவேன்.' ஒரு கணம் உடல் சிலிர்த்தது திவ்யாவிற்கு. ஆற்று மண்ணைத் தோண்டியவுடன் ஊறி வரும் நீர் போல் ஊற்றெடுத்து வரும் இந்த அன்பைப் பெற, இந்தத் தாயைப் பெற என்ன புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அந்தக் குட்டிக் கண்ணன் ' என்று ஏதோ ஒரு எண்ணம்.
இதற்குள் பாட்டி 'அது சரி, என்னை விடு , உனக்கு எத்தனை புள்ளை' என்றவள் திவ்யா முகம் மாறியதை கவனித்து ' அம்மாடி மன்னிச்சுக்கோ, உடம்பைப் பார்த்தே தெரிஞ்சிருக்கணும் , புள்ளை பெத்த உடம்பு இல்லே, தெரியாம கேட்டுட்டேன் ' . ஆனா , ஒண்ணு தாயி , தோணுது சொல்லிடறேன் , இந்தக் குட்டிக்ரிஷ்ணன் ஏற்கனவே உனக்கு உரியவனை உனக்கு காண்பிச்சுட்டான். நடக்கும் ' என்றபடி, கீரையைக் கொடுத்து அம்மா கொடுத்த காசை வாங்கிக் கொண்டு கிளம்பியவளிடம். ஒரு நூறு ரூபாய் நீட்டினாள் திவ்யா.
' அந்தக் குணம் அப்படியே இருக்கும்மா உனக்கு, அப்போல்லாம், அஞ்சு ரூபாய் உங்கம்மா கீரைக்கு காசு கொடுப்பா, நீ பின்னாலேயே ஓடி வந்து பத்து ரூபாய் குடுப்பே , நீ சேர்த்து வச்ச காசு, வச்சுக்க பாட்டி, பாவமா இருக்கு ' ன்னு. நான் வாங்கிப்பேன். அந்தக் குணம் மாறலே உனக்கு இன்னும். அம்பது ரூபாய் கீரைக்கு காசு உங்க அம்மா கிட்டே , நீ நூறு ரூபாய். உனக்கு எல்லாமே ரெண்டு மடங்கு சந்தோஷமா திருப்பிக் கிடைக்கும் தாயி, உன் பிரிய அத்தையும் கொடுப்பாள். என் குட்டிக் கிருஷ்ணனும் கொடுப்பான் ' என்றபடி வாங்கிக் கொண்டாள்.
திரும்பியவளிடம், அம்மா ஒரு போட்டோ காண்பித்தாள். 'இதை நீ பார்த்திருக்க மாட்டே, அத்தையோட பழைய பெட்டியில் இருந்தது . அத்தை ,மாமாவோட இருக்கிற பழைய போட்டோ ' . அந்தப் போட்டோவில் ராபர்ட்ஸ் சிரித்துக் கொண்டு இருந்தான்.
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக