செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

குறியீட்டு ஓவியம் - நகைச்சுவைக் கட்டுரை

 குறியீட்டு ஓவியம் - நகைச்சுவைக்  கட்டுரை

--------------------------

சினிமாவிலே மட்டும் தான் குறியீடுகள் இருக்கணுமா , உங்க ஓவியத்தைப் பார்த்ததும் அதிலே உள்ள குறியீடுகளைப் பற்றிக் கண்டிப்பாக் குறிப்பிட்டுச் சொல்லணும்னு தோணுச்சுங்க


அந்த  முகத்திலே தொக்கி நிற்கும் சோகத்தில், இந்தத் தோல் வாத்தியத்தைத் தட்டி எழுப்பி அந்த இசையைக் கேட்டு மற்றவங்க போடுற காசிலே தான் இன்னைக்கு வீட்டிலே கஞ்சி காச்சணுங்கிற உணர்ச்சியை என்னமா கொண்டு வந்து இருக்கீங்க. அந்த முகம் முழுக்க கறுப்பை அப்பி நாங்க ஒண்ணும் புரியாம இப்படி யூகிக்க வச்சது உங்க திறமை சார்.


அதுவும் ஒரிஜினலில் இருக்கிற தலையிலே முழு வழுக்கை அல்லது மொட்டை ஒரு அழகுங்கறதாலே , கொஞ்சம் முடியைத் தலையிலே வச்சு அவன் அழகைக் குறைச்சதும் உங்க திறமை சார் .


அதே நேரத்திலே அவரே தனது இசையில் சொக்கி இருக்கிறதை, அவரோட மூடிய கண்கள் வெளிப்படுத்துறது அட்டகாசங்க . வாத்தியத்தைத் தட்டி தட்டி அந்தக் கறுத்த கையின் உள்பக்கம் சிவந்து போயிட்டதை , சின்னச் சின்ன சிவப்புக் கோடுகளை அந்த இடது உள்ளங்கையில் வரைஞ்சு அந்த எபக்ட்டை கொண்டு வந்துட்டீங்க. கருப்பு பென்சில் தீர்ந்து போயிடுச்சுன்னு எங்களுக்கு தெரியாதபடி அழகா எங்களை யோசிக்க வச்சீங்க .


அதே போல் அந்த வாத்தியத்தின் மேல் அமுக்கி இருக்கிற அழுத்தத்தையும் அழகாக கொண்டு வந்துட்டீங்க. அந்த இசை எழும்பித் தெறிக்கிற ஒரு காட்சியும் அங்கே கிடைக்குது . அது மட்டுமா .


அந்தத் தெறிக்கும் இசையின் பல்வேறு ஒலிச் சப்தங்களைப் பிரதிபலிக்கின்ற மாதிரி , சுற்றி பல வண்ணங்களில் கிறுக்கி இருக்கீங்க பாருங்க, சாரி தீற்றி இருக்கீங்க பாருங்க , அது உங்க கற்பனைக்கே உரிய திறமைங்க. ஒரிஜினல் படத்திலே கூட மொத்தமா டார்க்கா கலரைப் போட்டுக் கெடுத்துட்டாங்க. இது கிளாசிக்கா இருக்குங்க.


ஒரிஜினல் படத்திலே ஒரு சின்ன ஸ்டூலில் வாத்தியத்தை வச்சு அடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அந்தக் கால்கள் எல்லாம் அதிலே ரெம்ப சரியா போட்டிருப்பாங்க . ஆனால் உங்கள் படத்திலே, அந்த ஸ்டூலையும் சின்னச் சின்னக் கோடுகள் மூலம் காண்பிச்சு அது உடைஞ்ச ஸ்டூலா இருக்கலாம் என்ற பிரமையை எங்களுக்கு உருவாக்கி அவனது ஏழ்மையின் உச்சக் கட்டத்தைக் காண்பிக்கிறீங்க.


அந்தப் பாதங்கள் இரண்டையும் அவன் அழுத்தி ஊன்றி இருக்கிற விதத்தில் , அந்த ஸ்டூல் கால் உடைஞ்சதாலே அவன் ஒரு மாதிரி பாலன்ஸ் பண்ணி உட்கார்ந்திருக்கிறான் என்பதை ரெம்ப அழகா குறியீடா உணர்த்திடுறீங்க ,


மொத்தத்தில் ஒரிஜினலை மிஞ்சிய உங்கள் கற்பனையை இணைத்துப் படைத்த இந்த ஓவியம் ' ஏழை இசைக் கலைஞனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீட்டுப் படமாக' அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது .


பி.கு ; (இது நமக்குள்ளே ) ஆமாம், எப்ப சார் ஒழுங்கா படம் வரையப் போறீங்க



----------------------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...