திங்கள், 4 மார்ச், 2024

சிறுகதையின் மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதையின் மதிப்புரை  - கதை புதிது நிகழ்வு

----------------- 


அழகியசிங்கரின் 'கதை புதிது'  நிகழ்வுக்காக  திருமதி சித்ரா ரமேஷ் அவர்களின் ' நிலம் என்னும் நல்லாள் நகும் ' சிறுகதையின் மதிப்புரை 

-----------------------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே 


'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்' என்ற திருக்குறளில்.  'நிலமானது தன்னை உழுது  உபயோகப்படுத்திப்  பலன் அடையாமல் ' என்னால் ஒன்றும் இயலாது ' என்று எண்ணிச்   சோம்பேறியாய் இருப்பவரைப் பார்த்துச்  சிரிக்கும் ' என்பது பொருள். 

இதில் அந்த ' நிலமென்னும் நல்லாள் நகும் ' என்ற கடைசி வரியையே கதையின் தலைப்பாகக் கொடுத்து அதற்குப் பொருத்தமாக நிலத்திற்குப் பதில் ஒரு வீட்டை இங்கே உருவாக்கி அது ஒரு குடும்பத்தில் ஒரு ஆணாதிக்கப் பேர்வழியை ஒதுக்கி விட்டு , மற்றவர்க்கு எப்படி உதவி செய்கிறது  என்பதை ஒரு சிறப்பான குடும்பக் கதையாகக் கொடுத்துள்ளார் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள். 


முதலில் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கொள்வோம்.  விஸ்வநாதன் , சரஸ்வதி தம்பதிகள்.  சரஸ்வதியின் இளம் விதவை அக்காக்கள் லட்சுமி , ராஜி.  லக்ஷ்மிக்கு  இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை.  ராஜி  சில்ட்ரன் பள்ளியில் டீச்சர் . விஸ்வநாதனின் முதல் மனைவிக்கு  இவனது காச நோய் தொற்றி விட, அவளைப் பிறந்த வீட்டுக்குத் துரத்தி விட,    அங்கே தாய் வீட்டில் இருந்த நேரத்தில் பிரசவத்தில் அவள்  இறந்து போக இரண்டாவது மனைவியாக வந்தவள் சரஸ்வதி. சரஸ்வதியின் அப்பா இறந்து போனபின் அந்த வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறான். சரஸ்வதியின் முதல் மூன்று பிரசவங்கள் தவறிப் போக நான்காவதாக வந்து பிறக்கிறாள் லலிதா .  இப்போது அவளது அக்காக்களும் இவனது பேச்சு பொறுக்கமுடியாமல் பிரிந்து போய் விட வருடங்கள் ஓடுகின்றன. 


மூத்த அக்கா மாறுதலில்  பம்பாய் சென்று  வேற்று மதத்தவன் ஒருவனை மறுமணம் செய்து கொண்டு வாழ்க்கை  . இளைய அக்கா அதே பள்ளியில் பிரின்சிபால் ஆகி  அதே வீட்டில்   தனி வாழ்க்கை. மகள் லலிதாவும் தன போக்கில் வளர்ந்து, அப்பாவின் குணம் புரிந்து அவனை மதிக்காமல் வளர்ந்து  ,  வட நாட்டு வாலிபனை மணந்து , பிறகு ஒத்து வராமல் ,  பிரிந்து அயல் நாடு சென்று இன்னொருவனை மணந்து குழந்தையோடு வசிக்கிறாள். 


இப்போது  சரஸ்வதி , விஸ்வநாதன் இருக்கும் அந்த வீடு மூத்த இரண்டு மகள்கள் பெயரில் சரஸ்வதியின் அப்பா எழுதி வைத்து இருந்ததால் ல், அவர்கள் இருவரும் அந்த வீட்டை முதியோர் இல்லமாக  மாற்ற முடிவு செய்து சரஸ்வதியிடம் சொல்ல , அவள் சம்மதிக்கிறாள். சரஸ்வதியும் விஸ்வநாதனும் , அந்தக் கடலோர அழகிய வீட்டை விட்டு நங்கநல்லூரில் வேறு வீடு பார்த்துச் செல்கிறார்கள். விஸ்வநாதன் அந்தக் கடலோர வீட்டில் சரஸ்வதிக்கு உரிமை உண்டு என்று சொல்லி கேஸ் போடச் சொல்லி வற்புறுத்த அவள் மறுத்து விட்டு பக்கத்துக் கோயில் செல்ல அங்கே அன்னை ராஜராஜேஸ்வரி சிரிக்கிறாள் என்று முடிகிறது கதை. 


இந்தக் கதையில்  நான் மிக்வும் ரசித்த விஷயங்கள் .

இரண்டு தலைமுறைக் கதையாக இதை எடுத்துக் கொண்டு, ஒரு ஆணின் சவடால் ஆட்டங்களை முதலில் விவரித்து , கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்பத்தின் பெண்கள் வளர வளர  , காலத்தால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களால் , அவர்கள் எப்படி மாறி அந்த ஆணின் அட்டகாசம் அடங்குகிறது எனபதைப்  பல  நிகழ்வுகள் மூலம் கோர்வையாகக் காட்டிச் செல்கிறார்.  தற்கால சமுதாய மாற்றங்களை நாமும் பார்த்துக் கொண்டு இருப்பதால், இந்தக் கதையின் நிகழ்வுகள் எந்தவிதப் போலித்தனமும் இல்லாமல்   நம்பகத் தன்மையோடு இருப்பது கதையின் தனிச் சிறப்பு. 


அத்துடன் , இதில் வரும் வர்ணனைகளும் உரையாடல்களும் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களைக் கண் முன் கொண்டு வருவது  ஆசிரியர் எழுத்துத்  திறமை. ஒன்றிரெண்டு உதாரணங்கள் . 


' அந்த மணியை எங்கே வச்சுத் தொலைஞ்சே, நைவேத்தியம் தயாராயிடுத்தா , ' எள்ளும் கொள்ளும் வெடிக்கக் குரல் கேட்டதும் சிரித்துக் கொண்டாள் என்று ஆரம்பிக்கிறது கதை . அந்த சிரித்துக் கொண்டாள் என்ற வார்த்தையே நாயகியின்  தற்போதைய மன நிலையைப் பிரதிபலிக்கிறது . ஆணாதிக்கத்தால் பெண்கள் அழுத காலம் முடிந்து விட்டது. எள்ளி நகையாட ஆரம்பித்து விட்டார்கள் இப்போது என்பதை எடுத்திக்காட்டுவது அது .  தொடர்ந்து வரும் அடுத்த வாக்கியம் ' காரணமே இல்லாமல்  எல்லாவற்றுக்கும் பயந்து அடங்கிப் போன காலமெல்லாம். நினைத்தால் , எதோ வேறு ஜென்மத்தில் நடந்தது போல் இருக்கிறது ' . இதைப் படித்தவுடன் வரப்போவது ஒரு பிளாஷ் பேக் , அதில் நாயகி கஷ்டப்பட்டாள்  என்பதைக்  புரிந்து  அது என்ன, அது கதையின் தலைப்போடு எப்படி  பொருந்தப்  போகிறது என்று அறிந்து கொள்ள நாம் தயார்  ஆகி விடுகிறோம். இது ஒரு நல்ல கதை சொல்லும் யுக்தி. தொடர்கிறது கதை நான் முதலில் சொல்லியபடி.  


கதையின் நடுவில் வரும் இந்த வாக்கியத்தில்   , ஒரே வரியில் கால மாற்றத்தால் , அந்தக் குடும்பத்தில் ஏற்படும்  மாற்றங்களை நம்பகத் தன்மையோடு நமக்கு கடத்துகிறார் ஆசிரியர்.  


'தூரம், தீட்டு, பத்து , மடி ,எச்சல் , மொட்டச்சி போன்ற வார்த்தைகள் அவர்கள் சமூகத்தை விட்டு விலகிப் போய்க் கொண்டிருப்பதையும் , கடல் அவர்கள் வீட்டை விட்டு விலகிப் போய்க் கொண்டிருப்பதையும் , அவர்கள் உணராமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது . '


அந்தக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றத்தையும், சமுதாயத்தில் நடக்கும் மாற்றங்களையும், கதையில் பொருத்தமான இடத்தில் புகுத்தி நம்மைக் கதையின் போக்கை புரிந்து கொள்ள வைக்கிறார். 


அது மட்டும்  அல்ல, நாயகனின் அம்மாவின் பேச்சு, நாயகனின் மகளின் பேச்சு ,நாயகனின் பேச்சுக்கள் எல்லாமே  அந்த  உரையாடல்கள் எல்லாம் நாயகனின் குணத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. 

முத்தாய்ப்பாக வீட்டைப் பற்றிய இரண்டு அக்காக்களின்  முடிவு அந்த நிலமென்னும் நல்லாளின் முடிவாக , அந்த ஆணாதிக்க நாயகனுக்கு முடிவாக வருவதையும் . இறுதியில் நாயகி செல்லும் கோயிலில் சிரிப்பது ராஜ ராஜேஸ்வரி என்று முடித்து அதை  'அக்கா ராஜி ' என்று நம்மை நினைக்க வைத்து முடிப்பதும் வாசகர்க்குத் திருப்தியான முடிவாக அமைந்திருப்பது ஆசிரியரின் திறமை. நன்றி . வணக்கம் .


-------- நாகேந்திர  பாரதி  


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...