செவ்வாய், 20 நவம்பர், 2018

66 - நகைச்சுவைக் கட்டுரை


66 - நகைச்சுவைக் கட்டுரை
---------------------------------------------------------------------------
அம்பத்தி ஆறில் பிறந்து அறுபத்தி ஆறில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பிரிந்த அவனும் அவளும் அறுபது வயதுக்கு மேல் நடக்கின்ற பழைய மாணவர் சந்திப்பில் சந்திக்க இருக்கிறார்கள்.
அவன் கண்கள் பள்ளிக்கூட வாசலையே பார்த்தபடி இருக்கின்றன. அதோ வருகிறாள். தளர்ந்த நடையோடு , கைத்தடியோடு நடந்து வரும் அவளை நோக்கி தனது சக்கர நாற்காலியை திருப்பிக் கொண்டு போகிறான் அவன்.
நண்பர்கள் பர பரக்கிறார்கள். ' எதுவும் ஏடாகூடமா நடந்திடாதே' .பதிலும் வருகிறது ' அவனோ சக்கர நாற்காலி, அவளோ கைத்தடி , கவலைப்பட  வேண்டியதில்லை  ' 
அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் ..
அவள் கேட்கிறாள் ' என்னோட பென்சிலை திருடிக்கிட்டு போயிட்டியே, பயந்திட்டு ஓடி போயிட்டியே , என்னோட பிரியமான பென்சிலடா அது '
'அந்த பென்சில் பத்திரமா என் நெஞ்சுக்கு பக்கத்திலேயே இருக்கு' என்று சட்டை பாக்கெட்டில் இருந்து முனை முறிந்த அந்த பாதி பென்சிலை எடுத்து கொடுக்கிறான்.
'அட பாவி , அதை சீவ கூட இல்லையா' என்று போலிக் கோபத்துடன் வாங்கிக் கொள்கிறாள் .
'வா போகலாம், நண்பர்கள் ஏதாவது தப்பா நினைத்துக் கொள்ள போகிறார்கள். ' என்ற அவனோடு சேர்ந்து பள்ளி மைதானம் நோக்கி.
' ஏய் என்னடி இப்படி இளைச்சு கூனிப் போயிட்டே என்னை மாதிரியே ' என்று அவளை அணைத்துக் கொள்கிறாள் அவளின் தோழி .தோழிகளின் கைத்தடிகள் உரசிக் கொள்கின்றன. நட்பின் நெருக்கத்தில் கைத்தடிகள் நழுவி விழுகின்றன.
'அந்தப் பாட்டை பாடு'  என்று நண்பர்கள் கோஷமிட , அவள் அவனைப் பார்க்க, அவனும் 'ப்ளீஸ்' என்று சொல்ல மேடைக்கு செல்கிறாள்.
'கிச்சு கிச்சு தாம்பாளம், கியா கியா தாம்பாளம் ' என்று அவள் ஆரம்பித்ததும் பலத்த கரகோஷம். அனைவர் கண்களிலும் கண்ணீர்.
அவனும் தனது குண்டு கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்துக் கொள்கிறான். எத்தனை முறை அவன் கேட்டு அவள் பாட மறுத்த பாடல்.
திரும்பி வரும் அவள் தனது பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறாள் அவனிடம் ' உனக்குப் பிடித்த கடலை மிட்டாய் ' மறுக்கிறான். ' எனக்கு டயபடீஸ்' . அவன் கொடுக்கும் லெமன் சால்ட் ஜூஸ் - அவள் மறுக்கிறாள். 'எனக்கு ஹை பிபி'.  காதலை மீற வைத்த  ஆரோக்கிய குறைவு அவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
கர்சீப்பை எடுத்து துடைத்துக் கொள்கிறான் .
'அது என்னோட கர்சீப் தானே . என்னடா இவ்வளவு அழுக்கா இருக்கு'
'உன்னோட வாசம் போயிடக் கூடாதுன்னு துவைக்கவே இல்லே '
'அம்பத்திரெண்டு வருஷமாவா , அட பாவி' என்று சந்தோஷத்தோடு அலுத்துக் கொண்டாள். 
அவர்கள் நிலையை எண்ணி கலங்கியபடி , நண்பர்கள் அவர்களை தனிமையில் விட்டு விலகுகிறார்கள் ஒன்றும் நடந்து விடாது என்ற தைரியத்தில்.
தனது பேத்தியின் போட்டோவை எடுத்து காண்பிக்கிறாள் அவள் 'உன்னை மாதிரியே இருக்கிறா'  என்ற அவனிடம் கேட்கிறாள் .
'உனக்கு எத்தனை பேரன் பேத்திகள்'
'இல்லை '
'ஏன் ,  உன் பசங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா'
'இல்லை, பசங்களும் இல்லை' என்று சொல்லும் அவனை உற்றுப் பார்க்கிறாள்.
'அட பாவி, நீ இன்னும் கன்னிப் பையனாடா ' என்று கண் கலங்குகிறாள்
' நீ நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கணும்டா , என்னை மாதிரி பேரன் பேத்தி எடுக்கணும் ''அது முடியாது ' பேரன் பேத்தி எடுக்கணும்னு முதல்லே புள்ளைங்க பெத்துக்கணும். , முடியாது ' என்ற அவனை இரக்கத்துடன் பார்க்கிறாள் .அவனும் அவளையே பார்க்கிறான்.
'அப்படிப் பார்க்காதேடா . பேரன் பேத்தி எடுத்த எனக்கு, ஏற்கனவே கல்யாணம் ஆய்டுச்சுன்னு உனக்கு தெரியணும் '
'தெரியும் , உன்னோடபையனோட பிறந்த நாளில் இருந்து  பேத்தியோட பிறந்த நாள் வரை பார்த்திருக்கேன். பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலே இருந்து பைனா  குலர் வழியா பார்த்திருக்கேன் '
'அட பாவி ' என்றவள் , அவன் நெஞ்சில் குத்தி அழ முயல அவன் தடுக்கிறான்.
' என்னை தொடாதே',  என்றவனை அவள் பெருமையோடு பார்க்க அவன் ' எனக்கு இருமல் வந்திடும் ' என்று முடிக்கிறான்.
'கிளம்பலாம் ' என்றபடி நண்பர்கள் நெருங்க , கைத்தடி ஒரு புறமும் சக்கர நாற்காலி மறுபுறமும் திரும்ப ,நண்பர்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட படி பேசிக் கொள்கிறார்கள்  .
' நல்ல வேளை, ஒண்ணும் நடக்கலேடா , அவளோட பேரன் பேத்திகளுக்கு யாரு பதில் சொல்றது '
-----------------------------------------------------------நாகேந்திர பாரதி
(பி.கு - '96 ' திரைப்படத்தை மிகைப்படுத்திப் பார்த்ததின் விளைவு )
Humor in Business - Poetry Book