வியாழன், 18 ஜூலை, 2024

'தளம்' - பத்திரிகை விமரிசனம்

 'தளம்' -  பத்திரிகை விமரிசனம் 

---------------------------------------------------------


'தளம் ' ஆசிரியர் நண்பர் பா ரவி அவர்களுடன் , முன்பு புத்தகக் கண்காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் நவீன விருட்சம் ஸ்டாலில் பேசிக்கொண்டிருந்த போது அவர் குறிப்பிட்டது .


' தளம் ' கலை இலக்கிய இதழ் மூலம் . சமூக, கலை , இலக்கிய உலகின் நுட்பமான நவீன விஷயங்களை ஆராய்ந்து வாசகர்கட்கு அறிமுகப்படுத்த வேண்டும் '

என்று அவர் சொன்னது இந்த ஜூன் மாத காலாண்டு இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரைகள் மூலம் வெளிப்படுவது தெரிய வந்தது. ஒவ்வொரு காலாண்டு இதழ் படிக்கும் போதும் இதே உணர்வு ஏற்படுவது உண்டு.


இந்த இதழில்

காஃப்காவின் படைப்புலகம் பற்றிய அழகிரிசாமி அவர்களின் கட்டுரைகள்

சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் பற்றிய முரளி அவர்களின் கட்டுரை

ஆலீஸ் மன்றோவின் சிறுகதைகள் பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

லால்சிங் தில்லின் கவிதைகள் பற்றிய லாவண்யா அவர்களின் கட்டுரை

அலெக்சாண்டர் சுக்ரோவின் திரைப்பட உலகு பற்றிய ரவீந்திரன் அவர்களின் கட்டுரை

ஜெயகாந்தன் பற்றிய அம்ஷன் குமார் அவர்களின் கட்டுரை

மற்றும் நமது நண்பர்கள் பலரின் புதுமைக் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று

குவிந்து கிடக்கும் இந்த இலக்கியச் சோலையில் பயணம் செய்வது அறிவுக்கு இன்பம் பயக்கும் அழகிய பயணம்.


உதாரணத்திற்கு ஓரிரு வரிகள் இரா முரளி அவர்களின் சுதிர் கக்கரின் உளவியல் ஆய்வுகள் கட்டுரையில் இருந்து


'பெருவாரியான இந்தியர்கள் ஆன்மீகத்தின் பால் நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டுள்ளதற்குக் காரணம் , ஜோதிடர்கள், துறவிகள் மற்றும் மந்திரவாதிகள் போன்றோரே. உளவியல் பகுப்பாய்வு முறை மூலம் அவற்றின் அறியப்படாத பகுதிகளை வெளிப்படுத்த இயலும் என்பது கக்கரின் நிலைப்பாடு .'


'இந்திய ஆன்மீகத்தில் பேசப்படும் சூக்கும சரீரம் என்பது மூளை செயல்பாட்டின் மிக நுணுக்கமான செயல்பாடே. அதைத் தாண்டி ஆன்மா என்ற ஒன்று இல்லை என்பதே நிலைப்பாடு '


'ராமகிருஷ்ணரின் சீடராய் இருந்த மகேந்திர நாத் குப்தா என்பவரின் பதிவுகள் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீக அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார் கக்கர் '


'தரிசனங்கள், ஒளி அனுபவங்கள், உடலுக்கு வெளியே ஆன்மா சஞ்சாரம் செய்வது அவற்றின் உள்ளடக்கம் என்ன, அர்த்தங்கள் என்ன என்பதைப் பகுத்தறிவது தேவை என்று கக்கர் கூறுகிறார்.


ராமகிருஷ்ணரை வைத்து ,ஆன்மீக அனுபவங்கள் என்ற அனுபவ வெளியை மூளையின் செயல்பாட்டுக்குள் கொண்டு வந்து விளக்கியுள்ளார் கக்கர் .


அதே போல் , இந்தியக் குருமார்கள் எப்படி உளவியல் நிபுணர்களாக மாறி , சிஷ்யர்களின் துயர் துடைக்கின்றனர் என்பதை உளவியல் பகுப்பாய்வின் மூலம் விளக்குகின்றார். பூசாரிகளாய் இருந்த குருநாதர்கள் வழிகாட்டிகளாகி, புனிதர்களாகி , கடவுள் என்று கருதும் சூழ்நிலைக்கு எப்படி மாறினார்கள் என்றும் விளக்குகிறார். எப்படி இந்தக் குருமார்கள் உளப்பிரச்சினை கொண்டவர்களைக் கவர்கின்றனர் என்றும் விளக்குகின்றார்,


இவருடைய புத்தகங்கள் பற்றிய விரிவான உரையாடல்கள் ஆன்மீகம் பற்றிய சரியான புரிதலை உருவாக்கும் ' என்று கட்டுரையை முடிக்கிறார் முரளி அவர்கள்.


நான் எடுத்துக்காட்டியுள்ள வரிகள் சாம்பிள் தான். நடுவில் அவர் எடுத்துக்காட்டும் கக்கரின் உளவியல் ஆய்வு பற்றிய பல ஆன்மீக வாதிகளின் நடவடிக்கைள் பற்றிய எடுத்துக்காட்டுகள் படிப்பவர்க்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அளிக்கலாம். மொத்தத்தில் அறிவு பூர்வமான ஆராய்ச்சி என்று புரிகிறது. கக்கரின் ஆய்வுகளை முழுவதும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. படித்து சிந்திக்கலாம்.


இந்த இதழில் உள்ள அத்தனை படைப்புகளும் , படித்துக் கடந்து போய் விடக் கூடியவை அல்ல, சிந்திக்க விரும்புவோர்க்குச் சிந்தனைச் செல்வங்கள். படித்து மகிழலாம் .


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...