செவ்வாய், 25 ஜூலை, 2017

பிக் பாஸ் புரணி - நகைச்சுவைக் கட்டுரை

பிக் பாஸ் புரணி - நகைச்சுவைக் கட்டுரை
----------------------------
இந்த பிக்பாஸ் ப்ரோக்ராம்  பாக்க ஆரம்பிச்சப்புறம் வீட்டிலே பெரிய பிரச்சினையா இருக்குங்க. நம்ம பாட்டுக்கு நிதானமா ஒன்பது மணிக்கு மேலே எந்திரிச்சிட்டு இருந்தோம். இப்ப என்னடான்னா எட்டு மணிக்கே ஏதோ 'ஜிங்கு ஜக்கா, ஜங்கு ஜிக்கா ;' ன்னு ஏதோ ஒரு பாட்டை எட்டு மணிக்கெல்லாம் போட்டு அலற வச்சிடுறாங்க. நம்ம எந்திரிச்சு ஆடணுமாம். ஒவ்வொரு நாளையும் உற்சாகமா ஆரம்பிக்கணுமாம். நானும் எந்திருச்சு ஆடிப் பார்த்தேன். இடுப்பு புடிச்சுக்கிட்டது தான் மிச்சம். அடுத்த நாள்லே இருந்து பத்து மணிக்கு எந்திரிக்கிறதே  கஷ்டமா ஆயிடுச்சு .

அப்புறம் இந்த சமையல் வேலை இருக்கு பாருங்க. 'சினேகன் இருக்கார் பாருங்க. எவ்வளவு அருமையா சமைக்கிறாரு. இதுக்காகவே அவரை யாரும் எலிமினேட் பண்ணுறது இல்லே. திருப்பி திருப்பி லீடரா ஆக்கிறாங்க. நீங்களும் சமையல் பண்ணிப் பாருங்க' ன்னு சொல்றாங்க. நான் சமைக்க ரெடி. இவங்க சாப்பிட ரெடியா. அப்புறம் சாப்பிட்டு வயித்து வலி அது இதுன்னு சொல்லக் கூடாது. ஆமா .

முந்தியெல்லாம் நம்ம சொந்தக்காரங்க நண்பர்கள் புரணிகள் தான் வீட்டிலே ஓடிக்கிட்டு இருக்கும். இப்ப ஒரு நல்லது நடந்திருக்கு. அதையெல்லாம் மறந்திட்டு  ஜூலி, காயத்ரி, ஓவியா , ஆரவ், சக்தி புரணி தான் வீட்டிலே நாள் புல்லா    ஓடிக்கிட்டு இருக்கு. அடுத்த வாரம் யாரு எலிமினேட் ஆவாங்கன்னு பெரிய சர்ச்சையே நடந்துக்கிட்டு இருக்கு. இதை வச்சு ஒரு பெரிய சூதாட்டமே நடக்கும் போலிருக்கு. கிரிக்கெட் சூதாட்டத்தை விட பிக் பாஸ் சூதாட்டம் பெருசா நடக்கும்னு தோணுது.


நைட் போடுறதையே திருப்பி காலையிலே மதியம்னு போடுறதாலே மக்கள் வேற சேனல் எதுவும் பார்க்க முடியிறது இல்லே. திருப்பி திருப்பி பார்க்கறப்போ புரணிகள் எல்லாம் இன்னும் நல்லா புரியறதுமத்த சீரியல் பார்த்து அழறதை விட இதை பார்த்து புரணி பேசறது ரெம்ப இன்டர்ஸ்டிங் ஆக இருக்கு .எல்லா டீவிகளிலும்  பிக் பாஸ் மாதிரி சூப்பர் பாஸ் , கிரேட் பாஸ் ன்னு ப்ரோக்ராம் போட்டாதான் மக்கள் கவனத்தைத் திருப்ப முடியும் . கமல் மாதிரி,  ரஜினி, அஜித், விஜய், சூர்யா ன்னு கூப்பிட்டு தொகுத்து வழங்கச் சொல்லலாம். சீரியல் ஆக்டர்கள் எல்லாம் இது மாதிரி வீட்டுக்குள் வந்துடலாம்.

உள்ளே இருந்தா படுத்துகிட்டு  உக்கார்ந்துக்கிட்டு  புரணி  பேசணும் ; வெளியே வந்தா சாப்பிட்டுக்கிட்டு  , நடந்துக்கிட்டு புரணி பேசணும். பிக் பாஸ் கூப்பிட்டா அடக்க ஒடுக்கமா போய் உக்கார்ந்து  எஸ் பாஸ், ஓகே பாஸ் சொல்லணும். அப்புறம் வந்து பிக் பாஸ் பத்தியே புரணி பேசணும். அவ்வளவுதானே. இதை பத்தி விலா வாரியா மீம்ஸ் போட்டு கலாய்க்கத்தான் சோசியல் மீடியா இருக்கே. அப்புறம் என்ன கவலை .

என்ன ஒண்ணு. அப்பப்போ வையாபுரி மாதிரி ஒவ்வொருத்தரா கேமரா முன்னாடி வந்து கண்ணைக் கசக்கிட்டு நிக்கறதை பாக்குறப்போ தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அம்மா, அப்பா, தாத்தா , பாட்டி , சித்தி, தங்கச்சின்னு இல்லாமே தெரியாதவங்க கூட சேர்ந்து இருக்கிறது கஷ்டம் தாங்க.

 சரி, அதை விடுங்க. நாம இந்த ப்ரோக்ராம் ரெகுலரா பார்த்து இந்த பிக் பாஸ் புரணியிலே நம்ம வீட்டிலே கலந்துக்கலேன்னா, நம்ம ஒய்ப் , புள்ளைங்க , அம்மா  அப்பா தாத்தா பாட்டிகளே நம்மளை எலிமினேஷன் லிஸ்டில் நாமினேட் பண்ணிடுவாங்க. மத்தியானம், மூணாவது தடவையா போயி பார்த்துக்கிட்டு ராயிஷா மாதிரி 'எஸ் , புரியுது  கரெக்ட்' ன்னு   கமெண்ட் குடுக்க ஆரம்பிச்சாச்சுங்க.
------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 19 ஜூலை, 2017

மாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை

மாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை
--------------------------------------------------------------------------------------------------------------
கிராமத்திலே, திருவிழா சமயம், கோயிலைச் சுத்தி திடீர் புடவைக் கடை, திடீர் வளையல் கடை, திடீர் திண்பண்டக் கடைன்னு ஏகப் பட்ட கடைகள் முளைச்சு  ஒரு பத்து நாட்கள் ஒரே கலகலப்பாய் இருக்கும்.
அது மாதிரி ஆனா நிரந்தரமா இன்டர்நேஷனல் கடைகள் எல்லாம் ஒரே இடத்திலே ரெண்டு மூணு மாடிகளிலே சேர்ந்தாப்பலே இருக்கிறது தான் இந்த நகரத்து மால்னு சொன்னாங்க. என்ன ஒண்ணு. கிராமத்து திருவிழாவில் வியாபாரம் நடக்கும். இந்த நகரத்து மால்லே எல்லாம் சும்மா பாத்துட்டு போய்கிட்டே இருப்பாங்கன்னு சொன்னாங்க.
சரி, நம்மளும் தான் போய் பார்த்துட்டு வரலாம்னு போனேங்க.உண்மைதாங்க. ஒரு காபி இருநூறு ரூபாய்ன்னா  எவன் வாங்குவான். ஒரு நாள் மூணு வேளை சாப்பாடே அதிலே முடிச்சுடலாமே. என்னங்க. காப்பித்தூளையும் சக்கரையையும் சுடுதண்ணியிலே போட்டுக் கலக்கிறது தானுங்களே காபி.. இதிலே என்னமோ எச்பிரஸோவாம் , லாட்டேயாம், என்னென்னமோ வாய்க்குள்ளேயே நுழையாத    பேரு சொல்றாய்ங்க,. இந்த காபி நம்ம வாய்க்குள்ளே நுழைஞ்சா என்ன ஆகுமோன்னு ஒண்ணும் வாங்கலீங்கோ.
அப்புறம், இந்த ஜவுளிக் கடை, இல்லை இல்லை, ஜவுளி சமுத்திரத்துக்குள்ளே நுழைஞ்சா, அப்பப்பா , நமக்குத் தெரிஞ்சு ஏதோ கருப்பு வெள்ளை, சிவப்பு பச்சை ஊதா ன்னு தான் கலர் இருக்கு. இங்கே என்னடான்னா ஏதோ அட்டாமிக் ப்ளூ வாம். பொட்டானிக் க்ரீனாம். என்னென்னமோ சொல்றாய்ங்க.
அப்புறம் இந்த வீட்டு சாமான் கடை - இல்லை கடல். என்னங்க. ஏதோ வீடுன்னா மிக்ஸி , பேன், கட்டில், ஸ்டவ் போதாதா . இங்கே இருக்கிற சாமான்களை வைக்க  வீடு போதாதே  .சாமான்களை எல்லாம் உள்ளே வச்சிட்டு நாம வெளியே வந்து நிக்க வேண்டியதுதான்.
மேல் மாடியிலே கான்டீன் ஏரியா. இங்கே தான் சனங்க கூட்டம் ஏதோ வாங்கி சாப்பிடுது. அதுவும் என்ன மாதிரி ஐட்டங்கள். எண்ணையில் ஊறிப் போயி கரும் பச்சை, அரக்கு சிவப்பு கலரில் வித விதமான சைஸ், வித விதமான பேரிலே ஏதோ பர்கர் , பிஸ்சா, நூடுல்ஸாம், அப்புறம் ஏன் தெருவுக்கு தெரு அஞ்சாறு கிளினிக்  இருக்காது.
தியேட்டருக்குள் போகணும்னா பாப் கார்ன் வாங்கிட்டு தான் போகணும் போல இருக்கு. அதோட விலை சினிமா டிக்கெட் விலையை விட ரெண்டு மடங்கு.
ஏதோ மாலு மாலுன்னு சொல்றாங்களேன்னு போயி பாத்துட்டு வந்தப்புறம் தான்  நாம ஊரு திருவிழா எப்படா வரும்னு இருக்கு. சீனி சேவு சாப்பிட்டு சிவப்பு குத்தாலத் துண்டு வாங்கிட்டு ஓபன் ஸ்டேஜ் ட்ராமா பாத்துட்டு , ஒயிலாட்டம் ஆடிட்டு வரணும் போல இருக்குங்க .
----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 13 ஜூலை, 2017

காலக் கடவுள்

காலக் கடவுள்
----------------------------
இளமை என்றும்
முதுமை என்றும்

பிறப்பு என்றும்
இறப்பு என்றும்

இன்பம் என்றும்
துன்பம் என்றும்

காதல் என்றும்
நட்பு என்றும்

கடமை என்றும்
உரிமை என்றும்

நன்மை என்றும்
தீமை என்றும்

உண்மை என்றும்
பொய்மை என்றும்

இயற்கை என்றும்
செயற்கை என்றும்

கிராமம் என்றும்
நகரம் என்றும்

வீடு என்றும்
நாடு என்றும்

இரவு என்றும்
பகல் என்றும்

நேற்று என்றும்
நாளை என்றும்

இன்று என்றும்
இப்போது என்றும்

இரண்டு இரண்டாய்ப்
பிரித்துப் போட்டு

காட்டிச் செல்லும்
காலக் கடவுள்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 11 ஜூலை, 2017

காதல் ஊஞ்சல்

காதல்  ஊஞ்சல்
--------------------------------------
ஆல மரக் கிளைகளில்
தொங்கிக் கிடக்கிறது

காற்று மட்டும் வந்து
ஆட்டி விட்டுப் போகிறது

உந்தித் தள்ளிய
ஜோடிக் கால்கள்

மாறு பட்ட  பாதைகளில்
போய் விட்டதை   அறியாது

காத்துக் கிடக்கிறது
காதல்  ஊஞ்சல்
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

வெள்ளி, 9 ஜூன், 2017

பூங்காவா? பார்க்கா? - நகைச்சுவைக் கட்டுரை

பூங்காவா? பார்க்கா? - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------
புது  வீட்டுக்கு குடி போன அன்று மாலை, பக்கத்து தெரு நண்பர் வந்து 'வாங்க சார் , நம்ம ஏரியா பூங்காவுக்குப் போய் வரலாம்என்று  கூப்பிட்டார் .'ஆஹா, பூங்காவா, மரம் செடி கொடி , பூக்களை ரசிக்கலாம், சிறுவர்கள் சறுக்கு விளையாட்டை பார்க்கலாம், வாக்கிங் கூடப் போகலாம் ' என்று ஆசையோடு அவர் கூடப் போனேன்.

கொஞ்ச தூரம் போனதும், ஒரு வட்ட வடிவப் பொட்டலில், சிமெண்ட்டுப் பெஞ்சுகளில் நாலைந்து பெரியவர்கள் அமர்ந்திருக்க , குச்சிகள் நட்டிருந்த ஒரு கேட்டைத் திறந்து கொண்டு அவர் உள்ளே நுழைந்தார் . நம்மையும் உள்ளே வரச் சொன்னார்.

'சார், ஏதோ பூங்கான்னு சொன்னீங்க, இது யாரோ ஒருத்தரோட பிரைவேட் பிராபர்ட்டி மாதிரி தெரியுதே' ன்னு கேட்டேன். 'என்ன சார் , விளையாடுறீங்களா, இது தான் பூங்கா' என்றார்.

'பூங்கான்னா ஏதாவது மரம் ,செடிகள்லாம் இருக்கும்னு நினைச்சேன்என்றேன். 'அங்கே பாருங்க ' என்று அவர் காட்டிய இடத்தில் நாலைந்து குழிகளில்   குச்சிகள் நடப்பட்டு இருந்தன. ' அது வேப்ப மரம், அது ஆல மரம் , நட்டு ஒரு மாசம் ஆச்சு, கொஞ்ச நாளிலே மரமா வளர்ந்துடும் ' என்றார். 'கொஞ்ச நாளா, கொஞ்ச வருஷமா ' என்று நினைத்துக் கொண்டேன்.

'சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு ஒண்ணுமே இல்லையே ' என்றேன். ' அங்கே பாருங்க' என்ற இடத்தில் கொஞ்சம் மணல் குவித்து வைக்கப் பட்டு இருந்தது. அங்கே இரண்டு சிறுவர்கள் ' கிச்சு கிச்சு தாம்பாளம். கியா கியா தாம்பாளம்' என்று மண்ணுக்குள் கை விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்
'நம்ம கிராம விளையாட்டுகளை எல்லாம் பசங்க மறந்துடக் கூடாது சார்' என்றபடி பக்கத்தில் இருந்த மொட்டை சிமெண்டு பெஞ்சில் அமரச் சொன்னார். படக்கென்று உடகார்ந்தவன் ' ' என்று அலறியபடி எழுந்தேன். பகலில் சுட்டெரித்த சூரியனின் சூடு அந்த பெஞ்சில் இறங்கி இருந்தது. 'துண்டைப் போட்டு உக்காரணும்' என்றபடி அவர் கொண்டு வந்த துண்டை பெஞ்சு மேல் விரித்து விட்டார்.

அதில் அமர்ந்தபடி சுற்று முற்றும் பார்த்தேன். அந்த பூங்கா (?) வின் உள்ளே போட்டிருந்த ஒரு சிறிய சுற்று வட்டப் பாதையில் நாலைந்து பேர் இடித்துப் பிடித்தபடி போய்க் கொண்டு இருந்தார்கள். ' அவங்க, என்ன சார் பண்றாங்க' என்று கேட்டேன். ' என்ன சார் , இது கூடத் தெரியாதா, வாக்கிங் சார், வாக்கிங் போகிறாங்க , நம்மளும் போகலாமா ' என்று கேட்டார். 'வேணாம், வேணாம், இந்த பெஞ்சே சவுகரியமாக இருக்கு . அங்கே போயி, நடைப் பயிற்சியில் நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் அந்த நாலு பேர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் ' என்றேன்.

'எப்படி சார் நம்ம ஏரியா பூங்கா' என்று உற்சாகமாய்க் கேட்டவரிடம் சொன்னேன் . இதைப் பூங்கான்னு சொல்லுறது ரெம்பத் தப்புங்க, ஒரு பூ கூட இல்லாத இந்த இந்த இடத்தை வேணும்னா பூவை எடுத்துட்டு  'ங்கா ' ன்னு பாப்பா சொல்லுற மாதிரி சொல்லலாம்.

 இல்லே, ஆங்கிலத்திலே சொல்லுற மாதிரி ' பார்க் 'ன்னு சொல்லலாம். சிமெண்டு    பெஞ்சில் சில பேர் பார்க் ஆயி இருக்காங்க. வட்டப் பாதையில் வாக்கிங் கிற பேர்லே  சில பேர்   பார்க்கிங் ஆயி இருக்காங்க. மண் குவியலில் சிறுவர்கள் கைகள் பார்க் ஆயி இருக்கு .  மரங்களாகும்   ஆசையில் குழிகளில் குச்சிகள்    பார்க்கிங் ஆகியுள்ளன.  பார்க் என்று சொல்லிக் கொள்ளலாம் ' என்றபடி எழுந்தேன் , சரி தானே .
----------------------------------------------------நாகேந்திர   பாரதி

வியாழன், 8 ஜூன், 2017

ஓடும் மேகங்கள்

ஓடும் மேகங்கள்
----------------------------
ஓடும் மேகங்களாய்
உறவும் நட்பும்

காணாமல் போகின்ற
காட்சி வடிவங்கள்

நேற்று பார்த்ததை
இன்று காணோம்

இன்று பார்ப்பது
நாளை எங்கே

வருவதும் போவதுமாய்
வானத்தில் வாழ்க்கை
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 6 ஜூன், 2017

மழைக் குறும்பு

மழைக் குறும்பு
-------------------------
காத்தும் தூறலுமாய்க்
காட்டி  விட்டு

காணாமல் போகின்ற
மழையின் குறும்பில்

காதல் பேசுவாளென்று
காத்துக் கிடப்பவனுக்கு

முகத்தைக் காட்டி விட்டு
முந்திப் போகின்ற

சிறுக்கி  குறும்பின்
சாயல் தெரிகிறது
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

புதன், 31 மே, 2017

சைக்கிள் சாகசம்

சைக்கிள் சாகசம்
------------------------------
இரவும் பகலும்
தொடர் ஓட்டம்

பள்ளி மைதானத்தில்
எப்போதும் கூட்டம்

தலையில் கரகமும்
கைகளில் தீப்பந்தமுமாய்

கடைசி நாளில்
சிறப்பு நிகழ்ச்சிகள்

எங்கே போனார்
சைக்கிள் ஓட்டி
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

திங்கள், 29 மே, 2017

விளையாட்டு வாழ்க்கை

விளையாட்டு வாழ்க்கை
--------------------------------------------
ஓடிப் பிடிப்பதும்
ஒளிந்து பிடிப்பதும்

பந்து விளையாட்டும்
குண்டு விளையாட்டும்

விளையாட்டு வாழ்க்கையாய்
இருந்த போதிலே

படிப்பென்ற ஒன்று
குறுக்கே வந்தது

வாழ்க்கை விளையாட்டின்
முதலாம் பாகமாய்
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com  

செவ்வாய், 16 மே, 2017

தூங்கும் குழந்தை

தூங்கும் குழந்தை
-----------------------------
பாட்டுப் பாடினாலும்
தூங்காது

ஆட்டம் போட்டாலும்
தூங்காது

கதை சொன்னாலும்
தூங்காது

எப்படியோ திடீரெனத்
தூங்கியது

சீக்கிரம் தூங்கி விட்டதே
என்றி ருந்தது
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com