சனி, 6 ஜூலை, 2024

ஆன்மக் குளியல் - சிறுகதை

 ஆன்மக் குளியல் - சிறுகதை 

————-


‘ இந்த சதைக் குவியலா நீ ‘ அவளுக்குள் இருந்த அந்த இள முகம் , அவளைப் போல் , தலையின் குளியல் துண்டோடு , ஆனால் திரும்பிய நிலையில் அவளைப் பார்த்தபடி , அவளுக்குள் இருந்து கேட்க , அவள் விழித்தாள் .


குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இது என்ன குரல் .‘நான் நீ தான் பெண்ணே ‘ என்று சொன்ன அந்தக் குரல் தொடர்ந்தது . ‘ உன்னையே நன்றாக உற்றுப் பார் . குழந்தைப் பருவத்தில் இருந்த உடலா இது , குமரிப் பருவத்தில் இருந்ததா இது . ‘


‘இந்த இடைப்பட்ட காலங்களில் எத்தனை மாற்றம்

காலத்தின் மாற்றத்தில் , பருவத்தின் வளர்ச்சியில் , பூத்தும் குலுங்கியும் , தளர்ந்தும் போன உடல் . போகமும் ரோகமும் அனுபவித்து இன்பமும் துன்பமும் இதுவென்று மயங்கிக் கிடக்கும் உடல் . ‘


‘பத்து வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்துச் சிரித்தவர்களும் , பழகி மகிழ்ந்தவர்களும் , இப்போது உன்னைப் பார்க்காது போவதை உன் உடலின் புறக்கணிப்பாய் உணர்ந்து உள்ளுக்குள் புழுங்குவதை உணர்ந்ததால் தான் உன்னிடம் கொஞ்சம் பேசிப் போக வந்தேன் ‘ என்றது அந்தக் குரல் .


‘ இவை எல்லாம் உனக்கெப்படித் தெரியும் ‘

‘ அடி அசடே , முதலில் நான் சொன்னதை மறந்து விட்டாயா , நீதான் நான் ‘


‘ குழப்புகிறாய் ‘

புரியும்படி சொல்லவா , உன் மனச்சாட்சி என்று வைத்துக் கொள்ளேன் ‘

‘புரிகிறது , என் உடற் கவர்ச்சி குறைவதைக் கவனிக்கக் கூடாதா நான் ‘


‘கவனி , ஆனால் கவலைப்படாதே . இது உடலின் இயற்கை என்று ஒத்துக்கொள் . கவர்ச்சிக்கன்னிகளாய் பார்க்கப்பட்ட எத்தனை நடிகைகள் தளர்ந்து துவண்டு இருக்கும் படங்களைப் பார்க்கத் தானே செய்கிறாய் ‘


‘உண்மை , ஆனால் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது ‘

அதற்குத்தான் உனக்கு ஒரு உண்மையைச் சொல்ல வந்தேன் . உற்றுக் கேள் ‘


‘ இந்த உடல் அல்ல நீ . இது உன் பெற்றோரால் உனக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டது . காலத்தால் வளர்க்கப் பட்டது . இதன் கவர்ச்சியில் பிறரைப் போல் நீயும் மயங்கிக் கிடந்தாய் வளர் பிறைக் காலத்தில் . இப்போது தேய்பிறை ஆரம்பித்ததும் திணறுகிறாய் . இந்த உடல் அல்ல நீ ‘


‘ இதைச் சரியான நேரத்தில் உணர்த்தவே நான் நீ குளிக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து வந்தேன் . உன் உடலின் மாற்றங்களை நீ உணரும் நேரத்தில் தான் உன்னுள் இருக்கும் மாறாத என் அழகை , என் உணர்வை நீ அறிய முடியும் . உற்றுப் பார் . நீதானடி நான் . ‘


‘உன் குழந்தைப் பருவக் குறும்பு மனம் என்னிடம் அப்படியே இருப்பதைப் பார் . உன் குமரிப் பருவ அறிவுணர்ச்சி அப்படியே இருப்பதைப் பார் . உன் வளர்ந்த பருவ அன்பும் , அடக்கமும் , மதிப்பும் , மரியாதையும் , ஞானமும் என்னிடம் ஜொலிப்பதைப் பார் . ‘


‘உன் கண்களால் பார்க்க முடியாது . உன் உணர்வுகளால் என்னைப் பார்க்க முடியும் . நான் தானடி நீ . நீதானடி நான் . நாம் உணர்வால் கலந்தவர்கள் . காலம் நம்மை மெருகேற்றுமே தவிர , இந்த உடலைப் போல் துருவாக்காது . புரிந்ததா பெண்ணே .’


தன்னிலைக் குளியல் முடிந்து தண்ணீர்க் குளியல் ஆரம்பம் அவளுக்கு .


குளித்து முடித்து உடை அணியும் போது , தன் உடலும் வேறு ஒரு உடை , ஒட்டிய உடை என்ற உண்மை உணர்ந்தாள் .


அவள் முகத்தருகே திரும்பி இருந்த அந்த ஆன்ம முகம் நேர் ஆகி இப்போது ஒன்று சேர்ந்து இருந்தது . அப்போது விழித்த கண்கள் மாறி இப்போது கருணைக் கண்களாய் மாற , வீதி உலா புறப்படும் அம்மன் போல் , குளியல் அறை விட்டு வெளியில் வந்தாள் .


———நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...