வியாழன், 4 ஜூலை, 2024

நயாகரா அனுபவம் - கட்டுரை

 நயாகரா அனுபவம் - கட்டுரை 

--------------------------------

ஒவ்வொரு நாளும் காலையில் வெளியே போய் ஊஞ்சலில் அமர்ந்து காபி குடிக்கும் பொழுது எதிர் வீட்டில் ஒரு முதியவர் வாசலில் வந்து சேரில் அமர்ந்திருப்பது வழக்கம் சிறிது நேரம் கழித்து உள்ளே மெதுவாக நடந்து செல்வார். உள்ளே ஒருவேளை டிவி பார்க்கலாம் பிறகு மறுபடி நான் சாயந்திரம் வாக்கிங் போகும்போது அவர் வெளியே உட்கார்ந்து இருப்பதைப் பார்ப்பேன் வாக்கிங் முடிந்து வரும் பொழுது அங்கே இருக்க மாட்டார் உள்ளே போயிருப்பார். . ஒரு வயதுக்கு மேல் வாழ்க்கை, உலகம் முழுக்க வாழ்க்கை, இப்படித்தானோ என்று நினைப்பை உருவாக்குகின்ற நிகழ்வுகள். உடல் நலம் ஒழுங்காக இருக்கும் வரை சுற்றித் திரியலாம். அதற்குப்பின் அவரைப் போலத்தான். இதோ நாங்கள் அன்று மதியம் நயாகரா கிளம்பி விட்டோம் .


நாங்கள் எட்டு பேர் என்பதால் உபர் வண்டி வைத்துக் கொண்டு ராலே ஏர்போர்ட் சென்று விமானம் ஏறி இரண்டு மணி நேர பயணத்தில், பிலைட் தாமதம் இரண்டு மணி நேரம் சேர்த்து , நான்கு மணி நேரத்தில் பஃப்பலோ சிட்டி வந்தாகி விட்டது. அங்கே ஏர்போர்ட்டில் வாடகைக்கு எடுத்துச் செல்லும் படியான ஒரு பெரிய கார் எடுத்துக் கொண்டான் பையன் . எல்லா இடங்களிலும் இதுபோன்ற வசதி இருப்பது உடனே புக் செய்து உடனே எடுத்துக் கொண்டு கிளம்புவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது .நம்மூரிலும் இது வந்துவிட்டது என்று தான் நினைக்கிறேன் . ஒரு முக்கியமான கண்டிஷன் . கார் ஓட்டத் தெரிய வேண்டும். சென்னை திரும்பியவுடன் காம்பவுண்டுக்குள் ஓட்டிப் பழகுவதை முடித்து , கோடம்பாக்கம் வீட்டு காம்பவுண்டில் இருந்து காரை எடுத்து வெளியே ஓட்டிப் பழக வேண்டும் . ஆச்சு , இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி நயாகரா சிட்டி வந்தாகிவிட்டது. அருவிக்கு மிக அருகிலேயே, தண்ணீர் தெறிக்கிற அளவுக்கு இல்லே, கொஞ்சம் தள்ளி அந்தப் பூங்காவுக்கு எதிரே ஒரு ஹோட்டலில் ஏற்கனவே புக் செய்து வைத்திருந்ததால் அந்த இடத்தில் இருந்து நயாகராவுக்கு தினசரி காலையில் வாக்கிங் போய் வருவது போல் போய் வருகின்ற பழக்கம் அந்த மூன்று நாட்களும் இருந்தது.


கம்பர்ட் இன் என்பது அந்த ஹோட்டலின் பெயர் . இரவு சென்றதால் தூங்கிவிட்டு தூங்குவதற்கு முன்பாக அங்கிருந்த ஜிம் போன்றவற்றை போய் பார்த்துவிட்டு வந்து படுத்தாகிவிட்டது. காலை எழுந்தவுடன் ஹோட்டல் பிரேக் பாஸ்ட், வழக்கம் போல் மைதா மாவின் பலவித முகங்களான, பர்கர், வேப்பில் போன்றவற்றோடு , பழங்கள் . எதிரில் இருக்கும் அந்த நயாகரா அருவியின் பார்க்கில் நுழைந்தவுடன் வரவேற்ற வித வித பறவைகளின் கீச்சொலியும், வண்ண வண்ண மலர்களும் உற்சாகம் கொடுத்தன. ஆனால் பெரும்பாலான பூக்கள் வாசமும் இல்லை வண்ண வண்ணமாக பல மலர்கள் இருந்தன


வாசம் உள்ள மலர்கள் நமது தமிழ்நாட்டில் தான் என்று தோன்றியது. அங்கே மூன்று அருவிகள் இருக்கின்றன அமெரிக்கன் பால்ஸ் , ஹார்ஸ் சூஸ் , பிரைடல் வெயில் . மூன்றும் பிரமாண்டமான அருவிகள் பிரைடல் வெயில் கொஞ்சம் சிறியது. அந்த இரண்டுக்கும் இடையில் ஒரு மணப்பெண்ணின் நாணத்தோடு இருக்கிறது.


இந்த பக்கம் இருக்கிற அமெரிக்கன் பால்ஸுக்கும் அந்தப் பக்கம் கனடாவின் பக்கம் இருக்கும் அந்த ஹார்ஸ் சூஸ் பால்ஸுக்கும்இடையே பிரைடல் வெயில் பார்த்தபோது இந்த அமெரிக்கன் பால்ஸுக்கு , அந்த கனடா பால்ஸ் மணமுடித்துக் கொடுப்பது போல் தோன்றியது. நமது மீனாட்சி அம்மன் கோவிலிலே அங்கே சுந்தரேஸ்வரருக்கு மீனாட்சியை மணம் முடித்துக் கொடுக்கும் பெருமாளின் உருவம் ,மூன்று சிலைகளும் சேர்ந்து கோயிலில் பார்த்த ஞாபகம் வந்தது .


முதலில் அந்த ஹார்ஸ் ஷூஸ் பெருமாளாகவும் அந்த பிரைடல் அருவி மீனாட்சியாகவும் அமெரிக்கன் பால்ஸ் சுந்தரேஸ்வரராகவும் தோற்றமளித்தன. அவற்றின் அருகே போட்டில் நெருங்கும் போது அந்த தண்ணீர் தெளித்தது கோயில் திருமணத் தீர்த்தமாகத் தோன்றியது.


முன்பாகவே நாங்கள் தண்ணீர் நுழையாத ஆடைகள் எல்லாம் அனைவரும் அணிந்து கொண்டு தான் அந்த போட்டில் ஏறினோம். இருந்தாலும் மிகவும் அருகில் நெருங்கியபோது ஹார்ஸ் ஷு அருவியின் வேகத்தண்ணீர் அது ஒரு பலத்த மலைச் சாரல் அனுபவம். இனிமையாக இருந்தது பிறகு அங்கிருந்து திரும்பி பிரைடல் அருவியைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கன் அருவியைப் பார்த்துக் கொண்டு திரும்பினோம். அந்தப் பக்கம் கனடா பார்டர். பாலத்தில் ஏறி இறங்கினால் கனடா. ஆனால் விசா வேண்டும். இங்கிருந்து கை அசைக்க விசா தேவையில்லை .அங்கே படகுகள் சிவப்பு நிறம். இங்கே நீல நிறம். அருகருகே .


மறுபடி பூங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு திரும்பி தோசை கிடைக்குமா என்று ஊரைச் சுற்றிப் பார்த்தபொழுது ஒரு பஞ்சாபி தோசை ஹோட்டல் கிடைத்தது அங்கே பல இந்தியர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தோம். தோசை வட்டமாக இருந்தது என்பதை தவிர அதனுடைய ருசியை தோசை என்று நாம் சொல்ல முடியாது. இருந்தாலும் தோசை என்ற பெயரில் கொடுத்ததால் அதைச் சாப்பிட்டு தோசை சாப்பிட்ட திருப்தியோடு ஹோட்டல் திரும்பினோம் .


மறுநாள் மற்றும் ஒரு அருவி . அமெரிக்கன் ஃபால்ஸ் இதை பார்ப்பதற்கு அடியிலே செல்ல வேண்டும் மிகவும் படிகளில் ஏறி இறங்கி செல்லக்கூடிய சூழ்நிலை இருந்ததால் நானும் மனைவியும் செல்லவில்லை அங்கு இருந்த ஒரு ரெஸ்டாரன்ட், டாப் அப் த ஃபால்ஸ் ரெஸ்டாரண்டில் ,எங்கள் இரண்டாவது பேரனை வைத்துக் கொண்டிருக்க அவர்கள் அனைவரும் உள்ளே சென்று அந்த அனுபவத்தை வந்து சொன்னார்கள் .அது இன்னமும் அதிகமான வேகத்தோடு மேலே வந்து விழுந்தது பற்றி மிகவும் விவரித்தார்கள்.


. நாம் குற்றாலம் போய் ரெம்ப காலம் ஆகிவிட்டது. அப்பொழுது ஏதோ தலையில் இறங்குவது போல் எல்லாம் அனுபவித்த ஞாபகம் உண்டு. இதுவும் அது போல் ஒரு வித்தியாசமான அனுபவம் அவர்களுக்கு. அமெரிக்கன் பால்ஸ் அனுபவம் . அவர்கள் வரும் வரை நாங்கள் அந்த ரெஸ்டாரண்டில் ஒரு வித்தியாசமான ஐஸ்கிரீமை சாப்பிட்டோம் . ஸ்ட்ரா பெரி , ராஸ் பெரி கலந்த ஒரு ஐஸ் கிரீம். மிகவும் ருசியாக இருந்தது .


பிறகு அந்தப் பார்க்கைச் சுற்றிப் பார்க்கும் வண்டியில் ஏறி அந்தப் பூங்காவின் அழகையும் அருவிகளின் அழகையும் , கண்களாலும் காமிராவாலும் ரசித்து விட்டுத் திரும்பினோம். புகைப் படங்கள் எல்லாம் நமது கலை புதிது குழுவில் முன்பே பகிர்ந்தாய் விட்டது. இப்போது முகநூலிலும் போட்டாயிற்று. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன் ' மாதிரி ' நாங்க நயாகரா அருவி பார்த்திட்டோம்'. முன்பு அமெரிக்கா வந்தபோது பையனும் மருமகளும், கிழக்கே நியூயார்க், மேற்கே சான் பிரான்சிஸ்கோ , லாஸ் ஏஞ்செல்ஸ் எல்லாம் கூட்டிக் கொண்டு சென்று விட்டதால், இப்போது நாங்கள் முன்பு போகாத இடங்களாக பிளான் பண்ணி இருந்தார்கள். வடிவேலு சொல்ற மாதிரி ' பிளான் பண்ணியிருந்தாங்க.



மறுநாள் ஹோட்டல் ஜிம்மில் போய் கொஞ்சம் வொர்க் அவுட் . அன்று மதியம் கிளம்ப வேண்டும் காலையில் சென்று வழக்கம் போல் நயாகரா அருவி பக்கத்தில் இருப்பதால் மறுபடி அங்கே சென்று அருவி பக்கத்தில் த அந்த மூன்று அருவிகளும் சேர்ந்து வரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டு அந்த பார்க் முழுக்க சுற்றி பார்த்து விட்டு ,அருமையான இயற்கைக் காட்சிகள் , மரங்கள், பூக்கள், பறவைகள் , திரும்பியாய் விட்டது . . மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் வீடு இருந்ததால் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்த ஞாபகம் வந்தது .


அதுபோன்று இந்த மூன்று நாட்கள் அடிக்கடி சென்று அருவி பார்த்து வந்த அனுபவம் மறக்க முடியாத அனுபவம் . திரும்ப அதே காரில் பயணம் .ஏர்போர்ட் வந்து வாடகைக்கு எடுத்த வண்டியை விட்டுவிட்டு ரிட்டர்ன் பிளைட்டில் ஏறி ராலே வந்து சேர்ந்து இங்கு காரை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது சரியான மழை . அந்த கார் கண்ணாடிகளை மறைக்கக் கூடிய அளவுக்கு வைப்பர்கள் எல்லாம் தாண்டிய பலத்த மழை. மிக மெதுவாக கார் ஊர்ந்து வந்து இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தது .ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற ஆசையுடன் வீட்டை திறந்து உள்ளே நுழைந்து வீட்டு காபியை ஒருமுறை அருந்தி விட்டு வீட்டு தோசை இரண்டு அந்த 12 மணி அளவில் சாப்பிட்டுவிட்டு தான் படுத்தோம்.


எதிர் வீட்டுப் பெரியவர் இந்நேரம் தூங்கியிருப்பாரா, அல்லது முன்பு அவர் சென்று சுற்றிய அனுபவங்களை அசை போட்டுக்கொண்டு படுத்திருப்பாரா .



----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...