ஆவி அணைஞ்சுச்சா - கவிதை
----------------------------------------
குனிஞ்சு படிக்கிறப்போ
குப்புன்னு மின்னுச்சா
நிமிந்து பாத்தாக்க
நெருப்புன்னு தெரிஞ்சுச்சா
ஓடக் கிளம்புறப்போ
ஓலைத்தீ தடுக்குச்சா
சுத்திக் கரும்புகையா
கண்ணைக் கருக்குச்சா
கத்திக் குரலெடுக்க
தொண்டை அடைச்சிருச்சா
தண்ணித் தாகத்தில்
நாக்கு வறண்டுடுச்சா
வீட்டாரின் நினைப்பெல்லாம்
விக்கலாய் வந்துச்சா
வெளையாண்ட இடமெல்லாம்
கண்ணுக்குள் ஓடுச்சா
பக்கத்துப் பையன் மேல்
பாழும் தீ பத்துச்சா
பயந்து ஓடுறப்போ
பாதை மறந்துடுச்சா
என்னமோ மேல் விழுந்து
உடம்பெல்லாம் எரிஞ்சுச்சா
'ஆ ஊ ' ன்னு அலறிட்டு
ஆவி அணைஞ்சுச்சா
----------------------நாகேந்திர பாரதி
பல வருடங்களுக்கு முன்பு இதே ஆடி முதல் வெள்ளி அன்று கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் கருகிய அந்தப் பிஞ்சுகளுக்கு அஞ்சலி
-------------
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக