திங்கள், 4 மார்ச், 2024

விரட்டும் உருவம் - சிறுகதை

 விரட்டும் உருவம் - சிறுகதை 

-------------------------------


அவள் கனவில் இப்போது அந்தக் குழப்பமான உருவம் அடிக்கடி வர ஆரம்பித்தது. அவனுடன் தொடர்பு ஏற்பட்ட பின்தான் இது நடக்கிறது . பேஸ் புக்கில் அவனுடன் தொடர்பு ஏற்பட்டபோது அவன் கடவுளாகத் தெரிந்தான். அவனின் அன்பான வார்த்தைகளில் மயங்கிப் போனாள் . அநாதை விடுதியில் வளர்ந்து படித்து , இப்போது ஒரு கம்பெனியில் வேலை பார்த்தாலும் தனிமையை அதிகம் நாடி , ஹாஸ்டலில் தனித்துத் தங்கி . யாரிடமும் அதிகத் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் அழகுப் பெண் அவள். அந்த அழகுக்காகவே அவளிடம் நெருங்கிப் பழக நினைத்த யாரிடமும் அவள் நெருங்கவில்லை .


ஆனால், இவன் , இவன் எப்படி ஒரு கடவுளாக அவள் வாழ்வில் வந்தான். அவன் கமெண்டுகளில் தெரிந்த அன்பும் பரிவும் அவளைக் கவர்ந்தது. அவள் கனவுகளில் அவன் கடவுளாக வர ஆரம்பித்தான். அவனைச் சந்திக்க விரும்பி அன்று அவனைப் பீச்சில் சந்தித்த தினம். அழகன்தான் , பேஸ் புக்கில் இருந்தது உண்மைப் படம்தான்.


ஆனால் முதல் பார்வையில் அவன் பார்வை மேய்ந்த இடங்களில் ஏற்பட்ட கூச்சம் அவளைச் சீக்கிரம் அவனை விட்டுப் பிரிந்து ஓட வைத்தது. அன்று தான், கடவுளும் மனிதனும் சேர்ந்த முகம் ஒன்று அவள் கனவில் வர ஆரம்பித்தது . ஆனால் பேஸ் புக்கில் அவன் கமெண்டுகள் தொடர்ந்தன. அதன் ஏக்கம் அவன் மேல் மறுபடி இரக்கம் ஏற்படுத்த அடுத்த சந்திப்பு இன்னொரு இடத்தில் .


அங்கு கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி அவள் உடல் மேல் மேய்ந்த அவன் விரல்கள் . விலகி ஓடிய அவள் கனவில் இப்போது வந்த அந்த முகத்தில், இப்போது கடவுள் , மனிதனோடு மிருகங்களும் சேர்ந்து கொண்டன . பாம்பின் கொத்தல் , புலியின் உறுமல் , பன்றியின் கொம்பு என்று எல்லாம் கலந்த ஒரு உருவம் மூன்று விரல்கள் கொண்ட கால்களோடு அவளைத் துரத்த ஆரம்பித்த கனவுகள்.


அவனை அன் பிரென்ட் செய்து விலகிய பின் அவன் வேறு வேறு பெயர்களில் பேஸ் புக் மூலம் விரட்டிய ரெக்வெஸ்ட் களில் இருந்த ப்ரொபைல் படங்களில், அவன் ,பாம்பாக, பன்றியாக, புலியாக அவள் கண்களுக்குத் தெரிந்தான் , அவன் உண்மை உருவம் புகைப்படத்தில் இருந்தாலும் . அவள் முகவரி , போன் மற்ற விபரங்கள் பேஸ் புக்கில் ரகசியமாக வைத்திருந்ததால் அவள் பேஸ் புக் மட்டுமே அவன் தொடர்புக்கு இருந்ததை உணர்ந்தாள் . அவள் போட்டோவை அவன் சேவ் செய்து வைத்திருப்பான். அதன் மூலம் கூகிள் செர்ச்சில் போட்டு கண்டு பிடிக்க முயற்சி செய்வான் என்று புரிந்து அதையும் எடுத்து கடைசியில் பேஸ் புக்கையும் விட்டு விலகினாள் .


அவன் தொடர்பு அறுந்தது . தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டாள் அவன் இந்நேரம். வேறு ஒரு பெண்ணிடம் கடவுள் வேஷம் போட்டுக் கொண்டிருப்பான் என்று தோன்றியது. அவள் கனவில் வரும் கடவுள், மிருகம். மனிதன் கலந்த உருவம் ஒன்று மட்டும் அவளைக் கனவில் துரத்திக் கொண்டே இருந்தது.


மன நல மருத்துவர் மண வாழ்க்கை மாற்றத்தைக் கொடுக்கலாம், அவள் தனிமைத் தாபத்தைத் தீர்க்கலாம் என்று சொன்னதற்கிணங்கி அவளது அந்த அநாதை ஆசிரமத் தலைவியின் உதவியுடன் பொருத்தமான மணமகன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து மணமுடித்த முதல் இரவு , மணமகன் அறையில் நுழைய அங்கே மாட்டியிருந்த பிக்காஸோவின் அந்தப் படம். மனிதனும், மிருகமும், கடவுளும் கலந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம்

' seated man '


-----------------நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...