ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ஆழிப் பேரலை

ஆழிப் பேரலை
------------------------
தண்ணீர்ப் பாறையொன்று
தாவி வந்தது

உடலை நொறுக்கிவிட்டு
உயிரைச் சாய்த்தது

இழுத்துக் கொண்டுபோய்
இருட்டில் போட்டது

ஆழிப் பேரலையின்
ஆட்டம் ஓய்ந்தது

அழுகைக் குரலுக்கு
யார் பதில் சொல்வது
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சனி, 26 டிசம்பர், 2015

மரம் தேடும் பறவை

மரம் தேடும் பறவை
--------------------------------
கொட்டிய மழையில்
குளிரில் நடுங்கி

மரத்தை விட்டு
மாடம் சென்று

மயங்கிக் கிடந்து
திரும்பிய பறவை

விழுந்து கிடக்கும்
வீட்டைப் பார்த்து

திகைத்துப் புலம்பித்
திரும்பிப் போகும்
---------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

வெள்ளி, 25 டிசம்பர், 2015

காதல் உலகம்

காதல் உலகம்
-----------------------
இதழோரச்  சுழிப்புக்கு
ஏங்கிக் கிடப்பதுவும்

கண்ணோரச் சிரிப்புக்கு
காத்துக் கிடப்பதுவும்

விரலோரத் தொடலுக்கு
வேர்த்துக் கிடப்பதுவும்

நெஞ்சோரப் பேச்சுக்கு
நெகிழ்ந்து கிடப்பதுவும்

காதல் உலகத்தின்
கட்டாயக் காரியங்கள்
-----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

வியாழன், 24 டிசம்பர், 2015

கருவக் காடு

கருவக் காடு
-----------------------
காட்டுக் கருவையும்
நாட்டுக் கருவையும்
கலந்த காடு

நாட்டுக் கருவைக்
காத்தாடி முள்ளில்
விளையாட்டு ஓட்டம்

காட்டுக் கருவை
மூட்டக் கரியில்
வாழ்க்கை ஓட்டம்

கருவக் காட்டில்
பருவ ஓட்டம்
----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

காலத்தின் பக்கம்

காலத்தின் பக்கம்
----------------------------
வாயாடும் பருவத்தில்
பக்கத்தில் இருக்கச் சொல்லி
அழுகின்ற பேத்திக்கு
பக்கத்தில் இருப்பாள் பாட்டி

நோயாடும் பருவத்தில்
பக்கத்தில் இருக்கச் சொல்லி
அழுகின்ற பாட்டிக்கு
பக்கத்தில் இருப்பாளா பேத்தி

காலத்தின் பக்கம்
காத்திருக்கும் பக்கம்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கனவு முகங்கள்

கனவு முகங்கள்
--------------------------
முறுக்கு மீசையில்
சிரித்த முகமும்

கேலிப் பேச்சில்
சிரித்த முகமும்

காவிப் பல்லில்
சிரித்த முகமும்

காலப் போக்கில்
கலைந்து  போனாலும்

கனவில் வந்து
கண்கள் நிறையும்

நினைவைத் தந்து
நெஞ்சம் கரையும்
------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திங்கள், 14 டிசம்பர், 2015

பூமியின் ஆசைகள்


பூமியின் ஆசைகள் 
---------------------------------
கடலாய் மலையாய் 
காடாய் வயலாய்

அமைந்த பூமிக்கும் 
ஆசைகள் உண்டு

மழையைத் தாங்கும் 
ஏரிகள் வேண்டும்

மரங்களைத் தாங்கும் 
இடைவெளி வேண்டும் 

மனிதனைத் தாங்கும் 
இடங்களும் வேண்டும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கஞ்சப் பிரபுக்கள்

கஞ்சப் பிரபுக்கள்
----------------------------
இந்த கஞ்சர்களை ஏன் கஞ்சப் பிரபுக்கள் ன்னு  சொல்றாங்கன்னு புரியலீங்க. கஞ்சப் பிசுனாரிகள் ன்னு தானே சொல்லியிருக்கணும் . ஒருவேளை கஞ்சர்களாய்   இருந்து  பிரபுக்களாய், பணக்காரர்களாய் ஆனதுக்காக சொல்லியிருப்பாங்களோ.

இவர்களை கஞ்சர்கள் ன்னு சொன்னா இவங்க ஒத்துக்க மாட்டாங்க. மனசிலே பெரிய வள்ளல்கள் ன்னு நினைப்பு. அதுக்கு ஆதாரமா ஒண்ணு ரெண்டை எடுத்து விடுவாங்க.

நூறு ரூபாய் டொனேஷன்  வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்திருக்காங்களாம்  .. ரெசீதைக் காமிப்பாங்க. கொஞ்சம் ஆராய்ந்து பாத்தோம்னா விஷயம் தெரிய வரும். அது அவங்க பொண்ணுக்கு அவங்க  ஸ்கூல்லே வாங்கிட்டு வரச் சொன்னதா அவ  அழுததுக்கு வேற வழி இல்லாமல்    இவங்க  அழுததுக்கு   ரசீது.

அதோட விட மாட்டாங்க    . அந்த ரசீதைப் போட்டோ எடுத்து பேஸ் புக் , டுவிட்டர் ,லிங்க்டு இன் , இன்ஸ்டா கிராம்  , வாட்ஸ் அப் புன்னு எல்லாத்திலேயும் ஷேர் பண்ணி      ரெம்ப பெருமை அடிச்சிகிடுவாங்க  .

ஆபீசிலே யாராவது ரிடையர் ஆனா அந்த பிரிவு உபசார விழாவுக்கு முதல் ஆளா பத்து ரூபாய் மொய் எழுதிடுவாங்க.   அதுக்கு ஒரு காரணம் இருக்கும். யாராவது முதல்லே நூறு ரூபாய் எழுதிப்பிட்டா பின்னாலே எழுதுற எல்லாரும் அதையே கொடுக்க வேண்டியிருக்கும். அது தான் முந்திக்கிடுவாங்க  . தான் தான் முதல்லே கொடுத்ததா பெருமை வேறு அடிச்சுகிடுவாங்க .

அப்புறம் இந்த சொந்தக் காரங்க கல்யாணத்திற்கு பத்திரிகை கொடுத்தா முதல் ஆளா போயிடுவாங்க. அவங்க மட்டும் இல்லைங்க. அவங்க தாத்தா   , பாட்டி , உயிரோட இருந்தா அவங்களும் ,     அத்தோட இவங்க அப்பா, அம்மா ,புள்ளை, பொண்ணு   ,   குடும்ப  சகிதமா  போயி வாழ்த்துவாங்க . அந்த நாள் முழுக்க அங்கேயே இருந்து காலை டிபன், மதியம் இரவு உணவு எல்லாம் முடிச்சுட்டு மணமக்களை அப்பப்போ போயி போயி வாழ்த்திட்டு வருவாங்க.

கேட்டா முழு நாளும் இருந்து மணமக்களை வாழ்த்திக்கிட்டே இருக்காங்களாம். அந்த வாழ்த்துக்கள் தான் மணமக்களுக்கு   அவங்க கொடுக்கிற விலை மதிப்பில்லாத    கிப்டாம் . மத்தவங்க கொடுக்கிற பரிசுக்கெல்லாம் விலை போட்டுடலாமாம்  .  அதெல்லாம் வெறும் மெட்டீர்யல் கிப்டாம்.

இப்படியே   பேசி    நடந்துக்கிட்டே    அவங்க காலம் முடிஞ்சிடும். அவங்க கடைசி ஊர்வலத்திலே கலந்துகிறவங்களும் ரெம்ப சிக்கனமா பத்து நம்பருக்குள்ளேதான்   இருப்பாங்க. வந்தவங்களும்  பூவும் கண்ணீரும் சிந்துறது  கூட ரெம்ப செலவுன்னு விட்டுடுவாங்க  .
-------------------------------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 12 டிசம்பர், 2015

நண்பர்களின் நண்பர்கள்


 நண்பர்களின் நண்பர்கள்
------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம நண்பர்களின் நெட்வொர்கிங் பெருசாக பெருசாக நண்பர்களின் நண்பர்கள் வட்டமும் பெருசாகி உலக உருண்டையையே முழுங்கிடுச்சுங்க.

இந்த பேஸ் புக்டுவிட்டர் எல்லாம் வந்தப்புறம் இவங்க  எல்லாத்துக்கும் ஸ்டேட்டஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஸ்டேட்டசுக்கெல்லாம்    லைக் வாங்கிறதுக்கு இவங்க பண்ற கூத்து இருக்கே. அவங்களோட நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம், அதாங்க  நமக்குதாங்க , ஒரு ரிக்வெஸ்ட் அனுப்புவாங்க.

அதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா நம்ம ஸ்டேட்டசுக்கு ஒரு லைக்கைப் போட்டுடுவாங்க. அந்த லைக்கை ஆராய்ஞ்சு பாத்தா நம்ம போட்டதைப் படிச்சே பாத்திருக்க மாட்டாங்க. அதை எப்படி ஆராயிறது. நம்மளும் ஏமாந்து போயி 'ஆஹா நமக்கும் யாரோ ஒருத்தன் லைக்கு போட்டுட்டானேன்னு ' மகிழ்ந்து போயி அவங்க புரொபைலைப் போயி பாப்போம். அது ரெம்ப பிரமாதமா இருக்கும், பேஸ் புக்கிலே பாதி புரொபைல் பொய்ப் புரொபைல் தானே. தெரிஞ்சிருந்தும் ஏமாந்து போயி அவங்க வலையிலே விழுந்து அவங்க ரிக்வெஸ்டை அக்செப்ட் பண்ணிடுவோம்.

அவ்வளவுதாங்க. ஸ்டேட்டஸ் போட்டுத் தாக்குவாங்க   பாருங்க.    அரசியல், சினிமா , கவிதைன்னு ஒண்ணை விட்டு வைக்க மாட்டாங்க. இது தவிர இவங்க குடும்ப போட்டோ, ஊருக்குப் போன போட்டோ , அப்புறம் ஆடியோ வீடியோ பைல்கள்  . அவ்வளவுதான். நம்ம கம்ப்யூட்டரும்   மொபைலும் தாங்க முடியாம தடுமாறி ஸ்லோ ஆயிடும். இவனுங்க போடுற ஸ்டேட்டஸ் எல்லாம் பாத்தா  இவனுங்க மனிதப் பிறவியா தெய்வப் பிறவியான்னு திகைப்பா இருக்கும். உலகத்திலே நடக்கிற எல்லா விஷயங்களும் இவங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்கும் .


நம்ம போட்ட ஒண்ணு ரெண்டு ஸ்டேட்டஸ்களையேஅவங்க ஸ்டேட்டஸ் களுக்கு நடுவிலே , வைக்கோப்   போரிலே ஊசியைத் தேடுற மாதிரி தேட வேண்டியிருக்கும். நமக்கு போட்ட முதல் லைக்குக்குக் பிறகு நம்ம இருக்கிறதையே கண்டுக்க மாட்டாங்க. ஆனா அவங்க போடுற அப்டேட்டுக்கு எல்லாம் நம்ம லைக் போடாட்டி பயமுறுத்துவாங்க. அவங்க ஸ்டேட்டசை எல்லாம்   நம்ம அஞ்சு செகண்டுக்குள்ளே லைக்கோ ஷேரோ பண்ணலைன்னா நம்ம  நரகத்துக்குப் போயிடுவோமாம்.

 சாம தான பேத தண்ட முறைகளைப் பின்பற்றி எப்படியோ அவங்க போடுற எல்லா டெக்ஸ்ட், ஆடியோ , வீடியோ வுக்கெல்லாம் லைக் வாங்கிடுவாங்க. நம்ம பயந்து போயி ஒரு லைக்கு போட்டுட்டு ஒரு நிமிஷம் கழிச்சுப் போயிப் பாத்தா ஆயிரம் லைக்குக்கு மேலே போட்டிருப்பானுங்க.

என்னடான்னு விசாரிச்சா ஏதோ சில சைட்டுகள் இருக்காம். அங்கே ரெஜிஸ்டர் பண்ணி விட்டா ஆயிரமாயிரம் லைக்குகள் ஆட்டமேட்டிக்கா   வந்து குவியுமாம். உட்கார்ந்து யோசிப்பாயுங்க போலிருக்கு. அப்புறம் எதுக்குடா நம்ம லைக்குன்னு கேட்டா ஒண்ணு ரெண்டாவது  ஒழுங்கா இருக்கணுமாம். ரெம்ப நியாயவான்கள் தான்.

இவனுங்க சங்காத்தமே வேணாம்னு நம்ம அன்பால்லோ பண்ணினாலும் சைடிலே இருக்கிற பாரிலேயும் நம்ம மெயில் பாக்சிலேயும் வந்து பயமுறுத்துவாங்க.

ஒரே வழி அன்பிரெண்ட் பண்ணுறது தான். இல்லேன்னா நம்ம போடுற ஸ்டேட்டஸ் படிக்கவே பேஸ் புக்கிலெ  பத்து பக்கம் கீழே போகணும்.    இதைப் படிச்சுட்டு எத்தனை பேரு நம்மளை அன்பிரெண்ட் பண்ணப் போறாங்களோ தெரியலீங்க.
--------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 11 டிசம்பர், 2015

புஸ்தக யானை

புஸ்தக யானை
-----------------------------
இந்தப் புஸ்தகப் புழு ங்கிறது ரெம்பச் சிறுசா அவனுக்கு அவ்வளவு பொருத்தமான பேரா  இல்லைங்க. அவனோட அளவு கடந்த புஸ்தகப் பைத்தியத்துக்கு புஸ்தக யானை ன்னு சொன்னாத் தான் பொருத்தமா இருக்குங்க.

இந்த புத்தகம், பத்திரிக்கை மட்டும் இல்லைங்க. இந்த வடை வாங்கின பேப்பரைக் கூட முழுசா படிச்சுட்டுத் தான் வடையையே சாப்பிடுவான்னா பாத்துக்குங்க .அவன் சம்பளத்திலே பாதிபுத்தகம் வாங்கவும் பத்திரிகைக்கு சந்தா காட்டவுமே சரியாப் போயிடும்.

                இந்தப் புத்தகக் கண்காட்சியிலே எல்லாம் நீங்க அவனைப் பாத்திருப்பீங்க. ரெண்டு மூணு பை முழுக்க புத்தகங்களை வாங்கிக்கிட்டு தூக்க முடியாம தூக்கிட்டு போயிக்கிட்டு இருப்பானே அவன்தாங்க. கவிதை, அரசியல், கணிதம், ன்னு சகட்டு மேனிக்கு அள்ளிக்கிட்டு போவான்.

இதை எல்லாம் அவன் படிக்கிறானா ங்கிறது பரம ரகசியம். அவன் வீட்டுக்குப் போனா அவனோட புத்தக ரூமுக்குள்ளே ஒரு புத்தக சுற்றுலா கூட்டிட்டுப் போவான். உள்ளே ஒரு ஒத்தை அடிப் பாதையிலே நடந்து போகணும். சுத்தி புத்தக மலை இருக்கும். திடீர்னு அவன் காணாம போயிடுவான். ஏதாவது புத்தக மலை மேலே முள்ளம் பன்றி மாதிரி ஊருற மாதிரி தெரிஞ்சா அது தாங்க அவன் தலை முடி. சரியா அந்த இடத்துக்கு போயி அவனைப் புடிச்சுடலாம்

இதுக்கு நடுவிலே அவன் பெற்றோர் அவனுக்கு ஒரு படிக்காத பொண்ணைப் பாத்து கல்யாணம் முடிச்சு வச்சாங்க. அந்தப் பொண்ணுக்கு புஸ்தகம்னா கிழிச்சு துடைக்கிறதுக்கும்பேக் பண்றதுக்கும்  உபயோகப் படும் ஒரு வஸ்து ங்கிற     அளவிலே தான் ஞானம்.

கொஞ்ச நாள் ஆச்சு. அவன் புத்தக ரூமிலே இருக்கிற மலைகள் கொஞ்சம் கொஞ்சமா குன்றாக   மாறுவதை உணர்ந்தான். ஒரு நாள் அவன் மனைவியை கையும் களவுமாக ,இல்லை இல்லை, கையும் புத்தகமுமாக பிடித்து விட்டான். அடுப்படி மேடையை சுத்தப் படுத்தும் புனிதமான பணியில் அந்த புத்தகப் பக்கங்கள் ஈடுபட்டு இருந்தன.

இருவருக்கும் வாய்ச் சண்டை வலுத்தது. அவள் கேட்ட சில கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. படித்து என்ன கிழித்தான் என்பது ஒரு கேள்வி. அவளாவது நிஜமாகவே கிழிக்கிறாளாம். அடுத்து அவனது அறிவு, புத்தகம் அளவு உயர்ந்ததா என்பது. அதை டெஸ்ட் செய்ய சில கேள்விகள் கேட்டாள் அந்த கிராமப் பெண்.

தமிழ் நாட்டில் ஓடும் சில நதிகளின் பெயர் களைக்  கேட்டாள் . இவனது மூளை நரம்புகளில் ஓடிய பெயர்கள் கூவம் ஆறும் பக்கிங்காம் ஆறும்தான்.    யோசித்துப் பார்த்ததில் தெரிய வந்தது . புத்தகங்களை வாங்கிறான், புரட்டுறான், ஒண்ணும் உள்ளே ஏறது இல்லைங்கிறது   புரிந்தது.   .
 
அப்புறம் என்ன. புத்தகங்கள் பழைய புத்தகக் கடைக்குப் போயின. புத்தக அறை  படுக்கை அறை ஆனது.   தீபாவளி அன்னிக்கு  இரட்டை குழந்தைகள் பிறந்தன. தீபாவளிப் பத்திரிகை போல ஒன்றோடு ஒன்று போனஸ். புத்தக ரத்தம் இன்னமும் அவனுக்குள்ளே ஓடுதுல்லே 
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


பரவசப் பயணம்

பரவசப் பயணம்
---------------------------
வெளிச்சத்தில் இருந்து
இருட்டுக்குப்  பயணம்

இரைச்சலில் இருந்து
அமைதிக்குப் பயணம்

கீழே இருந்து
மேலே பயணம்

உள்ளே இருந்து
வெளியே பயணம்

பயணத்தின் நடுவில்
பரவச  அனுபவம்
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 10 டிசம்பர், 2015

வேதனை வெள்ளம்

வேதனை வெள்ளம்
---------------------------------
ஏரியை விட்டு
வெளியே வந்த
தண்ணீர் வெள்ளம்

வீட்டை விட்டு
வெளியே வந்த
மக்கள் வெள்ளம்

தண்ணீர் வெள்ளத்தில்
தவித்துக் கிடக்கும்
மக்கள் வெள்ளம்

வெள்ளம் வடியட்டும்
வேதனை முடியட்டும்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

புதன், 9 டிசம்பர், 2015

கிராமமும் நகரமும்

கிராமமும் நகரமும்
----------------------------------
தரையிலே நடந்து போறப்போ
பள்ளம் வந்தா கிராமம்

பள்ளத்தைப் தாண்டிப் போறப்போ
தரை வந்தா நகரம்

கண்மாய் உடைஞ்சு போயி
வயலுக்கு வந்தா கிராமம்

ஏரி உடைஞ்சு போயி
வீட்டுக்கு வந்தா நகரம்

கிரமப் போக்கில் கிராமம்
நரகப் போக்கில் நகரம்
-------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 8 டிசம்பர், 2015

குழந்தை இன்பம்

குழந்தை இன்பம்
--------------------------
பிஞ்சுமுகம் மலர்ந்து
சிரிப்பதுவும் இன்பம்

அஞ்சுவிரல் பட்டு
அடைவதுவும் இன்பம்

பஞ்சுஉடல்  தொட்டு
தூக்குவதும் இன்பம்

கொஞ்சுமொழி மழலை
கேட்பதுவும் இன்பம்

தஞ்சமென வந்த
தன்குழந்தை இன்பம்
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சனி, 5 டிசம்பர், 2015

அமெரிக்க அலட்டல்

அமெரிக்க   அலட்டல்
----------------------------------------
இந்த அமெரிக்கா போயிட்டு வந்த பசங்க அலட்டற அலட்டல் இருக்கே அப்பப்பா . இந்த யு எஸ் ரிடர்ன் யு எஸ் ரிடர்ன் ன்னு சொல்லிக்கிறாங்களே . அது இவங்க போயிட்டு வந்ததைச் சொல்றாங்களா , இல்லை இவங்க வேலை சரியில்லைன்னு திருப்பி அனுப்பிட்டதைச் சொல்றாங்களா ன்னு புரியலைங்க.

அங்கே   ஒவ்வொரு இடத்திலும் செக் இன் போட்ட பழக்கத்திலே இங்கே வந்து இவங்க பாத்ரூம் போனாக்கூட பேஸ் புக்கிலெ  செக் இன் போட்டு ரெம்பவே படுத்துறாங்க. அப்புறம் இந்த ப்ரூ காபியெல்லாம்   இவங்களுக்கு போர் காபி   ஆயிடுச்சாம். தூரத்திலே இருக்கிற மாலுக்கு நூறு ரூபாய்க்கு மேலே டாக்சி சார்ஜ் கொடுத்துப் போயி அங்கெ இருக்கிற ஸ்டார் பக்கிலே அம்பது ரூபாய்க்கு காபி வாங்கிக் குடிப்பாங்க.

தரமாயும் மலிவாயும் பக்கத்து கடையிலே கிடைக்கிற பொருளை வாங்க மாட்டாங்க. தூரத்து மாலுக்கு செலவழிச்சுப் போவாங்க. அங்கே போயும் படுத்துவாங்கபொருள்களை ரெம்பவே நெருக்கி யடிச்சு  வைச்சு இருக்காங்களாம். அங்கே இருக்கிற மேசிஸ் , காஸ்ட்கோ , கிரேட் அமெரிக்கன் மால் மாதிரி இல்லையாம். நீ கூடத்தான் அமெரிக்கன் மாதிரி இல்லை. நாங்க எதுவும் சொல்றமா. நீ சாமான் வாங்க வந்தியா, நடுவிலே பெருசா இடம் இருந்தா படுத்துத் தூங்க வந்தியான்னு கேட்கத் தோணும்.

அப்புறம் இந்த மால்லிலே இருக்கிற ரெஸ்டாரென்ட் எல்லாம் அங்கே இருக்கிற டெனிஸ் ரெஸ்டாரென்ட் மாதிரி இல்லையாம். அங்கே கிடைக்கிற சிக்கென், கார்லிக் ப்ரெட், சான்ட்விச் டேஸ்ட் இங்கே இல்லையாம். அந்த கார்லிக் பூண்டு இங்கே இருந்துதாண்டா அங்கே போகுதுன்னு  கத்தணும் போல இருக்கும்.அப்புறம் ஏதோ பலாபல்லாம்.     ரெம்ப ருசியாம்.  நம்ம ஊரு பருப்புருண்டை   தாண்டா பெருசா வேற ஷேப்பிலே பண்ணிக் குடுக்குறாங்க  அங்கே . யாராவது சொல்லுங்கப்பா.

இங்கே இருக்கிற த்ரீ டி ஐமேக்ஸ் எல்லாம் சரியில்லையாம். அங்கே பைவ் டி மேக்ஸ் மேக்ஸ் ஸிலே படம் பாக்கிறது சூப்பராம். போட்டுத் தாக்குவாங்க. திரும்பி அங்கேயே போக வேண்டியது தானே. இவங்க ஒழுங்கா வேலை செய்யலைன்னு தானே துரத்தி விட்டாங்க. நமக்குத் தெரியாதா.

இவங்க ஆபீஸ் நண்பர்களைப் படுத்துற பாடு ரெம்ப ஜாஸ்திங்க. அமெரிக்க ஒர்க் கல்சரைச் சொல்லி கடுப்பு ஏத்துவாங்கசாயந்திரம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க. ஆனா அமெரிக்கன் மாதிரி காலையிலே சீக்கிரம் வர மாட்டானுங்க. மேனேஜர் பாத்துக்கிட்டு இருந்து ஒரு நாள் வச்சார்   பாருங்க வேட்டு.

காஸ்ட் கட்டிங்குன்னு சொல்லி சேட்டிலைட் மூலமா ஒர்க் பண்ணுற , குறைச்ச சம்பளத்துக்கு ஆள் கிடைக்கிற தெக்கத்திப் பக்கம் ஆரம்பிச்ச ஒரு கிளைக்கு மேனேஜராய் அனுப்பி விட்டாருஅங்கே த்ரீ டீயாவது  பைவ் டீயாவது , சிங்கிள் டீயே கிடைக்காது. தயிர் சாதமும் ஊறுகாயும்  தான் டெனிஸ்ஸும் ஸ்டார்பக்கும். அமெரிக்கா அமெரிக்கான்னு  ரெம்பவே அலட்டல்  பண்ணினா இப்படிதான் வைப்பாய்ங்க   ஆப்பு.     .    
----------------------------------------------------------நாகேந்திர பாரதி