புதன், 30 செப்டம்பர், 2015

சந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை

சந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை
------------------------------------------------------------------------------------------------------------------
சந்தேகப் படறதிலே இளவரசரைப் பாத்திருப்பீங்க  .  ராஜாவைப் பாத்திருப்பீங்க. சக்ரவர்த்தியைப் பாக்கிறீங்களா . இவரைப் பாருங்க .இவர் சந்தேகம் வீட்டிலே, ஆபீசிலே , வெளியிலே எல்லா இடத்திலேயும் விரவிக் கிடக்குங்க.

வீட்டைப் பூட்டிட்டுப் போறவங்க ஏதோ ஒண்ணு ரெண்டு  தடவை இழுத்துப் பாக்கலாம். இப்படியா. ஒரு எட்டுத் தடவை இழுத்துப் பாத்துட்டு ஒம்பது தடவை தொங்கிப் பாத்துட்டுத்தான் போவார். இதிலே அந்தப் பூட்டு நொந்து நூலாகி அடுத்து யாராவது வந்து லேசாத் தட்டினாலே தொறக்கிற நிலைமையிலே இருக்கும்.

வெளியூர் போனப்புறமும் பூட்டு தவிர கேஸ் , குழாய், ஸ்விட்ச் எல்லாத்தைப் பத்தியும் இவர் படுற சந்தேகம் தாங்க முடியாம இவரு சம்சாரம் அடுத்த நாளே ஊருக்குத் திரும்பலாம்னு சொல்லிடுவாங்க.

ஆபிசிலே இவர் பாக்கிற வேலை கம்ப்யூடேரிலே தமிழ்லே டைப் அடிக்கிறது. கேக்கணுமா. தமிழ்லே , ,   குழப்பம் ரெம்பவே வரும் இவருக்கு. சந்தேகப்பட்டு   சந்தேகப்பட்டு  கரெக்டா தப்பா அடிப்பாரு.

'பள்ளிக்கூடம்' 'பல்லிக்கூடம்' ஆகும். என்னதான் ஒண்ணு ரெண்டு பல்லி இருந்தாலும் அது பல்லிகள் வாழும் கூடம் இல்லைங்க. அப்புறம் 'குதிரை'  'குதிறை' ஆகும். அந்த ஒரு குதிரை முரடுங்கிறதுக்காக  குதிரை இனத்தையே முரட்டு இனமா மாத்துறது கொஞ்சம்   கூட சரியில்லைங்க.

அப்புறம் மனைவிக்கு அப்பப்போ மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போவாருங்க. அந்தப் பூ வாசமா இருக்கான்னு சந்தேகப் பட்டு அடிக்கடி மோந்து பாப்பாரு பாருங்க. அந்தப் பூவோட எல்லா வாசமும் இவரு மூக்குக்குள்ளே போயிருக்கும். வீடு போய்ச் சேரப்போ அந்தப் பூவிலே கொஞ்சம் கூட வாசம் இருக்காது.

கோயிலுக்குப் போனா சாமியை நினைக்கிற நேரத்தை விட வெளியிலே கழட்டிப் போட்ட செருப்பை நினைக்கிற நேரம் தான் அதிகமா   இருக்கும். இவரைப் பொறுத்த வரைக்கும் சாமி தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். செருப்பிலும் இருப்பார்

எல்லாத்தையும் விட ரெம்ப மோசம். இவர் பேரைப் பத்தி இவருக்கு வர்ற சந்தேகம் தாங்க. சுப்பிரமணியன் இவர் பேரு. அதைச் சுப்ரமணி ன்னு எழுதுறதா, சுப்பிரமணி ன்னு எழுதுறதா. 'யன்' சேக்கணுமா வேணாமா.

எதுக்கும் இருக்கட்டும்னு இவரு நாலு இடத்திலே . கேஸ், ஆதார்  , ரேசன் , பேங்கு ன்னு  நாலு இடத்திலே நாலு விதமாய்க் குடுத்து வச்சிட்டாரு.   கவெர்ன்மென்ட் இவரு ஒருத்தரா நாலு பேரா ன்னு குழம்பிக் கிடக்கு. இவரோ அடுத்தடுத்து ஏகப்பட்ட சந்தேகம்   வர்றதாலே   அடுத்து எதைப் பத்தி சந்தேகப்   படலாம்னு குழம்பிக் கிடக்கிறாரு. சக்ரவர்த்திங்கிறது   சரிதானுங்களே  .
   
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 29 செப்டம்பர், 2015

காதல் கண்றாவி - நகைச்சுவைக் கட்டுரை

காதல் கண்றாவி  - நகைச்சுவைக் கட்டுரை 
----------------------------------------------------------------------------------------------------
இந்த காதல் பண்றவங்க அட்டகாசம் தாங்க முடியலிங்கஒருத்தன் அவன் லவ்வரைப் பார்த்து ' நீ உதட்டைச் சுழிக்கிறது ரெம்ப அழகா இருக்கு' ன்னு சொல்லியிருக்கான். அவ்வளவுதாங்க. அந்த பொண்ணு ஓயாம உதட்டைச் சுழிச்சு சுழிச்சு கோணல் வாயா ஆயிப் போச்சு. தேவையா.

இவன் மட்டும் என்னவாம். ' நீ அஜித் மாதிரி இருக்கேடா' ன்னு சொன்னாளாம், இந்தப் பையன் ஒரு வாரமா போட்ட கோட்டைக் கழட்டாம நடந்துக்கிட்டு இருக்கான். படுக்கிறப்ப கூட கழட்டு றது இல்லை. நடு ராத்திரியிலே வேற எழுந்து இங்கேயும் அங்கேயும் நடந்துக் கிட்டு இருக்கான்.

இப்ப நடக்கிற பேய்ப் பட சீசனிலே பேய்ப் படம் பார்த்துட்டு வந்து படுத்த இவன் ரூம் மேட்டு ஒருத்தன்  ராத்திரியிலே இவனைப் பாத்துட்டு  பயந்து போயி ரூமையே காலி பண்ணிட்டுப்  போயிட்டான்.

இது பரவாயில்லைங்க. இன்னொரு நடுத்தர வயது காதல் ஜோடி. இவங்களுக்கு அந்தக் கால எம் ஜி ஆர் , சரோஜா தேவி ஜோடி ன்னு நினைப்பு. அந்த ஆளு கலர் கலரா டைட்டா சட்டை போட்டுக்கிருவார். இந்த அம்மா இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து போகும். ஓசியிலே பழைய படம் பார்த்த திருப்தியோட சில தாத்தா பாட்டிகள் வேற இவங்க பின்னாலே திரியறாங்க.

அப்புறம் இந்த கம்ப்யுட்டர் கம்பனியிலே வேலை பாத்து டாவடித்து அப்படியே லவ்வான ஜோடிகள் வேற மாதிரிங்க. கையிலே எப்பவும் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் இருக்கும்  .  அதை ஆபெரெட் பண்ண தெரியுதோ தெரியலையோ அடிக்கடி எடுத்து ஏதோ கண்ணாடியைப்    பாக்கிற மாதிரி பாத்துக்கிறாங்க.

அவங்களுக்கு ஏத்த மாதிரி இந்த ஆப்பிள் கம்பனிக்காரனும் ஏதோ புது மெட்டல்லெ   ஐபோன் ஆறு எஸ் பிளஸ் கண்ணாடி மாதிரி விட்டுருக்கான். ஆப் பண்ணினா கண்ணாடி , ஆன் பண்ணினா கம்யுனிகேஷன்னு எப்பப் பாத்தாலும் அதையே பாத்துக்கிட்டு இருக்காங்கஇது தவிர ஏதோ பாகுபலி பாஷை மாதிரி ஒரு இங்கிலீஷிலே அவங்களுக்கு மட்டும் புரியற மாதிரி பேசிக்கிறாங்க.

இந்த காதல் கண்றாவியைப் பாத்தாலே எரிச்சலா இருக்குங்க. என்ன. இது மாதிரி எல்லாம் பண்ண முடியாம நமக்கு வயசாயிருசேன்னுதான். வேற என்ன. அதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா என்ன. திட்டத்தானே முடியும்.
---------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 28 செப்டம்பர், 2015

பேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை

பேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------

           இந்த பேஸ் புக் வந்தப்புறம் ரெம்ப வசதியா ஆயிடுத்து. அதுக்கு முந்தியெல்லாம் நம்ம பந்தா பண்ணா கேக்க நாதி இருக்காது. இப்ப என்னடான்னா பத்து பதினஞ்சு லைக்காவது பேஸ் புக்கிலே   கிடைச்சுடுது. அவங்க லைக் போடறதும் ஒரு சுய நலத்தோடுதான். அப்பத் தானே அவங்க பந்தா பண்றோப்ப நாம லைக் போடுவோம்.

            காலையிலே ஏந்திருச்சதிலே   இருந்து  நைட் படுக்கப் போற வரைக்கும் இவங்க போடற ஸ்டேட்டஸ் இருக்கே. என்னையும் சேத்துதான் சொல்றேன்.   ' நான் எந்திருசிட்டேன்     '  அப்படின்னு ஒரு ஸ்டேட்டஸ் . இவரென்ன உலகளந்த பெருமாளா, இவரு எந்திரிச்சதும் நாம சேவிக்கறதுக்கு .

           அப்புறம் 'காலை உணவு 'பாட்ஸ் காப்பி ஸ்டால்' லிலே சாப்பிடிறேன் ' .   நம்ம கேள்வியே படாத ஹோட்டல் பேரா இருக்கும். செக் இன்னு ஒண்ணு இருக்கு. அது மூலம் அந்த ஹோட்டல் போற ரூட், அந்த ஹோட்டல் படம் எல்லாம் இருக்கும். ரெம்ப பிரமாதமா இருக்கும். ' டே வயிதேரிச்சலைக் கிளப்பாதேடா ' ன்னு கத்தணும் போல இருக்கும்.     அதுதானே   அவனுங்க நோக்கம் .

                    அப்புறம்  முருகன் இட்லியிலே  காபி குடிக்கிறேன். முனியாண்டி விலாசிலே பிரியாணி சாப்பிடுறேன்னு  போட்டுத் தாளிப்பாங்க பாருங்க. ஒரே அலம்பல் தான்.

                இது தவிர போட்டோ  வீடியோ எல்லாம் போடுவாங்க பாருங்க. 'காந்திஜி உடன் நான்' அப்படின்னு ஒரு போட்டோ . அவர் இறந்து போய்  ரெம்ப வருஷம் ஆச்சே ன்னு பாத்தா ஏதோ ஒரு மெழுகு மியூசியதிலே அவரோட சிலைக்குப் பக்கத்திலே எடுத்த போட்டோ . டேய்ய் .

              அப்புறம் இவரு டென்னிஸ் விளையாடற வீடியோ ஒண்ணு அது பாட்டுக்கு ஆடோமேடிக்கா ஓட ஆரம்பிக்கும். நம்ம தாங்க முடியாம, வேற ஒருத்தர் ஸ்டேட்டஸ் ஸுக்குப் போனா அங்கே எவனோ ஒருத்தன் பாம்பு, தேள், பூரான் சாப்பிடற வீடியோ போட்டிருப்பான்  .     நமக்கு வாந்தி வராத குறைதான்.

               இது தவிர அரசியல் , சினிமா அலம்பல் வேற. இவன் சின்னப் புள்ளையிலே இருந்து வளர்ந்த போட்டோக்களா வேற குவிஞ்சு கிடக்கும். இவரு வாழ்க்கை வரலாற்றைப் பார்த்துப் படித்த ஒரு ஆத்ம திருப்தி நமக்குக் கிடைக்கணுமாம் . 

            அப்புறம் கடைசியிலே 'குட் நைட் ' ன்னு ஒரு அழகான பூ படத்தோட முடிப்பய்ங்க. நம்மளும் ஒரு லைக் போட்டுட்டு படுக்கப் போவோம்.

            ஏன் இதை எல்லாம் பாக்கணும்,. அப்புறம் கிடந்தது புலம்பணும்னு கேக்கிறீங்களா. அது வேற ஒண்ணும் இல்லைங்க. நம்மளும் இது மாதிரி நகைச்சுவைக் கட்டுரைன்னு சொல்லிப் போட்டுட்டு மத்தவங்க லைக்குக்கு காத்துக் கிடக்கோம. என்ன பண்றது. நம்ம லைக் போட்டாத் தானே அவங்களும் லைக் போடறாங்க. எல்லாம் கொடுத்து வாங்கிற ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க.
-------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி
  

வியாழன், 24 செப்டம்பர், 2015

தொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை

       தொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த தொலைக் காட்சி உரையாடல் பத்தி எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகங்க.

இதை நடத்துறவருக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. மது விலக்கு , பண வீக்கம், உலகப் பொருளாதாரம், சைனா நிலவரம், எதைப் பத்தி வேணும்னாலும் அட்டகாசமா பேசுறாரு. அதுவும் புள்ளி விவரங்களோட.

இவ்வளவு புத்திசாலி கேள்வி கேட்கிறப்போ வந்திருக்கிற விருந்தினர் , அதாங்க கெஸ்ட் அவரோட பதிலையும் ஆவலோட எதிர்பார்ப்போம். ஆனா அவரு என்னடான்னா  நம்மளை மாதிரி அந்த ஹோஸ்ட் அதான் நடத்துறவரு வாயையே ஆன்னு பாத்துக்கிட்டு இருக்காங்க.

நடத்துறவர் மேல ஒரு மரியாதையோட கம்முன்னு கேட்டுக்கிட்டு இருப்பாங்க போல. சில சமயம் தலையை மட்டும் ஆட்டுவாங்க. ஆமாம்னு இல்லையின்னு நம்ம அர்த்தம் பண்ணிக்கணும். பெரும்பாலும் ஆமாம் தலையாட்டலாதான் இருக்கும்.

சில சமயம் அந்த கெஸ்டுங்க    இருக்கிற இடத்திலே வேற ஏதாவது ஒரு ஜீவராசியை உருவகப் படுத்திப் பார்த்தாலும் ஒண்ணும் வித்தியாசம் தெரியாது .

அப்புறம். நம்ம கண்ணை மூடிக்கிட்டோம்னு வச்சுக்குங்க. ஏதோ நம்ம காலேஜ் புரொபசர் லெக்சர் எடுக்கிற மாதிரி இருக்கும். இதுக்கு ஏன் உரையாடல் ன்னு  பேர் வச்சாங்கன்னு நினைச்சுக்கிட்டு கண்ணைத் திறந்தோம்னு வச்சுக்குங்க. உண்மை தெரிஞ்சுடும். அங்கே அவரோட சேத்து இன்னும் ரெண்டு மூணு பேர் உக்காந்திருப்பாங்க. சரிதான்.

சில நேரம் இந்த கெஸ்ட்டுங்கள்ளிலே     யாராவது முந்திரிக்கொட்டை மாதிரி பேச வாயைத் தொறந்தாங்கன்னு   வச்சுக்குங்க. டக்குன்னு விளம்பர இடைவேளை விட்டுடுவாங்க. முடிஞ்சப்புறம் பாத்தா வாய் மூடி கெஸ்ட்டுகளும் வாய் மூடா நடத்துனரும்தான்   .

இந்த 'உரையாடல்' ங்கிற  வார்த்தைக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தா ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசிக்கிட்டு இருப்பதுன்னு போட்டிருக்குங்க   .  இங்கே என்னடான்னா தொலைக்காட்சியிலே வேற மாதிரி இருக்கு.   அப்புறம்தான்   விஷயம் புரிஞ்சது.

 இந்த நடத்துனருக்கு பின்னாலே ஒரு டீமே இருக்குதுங்க. அவங்க எழுதிக் கொடுத்ததை எல்லாம், இவரு ஒண்ணு விடாம அந்த ஒரு மணி நேரத்திலே சொல்லி முடிக்கணுங்க. அவரும் பெரிய புத்திசாலி இல்லை ன்னு தெரிஞ்சு போச்சு. அவரு ஏன் கெஸ்ட்டுங்களை பேச விட மாட்டேங்கிறார் னும் புரிஞ்சு போச்சு.

ஆனா ஒண்ணுங்க. இந்தப் பேரை மட்டும் மாத்திப் புடலாம்.  . உரையாடல் நிகழ்ச்சி ங்கிறதை  'உரையாடும் ஒருவன் ' ன்னு ' தனி ஒருவன்' மாதிரி மாத்திப் புடலாம். இல்லேன்னா இந்த அகராதியிலே 'உரையாடல் ' ங்கிறதுக்கு  அர்த்தத்தை மாத்திப் புடலாம்.  ஏதோ ஒண்ணு. . எது சவுகரியமோ அதைப் பண்ணனுங்கோ. இல்லேன்னா பாக்கிறவங்களுக்கு ஒரே குழப்பம்தான் . 

 ---------------------------------------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 23 செப்டம்பர், 2015

மண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை

மண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை 
--------------------------------------------------------------------------------------------------------------------------

என் நண்பன் ஒருத்தன் ஒரு  கம்பெனியிலே   சி   வா இருக்கான். கம்பெனி பேரு வேணாம் விடுங்க. அவனுக்கு இந்த 'பிக் டேட்டா ' ங்கிற  டெக்னாலஜியிலே ரெம்ப ஆசைங்கஇந்த கம்பெனி டேட்டா , உலக டேட்டா , பேஸ் புக் டேட்டா இதையெல்லாம் கலந்து வர்ற பிக் டேட்டாவை அலசி ஆராய்ந்து வர்ற அறிக்கையை வச்சு பிசினெஸ் முன்னேத்தணும்னு     பெரிய ஆசை.

இதுக்காக ஒருத்தனை வேலைக்கு வச்சான் . அந்த வேலைக்குப் பேரு ' பிசினெஸ் இண்டேல்லிஜென்ஸ் ஆய்வுத் திறணாளன் ' . இப்பெல்லாம் இப்படிதானே பெரிய பெரிய பேரே வச்சிருங்காங்க. அந்தக் காலம் மாதிரி 'டெவெலப்பர் , அனலிஸ்ட் ,மேனேஜர் ' அப்படிங்கிற பேரெல்லாம் காணாம போச்சே. பெரிய பெரிய பேரால்ல இருக்கு.  

'அனலிஸ் பண்ற அடாவடி ஆசான் ' டெவெலப் பண்ற திமிர்  ஆசாமி  ' மேனேஜ் பண்ற மிருகவதைப் பெரியோன் ' இப்படித்தானே பேரு வைக்குறாங்க. இங்கிலீஷிலே  வேற மாதிரி இருக்கும்.

நம்ம 'பிசினெஸ் இண்டேல்லிஜென்ஸ் ஆய்வுத் திறணாளன்ஒரு அறிக்கை குடுத்தான். அதுக்குப் பேரு ' மேம்பாட்டு முன்னேற்ற மண்ணாங்கட்டி அறிக்கைஅது ஒரு முன்னூத்தி அம்பத்தெட்டு பக்கம் இருக்கும்.

அதைப் பாத்ததும் நம்ம பிரண்டு அசந்து போயிட்டான். கவனியுங்க. பாத்ததும்னுதான் சொன்னேன். படித்ததும்னு சொல்லலே. அவ்வளவு பக்கம் படிக்கிற பொறுமை அவனுக்கு இல்லே. அவன்தான் சி வாச்சே .

ஆனா, உடனே , அதைச் செயல்படுத்த இன்னொரு பத்துப் பேரைப் புடிச்சு போட்டான். அவங்க தொழில் பேரு ' புரோகிராம் எழுதும் புனிதப் பிறவிகள்' டெவலபர்னு சொல்லக் கூடாது இந்தக் காலத்திலே. பெரிய பேராய்த் தானே   வேணும்

இவங்க டெவலப் பண்றாங்க பண்றாங்கஒரு வருஷமாப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுக்குப் பிறகு டெஸ்ட் பண்ண இன்னும் ஒரு வருஷம் பிடிக்கும்.

இதுக்குள்ளே இன்னொரு கம்பெனிக்காரன் 'பிக் டேட்டா' வை விட்டுட்டு 'ஸ்மால் டேட்டா'வை வச்சு , முக்கியமான வேணுங்கிற டேட்டாவை வச்சு , ஒரு டெவெலபெர், ஒரு அனலிஸ்ட் , ஒரு மேனேஜர் வச்சு வேலையை முடிச்சு , அந்த கம்பெனி சேல்ஸ் ப்ராபிட் எல்லாம் தூக்குது.

இங்கே நம்ம ஆளு இந்த ' பிக் டேட்டா' பிரச்சினையில் இருந்து எப்படிடா வெளியே வர்றதுன்னு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க 'ஆய்வறிக்கை   அலசித் துவைக்கும் அயோக்கிய அறிவன் ' என்ற பட்டத்தோடு  இன்னொருத்தனை வேலைக்கு வச்சிருக்கான். கலி காலங்க. . 
------------------------------------------------------------நாகேந்திர பாரதி


திங்கள், 21 செப்டம்பர், 2015

இலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை

இலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை 
--------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கும் இந்த கவிச் சக்கரவர்த்தி கம்பர் மாதிரி ' வேள்வியைக் காண வந்தார் , வில்லும் காண்பார் ' என்றோ ' எடுத்தது கண்டார் , இற்றது கேட்டார்' என்றோ கோதண்ட ராமரைப் பற்றி  எழுத ஆசைதான். ஆனா என்னமோ சாப்பாட்டு ராமர்களைப் பற்றி ' முதல் பந்தியைக் கண்டார்மூன்றாம்  பந்தியும் காண்பார்' என்றும்  'எடுத்தது கண்டனர் , ஏப்பம் கேட்டனர்' என்றும்தான் எழுத வருகிறது.

இருந்தாலும் பலப் பல மாதிரியில் கவிதைகள் எழுதி பலப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பித்தான் பார்க்கிறேன். ஆனால் ஒன்றும் பிரசுரம் ஆகமாட்டேன் என்கிறது. என் நண்பன் ஒருத்தன் சொன்னான். 'இது புதுக் கவிதைக் காலம். புரியாத கவிதைக் காலம் . அது போல எழுது ' என்றான். நானும் எழுதினேன்.

'இயற்கையின் உலக
ஆரம்பச் சோதனையை
உற்றுப் பார்த்து அடங்கிக் கிடங்கும்
அமைதியின் ஆர்ப்பாட்டம்
என்னவென்று சொல்ல '
என்று எழுதிக் காண்பித்தேன். என்னவென்று சொல்ல. அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

 'ஆரம்பச் சோதனை என்ற வரியில் மட்டும் அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது . அதை மாற்று' என்றான் . நானும் உடனே அதை 'போக்கின் புலம்பல்' என்று மாற்றி விட்டு , ஏழெட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டேன். ஏதாவது ஒன்றிலாவது பிரசுரம் ஆகாதா .

என்ன ஆச்சரியம். அந்தக் கவிதை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளி வந்து விட்டது. அதனால், அந்தப் பத்திரிகைகள் 'உங்கள் எழுத்தை இனிமேல் எங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்ய மாட்டோம் ' என்று லெட்டெர் அனுப்பி விட்டார்கள். என்ன செய்வது.

சரி. அந்தக் கவிதையை வைத்துதான் பிரபலம் ஆகி விட்டோமே. கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம் என்று முடிவு செய்து எனது நூறு கவிதைகளை தூசி தட்டி எடுத்து  ஒரு பதிப்பாளரிடம் போனேன். அவர் அதற்கு அம்பதாயிரம் ரூபாய் கேட்டார். அது தவிர  நானே எனது புத்தகம் நூறை , ஒன்று நூறு ரூபாய் விலையில் வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இது எப்படி இருக்கு. புத்தகத்தாலே   நமக்கு காசு வரும்னு பார்த்தா நம்ம காசே போகும் போல இருக்கு.

கேட்டா சொல்றாரு  ' உங்க நண்பர்களுக்கு ஒவ்வொரு புத்தகம் ஒசியாக் கொடுங்க. அவுங்க, அவுங்க நண்பர்களுக்கு சொல்வாங்க. அப்படியே பிரபலம் ஆகி புத்தகம் விற்பனை பிச்சுக்கும் ' .

எனக்குத் தெரியாதா என்ன பிச்சுக்கும்னு. என் நண்பர்கள்  அதை பேப்பர்  பேப்பரா பிச்சு எதுக்கு உபயோகிப்பாங்களோ  . ‘அது ஒத்து வராதுங்கோ. இந்த புஸ்தகம்   எப்படி’ன்னு கேட்டேன். பாதி விலைன்னார். பட்டுன்னு போடச் சொல்லிட்டேன்.

அதிலே இருந்து ஒரு சாம்பிள் கவிதை எடுத்து பேஸ் புக்கிலெ போட்டு    லிங்கைக் கொடுத்தேன். அந்த சாம்பிள் கவிதை இதோ.
' லா லா லா லா
லி லி லி லி லி
லு லு லு லு லு ' இப்படின்னு போகும் அது.

நண்பர்கள் அதைப் பலருக்கும் பரிமாறி புத்தக விற்பனை எகிறிப் போச்சு. இந்த இன்டர்நெட் உலகத்திலே எது எப்படி நடக்கும்னே தெரிய மாட்டேங்குது.

அப்புறம் சிறந்த குழந்தை இலக்கியம் என்று சொல்லி இந்த ' புலிட்சர் விருது ' மாதிரி நம்ம லோகல்லா 'புளிச்ச பரிசு' ன்னு ஒண்ணு கொடுத்திட்டாங்க. அது அவங்களுக்குப் புடிச்ச பரிசான்னு தெரியாம   நானும்   அதைப் புரியாத பரிசா நினைச்சு வாங்கிட்டேன்.

இப்போ ' ரூ ரூ ரி ரி ' ன்னு அடுத்த கவிதை எழுதிக் கிட்டு இருக்கேன் . இது தவிர ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ' இலக்கியத்தின் இலக்கணம்' ன்னு ஒரு பட்டம் வேற கொடுத்திருச்சு.

என்னங்க. ஓடாதீங்க. கொஞ்சம் நில்லுங்க. உண்மையைத்தாங்க   சொல்றேன்.
---------------------------------------------------------------------நாகேந்திர பாரதி