வியாழன், 29 பிப்ரவரி, 2024

தேர்வுத் திருவிழா - கவிதை

 தேர்வுத் திருவிழா - கவிதை 

——

ஒன்றா இரண்டா

எத்தனை தேர்வுகள்


எதைப் படிப்பது

எப்படிப் படிப்பது


எந்த வேலையில்

எங்கே சேர்வது


எவரை விரும்புவது

எவரை மணமுடிப்பது


எங்கே கிடப்பது

எங்கே முடிவது


பிறப்பில் தொடங்கி

இறப்பு வரைக்கும்


தேர்வுத் திருவிழா தான்

தேறினால் பெருவிழா தான்


—-நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


அவள் அப்படித்தான் - கவிதை

 அவள் அப்படித்தான் -   கவிதை 

———

கோபத்திலும் வேகத்திலும்

கொஞ்சம் கூடுதல் தான்


தாபத்திலும் தவிப்பிலும்

கொஞ்சம் கூடுதல் தான்


அன்பிலும் அறிவிலும்

கொஞ்சம் அதிகம் தான்


அழகிலும் ஆற்றலிலும்

கொஞ்சம் அதிகம் தான்


அழுவதிலும் சிரிப்பதிலும்

அவள் அப்படித் தான்


அணைப்பதிலும் பிரிவதிலும்

அவள் அப்படித் தான்


———-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

நாளை நமதே - கவிதை

 நாளை நமதே - கவிதை 

———

நாளையப் பொழுதை

நல்லதாய் ஆக்க


இன்றையப் பொழுதின்

முயற்சியும் வேண்டும்


நேற்றையப் பொழுதின்

நிழலும் வேண்டும்


நடந்து முடிந்ததில்

நற்கல்வி உண்டு


நடந்து வருவதில்

நம்பிக்கை உண்டு


நடக்கப் போவதில்

நல்லதே உண்டு


——-நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English


திங்கள், 26 பிப்ரவரி, 2024

எல்லாம் கொஞ்ச காலம்தான் - கவிதை

 எல்லாம் கொஞ்ச காலம்தான்  - கவிதை 

--------------------

கல்லுச் சிலேட்டும் 

சாக்பீஸ் துண்டுமாய் 

எழுதிப் பழகிய 

ஆரம்பப் பள்ளியின்  

ஆட்டமும் பாட்டும் 

எல்லாம் 

கொஞ்சகாலம்தான் 


வேட்டியும்  சட்டையும் 

போட்டுப் பழகி 

விசுக்கென்று நடந்த 

உயர்நிலைப் பள்ளியின் 

சன்னலும் கதவும் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான்  


ஹார்மோன் சதியால் 

கண்கள் தடுமாற 

பார்த்து மயங்கித் 

தவித்துக் கிடந்த 

காதல் பருவமும் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான் 


கல்லூரி வாழ்வும் 

ஹாஸ்டெல் வாழ்வும் 

சினிமா படிப்பென்றும்   

சிதறிக் கிடந்த 

கண்ணாடிச் சில்லுகளின் 

கவர்ச்சி வெளிச்சமும் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான் 


வெயிலில் அலைந்து 

வேர்வையில் குளித்து 

படிகள் ஏறிய 

வேலைத்  தேடலில் 

திணறிப் போன 

வேதனை நாட்களும் 

எல்லாம்

 கொஞ்ச காலம்தான் 


இட்லியோ சாதமோ 

சாப்பிட்டு முடித்து  

பஸ்ஸோ ரெயிலோ  

ஓடிப் போய் ஏறி 

சரியோ தப்போ 

வேலையை முடித்து 

வசவோ வாழ்த்தோ 

வாங்கித் தேறி 

வாழ்ந்த பொழுதுகள் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான் 


பெண்ணோ பிள்ளையோ 

பெற்று வளர்த்து

மணமும் முடித்து 

வாழ்வை அமைத்து 

பேரன் பேத்தி 

பார்த்து மகிழ்ந்து 

ஓய்வுப் பருவம் 

சேரும் நேரம் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான் 


விட்ட கனவெல்லாம்

விரட்டிப் பிடிக்க 

கதையும் கவிதையும் 

பாட்டும் பேச்சும் 

செய்து பழகி 

நாட்கள் போக்கி  

நகரும் மகிழ்வும் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான்


இந்த மேடைகளும்  

இந்தப் படைப்புகளும் 

இந்த நண்பர்களும் 

இந்தக் களிப்பும் 

எல்லாம் 

கொஞ்ச காலம்தான் 


அனைத்தும் அடங்கி 

ஆவியில் ஒடுங்கி 

அமைதியில் நுழைந்து 

ஆனந்தம் அடைந்து 

ஆண்டவன் திருவடி 

அடையும் நேரம் 

எல்லாம் 

முடிந்த காலம்தான் . 


--------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


சனி, 24 பிப்ரவரி, 2024

முதல் வாசம் - கவிதை

 முதல் வாசம் - கவிதை 

—————

தொப்புள் வழியே

முதல் வாசம்


தாய்ப்ப்பால் தந்தது

அடுத்த வாசம்


இன்னும் வந்தது

இயற்கையின் வாசம்


நாசியின் வாசம்

உள்ளே இறங்கி


மனதை எழுப்பிட

மற்ற வாசங்கள்


அன்பின் வாசம்

அறிவின் வாசம்


தமிழின் வாசம்

தரணியின் வாசம்


காதல் வாசம்

சோகம் வாசம்


குடும்பம் வாசம்

குழந்தை வாசம்


இன்பம் துன்பம்

இணைந்த வாசம்


இறுதியில் சேரும்

இறைவன் வாசம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

அன்னை மொழி - கவிதை

  அன்னை மொழி - கவிதை 

———

தாய்ப் பாலில் கலந்த மொழி

தாலாட்டில் வளர்ந்த மொழி


எத்தனையோ நாடுகளில்

எத்தனையோ மனிதரிடம்


எத்தனையோ மொழிகளிலே

பேசிச் சிரித்தாலும்


எங்கிருந்தோ வருகின்ற

தாய் மொழியின் ஓசை மட்டும்


எப்போதும் குபுக்கென்று

கண்ணீரை வரவழைக்கும்


காரணத்தில் கலந்திருக்கும்

அழிவில்லா அன்னை மொழி


———நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English   


வியாழன், 22 பிப்ரவரி, 2024

வீழ்த்தி விளையாடும் காதல் - கவிதை

 வீழ்த்தி விளையாடும் காதல் - கவிதை 

————

விளையாட்டா வினையா

வீழ்தலா எழுதலா


காதலுக்குத் தெரியாது

கண்ணில்லை அதற்கு


எண்ணமும் செயலும்

இருப்பது நமக்குள்ளே


வளர்ந்த முறையும்

வாழும் முறையும்


வளர்க்கும் ஹார்மோன்

வசத்தில் விழுந்து


கண்ணீரில் குளிக்கையில்

காதல் என்ன செய்யும்


——-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English


விண்ணோடும் முகிலோடும் - கவிதை

 விண்ணோடும் முகிலோடும் - கவிதை 

-------------------------------

சளைக்காத உழைப்புக்குச்

சரியான வேலை வேண்டும்


கலையாத காதலோடு

கன்னியவள் துணை வேண்டும்


கலையெல்லாம் ரசிக்கின்ற

கருத்தான மூளை வேண்டும்


அலைபாயும் மனதின்

அமைதிக்கு வழி வேண்டும்


இவையெல்லாம் சரியாக

இருக்கின்ற நாள் வந்தால்


விளையாட ஆசைதான்

விண்ணோடும் முகிலோடும்

--------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதிய வானம் - கவிதை

 புதிய வானம் - கவிதை 

———

ஒவ்வொரு நாளும்

புதிய வானம்


ஒவ்வொரு நாளும்

புதிய வாழ்க்கை


நேற்றைய எல்லாம்

நிகழ்ந்து முடிந்தவை


நாளைய நடப்புகள்

நம்பிக்கை தருபவை


இன்றைய இக்கணம்

இருப்பது நம் கையில்


ஏற்றமும் தாழ்வும்

எண்ணத்தில் செயலில்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 19 பிப்ரவரி, 2024

நடமாடும் நட்சத்திரம் - கவிதை

 நடமாடும் நட்சத்திரம் - கவிதை 

———-

ஜொலிக்கின்ற காரணத்தால்

சூடிவிட்டார் இப்பெயரை


ஆகாய நட்சத்திரத்தை

பூமிக்கு இறக்கி வந்து


சினிமா நட்சத்திரமாம்

அரசியல் நட்சத்திரமாம்


பகலில் ஜொலிக்கின்றார்

இரவில் களிக்கின்றார்


சமுதாய நன்மைக்காய்ச்

சாகும் வரை போராடி


மறைந்து போனாலும்

மனதிலே நடமாடும்


அந்தத் தியாகிகள் தான்

அசலான நட்சத்திரங்கள்


———நாகேந்திர பாரதி

 

My Poems/Stories in Tamil and English 


மகிழும் மனம் - கவிதை

 மகிழும் மனம் - கவிதை 

————-

அலைபாயும் மனதின்

ஆனந்தம் பலவகை


புகழில் இன்பம்

புலனில் இன்பம்


பொருளில் இன்பம்

அருளில் இன்பம்


உணவில் இன்பம்

உடையில் இன்பம்


வேலை இன்பம்

வீடு இன்பம்


உறவு இன்பம்

நட்பு இன்பம்


மனைவி இன்பம்

மக்கள் இன்பம்


பயணம் இன்பம்

படுக்கை இன்பம்


இயற்கை இன்பம்

இறைவன் இன்பம்


எத்தனை கோடி

இன்பம் இன்பம்


அத்தனை இன்பமும்

ஆராய்ந்து பார்த்தால்


மற்றவர் மனதை

மகிழச் செய்து


மகிழும் மனமே

மாபெரும் இன்பம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வில்லோடு நிலவு - கவிதை

 வில்லோடு நிலவு - கவிதை 

————

எப்போதும் ஒரு வில்

இருக்கிறது உன்னிடம்


எய்யும் அம்பில் தான்

ஏராள வித்தியாசம்


காதலில் வெற்றி என்றால்

மலராலே அம்பு


கண்ணீரில் மூழ்கி விட்டால்

நெருப்பாலே அம்பு


இரவின் இருட்டுக்குள்

குறி பார்த்து விடுகிறாய்


வில்லின் நாணினை

முறுக்கேற்ற நினைப்போரும்


வில்லின் நாணினை

முறித்து விட நினைப்போரும்


கலந்து கிடக்கின்ற

காதல் இரவிலே


பொழுது விடிகிறது

போதுமென்று போகிறாய்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

இணைந்த கைகள் - கவிதை

 இணைந்த கைகள் - கவிதை 

———

மதம் பிடித்த

மதம் ஒரு பக்கம்


தீயெனச் சுட்ட

சாதீ ஒரு பக்கம்


இணைய விடாமல்

இழுத்து எறிய


எங்கிருந்து வந்தது

இந்த வேகம்


எதிர்ப்பை மிதித்து

ஏளனம் உதைத்து


இணைந்த கைகளில்

காதலின் வேகம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கண்ணாடித் துண்டாக - கவிதை

 கண்ணாடித் துண்டாக - கவிதை 

———-

இரைதேடிப் பறந்து விட்டுத்

திரும்பி வந்து


குஞ்சுகளைக் காணாமல்

திகைக்கும் வாயில்


காத்திருந்து பூத்துவிட்டுக்

கழலும் பூவைக்


கண்ணீரால் விடை கொடுக்கும்

செடியின் மூச்சில்


நேற்றிருந்த நாய்த்தோழன்

தெருவில் இன்று


காணாமல் போனதற்காய்த்

திகைக்கும் கண்ணில்


குருவியோ செடியோ

நாயோ இல்லை


நம்பிக்கை உடைந்து போய்ச்

சிதறிப் போன


கண்ணாடித் துண்டுகளைக்

காண்கின்றேன் நான்


———- நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


அத்தனையும் உனக்காக - கவிதை

 அத்தனையும் உனக்காக - கவிதை 

————

சுத்தமான சுவாசம்

சுற்றியே இருந்தாலும்


நிகோடின் சுவாசத்தின்

நெடியைத் தேடுகின்றோம்


சுத்தமான தண்ணீரும்

சும்மாவே கிடைத்தாலும்


ஆல்கஹால் தண்ணீரில்

அவதிப் படுகின்றோம்


குணவதியே மனைவியாகிக்

குடும்பம் நடத்தினாலும்


மற்றொருத்தி அழகிலே

மானம் இழக்கின்றோம்


அத்தனையும் நமக்காக

அருகிலே இருந்தாலும்


கானல் நீருக்காய்க்

காத வழி நடக்கின்றோம்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வழித்துணை- கவிதை

 வழித்துணை- கவிதை 

——————

பக்கத்து மரத்தினிடம்

பாதி நீர் கேட்பதில்லை

உள்ளிருக்கும் வேர்களே

உறிஞ்சுதற்குப் போதும்


சேர்ந்திருக்கும் பறவையிடம்

சிறகுகளைக் கேட்பதில்லை

ஒட்டியுள்ள சிறகுகளே

உயரப் பறக்க வைக்கும்


மரத்திற்குள் பறவைக்குள்

மறைந்துள்ள நம்பிக்கை

மனிதர்க்கு மட்டுமேனோ

மறந்து போய் மறைந்தது


உதவிக்குத் துணை கேட்டு

ஓரிடமும் அலையாமல்

தன்கையே தனக்குதவும்

தைரியமே இருந்திட்டால்


வழித்துணையே தேவையில்லை

வாழ்க்கையே நம்பிக்கை


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


சனி, 10 பிப்ரவரி, 2024

சிதறிய சில்லுகள்- சிறுகதை

சிதறிய சில்லுகள் - சிறுகதை 

------------------------------


'டேய், அரிக்கேன் விளக்கை எடுத்துட்டு வா, எத்தனை தடவ சொல்லி இருக்கேன் , படுக்க மேலே வைக்கக் கூடாது'ன்னு என்றபடி விரையும் அப்பாவைப் பின்தொடர்ந்தான் அவன் , அவசரமாக . ' உங்கப்பாவுக்குப் பொடதியிலும் கண்ணு, தெரியாது உனக்கு ' என்ற அம்மாவின் குரல் உள்ளே இருந்து . போகிற போக்கில் அவருக்கு சுற்றி நடக்கும் எல்லாவற்றின் மேலும் கவனம் உண்டு. அது விவசாயிக்கே உரிய தெறமை. இத்தனை ஏக்கர் வயக்காட்டிலே , நஞ்சை, புஞ்சையிலே நெல்லு , மிளகாய்ன்னு போட்டு பயிரைக் காத்து விளைய வைக்கிற விவசாயத் தலைமுறைக்கே உரிய கவனம்.


அதிகாலை நாலு மணி..வயக்காடுகளைச் சுத்தி வந்து , வாய்க்கால்த் தண்ணிய எவனாவது பக்கத்து வயலுக்கு மாத்தி விட்டுட்டான்னு பார்த்து சரி செய்ய, மம்பட்டியைத் தோளிலே போட்டுக்கிட்டு வேக நடை போடுற அவர் பின்னாலே ஓடினான் அவன் அரிக்கேன் லைட்டோடு. அவருக்கு இந்த வெளிச்சம் எல்லாம் தேவை இல்லை . இவனுக்காகத்தான் அது இருட்டிலே போயிப் பழகி கண்ணு ராத்திரியிலும் முழிச்சா பளபளக்கும் ஆந்தை மாதிரி அவருக்கு .' டேய் , கருவை முள்ளை ஒதுக்கிட்டேன். ஓரம் குத்திராமப் பாத்து வா. ' போற பாதையில் கவனம். அதே சமயம் சுத்தி வாய்க்கால் தண்ணி நம்ம வயலுக்குப் போகுதான்னு பார்வை. குறுகின வரப்பில் பழக்க நடை. இவன் பார்த்துப் பார்த்துத் தான் போகணும். இல்லேன்னா வரப்புச் சகதி வழுக்கி விட்டுடும்.


பக்கத்து டவுனில் தாத்தா வீட்டிலே இருந்து படிக்கிற இவனுக்கு , லீவு விடுறப்ப கிராமம் வந்துடணும் . தன்னோட சாம்ராஜ்யத்தை இவனுக்குக் காட்டுறதில்லே அவருக்கு ஒரு சந்தோசம். இப்படித்தான் ஒரு நாள் கம்மாய்க்குப் போயி வேஷ்டியை விரிச்சு அவர் ஒரு பக்கம், இவன் ஒரு பக்கம் நுனியைப் பிடிச்சு அள்ளிட்டு வந்த கெண்டையும் கெளுத்தியும் ,அது ஒரு ருசி . ராத்திரி ராமாயண நாடகத்தில் ராமர் வேஷத்தில் அவர் ஆடுற ஒயிலாட்டப் பாட்டுக்கு ஊரே கை தட்டி விசில் அடிக்கும். அந்தக் கிராமத்தில் அவர் ஒரு ஹீரோ. முளைக்கொட்டு உத்சவத்தில் முதல் மரியாதை இத்யாதி , இத்யாதி .


'டே இந்த பொன்னமாய்க்காக்காரன் புத்தியைப் பாரு , வாய்க்கால்த் தண்ணியை அவன் வயலுப் பக்கம் திருப்பி விட்டிருக்கான். நம்மதான் ஊரிலே கூடிப் பேசி வச்சிருக்கேமே. இத்தனை நேரம் கம்மாய்த் தண்ணீ இன்னின்ன வயலுக்குன்னு . நம்ம நேரத்திலே அவன் வயலுக்குத் திருப்பி விட்டிருக்கான் பாரு , இன்னிக்கு ஊருக் கூட்டத்திலே பேசி ஒரு வழி பண்ணணும் அவனை. எங்கே , அரிக்கேனைத் தூக்கிப் பிடி , என்றபடி மம்பட்டியைத் தோளில் இருந்து இறக்கி மண்ணு வெட்டி அவன் வயல் பக்கம் போட்டு மூடுற நேரம், அப்பா ' பாம்பு ' என்று கத்தினான் அவன். ஒரு சாரைப் பாம்பு அவர் காலைச் சுற்ற , அதை இழுத்து அந்தப் பக்கம் தூக்கி எறிந்தார் அவர். இவன் கை நடுங்கி விழுந்த அந்த அரிக்கேன் லைட்டின் கண்ணாடிச் சில்லுகள் சிதறின ..


' இது வேணுமா சார், நூறு டாலர் ' என்ற அந்தப் பெண்ணின் குரல் அவன் நினைவைத் திருப்பியது . குளிரூட்டப்பட்ட அந்த நியூயார்க் நகரக் 'கலைப் பொருட்கள் ' கடையில் ஒரு கண்ணாடி அலமாரிக்குள் பளபளத்துக் கொண்டிருந்தது . அதே போன்ற அரிக்கேன் லைட். நீலக் கலர்த் தகரத்தட்டுகள் வடிவமாக மடக்கி , புகை போக மேலே சன்னல் வழி விட்டு , மேலே சின்னக் கலசம் போல் , கீழே பீடம் போல் சுற்றிக் கம்பிகள் இறுக்கி தூய வெள்ளைக் கண்ணாடி பளபளக்க ஒரு புனிதக் கோபுரம் போல அது. அந்த அரிக்கேன் லைட்டைப் பார்த்தபடி ' ஆமாம் ' என்றான் .


பக்கத்தில் இருந்த அவன் மனைவி . 'ஏங்க , இது எதுக்குங்க ' என்றாள் . அவளைப் பார்த்துச் சொன்னான். 'ராத்திரி சொல்றேன்.' அவன் கண்கள் கலங்கி இருந்தன . அவளுக்குத் தெரியும் ' இதுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் . அந்தக் கதையை அவன் சொல்லி முடித்து நெகிழ்ந்து போவான். அதன் பின் அதில் இருந்து மீண்டு வர அவனுக்கு அவள் உதவி தேவைப்படும் ' என்று நினைக்க அவள் மஞ்சள் முகத்தில் நாணச் சிவப்பு பூசியது .


------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


காதல் மாற்றம் - கவிதை

 காதல் மாற்றம் - கவிதை 

——-

கைக்கிளையும் பெருந்திணையும்

காணாமற் போய் விட


விரும்பிய நபரோடு

வேண்டிய நேரம் மட்டும்


காதல் நடக்கிறது

கணிணியின் சாட்சியோடு


செயற்கை அறிவினால்

செய்திட்ட காதலரை


முத்தமிடும் போது மட்டும்

முட்டுகிறது கலர்த் திரை


முன்பதிவு செய்ய வேண்டும்

முப்பரிமாணக் காதலுக்கு


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


புதன், 7 பிப்ரவரி, 2024

கழுவேற்றும் காதல் - கவிதை

 கழுவேற்றும் காதல் - கவிதை 

—————

ஒரு தலைக் காதல் எல்லாம்

உயிர் எடுக்கும் காதல் தான்


அழகிலே மயங்கிப் போய்

அவள் பின்னே தயங்கிப் போய்


ஆசையைச் சொல்லிப் போய்

அவமானம் அள்ளிப் போய்


வெறுக்கவும் முடியாமல்

வேதனையில் வெம்பிப் போய்


கண்ணீரின் காதல் எல்லாம்

கழுவேற்றும் காதல் தான்


கிட்டாத காதல் என்றால்

வெட்டி எறிந்து விட்டு


வேறு இடம் தேடுவதே

விவேகம் காதலுக்கு


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


திங்கள், 5 பிப்ரவரி, 2024

காதல் வலி - கவிதை

 காதல் வலி - கவிதை 

————


குறி வைத்து எறிவதற்கு

வில் எதற்குப் பெண்ணே


வேல் போன்ற விழியொன்றே

போதுமடி கண்ணே


அம்பை விடக் கூர்மை அது

ஆதரவாய் வில்லும் வேண்டாம்


ஓரப் பார்வை ஒன்றே

உள்ளத்தைக் கீறி விடும்


வழிகின்ற ரத்தத்தின்

காதல் வலியோடு


வழி பார்த்துக் காத்திருப்பேன்

வட்ட நிலா சாட்சியடி


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


சனி, 3 பிப்ரவரி, 2024

சிறுகதை மதிப்புரை - கதைபுதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதைபுதிது நிகழ்வு 

-------------------------------------------------------------


நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே


எங்களது இந்தியன் வங்கி நண்பர், நடிப்பு, எழுத்து என்று இரண்டு துறையிலும் சாதனை படைத்தது வரும் கௌரி சங்கர் அவர்களின் சிறுகதை ' என் மகன் .. எளிமையான முறையில் எழுதப்பட்டுள்ள நல்ல கருத்துள்ள கதை. நமது நண்பர்கள் நால்வர் குழு ஆர்கே அவர்களின் ஆசிரியத் தலைமையில் வெளிவரும் பூபாளம் இதழில் வெளிவந்துள்ள சிறுகதை


முதலில் கதைச் சுருக்கம் .மகனை அயல்நாடு அனுப்பி வைத்து விட்டு அவனது பொறுப்பில்லாத குணத்தை நினைத்து வருந்தும் ஒரு அப்பா தனது நண்பருடன் சேர்ந்து ஒரு ஆட்டோவில் வேளச்சேரியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்திற்குப் போகும் பயணத்தில் நடக்கும் உரையாடல் தான் கதை . இவரது மகனையும் ஆட்டோக்காரன் மகனையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும் விதத்தில் நடக்கிறது அந்த உரையாடல்


அந்தப் பயணத்தில் ஆரம்பம் முதல் நாமும் சேர்ந்து ஆட்டோவில் பயணிக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்து விடுகிறார் ஆசிரியர். கடைசியில் ஒரு திருப்பம். அதை நோக்கிக் கொண்டு செல்லும் முறையில் சுவாரசியம் ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.


கதை ஆரம்பத்தில் ஆட்டோக்காரனிடம் இவர் ' வேளச்சேரி வருமாப்பா ' என்று கேட்க ' வேளச்சேரி இங்கே வராதுங்க, நாமதான் வேளச்சேரி போகணும் ' என்று ஆட்டோக்காரன் பதில் சொல்லும் நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது கதை. கதையைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில் இந்த நகைச்சுவைத் தொடக்கம் நல்ல சிறுகதை யுக்தி


ஆட்டோக்காரன் தன் ஆட்டோவைத் ' தங்கராசு ' என்று அழைத்து பிரியமாகப் பேசிக்கொண்டு ஓட்டிச் செல்வதும் கதையைக் கலகலப்பாகக் கொண்டு செல்கிறது . ரஜினி படிக்காதவன் படத்தில் தனது டாக்ஸியை 'லட்சுமி ' என்று பிரியமாக அழைக்கும் நகைச்சுவைக் காட்சியும் நினைவுக்கு வந்தது .


அந்த அதிகாலை நேரக் காட்சியையும் வருணனை மூலம். நம் கண்முன் கொண்டு வருகிறார் ஆசிரியர். . 'எல் ஈ டி விளக்குகள் கீழே பாய்ச்சிய ஒளியில் , ஊருக்கே சாம்பிராணி புகை போட்டது போல் இலேசாகப் பனி படர்ந்து சாலை முழுவதும் மூடி இருந்தது ' நமக்கும் அந்தக் காலை நேரம் நம் கண் முன் தெரிகிறது .


நடுவில் ஆட்டோகாரனின் ஆங்கிலப் பேச்சை நியாயப் படுத்தும் விதத்தில் அவனது பள்ளிப் பருவ வாழ்வையும் அவன் மூலம் விளக்க வைத்து , வாழ்க்கை எப்படி பலருக்குத் திசை மாறிப் போகிறது என்பதையும் காட்டுகிறார் ஆசிரியர்.


இப்போது நாயகன் தனது நண்பனிடம் அயல்நாடு சென்றுவிட்ட மகனின் குண நலன்களைச் சொல்லுமபோது , பல குடும்பங்களில் நடக்கின்ற இது போன்ற வேதனைக் காட்சிகளை நினைவு படுத்துகிறார் ஆசிரியர்.


அமெரிக்கப் பெண்ணைக் கலயாணம் செய்து கொள்ளப் போகும் அவரது மகன் தனது குடும்பத்தின் நிலை பற்றிக் கவலைப் படாமல் நடந்து கொள்ளும் விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் நாயகன் .


அதே சமயம் ஆட்டோ ட்ரைவர் தனது மகனைப் பற்றிப் பெருமையாகப் பேசும் விஷயங்கள் , வாழ்வின் பல்வேறு பக்கங்களை நமக்குத் தெரிவிக் கின்றன. அவன் தன் மகனுக்காக வாங்கிய கடனை மகனே உழைத்து அடைத்து விட்டதையும், தங்கைகளுக்குத் திருமணச் செலவு, படிப்புச் செலவு போன்றவற்றையும் அவன் உழைப்பின் மூலமே நடப்பதையும் தெரிவிக்கத் தெரிவிக்க அவன் மகன் மேல் ஒரு மரியாதையே உண்டாகி விடுகிறது அவர்களுக்கும், ஏன் , நமக்குத்தான்.


இரண்டு மகன்களையும் பொருத்திப் பார்த்து , பல குடும்பங்களில் இது போன்று மாறுபட்ட குணாதிசயங்களோடு மகன்கள் இருப்பதை உணர்த்திப் போகிறார் ஆசிரியர்.


இறுதியில் அந்த ஆட்டோக்காரன் தன் , மகனாக நினைப்பது அவனது ஆட்டோவைதான் என்பதும் அந்த ஆட்டோ ஓடிக் கிடைக்கும் வருமானத்தில் தான் அத்தனையும் நடந்தது என்பதும் நமக்குத் தெரிய வருவது நல்ல திருப்பம். அந்த ஆட்டோ ட்ரைவர் பேசிய வசனங்கள் எல்லாம் உயிருள்ள மகனுக்கும் உயிரற்ற ஆட்டோவுக்கும் பொருந்துவதை நாம் திரும்பிப் படித்துப் பார்த்து ஆசிரியரின் திறமையை வியந்து கொள்ளலாம்.


சின்னக் கதை. அதன் மூலம், மகன் பாசம், உழைப்பின் உயர்வு, பெற்றோரின் கஷ்டம், என்று பல விஷயங்களை , கலகலப்பாகவும் சிறப்பான வருணனைகள், உரையாடல்கள் இவற்றோடு ஒரு திருப்பமும் கொடுத்து , அழகான சிறுகதையாக நமக்குக் கொடுத்துள்ள கௌரி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.


தன் கையே தனக்குதவி என்று இருக்கும் அந்த ஆட்டோக்கார அப்பா ஒரு பக்கம், என்னதான் மகனின் குணநலன் பற்றி வருத்தம் ஏற்பட்டாலும் , மகனுக்குச் செய்த கடமைக்கு பலனை எதிர்பார்த்து ஏமாந்து அங்கலாய்க்கும் நாயகன் அப்பா ஒருபக்கம் என்று இரண்டு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தி நம்மைப் பலவிதங்களில் சிந்திக்க வைக்கிறார் எழுத்தாளர் கௌரிசங்கர் . இரண்டு அப்பாக்களின் குண நலன்களைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர் . கௌரி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள் .அழகியசிங்கருக்கு நன்றி . வணக்கம்.


------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

சுவடு - கவிதை

 சுவடு - கவிதை 

———


பாதச் சுவட்டைப்

பதித்துச் செல்கிறாய்


ஆழம் அதிகம் தான்

உன் மனதைப் போல


விழுந்து விடுவதற்கு

விருப்பம் எனக்கு


திரும்பிப் பார்ப்பாயா

தூக்கி விடுவாயா


புதைந்து கிடக்க விட்டுப்

போய் விடுவாயா


நீண்டு கிடக்கின்ற

நிழலிடம் சொல்லிப் போ


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...