வெள்ளி, 13 ஜூன், 2025

போடா, போடி -குறுங்கதை

 போடா, போடி -குறுங்கதை

----------------------------


'என்னங்க அப்படிப் பார்க்கிறீங்க.'

ஆமாம், இப்பதான் உன்னை முழுசாய்ப் பார்க்கிறேன். இந்த நெற்றி, இந்த மூக்கு, இந்த வாய், இந்தக் காது, இந்த முடி , எவ்வளவு அழகு நீ '

'ஆமாம், அறுபது வயதுக்கு மேல் தான் என் அழகு தெரியுதா '

அவளை அறியாமல் வந்து விழுந்து விட்டது வார்த்தை.

அவன் கண்களில் பொங்கிய கண்ணீரை அவனால் கட்டுப் படுத்த முடிய வில்லை.


'அதோ , நர்ஸ் பார்க்கிறாங்க, கண்ணைத் துடைச்சுக்குங்க,' என்று கர்சீப் எடுத்துக் கொடுத்தவள் அவன் காதருகே கிசுகிசுக்கிறாள் .


லேசாகக் கையை அமுக்கி விட்டு ' ஐ ஆம் ஓகே ' என்கிறாள். ஓ, இவள் டிகிரி படித்தவள் அல்லவா, அவளுக்குப் பிடித்த சாப்பாடு, அவளுக்குப் பிடித்த சினிமா, பேசியது உண்டா . அவள் படிக்கும் பத்திரிகைகளை பார்த்திருக்கிறான். அதைப் பற்றி ஒரு வார்த்தை.


'வெந்நீர் போட்டாச்சா, காபி ரெடியா, என்ன டிபன், மறுபடியும் இட்லியா,ஆபீஸ் நேரமாச்சு. 'எப்படி சகித்துக் கொண்டாள் தன்னை ' . இது ஒரு தவ நிலையா.


அவள் ஒரு குடும்பச் சுமைதாங்கி என்ற எண்ணத்திலேயே வீட்டுப் பொறுப்புகளை எல்லாம் அவளிடம் தள்ளி விட்டு , அலுவலகம் , நண்பர்கள் என்று திரிந்து விட்டு , அறுபது வயதில் ஆஸ்பத்திரிக்கு அவளைக் கூட்டி வந்திருக்கும் போது அவளைப் பார்க்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியும் கூடவே வருகிறது .


இதோ , ஆஸ்பத்திரியில் அலை பாயும் எண்ணங்களோடு அவளைப் பார்க்கும் பார்வை அவளுக்குப் புரிகிறது.


'எனக்குத் தெரியும் உங்களை, நீங்க ஒரு குழந்தை. ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை எப்படிப் பார்த்துக்குமோ,

அது போலவே என்னைப் பார்த்துக்கிட்டீங்க. கோபம், பிரியம், சண்டை எல்லாம் கலந்து . '


'ஒவ்வொரு பிரசவத்தின் போதும், என்னை விட நீங்க உள்ளுக்குள் துடித்த துடிப்பு எனக்குத் தெரியும். புள்ளைங்களை வளர்த்து ஆளாக்கினதிலே, என்னை விட உங்க பங்கு தான் பெரிசு '


'உனக்கு தலை வலின்னு கூட சொன்னது இல்லையே . எனக்கு ஒரு காய்ச்சல்னா , எப்படி பார்த்துக்கிட்டே , இப்ப உனக்கு '


'தெரிஞ்சா நீங்க எவ்வளவு துடித்துப் போவீங்கன்னு எனக்குத் தெரியும். என்னாலே முடிஞ்சதை நான் சமாளிச்சேன். பெருசா எதுவும் இதுவரை வரலை. இப்ப வந்திருச்சு , உங்க கிட்டே சொல்லிட்டேன் .'


'அடிப் போடி, எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கே. '


'அடப் போடா, அதோ டாக்டர் வந்துட்டாரு ' என்று அவள் கிசுகிசுக்க , அந்தப் 'போடா 'அவனுக்குப் பிடித்திருந்தது. இனி அவர்கள் குழந்தைகள் தானே ஒருவருக்கு ஒருவர் .


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீட்டுக்கு வீடு - கட்டுரை

 வீட்டுக்கு வீடு - கட்டுரை  -------------------------- 'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பே...