நார்த் கரோலினா அனுபவம் - கட்டுரை
----------------------------------------------
அமெரிக்காவின் நார்த் கரோலினா, ராலே விமான நிலையத்தில் 'தாத்தா 'என்று மூத்த பேரன் காவ்யன் வந்து கட்டிக்கொண்டவுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இல்ல தாத்தா 'என்று சொல்லி மகிழ்ந்து வெளியே வந்து பையனோட கார்ல ஏறி கிளம்பி வர்ற வழியில் எல்லாம் இரண்டு பக்கமும் பைன் மரத் தோட்டங்கள் அழகு. 'ஊட்டி , கொடைக்கானல் எல்லாம் போனதில்லையா ' என்று கேட்கக் கூடாது . இது அமெரிக்கா , இங்கே இப்படி இருக்குன்னு சொல்றதிலே ஒரு பெருமை . நல்ல ஒரு இயற்கையான சூழ்நிலையை அனுபவித்தபடி அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
வீட்டுக்குள் வந்தவுடன் , மருமகள் வரவேற்க , கூடவே ரெண்டு மாசப் பேரனும் நம்மைப் பார்த்துச் சிரிச்சான். எப்படி நம்மள ஐடென்டிஃபை பண்ணினான்னு தெரியாது .அது நாங்க முந்தி ஜூம் லே ஒரு தடவ பார்த்திருக்கோம். அப்ப பார்த்தது மனசுல வச்சுக்கிட்டான் அப்படிங்கற மாதிரி நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம்.
பையன் கிழக்கே நியூ யார்க் , மேற்கே சான் பிரான்சிஸ்கோ எல்லாம் பல வருடங்கள் இருந்துட்டு இப்ப வீடு வாங்கணும்னு நல்ல ஒரு அமைதியான ஒரு சூழ்நிலையிலே வீடுகள் தனித்தனியாக இயற்கைச் சூழ்நிலையோடு இணைந்து இருக்கிற இடமாக பார்த்து நார்த் கரோலினாவிலே , அபெக்ஸ் என்ற ஊரில் தனி வீடு ரெண்டு வருஷம் முன்னாலே வாங்கிட்டாங்க. ஒரு மாடியோட பெரிய வீடு . பின்னாலே பேக்யார்ட் ,என்ன , எல்லா வேலையும் நம்மளே தான் எல்லாத்தையும் பாக்கணும். அது ஒண்ணு தான் கஷ்டம்.
என்னதான் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் இருந்தாலும் அதையெல்லாம் நம்ம தானே உபயோகப்படுத்தணும் அந்த டெக்னிக்கெல்லாம் நமக்கு தெரியாது . அவங்க பல வருஷம் இங்கே இருந்து எல்லாம் பழகி அவங்களே ஸெல்ப் டிபெண்டெண்ட்டா எல்லாம் பண்றங்க. வேலைக்காரங்க கிடையாது . கலை வாணர் ஒரு படத்திலே பாடுன மாதிரி , தோட்ட வேலை, சமையல் வேலை , வீடு க்ளீனிங் , பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது எல்லாம் மெஷின் தான்.அவங்களே பண்ணிக்கிறாங்க. உடற் பயிற்சி மாதிரியும் ஆச்சு. .
நாங்க பேரனைப் பார்த்துக்கிறது ,அவனுக்கு டைப்பர் மாத்துறது அவனை தூக்கி வைத்து கொஞ்சறது இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள், மூத்தவனை பக்கத்துத் தெரு ஸ்கூல் பஸ் ஸ்டாப் புக்கு கூட்டிப் போயி ஏத்தி விடறது . இது மாதிரி சின்ன சின்ன வேலைகள் செஞ்சுக்கிட்டேன். ஒய்ப்பும் , அதே மாதிரி சமையல்ல கொஞ்சம் கொஞ்சம் ஒத்தாசை பண்ணிக்கிட்டாங்க. மத்தபடி அங்கே இருக்கிற வாஷிங் மெஷின் , ட்ரையர் அப்புறம் அந்த டிஷ்வாஷ் அப்புறம் ப்ளோர் கிளீனிங் இந்த மாதிரி ஐட்டங்கள் எல்லாம் வந்து நம்ம யூஸ் பண்ணனும்னா அந்த ஆப்பரேஷன் எல்லாமே வேறமாதிரி இருக்கு. எலெக்ட்ரிக் சுவிட்ச் கூட நம்ம பக்கம் கீழே இழுத்தா ஆன் . மேலே எடுத்தா ஆஃப் . இங்கே கீழே தள்ளினா ஆன். மேலே தள்ளினா ஆப். நமக்கு முந்தியே சில வருடங்கள் அமெரிக்காவில் இருந்து பழக்கம் தான். இருந்தாலும் எதுக்கு வம்பு.
ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணி எதுக்கு வம்பு. அந்த வேலைகள் எல்லாம் அவங்களே பண்ணட்டும். எல்லோருமே ஸெல்ப் டிபெண்டெண்ட்டா இருக்காங்க எவ்வளவு வருஷங்களா இங்கே இருக்காங்கள்ல மூணாவது படிக்கிற பேரன் அவனே வந்து ரொம்ப ஸெல்ப் டிபெண்டெண்டா இருக்கான். அந்த விதத்தில் இதெல்லாம் ஒரு நல்ல விஷயம்னு தோணுச்சு .
அப்புறம் அவனுடைய ரெகுலர் ஸ்கூலுக்குப் போய் பார்த்தோம் . அப்புறம் ஸ்பெஷல் தமிழ் கிளாஸ் நார்த் கரோலினாவிலே இருக்கிற தமிழ் சங்கத்தின் மூலம் வீக்லி ஒன்ஸ் சண்டே போயிட்டு வரான் . அதுக்கும் கூட போயிருந்தோம் .அந்த டீச்சர் நல்லா தமிழ் பேசுறாங்க டீச்சர் இல்லையா. பேசத்தானே வேணும். பசங்க மழலைத் தமிழ் . பேரனும்தான். எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் நல்லா பேசுவான் .
அப்புறம் அவனுக்கு மியூசிக்கெல்லாம் இன்ட்ரஸ்ட் . பியானோ கத்துக்கிறான் . அந்த க்ளாஸ் போயி அந்த சார் கிட்டே பேசுனோம். நம்ம இசை புதிது குழுவில் இருக்கிறதுனால இசை பத்தி பேச ஆரம்பிச்ச உடனே அவர் பியானோ பத்தி ரொம்ப விளக்கம் சொன்னாரு. அவரோடது ஒரு நல்ல ஒரு மாடர்ன் பியானோ. அது ரொம்ப ஃபேமஸான கம்பெனி .அதைப்பற்றி எல்லாம் விளக்கமா சொன்னாரு. நமக்கு ஒண்ணும் புரியல. என்ன பண்றது. எல்லாத்துக்கும் தலையை ஆட்டிகிட்டு புரிஞ்ச மாதிரி கேட்டுக்கிட்டோம் . இசை புதிது அட்மின் இல்லையா .அனுபவித்து கேட்ட மாதிரி ஆக்ட் பண்ணிட்டோம் .
அப்புறம் இங்கே ஊர் சுத்துறது. கம்யூனிட்டி க்ளப்பில் , ஜிம் , நீச்சல் குளம் எல்லாமே இருக்கு . அப்புறம் கேம்ஸ் லே இங்க பிக்கில்ஸ்பால்னு ஒண்ணு . டென்னிஸ் டேபிள் டென்னிஸ் கலந்தது. டென்னிஸ் மாதிரி கஷ்டம் இல்லை .இரண்டும் மிக்ஸ் ஆகி ஒரு மாதிரி நல்லாவே விளையாடுவதற்கு ஈசியா இருந்துச்சு . அது நானும் பையனும் விளையாண்டோம். பேத்தியும் நானும் பேட்மிண்டன் விளையாண்டோம்.
அமெரிக்காவிலே இருக்கிற யூஸ்வலா போற இடங்கள் . ரீடைல் ஸ்டோர்ஸ். காஸ்ட்கோ , வால் மார்ட், டார்கெட், மேஸிஸ் . எல்லாம் ஒரு ரவுண்ட். இங்கே காலி நிலங்கள் ரெம்ப ஜாஸ்தி. எனவே எல்லாம் பெரிய பெரிய மால் மாதிரி இருக்கு. எல்லாம் மேலே நல்ல உயரம். கீழே நல்லா அகலமா இடம் விட்டு டிஸ்ப்ளே எல்லாம் அழகா வச்சிருக்காங்க அதான் பாக்குறதுக்கே அழகா இருக்கு. அங்கேயே ஒரு எலக்ட்ரிக் வெஹிகிள் இருக்கு. அதனால அதிலேயே உட்கார்ந்து ஷாப்பிங் பண்ணியாச்சு. என்ன, கொஞ்சம் அந்த பழக் குவியல்கள் இருக்கிற இடம் எல்லாம் போறப்ப கொஞ்சம் கவனமா கூட வந்த பேத்தி கொஞ்சம் அப்படி இப்படி கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக்கிட்டு தள்ளி விட்டுடுச்சு . நம்மதான் இன்னமும் அங்கே சென்னையில் காம்பவுண்டுக்குள் தானே கார் ஓட்டிப் பழகிக்கிட்டு இருக்கோம் . இங்கேயும் ஒரு பிராக்டிஸ் ரவுண்டு.
அப்புறம் செர்ரிப் பழத் தோட்டங்கள் நிறைய இருக்கு .அதுல போயிட்டு பேரன் பேத்தி கூட அந்த பழங்களை எல்லாம் நாமே பிக் பண்ணி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு வாங்கிட்டு வந்தோம் . அந்த அனுபவம் நல்லா இருந்துச்சு ,அந்தப் பழங்களும் நல்ல டேஸ்ட் . எல்லாமே நமக்கு அங்கே தமிழ்நாட்டிலே இருக்கலாம். இருந்தாலும் இங்கே இருக்குது , நாங்கள் இப்படி எல்லாம் பண்ணனும்னு சொல்லிக்கிறது ஒரு பெருமை இல்லையா. அதுக்குத் தான்.
நார்த் கொரோனாவின் அகன்ற சாலைகளில் டிரைவிங் ஒரு ரவுண்டு . இங்கே எல்லாம் ரைட் ஹேண்ட் டிரைவிங் . பையன்தான் ஓட்டினான். இல்லேன்னாலும் நம்ம ஓட்டிடுவோமாக்கும். கொஞ்சம் பச்சை மிளகாய் வேணும்னாலும்கூட ,பக்கத்துலே அண்ணாச்சி கடை கிடையாது. கார் எடுத்துட்டுதான் போகணும். .
வீட்ல பின்னால பேக்யார்ட் . பேக்யார்ட் முன்னாலேயா இருக்கும்னு கேட்கக் கூடாது. அங்கே புல் வெளி, விளையாட்டு மைதானம். எல்லாம் இருக்கு . பேரன் பேத்தியோட விளையாண்டோம். அதுக்குப் பின்னால் பென்ஸ். அதுக்குப் பின்னால் ஒரே காடுதான் இங்கே எல்லாம் பாம்புகள் இருக்கும் , போக வேண்டாம்னுட்டான் பையன் அதனாலே ரொம்ப ரிஸ்க் எடுக்கல . கொஞ்ச தூரம் போய்ப் பார்த்தா அங்கே கொஞ்சம் ஆமைகள் தெரிந்தன. அதே நமக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு திரும்பி வந்தாச்சு. வீட்டு பேக்யார்டிலே அப்பப்போ சில பறவைகள் எல்லாம் வந்து உட்காருது.பார்க்க நல்லா இருக்கு. அணில் எல்லாமே கொஞ்சம் டிஃபரண்டா பெருசா இருக்கு அந்த பறவைகளோட பெயர்கள் தெரியல .ஆனா சவுண்டு எல்லாம் நல்ல மியூசிக்.
பையனோட பியானோ டீச்சர் வந்து ஒரு சர்ச்சில் ஒரு பர்பாமென்ஸ் அரேஞ்ச் பண்ணி இருந்தாரு அவரோட ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் , பேரனும் தான் பிரமாதமா வாசிச்சான். என்ன பாட்டுன்னு எல்லாம் கேட்கக்கூடாது கேட்க நல்லா இருந்துச்சு. அம்புட்டுதான். எல்லாமே இங்கிலீஷ் பாட்டு.
அப்புறம் இந்தியன் ஸ்டோர் போயி சாமான்கள் வாங்கி வந்தோம். கருவேப்பிலை எல்லாம் ரெண்டு டாலர் கொடுத்து வாங்கினோம். ஒரு ரெண்டு மூணு கொத்துதான் . அதுக்கு ரெண்டு டாலர். நம்ம ரூபாய் எல்லாம் சுஜாதா சொன்ன மாதிரி கணக்கு பார்க்க கூடாது. அது ரெண்டு டாலர்னா ரெண்டு ரூபா அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல அப்புறம் ஏதாவது பச்சை மிளகாய் வாங்கிட்டு வந்தா கூட நம்ம வந்து பக்கத்துல அண்ணாச்சி கடைக்கு போகலாம் போக முடியாது கார் எடுத்து தான் போகணும் எனக்கு கார் எடுக்கணும்னு ஆசைதான் . ஆனா பையன் கிட்டே கேட்கல . பையனும் , மருமகளும் ஒழுங்கா கார் ஓட்டிக்கிட்டு காரை நல்லா மைண்டைன் பண்ணி வச்சுக்கிட்டு இருக்காங்க .இதுல போய் நம்ம தொந்தரவு பண்ண கூடாது.
நம்மளாலே பேரனைக் கொஞ்சுறது அப்புறம் சாப்பிடுறது .கூட்டிட்டு போற இடத்துக்கு போறது . லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வந்த செய்ன் பெல்ட் (seinfeld ) நகைச்சுவைப் புத்தகம் படிக்கிறது . அவ்வளவுதான். எதுத்த வீட்டிலே , ஒரு வயசானவரு இருக்காரு. மெதுவா நடந்து உள்ளே போறது , வாசல்லே வந்து சோபாவிலே உக்கார்றது அவ்வளவுதான். இங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லாம் பிரச்சனைகள் இருக்கு. எமர்ஜென்சின்னு போனால் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருங்கன்னு சொல்லிட்டு தான் பண்ணுவாங்க போல. அந்த மாதிரி நிலைமையில் வயசானவங்களுக்கு இந்த ஊரு ஒத்து வருமான்னு தெரியலே.
வேலை பார்த்துகிட்டு இருக்கிற இளையவர்கட்கு இங்கே சரியா இருக்கும்னு தோணுது நம்ம ஊரு பக்கம் அண்ணாச்சி கடைல போயி கருவேப்பிலை வாங்கலாம் பக்கத்து மெடிக்கல் ஸ்டோர்ல மருந்து ப்ரீஸ்க்ரிப்ஷன் இல்லாம வாங்கலாம். ரொம்ப முடியலயா , பக்கத்துல ஆஸ்பத்திரில டக்குனு போய் படுத்துக்கலாம். எந்த ஊர் ஆனாலும் நம்மூரைப் போல வருமா.
----------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக