சனி, 9 மார்ச், 2024

அழகு ஒரு சுமை -சிறுகதை

 அழகு ஒரு சுமை -சிறுகதை 

--------------------------------

மேனகா 'அழும் பெண் 'என்ற அந்த பிக்காஸோவின் ஓவியத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஓவியத்தில்தான் எத்தனை விதமான காட்சிகள். ஒரு பெண் அழுகிறாள். அவளது முகத்தின் பல பாகங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு , கண்கள், காதுகள், மூக்கு, வாய், பற்கள், என்று க்யூபிஸ ஓவிய முறையில் பெரிதும் சிறிதுமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றின் அழுகையும் தனித்தனியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.


அத்துடன், அங்கே பறவைகள் அழுகின்றன. மலர்கள் அழுகின்றன . இன்னும் பலப்பல நாம் யூகித்து அறிந்து கொள்ளும் முறையில் அழுது கொண்டிருக்கின்றன. அவர் காலத்தில் நிகழ்ந்த ஸ்பானிஷ் யுத்தத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட ஓவியம். தன் வாழ்க்கையும் அப்படித்தானே . சின்னாபின்னாப்படுத்தப்பட்டு தானும் அவ்வாறு அழுது இப்போதுதான் ஓய்ந்திருக்கிறோம் என்ற நினைப்பு வந்து மறுபடியும் கண்களில் கண்ணீர் வழிய நினைத்துப் பார்த்தாள்


தன் அழகு ஒரு ஆணவமாக இருந்த அந்த இளவயதுக் காலம். கிராமத்தில் சிட்டுக்குருவியாகப் பறந்து தன் அழகின் பெருமையில் தானே மயங்கிக் கிடந்து திரிந்த காலம். இதோ இந்த ஓவியத்தில் அழுதுகொண்டு இருக்கும் அந்தச் சிட்டுக்குருவி சிரித்துக் கொண்டு இருந்த அந்தக் காலம். அதைப் பிடித்துப் போகும் வேடனாக வந்தான் , அங்கு சினிமாப் படப்பிடிப்புக்கு வந்த அந்த ஒளிப்பதிவாளன்.


அவன் ஆசை வார்த்தைகளில் மயங்கி சினிமாக் கனவுகளோடு ஓடி வந்த சென்னை மாநகரம். முதல் படம் வெள்ளி விழா. ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனாள் . அந்த ஒளிப் பதிவாளன் வீட்டில் காத்துக் கிடந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள். தொடர்ந்து பல படங்கள் வெற்றி. தன் அழகின் ஆணவம் ஆயுதமாக மாறிய காலம் அது . பிரபல நடிகர்கள் அவளிடம் நெருங்கிய போது அதைப் பெருமையாக நினைத்து ஏற்றுக் கொண்டு அவலங்கள் ஒவ்வொன்றாய் அரங்கேறிய காலம். இந்த ஓவியத்தில் 'அழும் பெண்' சிரித்துக் கொண்டு இருந்த காலம் அது.


அது ஒரு ஊழிச் சிரிப்பாக ஆட்டி அவளையும் மயங்க வைத்தது . பல இயக்குனர்களை, நடிகர்களை, ரசிகர்களை அவள் மயங்க வைத்த காலத்தில் காலமும் ஓடியது அவள் கண்களுக்குத் தெரியவில்லை. இதோ அந்தக் கண்கள் அந்த ஓவியத்தில் அவள் முகத்தில் இருந்து பிடுங்கப்பட்டு , தனியாகப் பெரிதாக அழுது கொண்டு இருக்கின்றன. ஆணவமாக இருந்த அவள் அழகு , ஆயுதமாக மாறி சுமையாக மாற ஆரம்பித்த காலமும் வந்தது.


எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பு. 'இந்த அழகு தானே இப்படிப் பலரை என்னை நெருங்கச் செய்கிறது .அவர்களைத் தவிர்க்க முடியாக் கைதியாக நான் தவிக்கிறேனே ' என்று அவள் உருகியபோது காலம் உதவி செய்தது . கூடிய வயதால் குறைந்த அந்தக் கவர்ச்சி அழகு , பலரை இவளிடம் இருந்து விலகச் செய்ய ஒரு நிம்மதி சுகம்தான் ஏற்பட்டது அவளுக்கு. அழகு என்ற சுமையை இறக்கி வைத்த நிம்மதி.பல மொழிகளைக் கற்றுக் கொண்டாள் அந்த நேரத்தில் .


இத்தனை படங்களில் நடித்த அவளின் நடிப்புத் திறமை கொஞ்சம் கொஞ்சம் மெருகேறி இருப்பதை புரிந்து கொண்ட ஒரு சில இயக்குனர்கள் அழைக்கும் படங்களில் நடித்துக் கொண்டு வந்தாள் . தமிழ் தவிர தெலுகு , ஹிந்தி , ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு சிறிய வேடம் . ஆனால் இழந்தவை எத்தனை . குழந்தைகளோடு பீச்சில், கோயிலில் சுற்றும் தம்பதிகளைப் பார்க்கும்போதெல்லாம் அடி வயிறு ஏங்கும். பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டு , கருப்பையே எடுக்கப் பட்ட நிலையில் அந்த ஏக்கம், என்றும் நிலைத்த ஏக்கம்தான். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் அவள் கொட்டித் தீர்த்த அவள் வாழ்க்கை வரலாறு , அவள் ரசிகர்களுக்கு மட்டுமா அதிர்ச்சி. பல நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் , தயாரிப்பாளர்களுக்கும் தான்.


ஆனால், அதன் விளைவு , இவள் ஒதுக்கப் பட்டாள் . அந்த ஆண்கள் வழக்கம் போல் வேறு பல வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டு . இதோ இவள் மட்டும் வெற்றுப் பெண்ணாக, தனிமையில் , இந்தப் பெரிய மாளிகையில் , சேமித்த பணமும் புகழும் கரைவதைப் புரிந்து கொண்டு அழுது கொண்டு.


அன்றைய கால கட்டக் கொடுமையைப் பிரதிபலிக்க , பிக்காஸோ ஏன் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து ' அழும் பெண் ' என்று வரைந்திருக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது. . எத்தனை காலம் ஆனாலும் பெண் என்பவள் அழுது கொண்டுதான் இருக்கிறாளா. இந்தப் பணமும் எத்தனை நாளைக்கு. தமிழ் நாட்டின் பல பிரபல நடிகைகளின் கடைசிக் கால வாழ்வு எப்படி இருந்தது. தன் வாழ்வும் அது போல் தானா .


இறக்கி வைத்த அந்தச் சுமையான அழகு தான் பெண்ணுக்கு அடையாளமா. தன் நடிப்புத் திறமைக்கு மதிப்பில்லையா . அங்கே அந்த ஓவியத்தில் சிதறிக் கிடந்த அந்த அழும் பெண்ணின் வாயின் பற்கள் விரிந்து இவளைப் பார்த்து விகாரமாகச் சிரிப்பது போல் இருந்தது .


அப்போது , கைபேசி ஒலிக்க எடுத்தாள் . பேசியது அமெரிக்காவில் இருந்து ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் சாம் . 'நெட்பிளிஸ் ஓடிடி யில் பிரமாண்டமான முறையில் தான் தயாரிக்க இருக்கும் ஒரு ஆங்கிலத் தொடரில் இவள் நாயகியாக நடிக்க ஒப்புக் கொள்ள முடியுமா . அவளது வெளிப்படையான இன்டெர்வியூவில் அவள் பேசிய முறையும் , முக பாவங்களும், இந்தத் தொடரின் நடுத்தர வயது நாயகிக்குப் பொருத்தமாக இருக்கிறது ' என்ற விளக்கம்.


பிக்காஸோவின் ' அழும் பெண்' ஓவியத்தில் அந்தப் பெண்ணோடு சேர்ந்து அழுது கொண்டிருந்த அந்த சிட்டுக்குருவி , படத்தை விட்டு வெளியே வந்து சிரித்தபடி அவள் கிராமத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது


------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...