செவ்வாய், 19 மார்ச், 2024

உழவின்றி உலகேது -கவிதை

 உழவின்றி உலகேது -கவிதை 

———

உணவின்றி வாழ்வதற்கு

உயிராலே முடியுமென்றால்


உழவின்றி வாழ்வதற்கும்

உலகாலே முடியும்


ஏரும் கலப்பையும்

எருதும் மட்டும் அல்ல


மாறும் அறிவியலால்

மண் வளத்தைக் கூட்டுகின்ற


எல்லாக் கருவிகளும்

எங்கள் உதவிகளே


மண்ணைக் காத்திடுவோம்

மண்ணால் வாழ்ந்திடுவோம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள் 

---------------------------------

வாழ்க்கை ஓடம் 

---------------------

முன்னோடிய ஓடத்தால் பின்னோடிய தென்னைகள் போல்

நிழலாக நெஞ்சுக்குள் இளம்பருவம்

---


காத்திருப்பு

———

கண்களில் பசியோடு காத்திருக்கின்றன குஞ்சுகள் 

தப்பி வருகின்ற தாய்க் குருவிக்காய்


-------------

பெண்கள்

———

தான் உறிஞ்ச எண்ணாமல் தேன் பார்வை சிந்துகின்ற

தட்டான்களைப் பிடிக்கும் பூக்களுக்கு

——


சூரியன் 

———-

நெருப்புப் பழம் என்று தெரியாமல்

நெருங்கிப் பார்க்கிறது பறவை

———

தேநீர்ச் சொர்க்கம்

——-

பனிமரம் பார்த்தபடி பருகும் கோப்பைக்குள்

வந்து சேர்கிறது சொர்க்கம்

——


----------நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


ஞாயிறு, 17 மார்ச், 2024

தொடர் கதை- கவிதை

 தொடர் கதை- கவிதை 

——-

ரொட்டித் துண்டு போட்டாலே

பாதுகாப்பாய் நாய்


நீர் ஊற்றி வளர்த்தாலே

நிழலாக மரம்


தோட்டப் பழம் உண்டாலே

பாட்டிசைக்கும் குயில்


சின்னஞ்சிறு உதவிகட்கே

நன்றியுடன் பதில்


சின்னஞ்சிறு பிறவிகளின்

சேதிகளைப் புரிந்து கொண்டு


தொடர் கதையாய் நம் வாழ்வில்

தொடர்ந்தாலே இன்பம் தான்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


காலாற நடக்கும் கரை - கவிதை

 காலாற நடக்கும் கரை - கவிதை 

———

உழைத்துக் களைத்த உடல்

ஓய்ந்து படுப்பதற்கும்


எழுந்து நடப்பதற்கும்

ஏற்பட்ட கடற்கரை


காதலர் சேர்வதற்கும்

கடும்தீனி அரைப்பதற்கும்


மாறிய கோலத்தால்

மண் வாசம் போனது


கரை தாண்ட முடியாத

அலையெல்லாம் நுரை தள்ளி


கோபத்தில் கத்துவது

காதுகளில் கேட்கலையா


சுற்றுப் புறம் பார்த்து

சுகாதாரம் காத்து


காற்றின் குரல் கேட்டு

கடற்கரையைப் பேணிடுவோம்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வியாழன், 14 மார்ச், 2024

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள் 

----------------------------------

அன்பு

—-

நம் பார்வையே போதும்

அன்பைப் பரிமாறிக் கொள்ள


—- 

மாடுகள்

—-

வைக்கோல் தீவன ஆசை காட்டியே

வண்டி இழுக்க வைப்பான்

——

காதல்

——

கண்ணீர்த் துளிகள் கழுவாது காதலியே

கசியும் இதய ரத்தத்தை

——-

துணை

——-

இன்று எருதுகள் , நாளை விழுதுகள்

என்றும் துணை உண்டு அவனுக்கு

——

சிலந்தி 

--------------------

காதல் வலையில் சிக்கிக் கொண்டாலும்

காலி தான்

-------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


வீழ்ந்தால் விதை - கவிதை

 வீழ்ந்தால் விதை - கவிதை 


——-


முட்டி மோதித்தான்

முளைத்து வர வேண்டும்


கதிருக்கும் நீருக்கும்

காத்துத்தான் கிடக்க வேண்டும்


மிருகங்கள் மிதித்தாலும்

மடங்கித்தான் எழ வேண்டும்


காட்சிக்கு விருந்தாகிப்

பூவாகப் பூத்தபின்பு


சமுதாயம் பயனடையும்

பழமாகப் பழுத்த பின்பு


மரமாக நிமிர்ந்த படி

நிழலாக நீண்ட பின்பு


விழுதுகளை வளர்த்த பின்பு

விதைகளாக விழுந்த பின்பு


வாழ வந்த நோக்கம்

வாரிசுகளால் தொடர்ந்திருக்கும்


வாழ வைத்த ஆக்கம்

வற்றாமல் நிலைத்திருக்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 13 மார்ச், 2024

கட்டிய கரங்கள் - கவிதை

 கட்டிய கரங்கள் - கவிதை 

———

வெடித்த மலையின்

விரிசல் பாறையிலும்


வறண்ட ஆற்றின்

குழிந்த மண்ணிலும்


சிதைந்த கோயிலின்

துருத்தும் கல்லிலும்


இடிந்த வீட்டின்

குட்டிச் சுவற்றிலும்


கட்டிய கரங்கள்

மட்டும் அல்ல


கண்ட கனவுகளும்

சேர்ந்தே தெரியும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 12 மார்ச், 2024

கண்ணான கண்ணே - கவிதை

 கண்ணான கண்ணே - கவிதை 

——————————

என் கண்ணான கண்ணாக

மாறி விட்ட பின்னே


உன்னைப் பார்ப்பது

நான் அல்ல பெண்ணே


பார்ப்பதும் நீயே

ரசிப்பதும் நீயே


உன்னையே நீ பார்த்து

ரசிப்பதைக் கண்டு


முறைக்காதே அப்படி

மறைக்காதே முகத்தை


இன்னும் பார்ப்பதற்கு

ஏராளம் இருக்கிறதாம்


உன்னிடம் இருந்த நீ

என்னிடம் சொல்கிறாய்


—————— நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


உப்புக் காற்று - கவிதை

 உப்புக் காற்று - கவிதை 

—————-

தேடித் திரிவது

தெரியும் காற்றுக்கு


கண்ணீர் உப்பிலும்

வேர்வை உப்பிலும்


கலந்து போனதால்

காற்றும் உப்பே


உன்னை வந்து

சேரும் போது


உப்புக் காற்றின்

தூதை உணர்ந்து


வந்து சேர்ந்தால்

வாழ்வு எனக்கு


இல்லை என்றால்

கடலின் உப்பு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கரை தாண்ட முடியாது - கவிதை

 கரை தாண்ட முடியாது - கவிதை 

———-


முட்டி மோதிப் பார்த்தாலும்

முக்கி முனகிப் பார்த்தாலும்


நுரை தள்ளி முயன்றாலும்

நூறு முறை அழுதாலும்


கரை தாண்ட முடியாது

கடல் அலையின் நாக்கால்


எப்போதோ சில சமயம்

கடற் தாயின் துணையோடு


சுனாமியாய்ச் சுழன்றடித்து

சுற்றுமுற்றும் அழித்து விட்டு


உள்ளே போய்த்தான்

ஒடுங்கிக் கொள்ள வேண்டும்


அவரவரின் விதிப்படி தான்

அவரவர்க்கு நடக்கும்


மதியாலே வெல்வதெல்லாம்

மாகாணி வீசம் தான்


நம் திறனை நன்குணர்ந்து

நல்வழியில் நடப்போம்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சனி, 9 மார்ச், 2024

அழகு ஒரு சுமை -சிறுகதை

 அழகு ஒரு சுமை -சிறுகதை 

--------------------------------

மேனகா 'அழும் பெண் 'என்ற அந்த பிக்காஸோவின் ஓவியத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஓவியத்தில்தான் எத்தனை விதமான காட்சிகள். ஒரு பெண் அழுகிறாள். அவளது முகத்தின் பல பாகங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு , கண்கள், காதுகள், மூக்கு, வாய், பற்கள், என்று க்யூபிஸ ஓவிய முறையில் பெரிதும் சிறிதுமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றின் அழுகையும் தனித்தனியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.


அத்துடன், அங்கே பறவைகள் அழுகின்றன. மலர்கள் அழுகின்றன . இன்னும் பலப்பல நாம் யூகித்து அறிந்து கொள்ளும் முறையில் அழுது கொண்டிருக்கின்றன. அவர் காலத்தில் நிகழ்ந்த ஸ்பானிஷ் யுத்தத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட ஓவியம். தன் வாழ்க்கையும் அப்படித்தானே . சின்னாபின்னாப்படுத்தப்பட்டு தானும் அவ்வாறு அழுது இப்போதுதான் ஓய்ந்திருக்கிறோம் என்ற நினைப்பு வந்து மறுபடியும் கண்களில் கண்ணீர் வழிய நினைத்துப் பார்த்தாள்


தன் அழகு ஒரு ஆணவமாக இருந்த அந்த இளவயதுக் காலம். கிராமத்தில் சிட்டுக்குருவியாகப் பறந்து தன் அழகின் பெருமையில் தானே மயங்கிக் கிடந்து திரிந்த காலம். இதோ இந்த ஓவியத்தில் அழுதுகொண்டு இருக்கும் அந்தச் சிட்டுக்குருவி சிரித்துக் கொண்டு இருந்த அந்தக் காலம். அதைப் பிடித்துப் போகும் வேடனாக வந்தான் , அங்கு சினிமாப் படப்பிடிப்புக்கு வந்த அந்த ஒளிப்பதிவாளன்.


அவன் ஆசை வார்த்தைகளில் மயங்கி சினிமாக் கனவுகளோடு ஓடி வந்த சென்னை மாநகரம். முதல் படம் வெள்ளி விழா. ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனாள் . அந்த ஒளிப் பதிவாளன் வீட்டில் காத்துக் கிடந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள். தொடர்ந்து பல படங்கள் வெற்றி. தன் அழகின் ஆணவம் ஆயுதமாக மாறிய காலம் அது . பிரபல நடிகர்கள் அவளிடம் நெருங்கிய போது அதைப் பெருமையாக நினைத்து ஏற்றுக் கொண்டு அவலங்கள் ஒவ்வொன்றாய் அரங்கேறிய காலம். இந்த ஓவியத்தில் 'அழும் பெண்' சிரித்துக் கொண்டு இருந்த காலம் அது.


அது ஒரு ஊழிச் சிரிப்பாக ஆட்டி அவளையும் மயங்க வைத்தது . பல இயக்குனர்களை, நடிகர்களை, ரசிகர்களை அவள் மயங்க வைத்த காலத்தில் காலமும் ஓடியது அவள் கண்களுக்குத் தெரியவில்லை. இதோ அந்தக் கண்கள் அந்த ஓவியத்தில் அவள் முகத்தில் இருந்து பிடுங்கப்பட்டு , தனியாகப் பெரிதாக அழுது கொண்டு இருக்கின்றன. ஆணவமாக இருந்த அவள் அழகு , ஆயுதமாக மாறி சுமையாக மாற ஆரம்பித்த காலமும் வந்தது.


எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பு. 'இந்த அழகு தானே இப்படிப் பலரை என்னை நெருங்கச் செய்கிறது .அவர்களைத் தவிர்க்க முடியாக் கைதியாக நான் தவிக்கிறேனே ' என்று அவள் உருகியபோது காலம் உதவி செய்தது . கூடிய வயதால் குறைந்த அந்தக் கவர்ச்சி அழகு , பலரை இவளிடம் இருந்து விலகச் செய்ய ஒரு நிம்மதி சுகம்தான் ஏற்பட்டது அவளுக்கு. அழகு என்ற சுமையை இறக்கி வைத்த நிம்மதி.பல மொழிகளைக் கற்றுக் கொண்டாள் அந்த நேரத்தில் .


இத்தனை படங்களில் நடித்த அவளின் நடிப்புத் திறமை கொஞ்சம் கொஞ்சம் மெருகேறி இருப்பதை புரிந்து கொண்ட ஒரு சில இயக்குனர்கள் அழைக்கும் படங்களில் நடித்துக் கொண்டு வந்தாள் . தமிழ் தவிர தெலுகு , ஹிந்தி , ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு சிறிய வேடம் . ஆனால் இழந்தவை எத்தனை . குழந்தைகளோடு பீச்சில், கோயிலில் சுற்றும் தம்பதிகளைப் பார்க்கும்போதெல்லாம் அடி வயிறு ஏங்கும். பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டு , கருப்பையே எடுக்கப் பட்ட நிலையில் அந்த ஏக்கம், என்றும் நிலைத்த ஏக்கம்தான். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் அவள் கொட்டித் தீர்த்த அவள் வாழ்க்கை வரலாறு , அவள் ரசிகர்களுக்கு மட்டுமா அதிர்ச்சி. பல நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் , தயாரிப்பாளர்களுக்கும் தான்.


ஆனால், அதன் விளைவு , இவள் ஒதுக்கப் பட்டாள் . அந்த ஆண்கள் வழக்கம் போல் வேறு பல வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டு . இதோ இவள் மட்டும் வெற்றுப் பெண்ணாக, தனிமையில் , இந்தப் பெரிய மாளிகையில் , சேமித்த பணமும் புகழும் கரைவதைப் புரிந்து கொண்டு அழுது கொண்டு.


அன்றைய கால கட்டக் கொடுமையைப் பிரதிபலிக்க , பிக்காஸோ ஏன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து ' அழும் பெண் ' என்று வரைந்திருக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது. . எத்தனை காலம் ஆனாலும் பெண் என்பவள் அழுது கொண்டுதான் இருக்கிறாளா. இந்தப் பணமும் எத்தனை நாளைக்கு. தமிழ் நாட்டின் பல பிரபல நடிகைகளின் கடைசிக் கால வாழ்வு எப்படி இருந்தது. தன் வாழ்வும் அது போல் தானா .


இறக்கி வைத்த அந்தச் சுமையான அழகு தான் பெண்ணுக்கு அடையாளமா. தன் நடிப்புத் திறமைக்கு மதிப்பில்லையா . அங்கே அந்த ஓவியத்தில் சிதறிக் கிடந்த அந்த அழும் பெண்ணின் வாயின் பற்கள் விரிந்து இவளைப் பார்த்து விகாரமாகச் சிரிப்பது போல் இருந்தது .


அப்போது , கைபேசி ஒலிக்க எடுத்தாள் . பேசியது அமெரிக்காவில் இருந்து ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் சாம் . 'நெட்பிளிஸ் ஓடிடி யில் பிரமாண்டமான முறையில் தான் தயாரிக்க இருக்கும் ஒரு ஆங்கிலத் தொடரில் இவள் நாயகியாக நடிக்க ஒப்புக் கொள்ள முடியுமா . அவளது வெளிப்படையான இன்டெர்வியூவில் அவள் பேசிய முறையும் , முக பாவங்களும், இந்தத் தொடரின் நடுத்தர வயது நாயகிக்குப் பொருத்தமாக இருக்கிறது ' என்ற விளக்கம்.


பிக்காஸோவின் ' அழும் பெண்' ஓவியத்தில் அந்தப் பெண்ணோடு சேர்ந்து அழுது கொண்டிருந்த அந்த சிட்டுக்குருவி , படத்தை விட்டு வெளியே வந்து சிரித்தபடி அவள் கிராமத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பெண் என்னும் பேராற்றல் - கவிதை

 பெண் என்னும் பேராற்றல் - கவிதை 

————

தொப்புள் கொடி வழி

துடிப்பை வளர்த்து


மாதங்கள் பத்து

மனதிலும் சுமந்து


வீறிடும் மகவின்

விம்மல் அடக்கி


மடியினில் சாய்த்து

மார்பினில் தேக்கி


மற்றொரு உயிரை

மன்பதைக் களிக்கும்


பெண்ணினும் ஆற்றல்

பெற்றவர் உளரோ


———நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English


விடியலின் நோக்கம் - கவிதை

 விடியலின் நோக்கம் - கவிதை 

———-

ஒவ்வொரு காலையும்

உதிப்பது உயிர்


இன்றையப் பொழுதில்

இருந்திடும் நேரம்


நாளையப் பொழுதின்

நாற்றுக்கு விதை


விதைப்பதும் காப்பதும்

களையினை எடுப்பதும்


நீரினைப் பாய்ச்சி

நேராய் வளர்ப்பதும்


அறுப்பதும் சுவைப்பதும்

அவரவர் கையில்


விடியலின் நோக்கம்

முடிவது நம்மால்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


நீரும் நெருப்பும் - கவிதை

 நீரும் நெருப்பும் - கவிதை 

———-

நெருப்பை அணைப்பதற்கு

நீரிருந்தால் போதும்


கோபத்தைத் தணிப்பதற்குக்

குளிர்ந்த சொல் போதும்


கடுஞ்சொல்லாய் வீசினால்

காற்றும் சூடாகும்


அணைப்பதுவே நம் வேலை

அன்பாலே அது முடியும்


பொறுமையாய்க் காத்திருந்தால்

பூவாகும் மொட்டு


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 6 மார்ச், 2024

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள்

-----------------

மரம் 

------

எவ்வளவு நேரம் தான் நிற்பது

கால் வலிக்கிறது


கிழவி 

-------------

பஞ்சடைக்கும் கண்களோடு 

பஞ்சு பிரிக்கும் 

தன கையே 

தனக்குதவி 


சுண்டல் விற்பவன் 

----------------

நீங்கள் வாங்கிச் சாப்பிட்டால் 

எங்கள் வயிறு நிறையும் 


குழந்தை 

------------------

வேர்களுக்கு நீரூட்டும்

விழுதுகளின் விரல்கள்


மூதாட்டி மனைவி 

------------------

பின்னால் வந்தவர்

முன்னால் வழி நடத்தும்

காலமும் வரும்


-----------------நாகேந்திர பாரதி 



My Poems/Stories in Tamil and English 


நினைவுகளே நிரந்தரம் - கவிதை

 நினைவுகளே நிரந்தரம் - கவிதை 

———


கட்டிய கனவுகள்

கலைந்து போய் விடும்


கிட்டிய நினைவுகள்

கிளர்ந்து நின்றிடும்


ஒவ்வொரு நினைவிலும்

உண்மையின் வெளிச்சம்


இன்பமும் துன்பமும்

ஏற்றிய வெளிச்சம்


காட்டிய பாதையில்

கால்கள் போகட்டும்


நடப்பது எல்லாம்

நன்மையாய் ஆகட்டும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 4 மார்ச், 2024

விரட்டும் உருவம் - சிறுகதை

 விரட்டும் உருவம் - சிறுகதை 

-------------------------------


அவள் கனவில் இப்போது அந்தக் குழப்பமான உருவம் அடிக்கடி வர ஆரம்பித்தது. அவனுடன் தொடர்பு ஏற்பட்ட பின்தான் இது நடக்கிறது . பேஸ் புக்கில் அவனுடன் தொடர்பு ஏற்பட்டபோது அவன் கடவுளாகத் தெரிந்தான். அவனின் அன்பான வார்த்தைகளில் மயங்கிப் போனாள் . அநாதை விடுதியில் வளர்ந்து படித்து , இப்போது ஒரு கம்பெனியில் வேலை பார்த்தாலும் தனிமையை அதிகம் நாடி , ஹாஸ்டலில் தனித்துத் தங்கி . யாரிடமும் அதிகத் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து வரும் அழகுப் பெண் அவள். அந்த அழகுக்காகவே அவளிடம் நெருங்கிப் பழக நினைத்த யாரிடமும் அவள் நெருங்கவில்லை .


ஆனால், இவன் , இவன் எப்படி ஒரு கடவுளாக அவள் வாழ்வில் வந்தான். அவன் கமெண்டுகளில் தெரிந்த அன்பும் பரிவும் அவளைக் கவர்ந்தது. அவள் கனவுகளில் அவன் கடவுளாக வர ஆரம்பித்தான். அவனைச் சந்திக்க விரும்பி அன்று அவனைப் பீச்சில் சந்தித்த தினம். அழகன்தான் , பேஸ் புக்கில் இருந்தது உண்மைப் படம்தான்.


ஆனால் முதல் பார்வையில் அவன் பார்வை மேய்ந்த இடங்களில் ஏற்பட்ட கூச்சம் அவளைச் சீக்கிரம் அவனை விட்டுப் பிரிந்து ஓட வைத்தது. அன்று தான், கடவுளும் மனிதனும் சேர்ந்த முகம் ஒன்று அவள் கனவில் வர ஆரம்பித்தது . ஆனால் பேஸ் புக்கில் அவன் கமெண்டுகள் தொடர்ந்தன. அதன் ஏக்கம் அவன் மேல் மறுபடி இரக்கம் ஏற்படுத்த அடுத்த சந்திப்பு இன்னொரு இடத்தில் .


அங்கு கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி அவள் உடல் மேல் மேய்ந்த அவன் விரல்கள் . விலகி ஓடிய அவள் கனவில் இப்போது வந்த அந்த முகத்தில், இப்போது கடவுள் , மனிதனோடு மிருகங்களும் சேர்ந்து கொண்டன . பாம்பின் கொத்தல் , புலியின் உறுமல் , பன்றியின் கொம்பு என்று எல்லாம் கலந்த ஒரு உருவம் மூன்று விரல்கள் கொண்ட கால்களோடு அவளைத் துரத்த ஆரம்பித்த கனவுகள்.


அவனை அன் பிரென்ட் செய்து விலகிய பின் அவன் வேறு வேறு பெயர்களில் பேஸ் புக் மூலம் விரட்டிய ரெக்வெஸ்ட் களில் இருந்த ப்ரொபைல் படங்களில், அவன் ,பாம்பாக, பன்றியாக, புலியாக அவள் கண்களுக்குத் தெரிந்தான் , அவன் உண்மை உருவம் புகைப்படத்தில் இருந்தாலும் . அவள் முகவரி , போன் மற்ற விபரங்கள் பேஸ் புக்கில் ரகசியமாக வைத்திருந்ததால் அவள் பேஸ் புக் மட்டுமே அவன் தொடர்புக்கு இருந்ததை உணர்ந்தாள் . அவள் போட்டோவை அவன் சேவ் செய்து வைத்திருப்பான். அதன் மூலம் கூகிள் செர்ச்சில் போட்டு கண்டு பிடிக்க முயற்சி செய்வான் என்று புரிந்து அதையும் எடுத்து கடைசியில் பேஸ் புக்கையும் விட்டு விலகினாள் .


அவன் தொடர்பு அறுந்தது . தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டாள் அவன் இந்நேரம். வேறு ஒரு பெண்ணிடம் கடவுள் வேஷம் போட்டுக் கொண்டிருப்பான் என்று தோன்றியது. அவள் கனவில் வரும் கடவுள், மிருகம். மனிதன் கலந்த உருவம் ஒன்று மட்டும் அவளைக் கனவில் துரத்திக் கொண்டே இருந்தது.


மன நல மருத்துவர் மண வாழ்க்கை மாற்றத்தைக் கொடுக்கலாம், அவள் தனிமைத் தாபத்தைத் தீர்க்கலாம் என்று சொன்னதற்கிணங்கி அவளது அந்த அநாதை ஆசிரமத் தலைவியின் உதவியுடன் பொருத்தமான மணமகன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து மணமுடித்த முதல் இரவு , மணமகன் அறையில் நுழைய அங்கே மாட்டியிருந்த பிக்காஸோவின் அந்தப் படம். மனிதனும், மிருகமும், கடவுளும் கலந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம்

' seated man '


-----------------நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


சிறுகதையின் மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதையின் மதிப்புரை  - கதை புதிது நிகழ்வு

----------------- 


அழகியசிங்கரின் 'கதை புதிது'  நிகழ்வுக்காக  திருமதி சித்ரா ரமேஷ் அவர்களின் ' நிலம் என்னும் நல்லாள் நகும் ' சிறுகதையின் மதிப்புரை 

-----------------------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே 


'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்' என்ற திருக்குறளில்.  'நிலமானது தன்னை உழுது  உபயோகப்படுத்திப்  பலன் அடையாமல் ' என்னால் ஒன்றும் இயலாது ' என்று எண்ணிச்   சோம்பேறியாய் இருப்பவரைப் பார்த்துச்  சிரிக்கும் ' என்பது பொருள். 

இதில் அந்த ' நிலமென்னும் நல்லாள் நகும் ' என்ற கடைசி வரியையே கதையின் தலைப்பாகக் கொடுத்து அதற்குப் பொருத்தமாக நிலத்திற்குப் பதில் ஒரு வீட்டை இங்கே உருவாக்கி அது ஒரு குடும்பத்தில் ஒரு ஆணாதிக்கப் பேர்வழியை ஒதுக்கி விட்டு , மற்றவர்க்கு எப்படி உதவி செய்கிறது  என்பதை ஒரு சிறப்பான குடும்பக் கதையாகக் கொடுத்துள்ளார் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள். 


முதலில் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கொள்வோம்.  விஸ்வநாதன் , சரஸ்வதி தம்பதிகள்.  சரஸ்வதியின் இளம் விதவை அக்காக்கள் லட்சுமி , ராஜி.  லக்ஷ்மிக்கு  இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை.  ராஜி  சில்ட்ரன் பள்ளியில் டீச்சர் . விஸ்வநாதனின் முதல் மனைவிக்கு  இவனது காச நோய் தொற்றி விட, அவளைப் பிறந்த வீட்டுக்குத் துரத்தி விட,    அங்கே தாய் வீட்டில் இருந்த நேரத்தில் பிரசவத்தில் அவள்  இறந்து போக இரண்டாவது மனைவியாக வந்தவள் சரஸ்வதி. சரஸ்வதியின் அப்பா இறந்து போனபின் அந்த வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறான். சரஸ்வதியின் முதல் மூன்று பிரசவங்கள் தவறிப் போக நான்காவதாக வந்து பிறக்கிறாள் லலிதா .  இப்போது அவளது அக்காக்களும் இவனது பேச்சு பொறுக்கமுடியாமல் பிரிந்து போய் விட வருடங்கள் ஓடுகின்றன. 


மூத்த அக்கா மாறுதலில்  பம்பாய் சென்று  வேற்று மதத்தவன் ஒருவனை மறுமணம் செய்து கொண்டு வாழ்க்கை  . இளைய அக்கா அதே பள்ளியில் பிரின்சிபால் ஆகி  அதே வீட்டில்   தனி வாழ்க்கை. மகள் லலிதாவும் தன போக்கில் வளர்ந்து, அப்பாவின் குணம் புரிந்து அவனை மதிக்காமல் வளர்ந்து  ,  வட நாட்டு வாலிபனை மணந்து , பிறகு ஒத்து வராமல் ,  பிரிந்து அயல் நாடு சென்று இன்னொருவனை மணந்து குழந்தையோடு வசிக்கிறாள். 


இப்போது  சரஸ்வதி , விஸ்வநாதன் இருக்கும் அந்த வீடு மூத்த இரண்டு மகள்கள் பெயரில் சரஸ்வதியின் அப்பா எழுதி வைத்து இருந்ததால் ல், அவர்கள் இருவரும் அந்த வீட்டை முதியோர் இல்லமாக  மாற்ற முடிவு செய்து சரஸ்வதியிடம் சொல்ல , அவள் சம்மதிக்கிறாள். சரஸ்வதியும் விஸ்வநாதனும் , அந்தக் கடலோர அழகிய வீட்டை விட்டு நங்கநல்லூரில் வேறு வீடு பார்த்துச் செல்கிறார்கள். விஸ்வநாதன் அந்தக் கடலோர வீட்டில் சரஸ்வதிக்கு உரிமை உண்டு என்று சொல்லி கேஸ் போடச் சொல்லி வற்புறுத்த அவள் மறுத்து விட்டு பக்கத்துக் கோயில் செல்ல அங்கே அன்னை ராஜராஜேஸ்வரி சிரிக்கிறாள் என்று முடிகிறது கதை. 


இந்தக் கதையில்  நான் மிக்வும் ரசித்த விஷயங்கள் .

இரண்டு தலைமுறைக் கதையாக இதை எடுத்துக் கொண்டு, ஒரு ஆணின் சவடால் ஆட்டங்களை முதலில் விவரித்து , கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்பத்தின் பெண்கள் வளர வளர  , காலத்தால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களால் , அவர்கள் எப்படி மாறி அந்த ஆணின் அட்டகாசம் அடங்குகிறது எனபதைப்  பல  நிகழ்வுகள் மூலம் கோர்வையாகக் காட்டிச் செல்கிறார்.  தற்கால சமுதாய மாற்றங்களை நாமும் பார்த்துக் கொண்டு இருப்பதால், இந்தக் கதையின் நிகழ்வுகள் எந்தவிதப் போலித்தனமும் இல்லாமல்   நம்பகத் தன்மையோடு இருப்பது கதையின் தனிச் சிறப்பு. 


அத்துடன் , இதில் வரும் வர்ணனைகளும் உரையாடல்களும் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களைக் கண் முன் கொண்டு வருவது  ஆசிரியர் எழுத்துத்  திறமை. ஒன்றிரெண்டு உதாரணங்கள் . 


' அந்த மணியை எங்கே வச்சுத் தொலைஞ்சே, நைவேத்தியம் தயாராயிடுத்தா , ' எள்ளும் கொள்ளும் வெடிக்கக் குரல் கேட்டதும் சிரித்துக் கொண்டாள் என்று ஆரம்பிக்கிறது கதை . அந்த சிரித்துக் கொண்டாள் என்ற வார்த்தையே நாயகியின்  தற்போதைய மன நிலையைப் பிரதிபலிக்கிறது . ஆணாதிக்கத்தால் பெண்கள் அழுத காலம் முடிந்து விட்டது. எள்ளி நகையாட ஆரம்பித்து விட்டார்கள் இப்போது என்பதை எடுத்திக்காட்டுவது அது .  தொடர்ந்து வரும் அடுத்த வாக்கியம் ' காரணமே இல்லாமல்  எல்லாவற்றுக்கும் பயந்து அடங்கிப் போன காலமெல்லாம். நினைத்தால் , எதோ வேறு ஜென்மத்தில் நடந்தது போல் இருக்கிறது ' . இதைப் படித்தவுடன் வரப்போவது ஒரு பிளாஷ் பேக் , அதில் நாயகி கஷ்டப்பட்டாள்  என்பதைக்  புரிந்து  அது என்ன, அது கதையின் தலைப்போடு எப்படி  பொருந்தப்  போகிறது என்று அறிந்து கொள்ள நாம் தயார்  ஆகி விடுகிறோம். இது ஒரு நல்ல கதை சொல்லும் யுக்தி. தொடர்கிறது கதை நான் முதலில் சொல்லியபடி.  


கதையின் நடுவில் வரும் இந்த வாக்கியத்தில்   , ஒரே வரியில் கால மாற்றத்தால் , அந்தக் குடும்பத்தில் ஏற்படும்  மாற்றங்களை நம்பகத் தன்மையோடு நமக்கு கடத்துகிறார் ஆசிரியர்.  


'தூரம், தீட்டு, பத்து , மடி ,எச்சல் , மொட்டச்சி போன்ற வார்த்தைகள் அவர்கள் சமூகத்தை விட்டு விலகிப் போய்க் கொண்டிருப்பதையும் , கடல் அவர்கள் வீட்டை விட்டு விலகிப் போய்க் கொண்டிருப்பதையும் , அவர்கள் உணராமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது . '


அந்தக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றத்தையும், சமுதாயத்தில் நடக்கும் மாற்றங்களையும், கதையில் பொருத்தமான இடத்தில் புகுத்தி நம்மைக் கதையின் போக்கை புரிந்து கொள்ள வைக்கிறார். 


அது மட்டும்  அல்ல, நாயகனின் அம்மாவின் பேச்சு, நாயகனின் மகளின் பேச்சு ,நாயகனின் பேச்சுக்கள் எல்லாமே  அந்த  உரையாடல்கள் எல்லாம் நாயகனின் குணத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. 

முத்தாய்ப்பாக வீட்டைப் பற்றிய இரண்டு அக்காக்களின்  முடிவு அந்த நிலமென்னும் நல்லாளின் முடிவாக , அந்த ஆணாதிக்க நாயகனுக்கு முடிவாக வருவதையும் . இறுதியில் நாயகி செல்லும் கோயிலில் சிரிப்பது ராஜ ராஜேஸ்வரி என்று முடித்து அதை  'அக்கா ராஜி ' என்று நம்மை நினைக்க வைத்து முடிப்பதும் வாசகர்க்குத் திருப்தியான முடிவாக அமைந்திருப்பது ஆசிரியரின் திறமை. நன்றி . வணக்கம் .


-------- நாகேந்திர  பாரதி  


My Poems/Stories in Tamil and English 


சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது  நிகழ்வு 


அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் வாசித்த , குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ' ஒரு தவறு செய்தால் ' சிறுகதை மதிப்புரை

--------------------------------

நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே .


நமது நண்பர் குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ' குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள இந்த ' ஒரு தவறு செய்தால் ' உள்ளிட்ட அத்தனை சிறுகதைகளையும் வாசித்து , இது வெளிவந்த அந்த மாதத்திலேயே குவிகம் , கலை புதிது குழுமங்களில் ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு திருக்குறள் சொல்லி மதிப்புரை எழுதிய ஞாபகம் வருகிறது. அந்த ஐடியாவுக்கு காரணமான திருக்குறள் சேர்ந்த இந்த சிறுகதையை இன்று எனக்கு அழகியசிங்கர் மதிப்புரை வழங்கக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. தி நகர் மத்சயா அரங்கில் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நினைவும் வருகிறது .


தலைப்பே கதையின் கருத்தை உணர்த்தி விடுகிறது . ஒரு தவறு செய்தால் . எங்க வீட்டுப் பிள்ளை படப் பாடல் வரிகள். அதில் ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று கவிஞர் வாலி எழுதி இருப்பார். இங்கே தவறு செய்தவன் தேவன் இல்லை. மனிதன். அமெரிக்கன். அந்தத் தவறினால் பாதிக்கப் பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கதை.


அமெரிக்கச் சாலை ஒன்றில் வழுக்கிக் கொண்டு செல்லும் காரில் ஆரம்பிக்கும் கதையும் அழகாக வழுக்கிக் கொண்டு ஆற்றொழுக்காக முடிவு வரை விறுவிறுப்பாகச் செல்வதே இந்தக் கதையின் சிறப்பு.

கூகுள் அலுவலகத்தில் உயர் பதவியை ஒப்புக்கொள்ள இருக்கும் நாயகன் . அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்கு படித்துக் கொண்டே அங்கு வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கும் அவன் மனைவி. பள்ளி இறுதி நிலைப் படிப்பில் மூத்த மகள் .ஐந்து வயது 'டார்லிங்' இளைய மகள் . அமெரிக்க வாழ்வு இனிமையாகப் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு திடீர்த் திருப்பம்.


ஆறு மாதங்கள் அவர்களோடு சேர்ந்து வசிக்க வந்திருந்த நாயகனின் அப்பா காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது சந்தேகத்தில் மூன்று அமெரிக்கக் காவல் அதிகாரிகள், அவர் கையை முறுக்கிக் கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்குள்ள லிங்கன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சின்ன ஆப்பெரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்.


இந்தச் செய்தி வரும் நேரம். அவன் கூகிளில் உயர் அதிகாரி பதவியை ஒப்புக் கொள்ளச் சென்று கொண்டு இருந்த நேரம். அதை உதறித் தள்ளிவிட்டு ஆஸ்பத்திரி சென்று அவர் குணம் அடைந்த சில நாட்களில் வீடு திரும்பி , நாயகன் , அவன் மனைவி , இரண்டு மகள்கள் அனைவரும் இந்த நிறவெறி நாட்டை விட்டு இந்தியா திரும்ப வேண்டியது, தங்கள் உழைப்பை அமெரிக்காவிற்கு விற்கப் போவதில்லை' என்று முடிவு செய்து விடுகிறார்கள்.


அவனது அப்பா அடிபட்ட அந்த நிகழ்வு பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சியிலும் செய்தியாக வெளிவந்து , இந்திய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் இதைப் பற்றி விசாரிக்கவும் , அமெரிக்கக் காவல் துறை மன்னிப்பு கேட்டுக் கொள்வது வரை நடந்து கொண்டு இருக்கிறது. சோசியல் மீடியா அமைப்புகள், மனித உரிமை அமைப்பு போன்ற பல அமைப்புகள் இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து நஷ்ட ஈடு கோரிக் கொண்டு இருந்தன.


இவனும் இந்தியா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருந்து ,கூகிள் நிறுவனரிடம் தான் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத நிலையைத் தெரிவித்து விட்டு அவரைச் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறான் நாயகன். அவனுக்கு அமெரிக்காவில் குருவாக இருந்து அவன் வளர்ச்சிக்கு அடி கோலியவர் அவர் . ஒரு நாள் அவரே அவன் வீடு தேடி வந்து ' உன் அப்பாவைச் சந்திக்க வந்திருக்கிறேன் , உரையாடல் உதவிக்கு உன் இளைய மகள் வந்தால் போதும் ' என்று அந்த ' டார்லிங்கை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று போய் விட்டுத் திரும்பி வந்து தனது காரில் ஏறிச் சென்று விடுகிறார்.


இப்பொழுது ஒரு திருப்பம். ஓடி வரும் அவன் இளைய மகள் ' ஐ லவ் ஹிம் சோ மச் ' என்கிறாள் .அறையில் அவன் அப்பாவின் கண்களில் கண்ணீர். அப்பா பேசுகிறார்


'அவர் என்ன செஞ்சார் தெரியுமா? ‘உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதுக்காக அமெரிக்காவில இருக்கிற மக்கள் சார்பில் உங்க கிட்டே மன்னிப்புக் கேட்கிறேன்! அதுவும் உங்க ஊர் வழக்கப்படி’ என்று சொல்லி என் காலடியில் பிரார்த்தனை செய்வது போல மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார். அவர் கண்களில் கண்ணீர் இருந்தது. நான் பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லும் போது தான் எனக்கு முழு ஸ்மரணையும் வந்தது.


அதற்கு அவர்’ “தயவு செய்து என்னைப் பேச விடுங்கள்! உங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக நீங்கள் அனைவரும் அமெரிக்காவை விட்டு இந்தியா செல்ல முடிவு எடுத்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிறகு கூகிளுக்குத் தலைவனாக வரும் தகுதி உங்கள் மகனுக்கு இருக்கிறது. அவன் இந்தப் பிரச்சனையால் அதை உதறிவிட்டு இந்தியா செல்லப் போகிறான். அவன் என்னுடன் பணி புரிந்தபோதே அவனுடைய கொள்கைப் பிடிப்பையும் பாசத்தையும் நான் அறிந்திருக்கிறேன்.


நான் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் நீங்கள் எங்களை மன்னிக்கவேண்டும் ! உங்களுக்குப் பிடித்த உங்கள் மொழியிலேயே சொல்லுகிறேன் என்று ‘எழுதிவைத்ததைத் தப்பின்றி சொன்னார். ‘ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் அனைவரை விட உங்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகப் புரியும். தயவு செய்து எங்களையும் எங்கள் நாட்டையும் மன்னித்துவிடுங்கள்! இப்போது நீங்கள் போனால் நாங்கள் எப்போதும் குற்ற உணர்ச்சியிலேயே இருப்போம்” என்று சொல்லிவிட்டு ‘டார்லிங்கை’ அவர் சொன்னதை விளக்கச் சொன்னார். அதற்குப் பிறகு எனக்கு நன்றி சொல்லிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டார்!


அனைவரது கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அப்பாவே தொடர்ந்தார்

“அதனால் இப்போ என் முடிவைச் சொல்லுகிறேன். திருக்குறளை அவர் வாயில் கேட்டபிறகு நான் பதில் மரியாதை செய்யவில்லை என்றால் நான் மனிதனே அல்ல! நாம் அனைவரும் இந்தியா செல்லப் போவதில்லை. இங்கு தான் இருக்கப் போகிறோம். நீ அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொள். அது தான் நீ அவர்களை மன்னித்ததின் அடையாளம்! நானும் என் பங்கிற்கு அந்தப் போலீஸ்காரர்களை மன்னித்து அவர்கள் மீது நண்பர்கள் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். எவ்வளவு கோர்வையாக பழைய மாதிரி பேசுகிறேன் பார்த்தாயா? திருக்குறள் என்னை முழுதும் குணப் படுத்திவிட்டது.’


அடுத்த நாள் கூகிள் அலுவலகத்தில் …

“வெல்கம் யங்மேன்! நீ கட்டாயம் வருவாய் என்று எனக்குத் தெரியும்”

“அது சரி திருக்குறளை எங்கே பிடித்தீர்கள்?”

“கூகிள் சர்ச்சில் தான்.”

இருவரும் சிரித்தார்கள்!



என்று முடிகிறது கதை.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளின் இந்த இரண்டு வரிகள் இன்றைய கால கட்டத்திலும் எப்படி உதவுகின்றன அந்த அமெரிக்கனுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்பதை உணரும்போது திருக்குறளின் பெருமை மட்டும் அல்ல , மனிதர்களின் மனிதாபிமான உணர்ச்சி, ஒரு தவறு செய்தால், அதை உணர்ந்து விட்டால், நமக்கு மன்னிக்கும் மனநிலை வர வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்ற கதையாகவே தெரிகிறது .


கருத்து மட்டும் அல்ல ,அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த . அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் , அதை இணைப்பதற்கு அவர் ஏற்படுத்திய ஒரு நல்ல குடும்பத்தையும் நம் கண் முன் காட்டும் படி அவர் விவரித்த விதத்தையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.


அதுவும், , ' ஐ லவ் யு ' என்று அனைவரிடமும் சொல்லி அனைவரின் அன்பையும் பெற்றிருந்த அந்த ஐந்து வயது இளைய மகள், தாத்தாவின் நிலை பார்த்து 'ஐ ஹேட் தெம் ' என்று கத்துவதும் . பிறகு அந்தக் கூகிள் நிறுவுனர் வந்து பேசி விட்டுச் சென்றதை பார்த்த பின் ' ஐ லவ் ஹிம் வெரி மச் ' என்று சொல்வதும் . அந்தக் குழந்தையின் மன நிலையை நமக்கு உணர்த்தி நம் அனைவரின் ' டார்லிங் ' காகவே அவளை மாற்றி விட்டது ஆசிரியரின் எழுத்துத் திறமை.


அதே போன்று ' ஹாய் சம்சாரம் , என்ன சமாச்சாரம் ' என்ற உரையாடலில் வெளிப்படும் நாயகன் நாயகியின் பிரியம், அப்பாவுக்கு அடிபட்டது அறிந்து பையன் பேசும் பதற்ற வார்த்தைகள் . இறுதியில் , பையனின் எதிர்காலம் பற்றிய பொறுப்போடு அப்பா பேசும் பேச்சு . என்று அந்த உரையாடல்கள் மூலமே அவர்களின் குண நலன்களை கொண்டு வந்து வெளிப்படுவது ஆசிரியரின் எழுத்துத் திறமை. படித்து ரசியுங்கள்.

நன்றி. வணக்கம்.

-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வேர் வைக்கும் ஆசைகள் - கவிதை

 வேர் வைக்கும் ஆசைகள் - கவிதை 

———

வேர் வைக்கும் ஆசைகளை

வேர்வை ஊற்றி வளர்த்தால் தான்


நீண்டு மரமாகும்

நின்று நிழலாகும்


பூவாகிப் பிஞ்சாகிக்

காயாகிக் கனி ஆகும்


ஆகாயக் கோட்டைகளை

ஆயிரமாய்க் கட்டி விட்டு


சும்மா கிடந்திருந்தால்

சுவர் கூட எழும்பாது


அஸ்திவார எண்ணத்தை

ஆழமாய்ப் போட்டு விட்டு


சிறுகக் கட்டுவதில்

செயலைச் செலுத்தி விட்டால்


பெருக வாழ்ந்திடலாம்

பெருமை சேர்த்திடலாம்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கொண்டாடி மகிழலாம் - கவிதை

 கொண்டாடி மகிழலாம் - கவிதை 


-----------------------------------------------


வாழ்க்கையே பதம்

வாழ்வதில் மிதம்


நன்மையையும் தீமையும்

நடந்திடும் நிதம்


இன்பமும் துன்பமும்

இரண்டான விதம்


உண்மையும் உழைப்பும்

உயர்வான ரதம்


கொண்டாடி மகிழ்வோம்

குறையெல்லாம் வதம்


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கடிகாரம் - கவிதை

 கடிகாரம்  - கவிதை 

———


நின்று போன கடிகாரம்

ஒரு விதத்தில் நல்லது


ரிப்பேர் செய்யலாம்

தூக்கி எறியலாம்


வேகமாகச்  சில நேரம்

தாமதமாய்ச்  சில நேரம்


சரியான நேரத்தைத்

காட்டாமல்  நம்மைக்


கஷ்டத்தில் மாட்ட வைக்கும்

கடிகாரம் என்பது


புரிந்து கொள்ள முடியாத

மனிதர்களின் குறியீடா


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


போதையின் பாதை - கவிதை

 போதையின் பாதை - கவிதை 

———-

சோகத்தை மறப்பதற்குச்

சுகமான இசை உண்டு


தாகத்தைத் தணிப்பதற்குத்

தண்ணீரின் துணை உண்டு


போதையின் பாதை

பொல்லாத பாதை


இழுத்துச் சென்று விடும்

இடுகாட்டை நோக்கி


சாவதற்கா வந்தோம்

சடுதியில் மறைந்து போக


வாழ்வதற்கே வந்தோம்

வாழ்ந்து காட்டுவோம்


குடி கெடுக்கும் குடிமகனாய்

மாறாமல் என்றும்


குடி உயர்த்தும் கோமகனாய்

மாறுவதே நன்று


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


எரிமலைக் குழம்பாய் - கவிதை

 எரிமலைக் குழம்பாய் - கவிதை 

———

உப்புப் பற்றாது என்று

உணவுத் தட்டை

தூக்கியெறியும் கணவனிடமும்


இந்தச் சுடுகாட்டில்

எரிக்காதே உடலை என்று

தடுக்கும் சாதிக் கனவானிடமும்


காசைக் கொடுத்தாச்சு

ஒழுங்கா ஓட்டுப் போடு என்று

மிரட்டும் அரசியல் பணவானிடமும்


எதிர்த்துப் பேச முடியாமல்

உள்ளுக்குள் குமுறும் அந்த

உணர்ச்சிகள் வெடிக்கும் போது


எரிமலைக் குழம்புதான்

புரட்சிப் பூகம்பம் தான்

புதியதோர் உலகம் தான்


——நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...