புதன், 4 ஜூன், 2025

பூட்டிய வீடு - கவிதை

 பூட்டிய வீடு - கவிதை 

--------------------

இந்த வீடு முன்பொரு நண்பகலில்

திறந்து இருந்தது


திண்ணையில் ஆழாக்கு நெல்லுக்கு

அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்

அரைக்கீரையை அம்மாச்சியிடம் கீரைக்காரி


முன்ஹாலில் கட்டிலில் இருந்து வரும்

மெல்லிய குறட்டை மூக்குப் பொடி வாசத்தோடு

தாத்தாவிடம் இருந்து


அடுத்த ஹாலில் தாயம் ஆட்டத்தில்

குத்து வாங்கி காய்களை இழந்து கொண்டிருந்தான்

அப்பத்தாவிடம் பேரன்


அடுத்த சிற்றிடத்தில் தவிட்டுப் பானைக்குள்

குஞ்சு பொறித்ததா கோழி என்று

கூடையைத் தூக்கிப் பார்த்திருந்தாள் பேத்தி


நடு முற்றத் தோட்டத்தில்

கல்லுக் கட்டாத காரணத்தால்

வளைந்து நெளிந்தது புடலை


மதிய உணவு சமைத்துப் படைத்த திருப்தியில்

களைத்துத் தூங்கியது

அடுப்படி


கொல்லைப் பக்க வேப்பமரத்தில்

வெயிலுக்கு ஒதுங்கி இருந்தன

குருவிகளும் மைனாக்களும்


உள்ளே போய்ப் பார்க்கத்தான் ஆசை

கதவு பூட்டிக் கிடக்கிறதே


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீட்டுக்கு வீடு - கட்டுரை

 வீட்டுக்கு வீடு - கட்டுரை  -------------------------- 'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பே...