சிறுகதை மதிப்புரை - கட்டுரை
------------------------------------------------------------------------------------------------
நன்றி அழகிய சிங்கர் வணக்கம் நண்பர்களே . நமது பூவராக மூர்த்தி அவர்களின் 'சின்னப் பிள்ளை' என்ற சிறுகதை. சின்னப் பிள்ளை என்றவுடன் ஏதோ ஒரு சின்னக் குழந்தையை பற்றிய கதையாக இருக்குமோ என்று தோன்றியது . ஆனால் கதை ஆரம்பத்திலேயே அவர் அதை விடுவித்து விடுகிறார் . சின்னப்பிள்ளை என்பது தியாகிகள் பென்ஷன் வாங்கும் ஒரு முதியவரின் பெயர்.
இந்தக் கதை அந்த முதியவருக்கும் அந்தப் பென்ஷன் பிரிவில் இருக்கும் ஒரு அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவம் . அந்த அதிகாரியின் பார்வையில் அவர் சொல்வது போல் கதை போகிறது . ஆரம்பத்தில் அந்த அதிகாரி மிகவும் வருத்தப்படுவது போல் கதை ஆரம்பிக்கிறது. . ' நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. சொல்லிட்டேன் .என்ன செய்வது . வீட்டில் மனைவியுடன் மனஸ்தாபம். சின்ன விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் ஆபீஸ் புறப்படும் போது மன அமைதியைக் கெடுக்கிற மாதிரி சண்டை. எல்லாம் சேர்ந்து கொண்டு. அதற்காக இப்படியா நடந்து கொள்வது' என்று அவர் கதையை ஆரம்பிக்கும் போதே நமக்கு ஒரு ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறார் .
'என்ன நடந்தது ஏன் இந்த நாயகன் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறான் ' என்ற கேள்வி நம் மனதில் எழுந்து விடுகிறது. பிறகு அந்த நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் பின்னோட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார்.
'நல்லா இருக்கீங்களா ஐயா' என்ற குரல் . சின்னப் பிள்ளை எத்தனையோ முறை வந்து இருக்கிறார் நானும் அன்போடு பேசி இருக்கேன் ஆனா நேத்து ' என்று நிறுத்தி அந்த பென்ஷன் பிரிவினுடைய பிரச்சனைகளை எல்லாம் சொல்கிறார். . இவர் 5, 6 வருடம் அந்த பென்ஷன் பிரிவில் இருக்காரு எல்லாரும் இவரிடம் வந்து உதவி கேட்பார்கள் .ஒரே காலனியில் இருந்து ஒரு பத்து பதினஞ்சு பேரு வருவாங்க. தியாகி பென்ஷன் வாங்குறவங்க. எல்லாம் வயசு 80 க்கு மேல , இவர் இந்த பெரியவர் சின்னப் பிள்ளை எப்பவும் தனியாத்தான் வருவார் ' அப்படின்னு சொல்லிட்டு டக்குனு இப்போதைக்கு இருக்கக்கூடிய இடத்திற்கு வராரு ஆசிரியர். அதாவது பிளாஷ்பேக் போறது, திரும்பி தற்காலத்துக்கு வருவது அப்படின்னு கதையை ஒரு சஸ்பென்ஸோட கொண்டு போறாரு.
இப்ப என்ன நடக்குது . ஷேர் ஆட்டோ நிக்குது. 'காந்தி காலனிக்கு இங்கே இறங்குங்க' அப்படின்னு டிரைவர் சொன்னதும் ,இவர் இறங்கி அந்த விலாசத்தை பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட காமிச்சிட்டு வழி கேட்டு உள்ள போயிட்டு இருக்காரு காந்தி காலனிக்குள்ள.
இப்போ மறுபடி பிளாஷ் பேக். எப்பவுமே பென்ஷனுக்கு இரண்டு நாள் இருக்கும்போதே போட்டுடுவாங்க. . இல்லே, கடைசி நாளிலே எல்லாருக்கும் கொடுத்துடுவாங்க .ஆனா அன்னைக்கு வந்து இவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்ததால் இந்த பென்ஷன் அதிகாரி எல்லாருக்கும் கொடுக்கக் கூடிய ஏற்பாடு பண்ணல. இப்ப அந்தச் சின்னப் பிள்ளை வந்திருக்காரு. வந்து.' என்னங்க பென்ஷன் பணம் வாங்கிக்கலாமா ' 'இன்னிக்கி போடல ' . அவரு போயிட்டாரு. அப்புறம் மதிய உணவு இடைவேளை. அதுவரை அங்கே தான் இருந்த சின்னப் பிள்ளை வந்து 'பென்ஷன்' ' ஐயா போட்டீங்களா. இன்னும் சாப்பிடலை நான் . ' . என்று கேட்கும்போது அந்த முதியவரின் மனநிலை நமக்கு ஏற்படும்படி உருக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
'ஒவ்வொரு மாசமும் கரெக்ட்டா போட்டுறோம்ல. இந்த மாசம் இன்னும் போடலை. போயிட்டு நாளைக்கு வாங்க , நான் சாப்பிடப் போறேன்' என்று அந்த பென்ஷன் அதிகாரி எழுந்து போகிறார். இவர் மெதுவாக நடந்து வாசல் நோக்கிச் செல்கிறார்.
ஆனால் அன்று நைட் இந்த அதிகாரி கனவில் வருகிறார் சின்னப்பிள்ளை . ' நல்ல இருக்கீங்களா ஐயா' சின்னைப்பிள்ளை குரல் . இவருக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத் து. 'நம்ம கடமையில் தவறி விட்டோமே. மற்றவரிடம் அன்பாக இல்லாமல் ,என்ன வாழ்க்கை இது . அன்னைக்கு ஏதோ வீட்ல பிரச்னை அனுப்பிவிட்டேன். பாவம் அந்த வயசானவர் என்ன செய்வார் அவருக்கு என்னென்ன பிரச்சனைகளோ . பாவம் சாப்பிடாம வந்தாரு அவர்கிட்ட போய் மன்னிப்பு கேட்கணும்னு' சொல்லிட்டு காலையில ஆபீஸ் போனவர் , அவர் வருவார் என்று வெயிட் பண்ணி பாக்குறாரு .
ரொம்ப பேரு வந்தாங்க ஆனா சின்னப்பிள்ளை வரவே இல்ல . 'என்ன ஆச்சு நேத்து அவருக்கு ஏதும் பிரச்னை ஆகி இருக்குமோ' அப்படின்னு இவருக்கு ஒரே கஷ்டமாயிருச்சு. அவரு விலாசத்தை எழுதிக்கிட்டுத் தான் இப்ப இங்கே காந்தி காலனியில் நடந்து வந்துட்டு இருக்காரு.
அவர் மன ஓட்டம். ' வீட்டிலே சின்னப்பிள்ளை இருப்பாரு. உட்காரச் சொல்லுவாரு . இந்தப் பக்கம் வந்தேன், பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் ' என்று சொல்லலாம் ' என்று நினைத்தபடி வந்தார் . தெரு முக்கில் திரும்பும்போது அந்த முக்குல இருந்து சங்குச் சத்தம் கேட்குது . சங்குச் சத்தம் கேட்டா என்னங்கறது நமக்குத் தெரியும் . 'யாரோ ஒருத்தர் இறந்துட்டார்.' அந்த முனையிலே எல்லாரும் சோகமா இருக்காங்க கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .
'நேத்து வந்தவர் பென்சன் கிடைக்காம மனமுடைஞ்சு போய் இறந்து போயிட்டாரோ அவர் இறப்புக்கு நான் காரணமாயிட்டேனே ' என்று வருத்தத்தோடு திரும்புகிறார் இவர். அங்கு திரும்பி வரும் ஆட்டோவை நிறுத்தி ஏற ஆட்டோ ட்ரைவர் சொல்றார்.' இறந்து போனவரு பொண்ணு வீட்டில் இருக்கிறார். நேத்து ஏதோ பையன் மருமகள் எல்லாம் வந்தாங்களாம் அப்படியே பேசிக்கிட்டு இருந்தவர் 'வங்கிக்குப் போயிட்டு வந்தது அசதியா இருக்குன்னு' ராத்திரி கஞ்சி குடிச்சிட்டுப் படுத்தவர் காலையில் சாஞ்சிட்டாரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு' .
ஆட்டோ ட்ரைவர் சொல்லச் சொல்ல, இவர் மனதுக்குள் ' எதுவும் சொல்லி இருப்பாரோ, நம்ம தான் அதுக்குக் காரணம். வேற யாருக்காவது தெரிந்திருக்குமா . தெரியாட்டாலும். மறைமுகமாவது நம்ம தானே காரணம். நம்ம செஞ்சது தப்புத் தானே, எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் . இங்கே போனதோடு, நம்ம போய் அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போட்டு அவர் முகத்தைப் பார்த்து ஒரு மன்னிப்புக் கேட்டு வந்திருக்கலாம். ஒரு மனிதாபிமானமே இல்லாமே ஒரு கோழையா திரும்பினதை நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு' என்று மனதிற்குள் குழம்பியபடி வந்து ஆபீஸ் வந்து உட்கார்ந்து சீட்ல இருக்கிறப்போ, பக்கத்து சீட் கேசவன் . ' வந்துட்டியா , பென்சனர் எல்லோரும் கேட்டாங்க ' என்று சொல்ல இவர் சீட்டில் உட்கார்ந்து பாக்குறாரு. சீட்டில் உட்கார்ந்து அப்படியே பார்க்கிறாரு
அங்கே வாசல் கதவு திறந்து யாரோ ஒரு இன்ஸ்பெக்டர் வரார் . இவருக்குப் பயமா இருந்துச்சு. இதயம் படபடன்னு அடிக்குது . 'விஷயம் தெரிஞ்சிருச்சு. விசாரிக்கப் போறாரு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். நம்ம அவரைத் தனியாக் கூட்டிட்டு போய் சரண் அடைஞ்சிடலாம் ' என்று நினைக்க , இன்ஸ்பெக்டர் இவரிடம் வந்து '
'சார் , நீங்கதானே தியாகி பென்ஷன் பார்க்கிறீங்க ' என்று கேட்க ' ஆம் ' என்றவரின் உடல் வேர்த்துக் கொட்டுகிறது . அவர் ' எங்க அம்மா வண்ணாரப் பேட்டை ப்ராஞ்சிலே பென்ஷன் வாங்கிறாங்க. ஏதோ அரியர்ஸ் வரணுமாம், உங்களைப் பார்க்கச் சொன்னாங்க' என்றதும் , மூச்சைச் சரி செய்து அவருக்கு வேண்டியன செய்து கொடுக்கிறார்.
அப்போது கேசவன் ' சாப்பிடப் போகலாமா ' என்று கேட்கிறார்.. மனைவி நல்ல டிபன் தான் கொடுத்திருந்தாலும் இவர் குற்ற உணர்ச்சியோடு ' எனக்குப் பசிக்கலை நீ சாப்பிடு ' என்று சொல்லி விட்டு ஏதோ நினைவில் உக்காந்துட்டு இருக்கார் .
குற்றம் உள்ள மனசு இல்லையா குறுகுறுக்கிறது.' நம்மாலேதான் அவரு போயிட்டாரு ' என்று ரொம்ப வருத்தத்தோட கண்ணீரோடு இருக்கும்போது , ஒரு குரல் கேட்கிறது .
இப்போது கதை ,நாயகனின் வார்த்தைகளில் .
'நல்லா இருக்கீங்களா ஐயா ' சின்னப் பிள்ளை உயிரோடு முழுவதுமாக நின்று கொண்டிருந்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 'வாங்க சின்னப் பிள்ளை' என்று அவரை உட்கார வைத்து எழுதிக் கொடுத்து ஓடிப் போய் பணம் வாங்கி வந்து கொடுத்தேன்.
சின்னப் புள்ள 'ரொம்ப நன்றி ஐயா, காலைல தெருவிலே ஒரு பங்காளி செத்துட்டாரு. அதுதான் வர லேட்டாயிடுச்சு மன்னிச்சுக்கங்க '
'அதனால என்ன வந்துட்டீங்களே அதுவே போதும் ' அவருக்கு ஒன்றும் புரியவில்லை 'எனக்கும்தான் நான் ஏன் இப்படி இருக்கேன்னு புரியல 'அப்படின்னு சொல்லிக் கதை முடிகிறது .
இந்த கதை ஒரு இரக்கமுள்ள மனிதனின் , மன இயல்புகளை ,மிக இயல்பாகக் காட்டியுள்ள கதை. எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் மற்றவரிடம், மனித நேயத்துடன், கவனமாக நடந்து கொள்ள வேண்டும். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். அப்புறம் நாம் வருத்தப்படும்படி இருக்கக் கூடாது ' என்று அறிவுறுத்தும் . அருமையான கதை.
கதை நிகழ்வுகளை ஆசிரியர் எடுத்துச் செல்லும் விதத்தில் , அந்த பிளாஷ் பேக் முறையில் ஒரு சஸ்பென்ஸ் , கதையின் நாயகன் மனம் பேசும் வார்த்தைகளில், இயல்பான மனிதர் ஒருவரின் எண்ண ஓட்டம். பயம். வருத்தம். பச்சாதாபம் , இறுதியில் ஒரு மகிழ்ச்சி என்று சிறப்பாகக் கதையைக் கொண்டு சென்று கச்சிதமாக உணர்வு பூர்வமாக, நாயகனோடு சேர்ந்து நாமும் நிம்மதிப் பெருமூச்சு விடும் விதத்தில் முடிக்கிறார் மூர்த்தி அவர்கள் . வாழ்த்துகள் .
அனைவர்க்கும் நன்றி
----------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக