சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு
--------------
நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே.
கோபிகிருஷ்ணன் அவர்களின் 'குற்றமும் தண்டனையும் ' சிறுகதை .
இரண்டு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்வைச் சொல்லும் கதையை எடுத்துக் கொண்டு , நமது மனக் குழப்பங்களையும், பெண்ணுரிமைக் கருத்துக்களையும், வாழ்வைப் பற்றிய பல தத்துவக் கருத்துக்களை யும் இணைத்து நகைச்சுவை கலந்து சொல்லிப் போகிறார்.
முதல் தம்பதி களில் கணவன் கொஞ்சம் ஆணாதிக்க மனப்பான்மையும், மனக் குழப்பம் உள்ளவனாகவும் அதே சமயம் அதை அவ்வப்போது உணர்ந்து திருந்த முயற்சிப்பவனாகவும் காட்டப் படுகிறான். அவன் மனைவி சம்பிரதாய முறைப்படி வாழும் சராசரி ஹிந்துப் பெண் .கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதுபவள், இவரைப் போன்ற கல்லோ புல்லோகூட ஒரு நல்ல பெண்ணுக்குக் கணவனாக வாய்க்கும்பொழுது அவை எந்தக் குறையுமில்லாமல் பவித்திரப்படுத்துப்பட்டுக் கௌரவிக்கப் பட்டு விடுவதாகவும் குறிப்பிடுகிறார்.
ஒரு நாள் , மாலை, இந்தக் கணவன் ,இவர் ' ஜே கேயின் உரை ஒன்றை கேட்பதற்கும் இவரது நண்பர் ஒருவர் வீட்டில் தாஸ்தாவாஸ்கியின் ' குற்றமும் தண்டனையும் ' திரைப்படம் பார்ப்பதற்கும் , ஏற்பாடு செய்து ஆவலோடு இருப்பவருக்கு அவை இரண்டுமே நிறைவேறாமல் போய் விடுகின்றன . அலுவலக வேலையாலும், தொலைக்காட்சி நிகழ்வின் விபரம் பேப்பரில் தவறாக வெளிவந்த காரணத்தாலும் இப்படி நடந்து விடுவதால், மிகவும் மன வருத்தத்தோடு வீடு திரும்ப நேரம் அதிகம் ஆகி, கதவு திறக்கும் வீட்டு சொந்தக்காரம்மா இவரிடம் வெறுப்போடு பேச , அந்தக் கோபத்தில் இவர் மனைவியைக் கோபமாகத் திட்டி விட்டு படுத்துத் தூக்கம் வராமல் புரள்கிறார்,
இந்த நிகழ்வுகளை ஆசிரியர் விவரிக்கும் விதத்தில் , மனக் குழப்பம் உள்ள ஒரு மனிதனின் உள்ள உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்.
உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .
அலுவலக வேலை முடிய நேரம் ஆகி விட்டதால் , ஜேகேயின் உரையைக் கேட்க முடியாத எரிச்சலை ஆசிரியர் வெளிப்படுத்தும் இந்த இடம் .
. ‘தொழில் மூலமாக நீ கடவுளைத் தரிசிக்கிறாய்’ என்ற கார்லைலின் கூற்றை மனதிற்குக் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்தேன். எனக்கு எரிச்சல்தான் அதிகரித்தது. உண்மையிலேயே எந்தக் கடவுளின் உருவத்தையும் நான் வணங்காதவனாகையாலும், கடவுளைத் தரிசிக்க வேண்டிய எந்தவித நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டதில்லையாலும், கடவுள் என்று தனியாக வெளியில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகையாலும் எனக்கு எல்லாச் சமாதானங்களும் சப்பைக்கட்டு மடத்தனங்களாகத் தோன்றின.
ஜே.கே. சொல்லும் முறையைக் கையாண்டும். என்னுள் ஏற்பட்ட எரிச்சலை அகற்ற முடியவில்லை. மனம் அதீத்தமாகத்தான் இயங்க ஆரம்பித்தது. கடைசியில் ஜே.கே. மீதே சிறிது எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. இவர் ஏன் தன் உரையை 7-15-இலிருந்து 8-15 வரைக்கும் நிகழ்த்தக் கூடாது? அனைவருக்கும் சௌகரியமாக இருக்குமே. கடைசியில் எனக்கு ஒன்று நன்றாகவே தெரிந்தது. நான் உணாச்சிவசப்பட்டிருந்தேன். சீரான மனநிலை கொஞ்சம் குலைந்துதான் போயிருந்தது'
என்று முடிகிறது .
அடுத்து அந்தத் திரைப்படம் பார்க்க நண்பன் வீட்டுக்குச் செல்லும் வழியில் நேரும் இந்த சம்பவம் .
வீட்டைவிட்டுக் கிளம்பினேன்.
வழியில் யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. காதில் நன்றாகவே விழுந்தது. ஏனோ அதை நான் மனப்பிரமை என்று எண்ணி புறக்கணித்துவிட்டு நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் நடந்திருப்பேன். ‘ராஜ்’. இப்பொழுது குரல் என் வலது காதின் மிகச் சமீபத்திலிருந்து கேட்டது. எந்த எண்ணமும் தோன்றுமுன்னமேயே ரமேஷும் அவருடைய நண்பர் ஒருவரும் என் அருகில் இருந்தனர். அவர் மூன்று முறை என் பின்னாலிருந்து அழைத்திருந்தாராம். என்னை யாரோ அழைத்ததை நான் ஒரு முறை நன்றாகவே கேட்டதையும், பிறகு நான் ஏன் திரும்பிப் பார்க்கவில்லை என்ற காரணத்தையும் சொன்னேன். ரமேஷுக்கு என் அர்த்தமற்ற கற்பனைகளும், விசித்திரமான மனப் போக்கும் புதிதல்ல என்பதால் அவருக்கு நான் சொன்னது எந்தவித ஆச்சரியத்தையும் உண்டுபண்ணவில்லை.
என்று முடிக்கிறார்.
அதீத சிந்தனைகளால் மனக் குழப்பத்தில் இருக்கும் ஒரு மனிதனின் மன நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார் இவற்றில் .
அடுத்து , இன்னொரு தம்பதிகளின் வாழ்க்கை. இவரது நண்பரும் அவரது மனைவியும்.
அவர்களை பற்றி இப்படி எழுதுகிறார்.
என் உற்ற நண்பன் கதை மிகவும் பரிதாபத்துக்குரியது. காலை 7-00 மணிக்கு அவன் தொழிற்சாலைக்குச் செல்ல பஸ் பிடிக்க வேண்டும். மனைவியோ குறைந்தது 7-00 மணிவரை தூங்குபவள். அவள் தூக்கத்தைக் கலைப்பது அசாத்தியம். முன் தூங்கி பின் எழுபவள். இந்தக் காலத்து ஜன்மங்கள் அனைத்துக்கும் எழுந்ததும் சூடாக காப்பியோ டீயோ தேவைப்பட்டுத்தொலைக்கிறது. இந்த விஷயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் ஒருவித சந்தோஷமான ஒருமைப்பாடு இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிறது. வீட்டிலுள்ள சுவரையோ ஜன்னலையோ உசுப்பி காப்பி போட்டுத் தரச் சொல்ல முடியாத நிலை. மனைவி சுகமாகப் படுத்து ஆனந்தித்துத் தூங்கும் அழகிய அவலட்சணக் கண்கொள்ளாக் காட்சியை ரசிக்கத் தெரியாத மூர்க்கன் அவன். அழகுணர்வு கொஞ்சமும் இல்லாது எழுந்ததும் வீட்டின் அருகில் இருக்கும் டீக்கடைக்குச் சென்று குடித்துவிட்டு, வீடு திரும்பி, தற்சுகாதாரச் செயல்களை அவசரமாகச் செய்து முடித்துவிட்டு அலுவலுக்கு விரைவான்.
. தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒரு தின சரிச் சடங்காகவே ஆகிவிட்டது அவனுக்கு. உண்மையில் மனைவி சுகமாக ஒய்வெடுத்துக் கொள்ள போதுமான வசதி செய்து தரத் தான் அவன் வேலைக்குப் போகிறான்.
சில சந்தர்ப்பங்களில் அவள் கேட்பதுண்டாம்: ‘பாக்டரியில் என்ன அப்படி வெட்டி முறிக்கிற வேலை! கொஞ்சம் சீக்கிரம் வத்திருந்தால் இன்றைக்கு ஒரு சினிமாவுக்குப் போயிருந்திருக்கலாம். தூக்க முடியாத பெரிய ஒரு
பாறையை முதுகின் மீது ஏற்றி வைத்துக்கொண்டு ஒரு இடத்திலிருந்து நீண்ட தூரம் – தூக்கிச்ச் சென்று இறக்கிவைப்பது அவன் பணியாக இருந்தால் ஒரு வேளை வெட்டி முறிக்கும் வேலையைத்தான் தன் கணவன் செய்கிறன் என்று அவள் ஒப்புக்கொள்ளக்கூடும்.
.
அந்த நண்பனை நான் குறைந்தது வாரம் ஒரு முறை பார்த்து ஒரு தடவை அவன் மனைவி நலன் (துக்கம்) விசாரிப்பேன். அவன் மனைவியைப் பத்திக் நான் ஏதோ கேட்கப் போய், அவன் எரிச்சலின் உச்சகட்டத்தில் ‘அவள்தானே, சுகமாக இருக்கிறாள். நண்பர்களுக்குக் காட்ட அலங்கார அழகான காட்சிப் பொருள், you know, a very beautiful show-piece’ என்று கூறினான். அவன் துக்கம் என் தொண்டையை அடைத்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. '
என்று அவர்கள் கதையைச் சொல்கிறார்.
இந்த இரு தம்பதிகளின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் காட்டி விட்டு பெண்ணுரிமை பற்றிய பொதுவான பல கருத்துக்களையும் இடையில் சொல்கிறார்.
உதாரணத்திற்கு இது .
ஆண்கள் முறைகேடாக
நடக்க நம் சமூகம் மகத்தான சௌகரியங்கள் செய்து கொடுத்திருக்கிறது. வண்டிக்காரன் சாராயம் குடித்துவிட்டு வந்து தன் மனைவியை உதைத்து வதைத்து நம் உயரிய பண்பாட்டைச் சீர் குலையாமல் காத்து நிற்கும் காட்சி ஒன்றும் அரிதல்ல. கோரத்தைச் சகிக்க முடியாமல் வெளியாட்கள் யாராவது வெளியே கணவனை இழுத்துத் திட்டி இரண்டு உதைகள் கொடுக்க ஆரம்பித்தாலோ, சிறிது நேரம் முன்வரை வதைபட்டுக்கொண்டிருந்த சகதர்மிணி ‘அவரெ அடிக்காதீங்க. பொண்ஜாதி புருஷனுக்குள்ளே ஆயிரம் இருக்கும். நீங்க இதில் எல்லாம் வர வேணாம். நாங்க இண்ணெக்கி அடிச்சிக்குவோம். நாளைக்குச் சேந்துக்குவோம்’ என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கும் சம்பவமும் புதிதல்ல.. இந்த அன்னியோன்னிய லட்சிய தம்பதிகள் இல்லாமல்தான் நம் கலாச்சார தர்மங்கள் எப்படி செழித்தோங்க முடியும்? புரியாத சுப மந்திரங்கள் ஏதோ ஓரு விளங்காத புனிதச் சூழலை உண்டுபண்ண, முன்பின் தெரியாத எவனோ ஒருவன் தன் கழுத்தில் கட்டும் பவித்திரத்தாலி சிலபல வேளைகளில் சுருக்குக் கயிறாக மாறும்போது ஏற்படும் வேதனையின் இன்பத்தை நன்றாகச் சுவைத்தே அனுவித்துக் கொண்டிருக்கும் ஓரு வக்கிரம்பிடித்த பொறுமையின் சிகரம் . காந்தி நம் சம்பிரதாய மகளிர்களில் இன்னும் உயிரோடு நிலவி வருகிறார். சடங்குகளால் பிணைக்கப்பட்ட உறவு இறுதிச் சடங்குவரை நிலைத்திருப்பது நம் கலாச்சாரத்தின் பிரத்தியேக சிறப்பம்சம். கலாசாரம் ஏனோ அதி முக்கியமாகத்தான் கருதப்பட்டுக் கொண்டு வருகிறது.
.
என்கிறார்.
சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் பலவற்றையும் இடையில் சொல்லிப் போகிறார்.
பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர வாழ்வில் வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் விடிவுகாலம் நிகழ்வதில்லை. வாழ்க்கைப் பிரச்சினை. வாழ்க்கையே பிரச்சினை. பழகிப் போவதால் பிரச்சினைகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக அமைந்து விடுகின்றன.பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை சலிப்பை உண்டாக்கும். மிகவும் சரி என்றே நினைக்கத் தோன்றுகிறது, ஆனாலும் பிரச்சினைகள் இருப்பதால் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதில்லை
தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளா மல் இருப்பதற்கு ஒரு தனி பிரயாசை தேவைப்படுகிறது. மரவுரி ஆடைகள் தரித்து, மரப் பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது மனிதனின் வாழ்க்கை சுவை மிகுந்ததாக இருந்திருக்கலாம், அப்பொழுதைய வாழ்க்கை நிலையில்லாததாக அமைந்திருத்தாலும்கூட. இப்பொழுதும் அதே நிலைதான். ஆனால் ஒரு வேறுபாடு, வாழ்க்கையில் சுவை குன்றி விட்டது, இல்லையேல் அது அறவே ஒழிந்துவிட்டது.
இறுதியாக ' குற்றமும் தண்டனையும் ' என்ற தாஸ்தாவாஸ்கியின்
திரைப்படம் ,கதையின் தலைப்பை நியாயம் செய்யும் படி இப்படி முடிக்கிறார்.
“டீயைச் சுவைத்துக்கொண்டே நினைத்துப் பார்த்தேன். நான் செய்த குற்றம்: என்றைக்குமில்லாமல் அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தொலைக்காட்சி பார்க்கும் நப்பாசை. கிடைத்த தண்டனை: மன உளைச்சல்+வேண்டாத சிந்தனைகள்”
மொத்தத்தில் அதிகமாகச் சிந்திக்கும் ஒரு சாதாரண மனிதனின் மனக் குழப்பங்கள், அவன் சிந்தனைகள் , இவற்றோடு சேர்த்து சில நிகழ் கால சடங்குகளையும் கேலி செய்து , சில தத்துவக் கருத்துக்களையும் நகைச்சுவையோடு சொல்லி முடிக்கிறார். வித்தியாசமான கதை .
முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு உளவியல் நிபுணராக இருந்த கோபி கிருஷ்ணா அவர்களின் அதீத சிந்தனைகள் அவரின் வாழ்வில் பல கஷ்டங்களை ஏற்படுத்தியது என்று தெரிய வரும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அதனால் தான் இது போன்ற வித்தியாசமான கதைகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்தது என்றும் அறிந்து கொள்ள முடிந்தது .. நன்றி
------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக