முடிச்சுகள் -சிறுகதை
———-
அவளுக்கு உள்ளுக்குள் குழப்பம் , அந்தக் கனவை நினைக்கும் போது . உண்மைதானே . தான் வெட்ட நினைக்கும் அந்தக் கட்டு , தானே போட்டுக் கொண்ட கட்டுத்தானே .
அவனைக் காதலித்துத்தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொய்த்த அந்த அலுவலக ஆடவர்கள் பார்வையில் இவன் பார்வையில் ஒரு வித்தியாசம் . அதில் ஒரு மயக்கமும் ஏக்கமும் இருந்தது அவளை ஈர்த்தது .
மதிய நேர உணவு இடைவேளையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் காண்டீனில் , இவளும் இவள் தோழியும் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இவளின் தோழியுடன் பேசியபடியே சாப்பிடும் பழக்கம் அவனுக்கு . புதிதாய் வந்தவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து நெருக்கம் ஆகி விட்ட தோழி அவள் . அவள் கணவனும் பக்கத்து செக்சனில் இருந்து வந்து சேர்ந்து கொள்வான் . அவர்கள் மூவரும் ஏற்கனவே நெடுநாள் பழக்கம் .
ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டு அவர்கள் பேசுவது இவளுக்குப் புதுமையாக இருக்கும் . இவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி . படித்ததும் லேடீஸ் காலேஜ் . அண்ணன் தவிர மற்ற ஆண்களுடன் , உறவினர் ஆண்களுடன் கூட பேச கூச்சம் .
‘என்ன உங்க பிரெண்ட் பேசுறத்துக்குக் கூட காசு கேட்பாங்க போலிருக்கு ‘என்றுதான் அவன் ஆரம்பித்தான் . மெலிதான புன்னகையுடன் அவள் ‘ அதெல்லாம் இல்லைங்க ‘ என்றபோது வந்தது அவனின் முதல் கவிதை அம்பு ‘ ஒரு ரோஜாவில் இருந்து உதிர்ந்தது பனித்துளி ஒன்று ஜில்லென்று ‘ . அன்று இரவு முழுக்க அவள் மனதில் ஓடியது அது . ‘நான் ரோஜாவா , என் வார்த்தை பனித்துளியா ‘ . நடு இரவில் எழுந்து சென்று நைட்டியோடு கண்ணாடியில் பார்த்து ‘ இப்போது என்ன சொல்வான் ‘ என்று நினைத்துப் பார்த்தாள் .
மறு நாள் முதல் அவளிடம் மாற்றம் . பக்கத்து சீட் தானே . ஏதோ சந்தேகம் கேட்பது போல் அவனிடம் அடிக்கடி பேச , புரிந்து கொண்டது அவன் மட்டும் அல்ல , சற்றே தள்ளி இருந்த அவள் தோழியும் தான் . இப்போது அவன் கவிதைகள் நேரடியாக அவளிடம் பரிமாற்றம் . கவிதை வளர்த்தது அந்தக் காதலை .
ஒரு நாள் அவள் தோழி அவளிடம் சொன்னாள் . ‘ அவன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் . உன் பெற்றோரிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி விட்டானாம் . ‘ . அப்போது ஒலித்த போனில் அவள் அப்பா தகவலை உறுதி செய்தார் மதுரையில் இருந்து .
‘ பையன் பேசினாரும்மா . நம்ம ஆளுங்கதான் . சாதி முதற்கொண்டு எல்லா விஷயமும் உன் ஆபிஸ் ரெக்கார்டில் இருந்து தெரிஞ்சு தான் விரும்புறாரு . விபரமான பையன் தான் . எங்களுக்குப் பிடிச்சிருக்கு . உனக்கு ஓகே தானே ‘ என்றபோது , அவளைச் சுற்றிப் போட்ட முதல் முடிச்சு அவளுக்குத் தெரியவில்லை .
அடுத்தடுத்த முடிச்சுகள் தொடர்ந்தன . முதல் இரவு அன்று விலகிய அவன் சொன்னது . ‘பாதுகாப்பான நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம். குழந்தைச் செலவு இப்போது வேண்டாம் . இருவர் சம்பளத்தில் முதலில் தங்கை திருமணம் . அடுத்து வீடு வாங்க வேண்டும் . மூன்று வருடம் கழித்துதான் முதல் குழந்தை . குழந்தையின் வளர்ப்புச் செலவுக்கும் வேண்டிய சேமிப்பு செய்த பிறகு . எதுவும் பிளான் பண்ணி இருந்தால் தான் சரியாக இருக்கும் ‘ என்றவன் சிரிப்பு ரசிக்கவில்லை முதன் முதலாக அவளுக்கு , முதல் இரவு அன்றே .
தொடர்ந்த நாட்களில் இறுகிய முடிச்சுகள் .
‘ இந்த ஸ்லீவ்லெஸ் லாம் போட வேண்டாமே . ‘
‘நைலெக்ஸ் நல்லாவா இருக்கு , காட்டன் புடவைதானே கச்சிதமா இருக்கு ‘
‘லிப்ஸ்டிக்கெல்லாம் தேவையா ‘
எதிர்க்க நினைக்கும் போதெல்லாம் . அவன் நெருங்கி அவள் காதருகே கிசுகிசுக்கும் கவிதை வரிகளில் வெளிப்படும் அவளின் அழகின் பெருமிதம்,
சுற்றிய முடிச்சுக்களை சேர்த்துக் கொண்டு அணைக்கச் சொல்லும் .
ஆனால் இன்றையக் கனவு , முடிச்சுகளை வெட்ட முயற்சிக்கும் கத்தியின் சுழற்சியோடு அவள் . ‘அவள் நானா . என் உள்மன வெளிப்பாடா இது ‘ என்று அவள் குழம்பும்போது , அவள் பக்கத்தில் படுத்திருந்த அவன் புரண்டு ‘ உன் உதட்டோர மச்சத்தின் ஓரத்தில் என் ஏக்கத்தை இறக்கி வைக்க இடம் கொடுப்பாயா ‘ என்று கேட்க இடம் கொடுத்தாள் , இறுகியது முடிச்சு . கழன்றது கத்தி .
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறுகதை மிகச்சிறப்பு, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகோ
சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
பதிலளிநீக்கு