திங்கள், 4 மார்ச், 2024

சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது  நிகழ்வு 


அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் வாசித்த , குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ' ஒரு தவறு செய்தால் ' சிறுகதை மதிப்புரை

--------------------------------

நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே .


நமது நண்பர் குவிகம் சுந்தரராஜன் அவர்களின் ' குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள இந்த ' ஒரு தவறு செய்தால் ' உள்ளிட்ட அத்தனை சிறுகதைகளையும் வாசித்து , இது வெளிவந்த அந்த மாதத்திலேயே குவிகம் , கலை புதிது குழுமங்களில் ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒரு திருக்குறள் சொல்லி மதிப்புரை எழுதிய ஞாபகம் வருகிறது. அந்த ஐடியாவுக்கு காரணமான திருக்குறள் சேர்ந்த இந்த சிறுகதையை இன்று எனக்கு அழகியசிங்கர் மதிப்புரை வழங்கக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. தி நகர் மத்சயா அரங்கில் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நினைவும் வருகிறது .


தலைப்பே கதையின் கருத்தை உணர்த்தி விடுகிறது . ஒரு தவறு செய்தால் . எங்க வீட்டுப் பிள்ளை படப் பாடல் வரிகள். அதில் ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று கவிஞர் வாலி எழுதி இருப்பார். இங்கே தவறு செய்தவன் தேவன் இல்லை. மனிதன். அமெரிக்கன். அந்தத் தவறினால் பாதிக்கப் பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்பதே கதை.


அமெரிக்கச் சாலை ஒன்றில் வழுக்கிக் கொண்டு செல்லும் காரில் ஆரம்பிக்கும் கதையும் அழகாக வழுக்கிக் கொண்டு ஆற்றொழுக்காக முடிவு வரை விறுவிறுப்பாகச் செல்வதே இந்தக் கதையின் சிறப்பு.

கூகுள் அலுவலகத்தில் உயர் பதவியை ஒப்புக்கொள்ள இருக்கும் நாயகன் . அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்கு படித்துக் கொண்டே அங்கு வேலையும் பார்த்துக் கொண்டு இருக்கும் அவன் மனைவி. பள்ளி இறுதி நிலைப் படிப்பில் மூத்த மகள் .ஐந்து வயது 'டார்லிங்' இளைய மகள் . அமெரிக்க வாழ்வு இனிமையாகப் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு திடீர்த் திருப்பம்.


ஆறு மாதங்கள் அவர்களோடு சேர்ந்து வசிக்க வந்திருந்த நாயகனின் அப்பா காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது சந்தேகத்தில் மூன்று அமெரிக்கக் காவல் அதிகாரிகள், அவர் கையை முறுக்கிக் கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அங்குள்ள லிங்கன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சின்ன ஆப்பெரேஷன் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்.


இந்தச் செய்தி வரும் நேரம். அவன் கூகிளில் உயர் அதிகாரி பதவியை ஒப்புக் கொள்ளச் சென்று கொண்டு இருந்த நேரம். அதை உதறித் தள்ளிவிட்டு ஆஸ்பத்திரி சென்று அவர் குணம் அடைந்த சில நாட்களில் வீடு திரும்பி , நாயகன் , அவன் மனைவி , இரண்டு மகள்கள் அனைவரும் இந்த நிறவெறி நாட்டை விட்டு இந்தியா திரும்ப வேண்டியது, தங்கள் உழைப்பை அமெரிக்காவிற்கு விற்கப் போவதில்லை' என்று முடிவு செய்து விடுகிறார்கள்.


அவனது அப்பா அடிபட்ட அந்த நிகழ்வு பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சியிலும் செய்தியாக வெளிவந்து , இந்திய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் இதைப் பற்றி விசாரிக்கவும் , அமெரிக்கக் காவல் துறை மன்னிப்பு கேட்டுக் கொள்வது வரை நடந்து கொண்டு இருக்கிறது. சோசியல் மீடியா அமைப்புகள், மனித உரிமை அமைப்பு போன்ற பல அமைப்புகள் இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து நஷ்ட ஈடு கோரிக் கொண்டு இருந்தன.


இவனும் இந்தியா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருந்து ,கூகிள் நிறுவனரிடம் தான் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத நிலையைத் தெரிவித்து விட்டு அவரைச் சந்திப்பதையும் தவிர்த்து விடுகிறான் நாயகன். அவனுக்கு அமெரிக்காவில் குருவாக இருந்து அவன் வளர்ச்சிக்கு அடி கோலியவர் அவர் . ஒரு நாள் அவரே அவன் வீடு தேடி வந்து ' உன் அப்பாவைச் சந்திக்க வந்திருக்கிறேன் , உரையாடல் உதவிக்கு உன் இளைய மகள் வந்தால் போதும் ' என்று அந்த ' டார்லிங்கை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று போய் விட்டுத் திரும்பி வந்து தனது காரில் ஏறிச் சென்று விடுகிறார்.


இப்பொழுது ஒரு திருப்பம். ஓடி வரும் அவன் இளைய மகள் ' ஐ லவ் ஹிம் சோ மச் ' என்கிறாள் .அறையில் அவன் அப்பாவின் கண்களில் கண்ணீர். அப்பா பேசுகிறார்


'அவர் என்ன செஞ்சார் தெரியுமா? ‘உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதுக்காக அமெரிக்காவில இருக்கிற மக்கள் சார்பில் உங்க கிட்டே மன்னிப்புக் கேட்கிறேன்! அதுவும் உங்க ஊர் வழக்கப்படி’ என்று சொல்லி என் காலடியில் பிரார்த்தனை செய்வது போல மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார். அவர் கண்களில் கண்ணீர் இருந்தது. நான் பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லும் போது தான் எனக்கு முழு ஸ்மரணையும் வந்தது.


அதற்கு அவர்’ “தயவு செய்து என்னைப் பேச விடுங்கள்! உங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக நீங்கள் அனைவரும் அமெரிக்காவை விட்டு இந்தியா செல்ல முடிவு எடுத்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிறகு கூகிளுக்குத் தலைவனாக வரும் தகுதி உங்கள் மகனுக்கு இருக்கிறது. அவன் இந்தப் பிரச்சனையால் அதை உதறிவிட்டு இந்தியா செல்லப் போகிறான். அவன் என்னுடன் பணி புரிந்தபோதே அவனுடைய கொள்கைப் பிடிப்பையும் பாசத்தையும் நான் அறிந்திருக்கிறேன்.


நான் உங்களிடம் வேண்டுவது என்னவென்றால் நீங்கள் எங்களை மன்னிக்கவேண்டும் ! உங்களுக்குப் பிடித்த உங்கள் மொழியிலேயே சொல்லுகிறேன் என்று ‘எழுதிவைத்ததைத் தப்பின்றி சொன்னார். ‘ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்று திருக்குறளில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் அனைவரை விட உங்களுக்கு அதன் அர்த்தம் நன்றாகப் புரியும். தயவு செய்து எங்களையும் எங்கள் நாட்டையும் மன்னித்துவிடுங்கள்! இப்போது நீங்கள் போனால் நாங்கள் எப்போதும் குற்ற உணர்ச்சியிலேயே இருப்போம்” என்று சொல்லிவிட்டு ‘டார்லிங்கை’ அவர் சொன்னதை விளக்கச் சொன்னார். அதற்குப் பிறகு எனக்கு நன்றி சொல்லிவிட்டு என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டார்!


அனைவரது கண்களிலும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அப்பாவே தொடர்ந்தார்

“அதனால் இப்போ என் முடிவைச் சொல்லுகிறேன். திருக்குறளை அவர் வாயில் கேட்டபிறகு நான் பதில் மரியாதை செய்யவில்லை என்றால் நான் மனிதனே அல்ல! நாம் அனைவரும் இந்தியா செல்லப் போவதில்லை. இங்கு தான் இருக்கப் போகிறோம். நீ அந்த கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கொள். அது தான் நீ அவர்களை மன்னித்ததின் அடையாளம்! நானும் என் பங்கிற்கு அந்தப் போலீஸ்காரர்களை மன்னித்து அவர்கள் மீது நண்பர்கள் போட்ட வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். எவ்வளவு கோர்வையாக பழைய மாதிரி பேசுகிறேன் பார்த்தாயா? திருக்குறள் என்னை முழுதும் குணப் படுத்திவிட்டது.’


அடுத்த நாள் கூகிள் அலுவலகத்தில் …

“வெல்கம் யங்மேன்! நீ கட்டாயம் வருவாய் என்று எனக்குத் தெரியும்”

“அது சரி திருக்குறளை எங்கே பிடித்தீர்கள்?”

“கூகிள் சர்ச்சில் தான்.”

இருவரும் சிரித்தார்கள்!



என்று முடிகிறது கதை.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளின் இந்த இரண்டு வரிகள் இன்றைய கால கட்டத்திலும் எப்படி உதவுகின்றன அந்த அமெரிக்கனுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்பதை உணரும்போது திருக்குறளின் பெருமை மட்டும் அல்ல , மனிதர்களின் மனிதாபிமான உணர்ச்சி, ஒரு தவறு செய்தால், அதை உணர்ந்து விட்டால், நமக்கு மன்னிக்கும் மனநிலை வர வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகின்ற கதையாகவே தெரிகிறது .


கருத்து மட்டும் அல்ல ,அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த . அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தையும் , அதை இணைப்பதற்கு அவர் ஏற்படுத்திய ஒரு நல்ல குடும்பத்தையும் நம் கண் முன் காட்டும் படி அவர் விவரித்த விதத்தையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.


அதுவும், , ' ஐ லவ் யு ' என்று அனைவரிடமும் சொல்லி அனைவரின் அன்பையும் பெற்றிருந்த அந்த ஐந்து வயது இளைய மகள், தாத்தாவின் நிலை பார்த்து 'ஐ ஹேட் தெம் ' என்று கத்துவதும் . பிறகு அந்தக் கூகிள் நிறுவுனர் வந்து பேசி விட்டுச் சென்றதை பார்த்த பின் ' ஐ லவ் ஹிம் வெரி மச் ' என்று சொல்வதும் . அந்தக் குழந்தையின் மன நிலையை நமக்கு உணர்த்தி நம் அனைவரின் ' டார்லிங் ' காகவே அவளை மாற்றி விட்டது ஆசிரியரின் எழுத்துத் திறமை.


அதே போன்று ' ஹாய் சம்சாரம் , என்ன சமாச்சாரம் ' என்ற உரையாடலில் வெளிப்படும் நாயகன் நாயகியின் பிரியம், அப்பாவுக்கு அடிபட்டது அறிந்து பையன் பேசும் பதற்ற வார்த்தைகள் . இறுதியில் , பையனின் எதிர்காலம் பற்றிய பொறுப்போடு அப்பா பேசும் பேச்சு . என்று அந்த உரையாடல்கள் மூலமே அவர்களின் குண நலன்களை கொண்டு வந்து வெளிப்படுவது ஆசிரியரின் எழுத்துத் திறமை. படித்து ரசியுங்கள்.

நன்றி. வணக்கம்.

-----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...